முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / சிவன் விளையாடல் – 6

சிவன் விளையாடல் – 6

வைகை பிறந்ததும். . .
மதுரை சிறந்ததும். . .

தமிழகத்தில், ஏன் தென் இந்தியாவிலேயே பழமையான நகரம் என்று மதுரையை சொல்ல முடியும். உலகின் பழம்- பெருமை வாய்ந்த நகரம் என்று ஏதென்ஸ் நகரத்தைக் குறிப்பிடுகிறார்கள். ஏதென்ஸ் கிரேக்க நாகரிகத்தின் செல்லப்பிள்ளை. கிரேக்க நாட்டின் மூத்தகுடி. 2500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டது. இந்த ஏதென்ஸ் நகரம். பழைய ஒலிம்பிக் விளையாட்டுகள் இந்த நகரில்தான் தொடங்கின.

ஏன் ஏதென்ஸ் பற்றி குறிப்பிடுகிறோம் என்றால், வரலாற்று ஆசிரியர்கள் மதுரையைப் பற்றிக் குறிப்பிடும்போது தென் இந்தியாவின் ஏதென்ஸ் என்று குறிப்பிடுகிறார்கள். அவ்வளவு பழமையான நகரம். ஏதென்ஸ் தோன்றிய போதே மதுரையும் தோன்றியது. இரண்டு நகரங்களும் ஒரே கால கட்டத்தில் தோன்றியவை என்ற கருத்தை வரலாற்று ஆசிரியர்கள் விதைக்கின்றனர். உண்மை இதுவன்று.

ஏதென்ஸ் நகரம் தோன்றும் முன்பே போது மதுரை இருந்தது. ஏதென்ஸ் நகருக்கு முன்பு ஏதேனும் ஒரு நகரம் தோன்றியிருக்குமானால் (அல்லது, தோன்றியதாக வரலாறு இருக்குமானால்) அப்போதும் மதுரை இருந்திருக்கும். ஆக மதுரை ஏதென்ஸ் நகரை விடவும் பழமையானது. மதுரை கிருதா யுகத்தில் உருவானது. எப்போது உருவானது என்பது குறித்த சமகால வரலாற்று ஆசிரியர்களின் கால கணிப்பைக் கடந்தது,.

அப்படி காலத்தை வென்று கடந்து வந்த வரலாற்றை உடையது மதுரை. மதுரையில் காடுகளும், மலைகளும் உருவான வரலாறு நமக்குத் தெரியாது. ஓடைகளும், நதிகளும் என்று ஓடத் தொடங்கியது என்று தெரியாது. சோலைகளும், தோட்டங்களும் என்று முதல் பூக்களைச் சொரிந்து வருகின்றன என்பதும் தெரியாது.

கனவில் வந்த கடம்பவனப் பெருமான் சொன்ன சேதி கேட்டுத்தான் பாண்டிய மன்னன் கடம்பவன நகரை உருவாக்கினான் என்ற தகவல் மட்டுமே நமக்குத் தெரியும்.

குளங்களும், குளங்களில் ஆம்பலும், சோலைகளும், சோலைகளில் பூங்குருவிகளும், காடுகளும், காடுகளில் வானரங்களும் உறவாடி மகிழ்ந்திருந்தன. ஏரிகளும், (கண்மாய்கள்) குளங்களுமாய் எங்கு பார்த்தாலும் நீர்நிலைகள். எல்லா நீர் நிலைகளும்-, தூய நீரால் நிரம்பித் ததும்பியிருந்தன.
ஆனால் திடீரென்று ஒருநாள் நீர்நிலைகள் எல்லாம் வற்றிப் போய்விட்டது.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

ஏன் என்ன ஆயிற்று நீர் நிலைகளுக்கு. . . -.?

பரம்பொருளின் அருட்பார்வையால் பசி தீர்ந்த குண்டோதரனுக்கு தாகம் எடுத்தது. பசி தீர்ந்த பின் தண்ணீர் தாகம் எடுத்தது. மீண்டும், மீண்டும் உணவருந்தியும் அடங்காத பசியில் தவித்திருந்த குண்டோரனுக்கு இப்போது தண்ணீர் தாகம். காவிரியில் தண்ணீர் இல்லாத தமிழகம் மாமாங்கமாய் தவித்துக்கிடப்பது மாதிரி தவித்தான் குண்டோதரன்.

எவ்வளவு தண்ணீர் அருந்தியும் தாகம் தீராத குண்டோதரன் முன்பு செய்தது போலவே அரண்மனையில் புகுந்து அங்கிருந்த தண்ணீரையெல்லாம் குடித்தான்.
அப்படியும் தாகம் தீராத குண்டோதரன் மதுரையில் இருந்த கிணறு, ஏரி (கண்மாய்), குளங்கள் ஆகிய நீர் நிலைகளில் இருந்த தண்ணீரையெல்லாம் உறிஞ்சி தீர்த்தான். நீர் நிலைகள் எல்லாம் வற்றிக்கொண்டு போயின.

மேலை சித்திரை வீதியில் தோண்டப்பட்ட அன்னக்குழிகளில் இருந்து குண்டோதரன் உணவு உண்ட காட்சியை ஆச்சரியமாகப் பார்த்த மதுரை நகர மக்கள் அவன் தண்ணீர் பருகியதையும், தாகம் தீராமல் தவித்ததைம் பார்த்தார்கள்.

தாக மிகுதியில் நா வறண்டு தவித்த குண்டோதரன் பரம்பொருளை சரண் அடைவதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தான்.

“வெள்ளநீர்ச் சடையர் போலும் விரும்புவார்க் கெளியர் போலும் உள்ளுளே உருகி நின்றங் குகப்பவர்க் கன்பர் போலும் கள்ளமே வினைக ளெல்லாங் கரிசறுத் திடுவர் போலும் அள்ளலம் பழனை கமய ஆலங்காட் டடிகளாரே..!”
அப்பர் தேவாரம் 4817திருவாலங்காடு, திருநேரிசை

ஜீவ நதியை தன் திருமுடியில் தாங்கிய பரம்பொருளை, பஞ்ச பூதங்களாகவும் விளங்கும் பரம்பொருளை, நீராக நின்ற ஜலகண்டேஸ்வரரை, சாதாரண நீரையெல்லாம் தீர்த்தமாக மாற்றித் தரும் தியாகப் பெருமானை சரணடைந்து, தனது தாகம் தணித்தருள வேண்டினான்.
பெருக்கெடுத்து ஓடிவந்த கங்கையைத் தன் தலையில் தாங்கி பூவுலகைக் காத்த பெருமான், தன்னிடம் தண்ணீர் கேட்டு சரணடைந்த குண்டோதரன் கரங்களில் கங்கை நீர்த்துளிகளை எடுத்து தெளித்தார். அதில் சில நீர்த்துளிகள் மட்டும் நதியாகப் பெருக்கெடுத்தன. சிவ நாமம் ஓதி, நீரைப் பருகி தாகம் தணிந்தான் குண்டோதரன்.

தாகத்தால் தவித்த போது, குண்டோதரன் நீர் நிலைகளையெல்லாம் காலி செய்தான் இல்லையா-? அதனால் காய்ந்து கிடந்த குளங்கள், கிணறுகள், ஏரிகள் (கண்மாய்கள்) எல்லாம் மீண்டும் நிரம்பி வழிந்தன.

குண்டோதரன் கைகளில் இருந்து நீர் வழிந்து பெருக்கெடுத்து வேகமாக ஓடியதால் மதுரையில் பாயும் நதி வைகை என்றும் வேகவதி என்றும் பெயர் பெற்றது. சிவனின் முடியிலிருந்த கங்கையின் நீர்த்துளிகளில் இருந்து நதி உருவானதால் வைகைக்கு சிவகங்கை என்ற பெயரும் உண்டானது.

வைகை பாய்ந்த பிறகுதான் மதுரையின் கிணறு, ஏரி (கண்மாய்), குளங்கள் போன்றவை நிரம்பின. குண்டோதரன் தாகம் தீர்ப்பதற்காக சிவபெருமானால் ஸ்பெஷலாக உருவாக்கப்பட்ட நதி இந்த வைகை. அதனால்தான் இந்த நதி கடலில் கலப்பதில்லை. கண்மாயில் சங்மித்து விடுகிறது.

தொடரும்

 

About முனைவர். ஆதலையூர் சூரியகுமார்

Avatar

மேலும் படிக்கவும்

சிவன் விளையாடல் – 9

வேல் பெற்ற உக்கிர குமார பாண்டியன் பாரதத்தை புகழ்ந்து பாடும்போது, சுந்தரம் பிள்ளை நீரால் சூழப்பட்ட இந்த உலகிற்கு அழகு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன