முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / வா ! போ ! வா ! …இன்னம் வந்து ஒருகால் கண்டுபோ ! – பாசுரம் -24

வா ! போ ! வா ! …இன்னம் வந்து ஒருகால் கண்டுபோ ! – பாசுரம் -24

எங்களுக்கு ராஜமணி என்ற ஒரு நண்பன் . எப்பொழுதும் ஏதவது ஒரு விஷயத்தைப் பற்றிப் புலம்பிக் கொண்டே இருப்பான். இதனால் நாங்கள் அவனைச் செல்லமாகப் ‘புலம்பல்மணி’ என்று அழைப்போம். கடைசியாக அவனைப் பார்த்தபோது மேனேஜர் மாத்ருபூதம் எப்படி பிரமோஷனைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வருகிறார் என்று புலம்பினான். அவனுக்குப் பிரமோஷன் கிடைத்துவிட்டதாகத் தகவலின் பேரில், அவனை விஷ் பண்ணுவதற்காகப் போன் செய்தேன். புலம்பித் தீர்த்து விட்டான். ”பூதம் பிரமோஷன் கொடுக்கிற மாதிரிக் கொடுத்து கவிழ்த்துட்டது ! கூடவே டிரான்ஸ்பர் ஆர்டரையும் கொடுத்திட்டது! மொத்தத்தில் பயங்கர நஷ்டம்” என்ன பண்ணுவது சிலர் ஜாதகம் அது மாதிரி !

புலம்பல் ஒரு ஆழ்ந்த வலியின் அழுகையுடன் கூடிய வெளிப்பாடு. இலக்கியத்தில், தலைவன் பிரிவால் ,தலைவி துன்புற்றுப் புலம்புவதாக அமைந்த பாக்கள் ஏராளம் . பக்தி இலக்கியங்களில் பெருமாளைக் காணாது, பக்தன்-ஜீவாத்மா உருகிப் புலம்பும் காட்சிகள் கிடைக்கும். இதைத் தவிர்த்து, இதிகாசங்களில் ஏதாவது ஒரு பாத்திரத்தின் துயர் நிலையில் அந்தப் பாத்திரமே புலம்புவதாக அமைந்த பாசுரங்களும் இருக்கின்றன. தேவகியின் புலம்பலை முன்னமே பார்த்தோம்.

குலசேகரர் இராமனிடமும், இராம காதையிலும் ஆழங்கால்பட்டவர். இராமனுக்குத் துணையாக கத்தி எடுத்துப் போருக்குப் புறப்பட்டவர் ஆயிற்றே ! தசரதர் புலம்புவதாக இவரது ஒன்பதாம் திருமொழி அமைகிறது. கம்பர் விழாக்களில் கம்பரைப் பற்றி ஒன்று சிறப்பாகச் சொல்லப்படுவது உண்டு. அது கம்பர் தன் பாத்திரங்களைச் சித்தரிக்கையில் அந்தந்தப் பாத்திரமாகவே மாறி விடுகிறார் என்பதுதான். இந்தக் கலையை தன் முன்னோடிகளான ஆழ்வார்களிடமிருந்துதான் கம்ப நாட்டாழ்வார் பெற்றார் எனக் கொள்ளலாம். தசரதனது துயரை விவரிக்கப் போந்த குலசேகரர் தசரதனாகவே மாறி விடுகிறார். ஒன்பதாம் திருமொழியின் ஒவ்வொரு பாசுரமும் இராமனை எண்ணி தசரதனின் துயருற்ற நிலையை கருணாரஸம் சொட்டச் சொட்ட விவரிக்கின்றன.

“நேரிழையும் இளங்கோவும் பின்பு போக , நீ காட்டில்
எவ்வாறு நடந்தனையோ எம் இராமனே !

‘மெல்லிய பஞ்சணை மீது இதுவரை தூங்கினாய்; இனி, பெரிய கானகத்தில் மரத்தின் நிழலில்,கல்லணை மேல் கண் துயிலக் கற்றனையோ?

கேகயர்கோன் மகளாய்ப் பெற்ற அரும்பாவி சொல் கேட்ட
அருவினையேன் என் செய்கேன் ! அந்தோ.!
கைம்மாவின் நடையன்ன மென்னடையும் கமலம்போல் முகமும்
காணாது என் மகனை இழந்திட்டேன் !
என்னையும் என் மெய்யுரையும் மெய்யாகக் கொண்டுவனம் போன
உன்னையே, ஏழ்பிறப்பும், மகனாகப் பெறப் பெறுவேன்!
கானகமே மிகவிரும்பி நீதுறந்த வளநகரைத் துறந்து நானும்
வானகமே மிகவிரும்பிப் போகின்றேன்!”

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

என்று பலவாறாகப் புலம்புகிறார் தசரதரான குலசேகரர்.

ஒரு பாசுரத்தை முழுமையாகப் பார்போம்.

வா ! போகு ! வா ! இன்னம் வந்து ஒருகால் கண்டு போ ! மலராள் கூந்தல்

வேய் போலு ம் எழில்தோளி தன் பொருட்டா விடையோன் தன் வில்லைச் செற்றாய்

மாபோகு நெடுங்கானம் வல்வினையேன் மனம் உருக்கும் மகனே ! இன்று

நீ போக, என் நெஞ்சம் இரு பிளவாய்ப் போகாதே நிற்கு மாறே.

                                                                                                                         – 733 ஒன்பதாம் திருமொழி

“சற்று இங்கே வா! இனிச் செல்வாய் ! மறுபடியும் இங்குவா ! போகும்போது பின்னையும் ஒரு தரம் வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போ ! பூக்களைத் தாங்கிய முடியை உடையவளும் மூங்கில் போன்ற அழகிய தோள்களை உடைய வளுமான பிராட்டியை மணம் செய்து கொள்ளும் பொருட்டு, சிவனுடைய வில்லை முறித்தவனே! இப்பொழுது நீ யானைகள் சஞ்சரிக்கின்ற பெரிய காட்டுக்குப் போக எனது மனமானது இரண்டாய் பிளந்து போகாமல் வலியதாய் நிற்கும் கொடுமைதான் என்னே?”

இராமன், தசரதருக்கு வயதான காலத்தில் பிறந்த பிள்ளை. அதனால், தசரதர், இராமனை எப்பொழுதும் தன் அருகிலேயே வைத்துக் கொள்ள விரும்புகிறார். இந்த நிலைப்பாட்டைத்தான் , குலசேகரர் ‘வா ! போ ! வா ! இன்னம் வந்து ஒருகால் கண்டுபோ ! ‘ என்று அற்புதமாக வர்ணிக்கிறார்.
இராமனை வா என்று தசரதர் அழைக்க இராமன் நொடியில் அவர் அருகே போய் நிற்கிறான். ‘ எதற்காக இராமனைக் கூப்பிட்டோம் !’ என்று எண்ணி, ‘சரி நீ போ’ என்கிறார்.. இராமன் புன்னகை பூத்து, நகர ஆரம்பிக்கிறான். தசரதர் மனம் மாறி,, ‘இராமா! நீ வா ! “ என்று அழைக்கிறார். பிறகு, ‘ போகும்போது, பார்த்துவிட்டுப் போ ! ‘ என்று கட்டளை இடுகிறார் தசரதர். அவரது இந்த குழப்படி நடவடிக்கைகள் இராமன் மீது அதீத பாசத்தின் விளைவே !

வயதான தந்தை தசரதனின் புத்திர பாசத்தால் குழம்பிய மன நிலையின் மெய்ப்பாடுகளை ஒற்றை வரியில் வீடியோ காட்சி போல் பதிவு செய்கிறார் குலசேகரர் !

ஆழ்வார் திருவடிகளே சரணம்

About டாக்டர் லக்‌ஷ்மிநரசிம்மன்

டாக்டர் லக்‌ஷ்மிநரசிம்மன்
நரம்பியல் நிபுணரான இவர், சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள நரம்பியல் துறையின் இயக்குனராகப் பதவி வகிக்கிறார். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

சிவன் விளையாடல் – 9

வேல் பெற்ற உக்கிர குமார பாண்டியன் பாரதத்தை புகழ்ந்து பாடும்போது, சுந்தரம் பிள்ளை நீரால் சூழப்பட்ட இந்த உலகிற்கு அழகு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன