முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / திருப்புகழ் காட்டும் இறை இன்பம்

திருப்புகழ் காட்டும் இறை இன்பம்

அருணகிரிநாதர் அருவியெனப் பொழிந்த ஆறுமுகன் துதி நூலே திருப்புகழ். சந்தம் முந்தும் செந்தமிழில் சரமாரியாக விந்தை செய்த வித்தகர். கந்தனைப் போற்றிய அந்தக் கவிதைகளில் காணக்கிடக்கும் உவமைகள் ஏராளம்.
அணிகளின் தாயாக விளங்கும் உவமை, அலங்காரத்துக்காக மட்டுமல்ல… ஆழ்ந்திருக்கும் கவியுள்ளத்தையும் கவிஞனின் அனுபவப் பெருக்கையும் அற்புதமாகக் காட்டும்.
இறைமை இன்பத்தை எதனோடு ஒப்பிடுவது?
பக்தர்களின் நெஞ்சத்தில் எழும் பரவசத்தை எழுத்துகளில் காட்டி விடமுடியும் என்று சொன்னால், அதை எல்லையற்ற இன்பம் என ஏற்க முடியுமா?
சின்னச் சின்ன இன்பங்களில் நம் மனம் சிலிர்க்கும் பொழுது அந்த இன்பத்தையே இப்படிப்பட்டது என்று நம்மால் எடுத்துச் சொல்ல முடியவில்லையே….
சர்க்கரை ஒருவித இனிப்பு; வெல்லம் இன்னொரு வகை இனிப்பு;- கரும்பு தரும் களிப்பே தனி; -பால் தரும் பரவசம் அது வேறு;- தேனின் தித்திப்பு, அது தேவ சுகம். எல்லாமே இனிப்புதான். எந்த இனிப்புமே எப்படி இருக்கும் என்று எழுத முடியவில்லை .
‘‘என்னா… தித்திப்பு” என அனுபவப் பெருமிதத்தில் தலையை அசைத்து நாவால் சப்புக் கொட்டலாமே தவிர, இவ்வாறு இனித்தது என எழுத்தில் வடிக்க முடியுமா? அருணகிரியார் பாடுகிறார்…..

அவ்வாறு அறிவார் அறிகின்றதலால் எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப் பதுவே தன்னந் தனிநின்றது தான் அறிய இன்னும் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?

ஆம்; சர்க்கரை, வெல்லம் தரும் வினாடி நேர இனிமையையே நம்மால் விவரிக்க முடியவில்லை என்றால்… ‘‘இறைமை இன்பம் அது எவ்வாறு இருக்கும்? ஆத்மா முழுவதும் பரவும் ஆனந்தம் அனுபவித்தவர்களுக்கே தெரியும். தேனுக்குள் இன்பம் சிவப்போ? கருப்போ?

ஆன்மீக இன்பத்தை அருணகிரியார்

“உண்ட நெஞ்சு அறிதேனே! வானோர் பெருமானே” என உவமித்துப் பேரின்பச் சுவை பொங்கப் பேசுகிறார் .

உலகத்தில் பிறந்த அனைவரும் நற்செயல் செய்து மனிதப் பிறப்பின் மகத்துவத்தை நிலைநாட்ட வேண்டும். ஏதோ பிறந்தோம் இருந்தோம்  இறந்தோம்  என்கிற வெறும் சாரமற்ற சொற்களாகச் சரிந்து விடலாமா நம் வாழ்வு? சுடர்விட வேண்டாமா? ‘‘ஆவி சாவியாகாமல் நீ சற்று அருள்வாயே என்கிறார் அருணகிரியார். நெல்மணிகள் நிறைய உள்ள கதிர்போல நம் வாழ்வு இருந்தால் அடுத்தவர்களுக்கு அன்னம் அளிப்போம்,  வெறும் பதராக,- சாவியாக ஆனால் பதற வேண்டாமா?

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

அடுத்தவர்களுக்கு உதவுவது தான் மனித வாழ்வின் அடிப்படை இலட்சியமாக அமைய வேண்டும். இந்த பிறப்பு ஒரு விபத்து. ஒருவன் நினைத்து ஒரு குலத்தில் பிறப்பதில்லை. அவ்வாறே இடம், இனம், செல்வம் என எதுவும் நாம் எண்ணிப் பிறப்பில் வந்ததல்ல. இங்கு இவன் பிறக்க வேண்டும் எனும் தேர்வு தெய்வத்தின் கையில் அல்லவா இருக்கிறது.

செல்வந்தனுக்குப்  பிறந்தவன் தங்கக் கிண்ணத்தில் பால்சோறு அருந்துகிறான். ஏழைக்குப் பிறந்தவனோ, ஏன் இந்த நிலை என வருந்துகிறான். எனவே, வளமான வாழ்வும் வசதியும் முன்வினைப் பரிசு என தேர்ந்து,  தெளிந்து  வறுமையுற்றவர்களுக்கு வழங்கி மனிதன் மேம்பட வேண்டும்.

வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கு என்றும் நொய்யிற் பிளவு அளவேனும் பகிர்மின்காள்

என்கிறார் அருணகிரியார்.
நீ செய்யும் அறச்செயல்தான் உன்னோடு கடைசி வரை கூட வரும். ‘‘பற்றித் தொடர்வன இருவினை புண்ணிய பாவங்களே என்கிறார் பட்டினத்தடிகள்.
கையில் பொருள் உள்ளபோதே கரவாது அறம் செய்யாமல் கடைசி காலத்தில் நமக்கு உதவுமே எனப் பெரும் பொருள் சேமித்து வைப்பவர்களைப் பார்த்து அருணகிரிநாதர் அற்புதமான ஒரு உவமை சொல்கிறார்.
சுட்டெரிக்கும் வெயிலில் காலில் செருப்பு கூட அணியாமல் பாலை நிலத்தில் ஒருவன் பயணப்பட்டுவிட்டான். சூடு தாங்காமல் தவிக்கிறான். ஒதுங்கி நிற்க ஒரு மரம் கூட இல்லை. அவனுடைய நிழலைத் தவிர வேறு எதுவும் அகப்படவில்லை. தகிக்கிறது சூரியன். பாவம் என்ன செய்வான்? தன் நிழலில் தானே ஒதுங்க நினைக்கிறான். அது முடியுமா? அப்படித்தான், உன் செல்வம் உனக்குக் கடைசியில் உடன் வராது; உதவாது; என எச்சரித்து வெயிலுக்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறுநிழல் போல் கையில் உள்ள பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே, என உள்ளத்தில் நிற்கும் வண்ணம் உவமை பதிக்கிறார்.. இந்த அருணகிரியார் வாக்கைக் கேட்ட பிறகும் மனிதநேயம் மலராத மனம் இருக்கமுடியுமா?
நூறாயிரம் நினைவுகள் நொடிக்கு நொடி வந்து போகிற இடமாக விளங்குகிறது மனித மனம். ‘‘சிந்தையை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் அரிது அரிது காண் என அடியார்களே சொல்லும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்?
இடையீடு சற்றும் இல்லாமல் இயங்கிக் கொண்டே இருக்கும் இம்மனத்துக்கு எதை உவமை ஆக்குவது?
தெய்வீக வரலாற்றில் எல்லாம் தேர்ந்த அருணகிரிநாதர் மனத்துக்கு சொல்லும் உவமை என்ன தெரியுமா?
’ஐங்கரனை ஒத்த மனம்’.
அப்படியென்றால் என்ன பொருள்? ஆய்வாளர்கள் தோயத் தோய இதன் அர்த்தம் ஆகாயம் போல் விரிந்து கொண்டே போகிறது. விநாயகருக்கு ஐந்து கைகள். ஐந்து கைகளால் யானைமுகக் கடவுள் பக்தர்களைப் பரிபாலிப்பது போல மனமும் ஐம்புலன்களால் செயல்படுகிறது. அது மட்டுமன்று. ஐங்கரன் என்பதற்கு யானை எனவும் பொருள் கொள்ளலாம். யானை இடையறாது அசைந்து கொண்டே இருக்கும். இந்த ஆசை மனமும் ஆடிக்கொண்டே இருக்கிறது என மனத்தை தொழில் உவமை ஆக்கினார் எனவும் அறியலாம். புராணப்படி பார்த்தால் இந்த உவமை அழகு இன்னும் இரு வண்ணங்களில் ஏற்றம் பெறுகிறது. பழம் பெறுவதற்காக விநாயகரும் வேலவரும் உலகம் சுற்றிய கதை அனைவரும் அறிந்ததே. இருந்த இடத்தில் வலமாகச் சுற்றியே கணபதியார் வையம் முழுவதும் வலம் வந்து விட்டார். பரிசையும் பெற்றுவிட்டார்
ஐங்கரனின் செயல் போல நம் மனமும் இருந்த இடத்தில் இருந்துகொண்டே ஏழுலகங்களையும் வலம் வருகிறது. எனவே ‘‘ஐங்கரனை ஒத்த மனம் சரியான உவமைதானே மேலும், அனைத்து வழிபாட்டு நெறியினரும் முதலில் விநாயகரைத் தொழ வேண்டும். அவர்தான் முதல்வர். அவரின்றி எச்செயலும் நிகழாது. அது போல் மனம்தான் எல்லாவற்றுக்கும் மூலம்; முதல். மனம், மனம் வைத்தால்தான் எதுவும் நடக்கும்.எனவே பல பொருள் தருகிறது இந்த உவமை.

About மதிவண்ணண்

Avatar

மேலும் படிக்கவும்

நா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.

திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே! திருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியே! பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே! பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன