முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / சிவன் விளையாடல் – 9

சிவன் விளையாடல் – 9

வேல் பெற்ற உக்கிர குமார பாண்டியன்

பாரதத்தை புகழ்ந்து பாடும்போது, சுந்தரம் பிள்ளை நீரால் சூழப்பட்ட இந்த உலகிற்கு அழகு பொருந்திய முகமாக பாரதம் திகழ்கிறது என்றார். உலகிற்கு ஒளி தரக்கூடிய பிரகாசமான முகமாக இருக்கிறது பாரதம். இன்று இந்த பாரதத்தின் அழகு பொங்கும் முகத்தின் ஆன்ம அழகினைப் பார்த்து அதன் வசீகரத்தில் பல நாடுகளும் ஈர்க்கப்படுகின்றன பாரதம் எப்போதும் வெட்கத்தில் தலை குனிவதில்லை. மாறாக அது வீரத்தால் தலை நிமிர்ந்தே நிற்கிறது.

இப்படிப்பட்ட பெருமைகள் வாய்ந்த பாரதத்தில் தமிழகம் ஒரு புனித பூமி. அந்நியருக்கும், அண்டி வந்தவருக்கும் ஆதரவளிக்கும் புண்ணிய பூமி. எண்ணற்ற அருளாளர்களைத் தந்த அருள் பூமி. பொருளுக்கும் குறைவற்ற பொக்கிஷ பூமி. தெய்வங்கள் வந்து பிறப்பதற்கு விரும்பும் பூமி.

இப்படிப்பட்ட பூமியில் கல்தோன்றி மண்தோன்றுவதற்கு முன்பே தோன்றியது தமிழ்க்குடி. மெய்ஞானிகள் பலர் தோன்றி இந்த மண்ணை மேன்மை பெறச் செய்திருக்கிறார்கள். புனிதர்களின் பாதம் பட்டு மதுரை மண் புனிதப்பட்டிருந்தது.

சீர்காழிப் படித்துறையில் ஞானப்பால் உண்ட ஞானசம்பந்தரைப் போன்ற பல அருளாளர்கள் தோன்றி தூய நெறியையும், நேய நெறியையும் கடைபிடித்ததால் தமிழகம், மேலும், மேலும் புனிதமடைந்து கொண்டே போனது. இந்த வரிசையில் திருவாசகம் படைத்த மாணிக்கவாசகரைப் பெற்று மகுடம் சூட்டிக் கொண்டது மதுரை.

தனது தீராத விளையாட்டுகளை விளையாடுவதற்கு மகேசன் மதுரையைத் தேர்ந்தெடுத்தார் என்றால் மதுரையின் மகத்துவத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.

மீனாட்சியின் வேண்டுதலை ஏற்று உக்கிரகுமார பாண்டியனை பிடிக்கச் செய்தவர் பரம்பொருள். பின்னர், பரம்பாண்டியனாக இருந்து, உக்கிர குமார பாண்டியனாக வளர்ந்து வந்தார்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

உக்கிர குமார பாண்டியனுக்கு 16 வயதான போது அவனுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோராகிய பரம்பாண்டியன் சுந்தரேசப் பெருமானும், மீனாட்சி தேவியும் முடிவு செய்தனர்.

ஒருவன் வாழ்க்கையில் பிரம்மச்சரியம் என்பது முதல் 16 ஆண்டுகள். அதற்கு அடுத்த பதினாறு ஆண்டுகள் கிருதஸ்தம். (திருமணம் செய்து வாழும் குடும்ப வாழ்க்கை) மூன்றாவது பதினாறு ஆண்டுகள் வானப்பிரஸ்தம் (காட்டில் வாழும் துறவு நிலை), நான்காவது கட்டமான பதினாறு ஆண்டுகள் சந்நியாஸம், ( முற்றும் துறந்த துறவு நிலை ).

உக்கிர குமார பாண்டியனுக்கு 16 வயது வந்துவிட்டதால் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. பெண்பார்க்கும் படலம் களைகட்டியது. இப்போதுள்ள உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு அப்போது கல்யாணபுரம் என்று பெயர். உத்திரப்பிரதேசத்தில் இன்றும் பலருடைய பெயர்களில் ‘கல்யாண்’ என்ற பெயர் ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

அந்த கல்யாணபுரம் தேசத்தைச் சேர்ந்த இளவரசி காந்திமதியை உக்கிரகுமார பாண்டியனுக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணம் செய்து வைத்ததோடு மட்டும் அல்லாமல் உக்கிர குமார பாண்டியனை பாண்டிய நாட்டு மன்னனாக பட்டாபிஷேகம் செய்து வைத்து முடி சூட்டி அருளினார்.

தனது நெற்றிக்கண்ணில் இருந்து சரவணப்பொய்கையில் தன்னுடைய (நெற்றிக்கண்) பொறிகளால் ஆறு குழந்தைகளை பிறப்பித்த பெருமான், பின்னர் இந்த ஆறு குழந்தைகளையும், ஒரே குழந்தையாக்கினார் என்பது உங்களுக்கு தெரியும். ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும் கொண்ட முருகப்பெருமானை சரவணப் பொய்கையில் பிறக்கச் செய்தவர் பிரான்.

திருச்செந்தூரில் முருகப்பெருமான் ஐந்து லிங்கங்களை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தபோது சூரபத்மனை வெல்வதற்காக பதினோரு ருத்திரர்களை பதினோரு ஆயுதமாக படைத்தவர் பிரான். பன்னிரண்டாவது ஆயுதமாக ஞானவேலை அளித்து அருளினார்.

இந்த இரண்டு நிகழ்வுகள் போலவே, இப்போது உக்கிரகுமாரனாக அவதரித்திருந்த முருகப்பெருமானுக்கு ஆயுதம் வழங்க வேண்டும். உக்கிர குமார பாண்டியனை இந்த உலகத்தில் சிலர் உக்கிரமாக எதிர் பார்ப்பார்கள் இல்லையா?

எனவே பகைவர்களை வெல்வதற்காக உக்கிரகுமார பாண்டியனுக்கு வேல், வளை, செண்டு ஆகியவற்றை வழங்கி அருளிச் செய்தார் மகேசன்.

“தாயிற் சிறந்த தயாஆன தத்துவனே..” என்கிறது சிவபுராணம்.

தந்தையாய்த் தாயு மாகித் தரணியாய்த் தரணி யுள்ளார் கெந்தையு மென்ன நின்ற வேழுல குடனு மாகி எந்தையெம் பிரானே யென்றென் நுள்குவா ருள்ள தென்றுஞ் சிந்தைஞ் சிவமு மாவார் திருப்பற் றூர னாரே.
-அப்பர் தேவாரம்- 4479

உக்கிர குமார பாண்டியன் உருகினான். தனக்கு மட்டுமன்றி எல்லோருக்கும் தாய் தந்தையாய் திகழும் பரமேஸ்வரப் பரம்பொருளை வலம் வந்து வணங்கினான். பிறகு தந்தையும், தாயுமாய் நின்ற பெருமானிடம் வேல், வளை, செண்டு ஆகியவற்றை உக்கிர குமாரன் பெற்றுக் கொண்டான்.

வேல், வளை, செண்டு பெற்றுக்கொண்ட உக்கிர குமார பாண்டியனுக்கு மதுரை திருக்கோயிலில் பட்டாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த திருவிளையாடல் கண்டு சுந்தர பாண்டியரை எல்லோரும் வணங்கி நின்றபோது, மீனாட்சி தேவியுடன் சுந்தர பாண்டியனார் மறைந்து அருளினார்.

இறைவனின் திருவருட் பெருங் கருணையினால், மனிதப் பிறவி முடிந்து அம்மனாக எழுந்த மீனாட்சிக்கு, சொக்கலிங்கம் பரம்பொருளுக்கு வலது புறம் அதே திசையில் நந்தி வாகனத்துடன் பெரிய சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.

பாண்டி நாட்டின் எல்லா சிவாலயங்களிலும், ஈசனுக்கு வலதுபுறம் அதே திசையில் நந்தி வாகனத்துடன் சிவ பக்தையான அம்மனுக்கு பெரிய சந்நிதி உள்ளது.

தொடரும்

About முனைவர். ஆதலையூர் சூரியகுமார்

Avatar

மேலும் படிக்கவும்

சிவன் விளையாடல் – 8

மலையத்துவசனை அழைத்த திருவிளையாடல் திருமணமான பெண்கள் விருந்து விசேஷம் என்று தாய் வீட்டிற்கு வரும்பொழுது கணவனுடன் சேர்ந்துதான் வருவார்கள். வரவேண்டும். …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன