முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / சிவன் விளையாடல் – 7

சிவன் விளையாடல் – 7

மதுரையில் ஏழு கடல் எழுந்த திருவிளையாடல்

நீராடும் கடலுடத்த நிலமடந்தையான இப்பூவுலகில் புவியியல் ரீதியாக ஏழு கண்டங்கள் இருப்பதாகப் படிக்கிறோம். ஐந்து பெருங்கடல்கள் இருக்கின்றன. ஆனால் இந்த பூமி, ‘நெடிலா’வில் இருந்து ‘காஸ்மித்’ வெடிப்பு மூலமாக பிரிந்து வந்தபோது, பான்ஜியா என்ற ஒரே நிலப்பரப்புத்தான் இருந்தது. ‘பாந்தலாசா’ என்ற ஒரே நீர்ப்பரப்பு இந்த நிலப்பரப்பை சூழ்ந்திருந்தது. ஒரே கடல். ஒரே நிலம். புவியியலில் பான்ஜியா என்றால் ‘எல்லா நிலமும்’ என்று அர்த்தம். பாந்தலாசா என்றால் ‘எல்லா நீரும்’ என்று அர்த்தம்.

இந்த அழகிய ‘பான்ஜியா’ நிலப்பரப்பை, டெத்தீஸ் என்ற நதி இடையில் புகுந்து பிரிக்கிறது. பான்ஜியா இரண்டாகப் பிரிகிறது. பான்ஜியாவின் வட பகுதி அங்காரா என்றும், தென்பகுதி கோண்டுவானா என்றும் அழைக்கப்பட்டது.

கோண்டுவானா பகுதியும், அங்காரா பகுதியும் பாந்தலாசா கடல் மீது மிதந்து கொண்டிருந்தன. பிறகு இரண்டு பகுதிகளும் ஒன்றோடொன்று மோதி ‘டெத்திஸ் நதி’ மறைந்து போனது. டெத்திஸ் நதி இருந்த இடத்தில்தான் இன்று இமயமலை உயர்ந்து நிற்கிறது. அதாவது அன்றைய ஆழ்கடல்தான், இன்று உலகின் மிக உயரமான சிகரத்தைக் கொண்ட பனிபடர்ந்த இமயமாக உயர்ந்தது. அது இயற்கையின் திருவிளையாடல் என்று புவியியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். நிச்சயமாக இல்லை. அது இறைவனின் திருவிளையாடல். இறைவனின் தீராத விளையாட்டுகளில் அதுவும் ஒன்று.

சொல்ல வந்த விஷயம் இதுதான். ஐந்து தொழில்களைப் புரியும் இறைவனால் அன்று படைக்கப்பட்ட நிலமும் ஒன்றுதான். கடலும் ஒன்றுதான். ஆதிப்புவியியலும் இதையேதான் சொல்கிறது.

இப்போது உலகின் மகா சமுத்திரங்கள் ஐந்து என்று புவியியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
பகீரதனின் முன்னோர்களாகிய சகர குமாரர்கள் பூமியில் தோண்டிச் சென்ற இடங்கள்தான் ஏழு கடல்களாக உருவெடுத்தன. இந்த ஏழு கடல்களையும் ஓட்டிய நிலப்பகுதி ஏழு கண்டங்களாகப் பெயர் பெற்றன.

எல்லாம் சரி… இந்த ஏழு கடல்களும் ஒரு முறை மதுரையில் எழுந்தன. ஏன்..? எதற்கு..? எப்படி…? இது இறைவனின் ஏழாவது திருவிளையாடல்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

மலையத்துவசன் மனைவியான காஞ்சன மாலை (மீனாட்சி தேவியின் தாயார்) பக்தியில் சிறந்தவள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முப்போதும் இறைத்தொண்டில் ஈடுபட்டிருப்பாள். இறைசிந்தனையை மட்டும் தன் சிந்தனையில் நிறுத்தி, அனைத்து செயல்களையும் இறைவனின் திருநாமம் ஓதி செய்து வருபவள். புண்ணியம் தரும் பணிகளுக்கே தன்னை முழுமையாக ஆட்படுத்திக் கொண்டவள்.

விரதங்கள் மேற்கொள்வது, பூஜைகள் செய்வது, பண்டிகைக் கொண்டாட்டங்களில் பங்கெடுப்பது. வேள்விகள் செய்வது, ஹோமங்கள் வளர்ப்பது, தவம் செய்வது, தியானம் புரிவது, புனித தீர்த்தங்களுக்குச் சென்று நீராடுவது, யாத்திரைகள் மேற்கொள்வது என எல்லாவிதமான புண்ணியச் செயல்களையும், தன் அன்றாடக்கடமையாக நினைத்து செய்து வருபவள். அதன் பயனாகத்தான், காஞ்சன மாலை மலையத்துவசப் பாண்டியனை மணவாளனாகப் பெற்றாள்.

தான் புனிதக் கடமையாக நினைத்து மேற்கொண்டு செய்த செயல்களில் ஒன்று மட்டும் நிறைவேறாமல் அவள் மனதை வருத்திக்கொண்டே இருந்தது. கடலில் சென்று நீராடும் ஒரு புண்ணிய செயலை மட்டும், செய்ய முடியாமல் போனதால் அவள் மிகவும் வருத்தம் அடைந்திருந்தாள்.

அதிலும் மலையத்துவசன் இறந்ததில் இருந்து வேறு எங்கும் செல்ல விரும்பாமல் மதுரையிலேயே இருந்தாள். மதுரையில் இருந்தபடியே கடல் நீராட ஆசைப்பட்டாள் காஞ்சன மாலை.

வேண்டுதல், வேண்டாமை என்று ஒன்று இல்லாமல் பற்றற்று நிற்கும் பரம்பொருளிடம் சென்று தனது கவலைகளை எடுத்துரைத்தாள் காஞ்சனமாலை. தன் வேண்டுதலை சொல்லி அதை அருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். ‘தன்னிடம் வந்து குறைகளை சொல்லி அதனை நீக்கி அருள வேண்டும். ஆத்மாக்களின் குறைகளையெல்லாம் நீக்கி, அவர்கள் வேண்டுவன தந்து, வேடிக்கை பார்ப்பதுதானே பரம்பொருளின் வாடிக்கை. தனது பக்தர்களை சந்தோஷப்படுத்திப் பார்ப்பதுதானே பரம்பொருளுக்கு சந்தோஷம்.
தனக்குவமை இல்லாத தத்துவப் பரம்பொருள், காஞ்சனமாலையின் மனக்குறையைப் போக்கி

அருளினார். காஞ்சன மாலை நீராடுவதற்காக பூலோகத்தில் உள்ள ஏழு கடல்களையும் மதுரையில் புகுந்திடச் செய்தார்.

ஏழு கடல்களும் மதுரையில் வந்ததைப் பார்த்து மீனாட்சி தேவியும், தாய் காஞ்சன மாலையும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தனர்.

மதுரையின் தென்கிழக்குத் திசையில் (அக்னி மூலையில்) புகுந்த இந்த ஏழு கடல்கள் ஏழுகடல் தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றன. ஏழுகடல் தீர்த்தத்திற்கு அருகே நீலகண்டேஸ்வரர் கோயில் உள்ளது. மதுரையில் இன்றைக்கும் பரபரப்பாக இயங்கிவரும் ‘எழுகடல் வீதி’, கடல் அழைத்த திருவிளையாடலுக்கு கட்டியங் கூறுகிறது.

தொடரும்

About முனைவர். ஆதலையூர் சூரியகுமார்

Avatar

மேலும் படிக்கவும்

சிவன் விளையாடல் – 9

வேல் பெற்ற உக்கிர குமார பாண்டியன் பாரதத்தை புகழ்ந்து பாடும்போது, சுந்தரம் பிள்ளை நீரால் சூழப்பட்ட இந்த உலகிற்கு அழகு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன