முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / சிவன் விளையாடல் – 8

சிவன் விளையாடல் – 8

மலையத்துவசனை அழைத்த திருவிளையாடல்

திருமணமான பெண்கள் விருந்து விசேஷம் என்று தாய் வீட்டிற்கு வரும்பொழுது கணவனுடன் சேர்ந்துதான் வருவார்கள். வரவேண்டும். அதுதான் மரபு. தனியாக பெண்மட்டும் வந்தால் “எங்கே அவர் வரவில்லையா..–?” என்று உடனேயே முதல் கேள்வி கேட்டு விடுவார்கள்.

வீட்டில் நடக்கும் ஹோமங்கள், பூஜைகள், பண்டிகைகள், ஊர் திருவிழாக்கள் போன்றவற்றில் கணவனும், மனைவியும் இணைந்துதான் பங்கேற்பார்கள். விருந்து விசேஷங்களில் தம்பதி சமேதராக கலந்து கொள்ள வேண்டும் என்பதுதான் நம் சொல்கிற பண்பாடு. அதுதான் நம் பண்பாட்டுக்கு அழகு செய்கிற அலங்காரம்.

அதனால்தான் நமது கடவுள்களே. தம்பதி சகிதமாக காட்சி தந்து நமக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள். இன்றும் நம் இந்து சமூக சூழலில் சில பிரிவுகளில் ‘புள்ளி’ என்று ஒரு கணக்கு சொல்வார்கள். திருமணமான ஆண்தான் ஒரு ‘புள்ளி’ என்று கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவான்.

இணைபிரியக் கூடாத பந்தமாக கணவன் மனைவி இருக்க வேண்டும் என்பதே, இந்த இயற்கையை உருவாக்கிய இறைவனின் ஆசை.

விருந்து விசேஷத்திற்கே அப்படியென்றால், சமுத்திரத்தில் நீராடும், புனித நீராடலுக்கு புண்ணிய நிகழ்வுக்கு ஒரு பெண் தனியாக செல்வது என்பது சுப நிகழ்வாக இருக்காது அல்லவா-?

காஞ்சன மாலையின் வேண்டுகோளை ஏற்று மதுரையில் ஏழ்கடலையும், புகச்செய்து பரம்பொருள் அற்புதம் நிகழ்த்தினார்.அல்லவா? அதைத் தொடர்ந்து அடுத்த திருவிளையாடலையும் நிகழ்த்திக் காட்டினார்.
மதுரையில் ஏழ்கடல் புகுந்ததும் மக்கள் எல்லோரும் ஆச்சரியத்தில் மகிழ்ந்தனர். ‘ஜல்லிகட்டு போட்டிக்கு’ ஆதரவாய் அலைகடல் என எழுந்த கூட்டம் போன்று அன்று மதுரையில் புகுந்த ஏழ்கடலைக்காண மதுரை மாநகரமே திரண்டது.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

மதுரேசனின் கருணையைக் கண்டு உருகி நின்றாள் காஞ்சனமாலை. இதுவரை தான் செய்த எல்லா புண்ணிய செயல்களையெல்லாம் கணவனுடன் சேர்ந்துதான் செய்து வந்திருக்கிறாள் காஞ்சனமாலை.
ஆனால் கடலில் நீராடுவதை மட்டும் தனியாக செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டதை எண்ணி மிகவும் வருந்தினாள். கணவனுடன் சேர்ந்து நீராடினால் நலமாக இருக்குமே என்று நினைத்தாள்.
ஞாலத்தில் ஏதோ ஒரு மூலையில் நடப்பதையெல்லாம் தன் ஞானக் கண்ணால் உணர்ந்து விடும் ஈசன், காஞ்சனமாலை தன் மனதில் நினைப்பதை கணப்பொழுதில் உணர்ந்து விட்டார்.

அன்போடு உருகும் அடியவர்களின் ஆசைகளை அவ்வப்போது நிறைவேற்றி அழகு பார்ப்பவர், அண்ட சராசரங்களை ஆள்பவர், காஞ்சனமாலையின் மன வருத்தத்தைப் போக்கி அருளினார்.

மகரத்தோடு கெடியோனுடலம் பொடிசெய்தவனுடைய நிகரொப்பில்லாத் தேவிக்கருள்செய் நீலகண்டனார் பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம்பணிந்தேத்தத் தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பைநகராரே,
-திருஞானசம்பந்தர் – தேவாரம் – 714.

காஞ்சன மாலை வேண்டுதலுக்கு மனம் இரங்கி மலையத்துவசனை மறுபடியும் உயிரோடு அழைத்தார் பரம்பொருள்.

இதனால்தான் “யாருக்குமே இல்லை என்று கூறாது அருள்மழை பொழிபவர் இறைவன்” என்று கொண்டாடுகிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். உள்ளம் உருகி உண்மையாக வேண்டுபவர்களின் உள்ளக் குறைகளை உடனுக்குடன் போக்கி அருளும் ஈசன் காஞ்சன மாலையின் விருப்பத்தை நிறைவேற்றி அருளினார்.

ஒருமுறை குற்றச் செயல் செய்து மாண்டுபோன தட்சனை, அவனது மனைவிக்காக உயிரோடு வரவழைத்தார். பிறிதொரு முறை ரதியின் வேண்டுகோளை ஏற்று காமதேவனை மீண்டும் உயிரோடு வரவழைத்தார். தற்போது காஞ்சனமாலையின் வேண்டுகோளுக்காக, அவள் கணவன் மலையத்துவசனை மறுபடியும் உயிரோடு அழைத்தார்.

எந்தவொரு குற்றமும் செய்யாமல், அபச்சார செயல்களில் ஈடுபடாமல் காலந்தோறும் சிவத்தொண்டு புரிந்து வந்தவன் மலையத்துவச மன்னன். எனவே காஞ்சனமாலையின் அன்பு வேண்டுகோளை ஏற்று அவள் கணவனை வரவழைத்தார்.

ஏழ்கடல் அருகே மீண்டும் உயிருடன் வந்தான் மலையத்துவச பாண்டியன். மதுரேசரின் கருணையைக் கண்டு அவர் காலடியில் விழுந்து வணங்கினான்.

இறைவன் நடத்திக் கொண்டிருக்கும் திருவிளையாடல்கள் ஒவ்வொன்றையும் கண்டு மலைத்துப்போய் நின்றான் மலையத்துவச பாண்டியன். இல்லாத பொருளை ஆக்கவும், இருக்கின்ற பொருளை இல்லாது போக்கவும், இயன்ற இறைவனின் கருணைப் பெரும்பேற்றை போற்றுவது எப்படி என்று புரியாமல் துதித்தான்.

காலங்கள் நூறு ஆனாலும், உன் கருணைக்கு நன்றி சொல்ல என் கூப்பிய கரங்களைத் தவிர வேறு ஒரு உபாயமும் என்னிடம் இல்லை என்று கண்ணீர் மல்க வணங்கிய மலையத்துவசன், மனைவியையும், மகளையும் தழுவிக்கொண்டான்.

கொடுக்க இயலாத வரங்களையெல்லாம் கொடுக்கும் சக்தி படைத்த பரம்பொருளை வணங்கித் தொழுத காஞ்சனமாலை, கணவனைப் பார்த்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தாள்.
கணவனும், மனைவியுமாக கைப்பிடித்து கருணைக் கடலாக விளங்கும் இறைவனின் திருநாமம் ஓதி கடலில் நீராடினர்.

இறைவன் பரமேஸ்வரனாகக் காட்சி அளித்து, இருவருக்கும் முக்தி அருளி சிவலோக வாழ்வை அருளிச் செய்தார். இருவரும் சிவகணங்களாகி சிவலோகம் சேர்ந்தனர்.
மலையத்துவசன் மீண்டும் உயிர் பெற்று வந்ததையும், மலையத்துவசனும், காஞ்சனமாலையும் சேர்ந்து ஏழ்கடலில் நீராடியதையும் மதுரை மக்கள் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து மதுரை மக்களும் ஏழ்கடல் தீர்த்தத்தில் நீராடி மகிழ்ந்தனர். வைகை நதி பிறந்தபோது மதுரை பெருமகழ்ச்சி பெற்றது. அப்போதே நீர் நிலைகள் நிரம்பி சோலைகளாக மாறின. இப்போது ஏழ்கடல் தீர்த்தம் தோன்றியவுடன் மதுரை மக்களின் மனம் குளிர்ந்தது.

“மந்திர மொன்றறியேன் மலைவாழ்க்கை மகிழ்ந்தடியேன் சுந்தர வேடங்களால் துரிசூச செயும் தொண்டனெனை அந்தர மால்விசும்பில் அழகான யருள்புரிந்த துந்தர மோநெஞ்சமே நொடித்தான் மலை உத்தமனே”
– சுந்தரர் தேவாரம் – 8243

தொடரும்

About முனைவர். ஆதலையூர் சூரியகுமார்

Avatar

மேலும் படிக்கவும்

சிவன் விளையாடல் – 9

வேல் பெற்ற உக்கிர குமார பாண்டியன் பாரதத்தை புகழ்ந்து பாடும்போது, சுந்தரம் பிள்ளை நீரால் சூழப்பட்ட இந்த உலகிற்கு அழகு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன