முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / சிவன் விளையாடல் – 5

சிவன் விளையாடல் – 5

குண்டோதரன் பசியாற்றியது

ஒருவேளை சாப்பாடு ஒரு மணி நேரம் தாமதமானால் நாம் துடித்துப் போய்விடுகிறோம். அதுவும் நீரிழிவு நோயாளி என்றால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். நல்ல பசி நேரத்தில் ஒரு பிஸ்கட் பாக்கெட் கிடைத்தால் அது எவ்வளவு பெரிய அமிர்தம். அந்த ஒரு பிஸ்கட் பாக்கெட் கிடைப்பதற்குள் நாம் எவ்வளவு படபடத்துப் போய்விடுகிறோம்.

இதற்கு நேர் முரணாக நம் ஊரில் நடக்கும் திருமணங்களில் நாம் எவ்வளவு உணவுப் பொருட்களை வீணடிக்கிறோம். இலைகளில் வைக்கும் அத்தனை பதார்த்தங்களையும் நம்மில் எத்தனை பேர் முழுமையாக சாப்பிடுகிறோம். உணவுப் பொருட்களை வீணடிக்ககூடாது என்ற அறிவுரையை நாம் எத்தனை முறை கேட்டிருப்போம். ஆனால் பின்பற்றுகிறோமா–? நாம் வீணடிக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டு எத்தனை ஆயிரம் பேர் பசியாறலாம்-..? எத்தனை ஏழைகள் உணவில்லாமல் தவிக்கிறார்கள்.

இப்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது போல உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால் நம் கதி என்ன? உணவுக்காக எவ்வளவு அல்லாட வேண்டியிருக்கும்.
இந்த தத்துவத்தை பூலோக மக்களுக்கு உணர்த்துவதற்காக இறைவன் நடத்திய திருவிளையாடல் என்னவென்று பார்ப்போமா ?

நம் ஊர்களில் நடக்கிற திருமணங்களிலேயே உணவுப் பொருட்கள் மீந்து விடுகிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் என்றால் சொல்லவா வேண்டும்! மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்தைக் காண வந்த அனைவரும் விரும்பியதை விரும்பியவாறு உண்டு மகிழ்ந்தனர். பதஞ்சலி முனிவரும்–, வியாக்கிரபாத முனிவரும் கூட இறைவனின் திருநடனம் பார்த்து உணவு உண்டு முடித்துவிட்டனர்.

ஆனாலும், ஏகப்பட்ட உணவு மலை மலையாக குவிந்து கிடந்தது. விதம் விதமான உணவுகள் இங்கும் அங்குமாக மீந்து கிடந்தன. உணவுப் பொருட்களை ஒரு துளியும் வீணாக்க விரும்பாதவள் மீனாட்சி. இப்படி மீந்து குவிந்து கிடக்கும் உணவுப் பொருட்களை என்ன செய்வதென்று யோசித்தாள். “உடனடியாக உணவுப் பொருட்களை விநியோகிக்க வேண்டும்” மீனாட்சிக்கு ஒரு யோசனை தோன்றியது.

அனைத்து உணவுகளையும் உண்ணும் சக்தி படைத்தவர்கள் பூதகணங்கள்தான். சதா சர்வ காலமும் சிவத்தொண்டு செய்து, தூய்மையான வாழ்க்கை நெறியை மேற்கொண்டு சிவலோகத்தில் வாழ்ந்து வரும் உன்னதமான ஆத்மாக்கள்தான் சிவ கணங்கள். பிறப்பு, இறப்பு நீங்கிய பேறு பெற்றவர்கள் அந்த சிவகணங்கள்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

அந்த பூத கணங்களை உணவு உண்ண அனுப்புமாறு சுந்தரேஸ்வரரை வேண்டினாள் மீனாட்சி. சுந்தரேஸ்வரர் மற்ற பூத கணங்களை எல்லாம் விடுத்து விட்டு குண்டோதரன் என்ற கணத்தை தேர்ந்தெடுத்து அழைத்தார்.

உணவு உண்பதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி, சில பேர் மணப்பெண் மாதிரி இரண்டு இட்லிகளைக்கூட இரண்டு மணி நேரம் சாப்பிடுவார்கள். வேறு சிலரோ இரண்டு கைகளால் இலையில் உள்ளதை அள்ளி உள்ளே வீசிவிடுவார்கள்.

இதில் குண்டோதரன் இரண்டாவது ரகம். மலைமலையாய் குவிந்திருந்த உணவு, குண்டோதரனுக்கு ஒரு கைப்பிடி அளவாய் கண்ணுக்குத் தெரிந்திருக்கும் போல, வந்த ஒரு நொடியில் அவ்வளவு உணவு மலைகளையும் உண்டு தீர்த்தான். குண்டோதரன் உணவு உண்ட காட்சியை விழி விரிய ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி. ஒரே நொடியில் உணவு தீர்ந்ததில் மீனாட்சிக்கு ஏக சந்தோஷம்.

ஆனால் விபரீதம் வேறு ரூபத்தில் இருந்தது. அவ்வளவு சாப்பாட்டையும் சாப்பிட்ட பிறகும் குண்டோதரனுக்கு பசி அடங்கவில்லை. பசியால் துடித்தான். மீண்டும், மீண்டும் சமைத்துக் கொடுத்தார்கள். ஆனாலும் பலனில்லை. குண்டோதரனின் பசி தீரவில்லை. திருமணத்திற்கு கொண்டு வந்திருந்த அனைத்து உணவுப் பொருட்களையும் சமைத்துக் கொடுத்து விட்டார்கள். இனி சமைக்கவோ, கொடுக்கவோ எதுவுமில்லை.

குபேரன் அரண்மனையில் விநாயகர் உண்ட மாதிரி மதுரையில் சோலைகளிலும், தோட்டங்களிலும் புகுந்து காய்கனிகளையெல்லாம் பறித்து உண்டான் குண்டோதரன்.

நிறைய சாப்பிடுபவர்களைப் பார்த்து… இது என்ன, வயிறா..? சாலா..? என்று கேட்பார்கள். அது மாதிரிதான் குண்டோதரனைப் பார்த்து மதுரை மக்கள் கேலியும், கிண்டலும் செய்தார்கள். போடப் போட உள்வாங்கிக் கொண்டே இருக்கிறதே.. குண்டோதரனுக்கு இருப்பது வயிறா…? கடலா…? என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

தன் வயிற்றில் பசி நீங்க உணவிடுமாறு மீனாட்சி தேவியிடம் வந்து நின்றான் குண்டோதரன்.
இதற்கென்ன உபாயம் இருக்கிறது என்று தெரிந்து, பிரம்ம தேவரிடம் சென்று குண்டோதரனின் பசிக்கு உணவுப் பண்டங்களைப் படைத்து அளிக்குமாறு வேண்டினாள் வேண்டினாள்.

பிரம்மதேவன் படைக்கும் உணவுப் பொருட்கள் கூட்டல் விகிதத்தில் அதிகரித்தால், குண்டோதரனின் பசி, பெருக்கல் விகிதத்தில் பெருகிக் கொண்டு போனது. ஒரு கட்டத்தில் குண்டோதரனுக்கு உணவு வழங்க முடியாமல் சோர்ந்துவிட்டார் பிரம்ம தேவன்.

உலகைக் காத்து ரட்சிக்கும் மகாவிஷ்ணுவிடம் சென்று குண்டோதரனின் பசி போக்க வேண்டினாள்.
மகாவிஷ்ணு ‘அது தன்னால இயலாத காரியம், உலகத்தின் உயிர்களையெல்லாம் காத்து ரட்சிக்கும் கடமையைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை’ என்று சொல்லி கைவிட்டார்.

உடனடியாக ருத்திரனிடம் சென்று, குண்டோதரனின் பசியை அழித்து அருளுமாறு வேண்டினாள். குண்டோதரனின் பசியைப் போக்குவது என்பது தன் சக்திக்கு அப்பாற்பட்டது என்று கூறி மறுத்து விட்டார்.

விருந்து உண்ண வந்தவரின் பசியைப் போக்க முடியவில்லையே என்று எண்ணி வருந்தினாள் மீனாட்சி.

பசி தாங்க முடியாமல் தவித்து துடித்த குண்டோதரன் பரம் பொருளின் திருவடிகளை சரண் அடைந்தான்.

காசியில் வழிபட்ட அன்னபூரணிக்கு அட்சய பாத்திரத்தை வழங்கி அருளிய பரமேஸ்வரன், குண்டோதரனின் பசி போக்கி அருளினார். மதுரையில் மேற்குச் சித்திரை வீதியில் நான்கு திசைகளிலும் (திசைக்கு ஒன்றாக) நான்கு அன்னக்குழிகளை வெட்டினார். குண்டோதரன் நமச்சிவாய மந்திரம் ஓதி, நான்கு அன்னக்குழிகளில் இருந்தும் அன்னம் எடுத்து உண்டான். இதன் பின்னர்தான் பசி நோய் நீங்கப் பெற்றான்.

மீண்டும் பரம்பொருளின் திருவடிகளை வணங்கித் தொழுதான். மதுரை சுந்தரேஸ்வரப் பெருமானை வேண்டி பொன் விமானத்தைத் தாங்கும் பேறு பெற்றான். இன்றும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில், சொக்கநாதர் விமானத்தை குண்டோதரன் தாங்கும் காட்சியை நீங்கள் பார்க்கலாம்.

குண்டோதரன் உண்டதால் வெறிச்சோடிக் கிடந்த சோலைகளையும், தோட்டங்களையும் மீண்டும் பழைய மாதிரியே தோன்றச் செய்தார் சுந்தரேசன்.

மேலச்சித்திரை வீதியில், குண்டோதரன் பசி தீர அன்னம் உண்ட இடம் அன்னக்குழி மண்டபமாக இன்றும் பெயர் பெற்று விளங்குகிறது.

நம் கையில் காசு பணம் நிறைய இருக்கலாம். உணவுப் பொருட்கள் கூட ஏராளம் இருக்கலாம். ஆனால் பசியைப் போக்க பரம் பொருள் ஒருவரால் தானே முடியும்.

தொடரும்

About முனைவர். ஆதலையூர் சூரியகுமார்

Avatar

மேலும் படிக்கவும்

சிவன் விளையாடல் – 9

வேல் பெற்ற உக்கிர குமார பாண்டியன் பாரதத்தை புகழ்ந்து பாடும்போது, சுந்தரம் பிள்ளை நீரால் சூழப்பட்ட இந்த உலகிற்கு அழகு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன