முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / படியாய் கிடந்து பவளவாய் காண்பேன்

படியாய் கிடந்து பவளவாய் காண்பேன்

படியாய் கிடந்து பவளவாய் காண்பேன்

வைணவம் என்னும் பொற்கிரீடத்தை ரத்தினங்களாய் அலங்கரிப்பவர்கள் ஆழ்வார்கள்.
ஆழ்வார்களால் வைணவத்திற்கு பெருமையா? வைணவத்தால் ஆழ்வார்கள் பெருமை பெற்றார்களா? என்கிற கேள்வி விடை காணமுடியாதது.

ஒவ்வொரு ஆழ்வாரும் ஒவ்வொரு வகையில் சிறப்புப் பெற்றவர்கள். அவ்வகையில் குலசேகர மகாராஜாவாக ஆட்சிபுரிந்து வந்தவர், ராமனின் மீது ஏற்பட்ட பற்றால் குலசேகர ஆழ்வாராக மாறினார். அச்சம்பவம் சுவாரசியமானது.

போர், யுத்தம் என வெறுத்தப்போன குலசேகரர் வைணவப் பெரியவர்களைக்கொண்டு தினமும் ராமாயணக் கதைகளை கேட்டுவந்தார். இதை இப்படியே விட்டால் மன்னர் நாட்டை கவனிக்கமாட்டார் என அஞ்சினார்கள் அமைச்சர்கள். குலசேகரர் பூஜைக்கு பயன்படுத்தும் ஒரு மணிமாலையை கவர்ந்துவிட்டு, அப்பழியை வைணவப்பெரியவர்கள் மீது சுமத்தினார்கள். அப்படி நடக்க வாய்ப்பேயில்லை என மறுத்த குலசேகரர், ஒரு குடத்திற்குள் நல்லபாம்பை விட்டு எடுத்துவரச்சொன்னார். பின்னர், ‘அப்பெரியவர்கள் மணிமாலையை எடுத்திருந்தால் பாம்பு எனது கையைத் தீண்டும்’ என்றபடி அக்குடத்திற்குள் கையைவிட்டார். ஆனால் பாம்போ அவரை தீண்டாமல் தனது உடம்பை சுருக்கிக்கொண்டு அமைதி காத்தது. இதைப்பார்த்த அமைச்சர்கள் தங்கள் தவறை நினைத்து வருந்தி மன்னரிடம் மன்னிப்புக் கேட்டனர். குலசேகரரும் அவர்களை மன்னித்து தன் மகனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ய நாட்டைவிட்டு வெளியேறினார்.

இதுவே குலசேகரர் ஆட்சிக்கட்டிலை விட்டு இறங்கி ஆழ்வாராகிய கதை.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

வைணவத்தில் ராமனுக்கு ‘பெரிய பெருமாள்’ என்கிற பெயர் உண்டு. குலசேகர ஆழ்வார் அதிகமாக ராமாவதாரத்தை சிலாகித்து பாடியதால் பெருமாள் எனும் சிறப்பு பெயர் பெற்று, குலசேகரப் பெருமாள் என அழைக்கப்பட்டார். அதனால் அவர் இயற்றிய பாசுரங்கள் ‘பெருமாள் திருமொழி’ என அழைக்கப்படுகிறது. இத்திருமொழியில் மொத்தம் 105பாசுரங்கள் உள்ளன.

இதில், கண்ணனின் இளம் பருவத்து லீலைகளை அனுபவிக்க முடியாது போன தேவகியின் புலம்பலை அருமையாக வெளிப்படுத்துகிறார் ஆழ்வார். மற்றொரு திருமொழியில், கண்ணன் மீது காதலும் ஊடலும் கொண்ட கன்னியர் வடிவில் ஆழ்வாரே நின்று பாடுவது உள்ளத்தை உருகச் செய்துவிடும். அடுத்ததாக ராமனை காட்டுக்கு அனுப்பிவிட்டு புலம்பும் தசரதனின் நிலையை அழகாக படம்பிடித்துக் காட்டுகிறார். இவற்றிற்கெல்லாம்மணிமகுடமாய், திருமலையில் தான் எப்படியெல்லாம் பிறக்கவேண்டும் என்பதை பத்து பாசுரங்களில் சொல்லிச் சொல்லி ஏங்குகிறார்.
திருவேங்கடவன் மீது கொண்ட பெரும் ஈடுபாட்டினால் திருமலையானை துதிப்பதோடு மட்டுமல்லாமல், அங்கேயே பலவகை பிறப்பெடுக்க வேண்டும் என்கிறார்.

இவ்விடத்தில் திருவேங்கடத்தின் சிறப்பை சொல்லியாக வேண்டும். வேங்கடம் என்றால் பாவங்களை சுட்டெரிக்கக் கூடியது என்பதுபொருள். அம்மலையில் அருள்பாலிக்கும் திருவேங்கடவனைத் தரிசித்தால் நம்பாவங்கள் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும் என்று சொல்கின்றன புராணங்கள். திருவேங்கடமலைக்கு ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு பெயர் இருந்துள்ளது. கிரேதா யுகத்தில் கருடாத்ரியாகவும், திரேதா யுகத்தில் விருஷபாத்திரியாகவும், துவாபர யுகத்தில் அஞ்சனாத்திரியாகவும், கலியுகத்தில் வேங்கடாத்திரியாகவும் அழைக்கப்படுகிறது.

தொண்டரடிப்பொடி ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் தவிர, மற்ற ஆழ்வார்கள் திருமலையைப் பற்றி 202 பாசுரங்கள் பாடியுள்ளனர். இதில் குலசேகர ஆழ்வாரின் 11 பாசுரங்களும் அடங்கும்.

ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன்
ஆனேறேழ் வெண்றா னடிமைத் திறமல்லால்
கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே

என்கிறார் குலசேகர ஆழ்வார்.
அவர் முதலில் நாரையாக பிறக்க விரும்புகிறார். இந்த மனிதப் பிறவி சிற்றின்ப சுகத்தை தேடுவது என்பதாலோ என்னவோ ‘ஊனேறு செல்வத்து உடல் பிறவி யான் வேண்டேன்’ எனக்கூறி திருவேங்கட மலையில் இருக்கும் கோனேரி என்கிற திருக்குளத்தில் நாரையாக பிறக்க ஆவல் கொள்கிறார்.

திடீரென அவருக்கு ஒரு ஐயம் எழுகிறது. நாரைக்கு இறக்கைகள் இருப்பதால் மனம் மாறி திருவேங்கடத்து மலையைவிட்டு பறந்துவிட்டால் என்ன செய்வது? அதனால் ‘திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையேனாவேனே’ என்று திருமலையில் உள்ள சுனையில் மீனாக பிறக்கும் பாக்கியம் கிடைத்தால் மகிழ்ச்சி என்கிறார். இதற்கு ஈடாக இந்திரப் பதவியோ, இவ்வுலகம் முழுமையும் ஆளும் அரசப்பதவியோ கிடைத்தாலும் வேண்டவே வேண்டாம் என்று மறுக்கிறார்.

மீண்டும் அவர் மனம் சிந்திக்கிறது. குளத்தில் நீர் வற்றினால் மீன் உயிரை விட நேரிடும் அல்லது மற்றவர்க்கு உணவாக மாறும் நிலை வரலாம்.அதனால் பூலோக வைகுந்தமாகிய திருமலையில், வேங்கடவன் வாய்நீர் உமிழ்கின்ற பொன் வட்டிலை கையேந்திக்கொண்டு உள்ளே நுழையும் பாக்கியம் வேண்டுகிறார்.

பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யம் மிகவும் பிடித்த விஷயமாயிற்றே. அதிலும் செண்பக மலர் பிடிக்குமே. அம்மலராக திருவேங்கட மலையில் பிறந்தால் அவன் பாத தரிசனம் கிடைக்குமல்லவா! என்று அவர் மனம்மாறி யோசிக்கிறார். ஆனால் அடுத்த நொடியே, செண்பக மரத்தை யாரேனும் தன் வீட்டிற்கு வேண்டுமென பிடுங்கிச் சென்றுவிட்டால் திருமலையானை தரிசிக்க முடியாதே என அஞ்சுகிறார்.

பரவாயில்லை, அம்மலையில் ஒரு புதராக இருக்கும் பேறு கிடைத்தாலும் பெருமையே என மகிழ்கிறார்.

மீண்டும் அவர் மனம் மாறுகிறது. திருமலையில் ஒரு சிகரமாக மாறிவிட்டால் அருமையாக இருக்குமே என்று எண்ணுகிறார்.

அப்படியும் அவர் நெஞ்சம் நிறையவில்லை. கல்லாக உணர்ச்சியற்று இருப்பதில் பயன் ஒன்றுமில்லை. ஆகையால் ஒரு காட்டாறாக பிறந்தால் தனக்கு பெரும் பேறு என்கிறார்.

கடும் கோடையில் காட்டாறு வறண்டு போய்விட்டால் திருமலைக்கும் தனக்குமான பந்தம் விட்டுப்போய்விடுமே என்கிற கவலை அவரைச் சூழ்கிறது.

அடியார்கள் ஏறிவரும் திருவேங்கட மலைப்பாதையாக இருப்பது அவருக்கு சிறப்பாகப் படுகிறது. அதிலும் ஒரு சந்தேகம் அவரினுள் எழுகிறது. மலைக்கு பல பாதைகள் உண்டு. சில பாதைகள் நாளடைவில் மூடப்படலாம். அதனால்‘படியாய் கிடந்துன் பவளவாய் காண்பேனே’ என்று திருவேங்கடமுடையானின் கருவறை வாயிற்படியாக இருந்தால் எந்நேரமும் அவனது பவள வாயினை கண்டு களிக்கலாமே என அவரது மனம் அப்பிறப்பை கேட்கிறது.

எதாவது ஒரு காலத்தில் கட்டட சீரமைப்பால் படிக்கட்டுக்கு பங்கம் வரக்கூடுமாகையால் இறுதியாய் ஒரு முடிவுக்கு வருகிறார் ஆழ்வார்.

உம்பருலகாண் டொருகுடைக்கீழ் உருப்பசிதன்
அம்பொற் கலையல்குல் பெற்றாலு மாதரியேன்
செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்
எம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே

இந்திரப்பதவியும், ஊர்வசியின் அணைப்பும் கிடைத்தாலும் எனக்கு வேண்டாம் திருமலைமேல் ஏதேனும் ஒரு பொருளாகவே பிறக்க வேண்டும் என வேண்டி வணங்குகிறார் குலசேகர ஆழ்வார்.

பெருமாள் திருமொழியில் சிறப்பானதாக இந்த நான்காம் திருமொழி கருதப்படுகிறது.

இவரைப் பின்பற்றியே கம்பன் ராமகாதை படைத்தான் என்பது குலசேகர ஆழ்வாரின் கூடுதல் சிறப்பு.

இன்றைக்கும் ஒவ்வொரு பெருமாள் ஆலயங்களின் கர்ப்பகிரக படிக்கட்டும்‘குலசேகரன் படி’ என்று அழைக்கப்படுகிறது. இதற்குகாரணம் பெருமாளிடத்தில் குலசேகர ஆழ்வார் கொண்ட அளப்பரிய அன்பே என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

About சரவணக்குமார்

சரவணக்குமார்
வங்கி ஊழியரான சரவணக்குமார், எழுத்தாற்றல் மிக்கவர். ஆரம்பகாலத்தில் சிறுசிறு பத்திரிகைகளில் எழுதிவந்தார். இவரது எழுத்தாற்றலைக் கண்டு, முன்னணி பத்திரிகைகள் பலவும் இவருக்கு அழைப்பு விடுத்தன. மேலும் அறிய

மேலும் படிக்கவும்

நா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.

திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே! திருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியே! பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே! பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன