முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / சிவன் விளையாட்டு – 2

சிவன் விளையாட்டு – 2

மீனாட்சி தோன்றினாள்

ண்டி வந்தவர்கள் அனைவரையும் கை தூக்கி விடுபவள். மதுரையில் காலடி எடுத்து வைப்பவர்களை மகத்துவமானவர்களாக மாற்றுபவள். கண்ணெதிரே இருந்து ஆட்சி செய்பவள். அவள் அன்னை மீனாட்சி.

மதுராபுரியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான் பாண்டிய மன்னன் மலையத்துவசன். அவன் மனைவி காஞ்சனமாலை. கடம்பவன நாயகன், மதுரேசன் அருள்புரியும் புண்ணியத் தலத்தில் இருந்து மதுரையை ஆட்சி செய்யும் பேறு பெற்றிருந்தான் மலையத்துவசன். மதுரேசனின் கருணையினால் மலையத்துவசன் சகல வளங்களையும் பெற்றிருந்தான்.

திறமையான நிர்வாகமும், தீவிர பக்தியும் மலையத்துவசனுக்கு இரு கண்கள். மதுரையை அன்றே ஸ்மார்ட் சிட்டியாக மாற்றியவன் மலையத்துவசன். காடுகளைத் திருத்தி கழனியாக்கியதும், நீர் ஆதாரங்களைப் பெருக்கி நிலவளம் கூட்டியதும் அவன் சாதனைகள். மதுரை மாநகர் மகிழ்ச்சி மாநகராக விளங்கியது.

இறைவன் எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுத்துவிடுவதில்லை. நிறை குறை இல்லாத உலகம் நிறைவு பெறுவதில்லை என்பதுதானே படைப்பின் ரகசியம். மலையத்துவச மகாராஜாவுக்கு அப்படியொரு குறை; அகலக்கூடிய குறை; குழந்தை இல்லாத குறை மலையத்துவசனையும், மகாராணி காஞ்சனமாலையையும் வருத்தியது.

இருவரும், அன்றாடம் சென்று சொக்கலிங்கப் பெருமானை தரிசித்து தங்களுக்கு குழந்தை பாக்கியம் தந்தருளுமாறு வேண்டிக்கொண்டு வந்தனர். அன்பர்களின் வேண்டுகோளை கேட்பதும் அதை நிறைவேற்றித் தருவதும்தானே மூவுலகாளும் பரம்பொருளின் பணி. யார் தன்னிடம் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, உள்ளம் உருகி வேண்டுகிறார்களோ அவர்களது விருப்பங்களை உடனடியாக நிறைவேற்றி அழகு பார்க்கும் சுந்தரேசன். மலையத்துவசனுக்கு அருள்புரிந்தார்.

குழந்தை வேண்டி யாகம்

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

பாண்டிய மன்னன் மலையத்துவசன் வேள்வியைத் தொடங்கினான். தட்சிணாமூர்த்தியைத் தொழுது, வேதியர்கள் சூழ, வேதங்கள் ஓதி குழந்தை பாக்கியம் பெறுவதற்கான புத்திர காமேஷ்டி யாகத்தை நடத்திக் கொண்டிருந்தான். மலையத்துவசன் மனம் உருகிச்செய்யும் யாகத்தில் மனம் நெகிழ்ந்த இறைவன், பராசக்தியை பாண்டிய மன்னனுக்கு குழந்தையாக பிறப்பித்து அருளினார்.

சிவனின் திருவருளால், யாக குண்டத்தில் இருந்து குழந்தையாக அம்மன் வந்தாள். அதிசயக் குழந்தையைக் கண்ட மலையத்துவசனும், காஞ்சனமாலையும் ஆனந்தக் கூத்தாடினார். ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது.

மதுரேசருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். குழந்தையை இறைவன் சந்நிதியில் வைத்துக் கொண்டாடினார். மன்னர் குடும்பம் மட்டுமல்லாது, மதுரை மாநகரமே மீனாட்சி அவதரித்த நாளில் விழாக்கோலம் பூண்டது.

மனிதக் குழந்தையாய் அவதரித்த மீனாட்சி அங்கயற்கண்ணி என்ற பெயருடன் வளர்ந்தாள். மலையத்துவசனின் ஒரே வாரிசான மீனாட்சி, கலை, கல்வி, கேள்விகளை விரும்பிக் கற்றுத் தேர்ந்தாள். மீனாட்சிக்குப் பல்வேறு கலைகளும் ஞானமும் கற்பிக்கப்பட்டன.

நாள்தோறும் சுந்தரேசர் ஆலயத்திற்குச் சென்று பரம்பொருளைத் தொழுது வந்தாள் மீனாட்சி. மனிதர்கள் மட்டுமல்ல தேவர்களும் கண்டு ஆச்சரியப்படுமாறு பல துறைகளில் சிறந்து விளங்கினாள்.

மலையத்துவசன் மறைந்த பின், அவனது ஈமக்கடன்களையெல்லாம், மந்திரங்கள் ஓதி முறைப்படி செய்து முடித்தாள் மீனாட்சி. பிரிதொரு நல்ல நாளில் மதுரேசரை வழிபட்டு மதுரைக்கு அரசியாக முடிசூட்டிக் கொண்டாள் மகராசி மீனாட்சி.

About முனைவர். ஆதலையூர் சூரியகுமார்

Avatar

மேலும் படிக்கவும்

சிவன் விளையாடல் – 9

வேல் பெற்ற உக்கிர குமார பாண்டியன் பாரதத்தை புகழ்ந்து பாடும்போது, சுந்தரம் பிள்ளை நீரால் சூழப்பட்ட இந்த உலகிற்கு அழகு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன