முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / சிவன் விளையாடல் – 4

சிவன் விளையாடல் – 4

திருநடனம் புரிந்த திருவிளையாடல்

இறைவனின் திருக்கல்யாணத்தை காணவந்த அனைவரும் விருந்து சாப்பிடுவதற்காக விரைந்து சென்று கொண்டு இருந்தனர். திருக்கல்யாண விருந்தல்லவா-…? அது அத்தனை பிரம்மாண்டமும் நிறைந்து இருந்தது. எதிர்பார்த்ததை விட இலையில் ஏகப்பட்ட பலகாரங்கள்.

திருக்கல்யாணத்தைக் கண்டு களித்த திருமால், பிரம்மன், மகாலெட்சுமி, சரஸ்வதி, முருகன், துர்கை, காளிதேவி முதலிய தெய்வங்கள் முதலில் விருந்துண்ணச் சென்றனர். இந்திரன், சந்திரன் முதலிய தேவர்கள் மேலும் வானலோகத்தில் இருந்து வந்திருந்தவர்களால் விருந்து மண்டபம் நிறைந்து இருந்தது. யோகிகள், சித்தர்கள், முனிவர்கள் போன்று பூலோகத்தில் வசிப்பவர்கள், நாகர் உள்ளிட்ட பாதாளத்தில் வசிப்பவர்கள் அரக்கர்கள், அசுரர்கள், பிட்சாடர்கள் போன்றவர்களும் விருந்து உண்ணுவதற்காக சென்றனர். ஆனால் இரண்டு பேர் மட்டும் இந்த விருந்தில் இருந்து விலகி இருந்தார்கள்.

ஒருவர் சிதம்பரத்தில் இருந்து வந்திருந்த ‘பதஞ்சலி’ முனிவர், இன்னொருவர் ‘வியாக்கிரபாத’ முனிவர். என்ன ஆனது இருவருக்கும்? பரபரத்தது பக்த சபை.

ஆனந்தத்தை இசையாகவும், இசைக்கருவிகளாகவும், இன்ப வாழ்க்கைக்கான அடிநாதமாகவும் கொண்டு அமைந்ததுதான். இறைவன் தில்லையில் ஆடும் திருநடனம். அனைத்து உலகங்களும், ஆனந்தமாக இயங்க வேண்டும் என்பதே இறைவனின் திருநடனத்தின் தத்துவம்.

இந்த திருநடனத்தைக் காண்பதற்காக வியாக்கிரபாத முனிவரும், பதஞ்சலி முனிவரும் நீண்ட நாட்கள் கடுந்தவம் இருந்தனர். பூஜைகள் செய்தனர். நீண்ட நெடிய தவத்திற்குப் பிறகு சிதம்பர வனத்தில் இருவரும் இறைவனின் நடனத்தைக் கண்டு தவசித்து மகிழ்ந்தனர்.

பரம்பொருள்தான் பக்தர்களுக்கு இறங்குபவர் ஆயிற்றே! ஒரு தைப்பூசத் திருநாளில் ஆனந்த நடனத்தைக்கண்டு தரிசித்த அந்த இரண்டு மகா முனிவர்களுக்காக ஆடல் நாயகன் அங்கேயே தங்கத் திருமேனியாய் நிலைப் பெற்றார். எனவே தில்லை பொன்னம்பலமாக மாறிவிட்டது.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

சிதம்பரத்தில் சிவபெருமானின் ஆனந்த நடனத்தைக் கண்டு தரிசித்த நாளில் இருந்து நடராஜரை தரிசனம் செய்த பிறகுதான் உணவு உண்ணுவது என்று விரதம் மேற்கொண்டிருந்தார் பதஞ்சலி முனிவர். ஆனால் மதுரைக்கு திருக்கல்யாணம் காண வந்திருந்த பதஞ்சலி முனிவர் எப்படி நடராஜர் திருநடனத்தை காண்பது என்ற கவலையில் ஆழ்ந்திருந்தார். பதஞ்சலி முனிவருடன் சேர்ந்து கொண்டு வியாக்கிர பாத முனிவர் சாப்பிடப் போகாமல் அமர்ந்திருந்தனர்.

ஒரு முறை வியாக்கிர பாத முனிவரின் மகன் உபமன்னியுவின் பசியைப் போக்குவதற்காக பாற்கடலையே அனுப்பி வைத்தார் பரம் பொருள். அப்படியொரு மாபெரும் இரக்க குணம் கொண்ட கருணை வள்ளல் பரம்பொருள். வியாக்கிரபாத முனிவரும், பதஞ்சலி முனிவரும் பசியில் இருப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாரா என்ன? அவர்கள் இருவருக்குமான பசி, வெறும் வயிற்றுப்பசி மட்டும் அல்ல, அது ஆன்மீகப்பசி, அருட்பசி ஆகியவை சேர்ந்த பசி. அவர்களுடைய பசியைப் போக்குவதற்காக மதுரையில் திடீரென்று தோன்றி திருநடனம் புரிந்து அருளினார் சிவபெருமான்.

இறைவன் திருநடனத்திற்கு பிரம்மன் பாடல்பாட, மகா விஷ்ணு புல்லாங்குழல் ஊதினார். ருத்ரன் மிருதங்கம் வாசித்தார், சரஸ்வதி வீணை மீட்டினாள். லட்சுமி தாயும் இட்டாள், நந்தி குடமுழா இயக்க உலகத்தில் ஆனந்தம் பெருக இறைவன் திருநடனக் காட்சி அருளினார்.

பதஞ்சலி முனிவருக்கும், வியாக்கிரபாத முனிவருக்கும் எல்லையில்லாத மகிழ்ச்சி. தங்கள் பசிபோக்க வந்து காட்சியருளிய பரம்பொருளைப் போற்றித் துதித்தனர். உலக இயக்கத்திற்கு மூலாதாரமாக விளங்கும் திருவிளையாடல் நாயகனின் திருநடனத்தை இரண்டு முனிவர்களோடு சேர்ந்து மற்ற தெய்வங்களும், திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் கண்டு களித்தனர்.
அங்கிங்கெனாதபடி, எங்கும் பரந்து விரிந்து அருள்புரியும் பரம்பொருள், மதுரையில் தங்கி தொடர்ந்து அருள்புரிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர் வியாக்கிரபாத முனிவரும், பதஞ்சலி முனிவரும்.

சிதம்பரத்தில் தங்கத் திருமேனியாக குடிகொண்டிருக்கும் சிவபெருமான், மதுரையில் கல் திருமேனியாக குடிகொண்டார்.

மதுரையில் சிவபெருமான் புரிந்த திருநடனத்தை ‘சொக்கத் தாண்டவம்’ என்று குறிப்பிடுகிறார்கள்.
மதுரையில் இறைவன் திருநடனம் புரிந்த காட்சியை திருஞான சம்பந்தரும், கல்லாடரும் தங்கள் பாடல்களில் எழுதிப் போற்றுகின்றனர். மதுரையில் இறைவன் திருநடனம் ஆடிய அம்பலம் இன்று புதிய, புதிய வேலைப்பாடுகளுடன் ஜொலித்து கொண்டிருக்கிறது. நுணுக்கமான சிற்பங்களும், திருவுருவங்களும் நிறைந்த வெள்ளித்தகடுகளால் இந்த இடம் அலங்கரிக்கப்பட்டு இருப்பதால், அது வெள்ளியம்பலம் என்று அழைக்கப்படுகிறது.

இன்றைக்கும், இந்த வெள்ளி அம்பலச் சந்நிதியை நீங்கள் அழகாக தரிசிக்க முடியும். மதுரையில் மூலவருக்கு முன்பு உள்ள பெரிய மண்டபத்தின் நேரே தனி வாசலுடன் வெள்ளியம்பலம் உள்ளது. பொன்னம்பலம் சூரிய ஒளியில் தகதகப்பது போல, ஆடல் நாயகன் திருநடனம் புரிந்த வெள்ளியம்பலம் இரவில் மின்னொளியும் பிரகாசிக்கிறது. வாருங்கள்! வெள்ளியம்பலத்தானை வேண்டி வேண்டுவன பெறவோம்.

தொடரும்

About முனைவர். ஆதலையூர் சூரியகுமார்

Avatar

மேலும் படிக்கவும்

சிவன் விளையாடல் – 9

வேல் பெற்ற உக்கிர குமார பாண்டியன் பாரதத்தை புகழ்ந்து பாடும்போது, சுந்தரம் பிள்ளை நீரால் சூழப்பட்ட இந்த உலகிற்கு அழகு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன