முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / பாசுரம் / பாசுரம் -23 ராகவனுக்குத் தாலேலோ

பாசுரம் -23 ராகவனுக்குத் தாலேலோ

“ஏன் பாட்டி ! என்னுடைய சின்ன வயசுலே போட்டோவே எடுக்கவில்லை. அப்பா ,அம்மாவோடு மூன்று மாதக் குழந்தையாய் இருந்தபோது, எடுக்கப் பட்ட, அந்தச் சட்டமிட்ட போட்டோவைத் துடைத்துக் கொண்டே கேட்டேன். ”போடா ! அந்தக் காலத்திலே கலியாணம் ஆனவுடனே ‘ஸ்டுடியோ’ போய் மாப்பிள்ளையும் பொண்ணும் ஒரு போட்டோ எடுத்துண்டு வருவா அவ்வளவுதான் ! உங்கப்பன் கொஞ்சம் சுணக்கம் காட்டினான்..அதற்குள் நீ பிறந்துட்டே ! உன்னையும் தூக்கிக் கொண்டுபோய் சேர்த்து போட்டோ எடுத்து வந்தான் ! பெரிய பாட்டி, குழந்தைகளை எல்லாம் போட்டோ,எடுக்கக் கூடாது ஆயுசு குறைந்து போய்டும் என்று கத்திக் கொண்டிருந்தாள். உங்கொப்பன் மூர்க்கன் ! எதையும் காதிலே வாங்கிக்கலே” என்று முடித்தாள் பாட்டி. நான் என் பேத்தியின் முதலாம் ஆண்டு ஆல்பத்தை நினைத்துப் பார்த்தேன் – 197 படங்கள்!

இராமாவதாரமும், கிருஷ்ணாவதாரமும் பூர்ண அவதாரங்கள்தான். ஆனால், மூன்றாவது யுகமான துவாபர யுகத்தில் பிறந்த கிருஷ்ணருக்குக் கிடைத்த வாய்ப்புகள் ,அதற்கு முந்தைய திரேதா யுகத்தில் பிறந்த இராமருக்கு கிடைக்கவில்லை. வால்மீகியின் பாலகாண்டத்தில், பதினெட்டாம் ஸர்கம் ஒன்பதாவது ஸ்லோகத்தில் ராம ஜனனம்; முப்பத்தைந்தாவது ஸ்லோகதில் கெளசிக முனி, ராமரை காட்டிற்கு அழைத்துப்போக தசரதன் அரண்மனை வாசலில் வந்து நெடுநெடு என்று நிற்கிறார் ! தாலாட்டு, தவழுதல், அம்புலி காட்டல்… … போன்ற எதுவும் கிடையாது ! பாவம் தம்பியோடு முனிவர் பின்னே காட்டுக்குப் போக வேண்டியதுதான் !

இந்தக் குறையை ஆழ்வார்கள் நன்றாக உணர்ந்தார்கள். ஓரளவு சரி செய்ய முயன்றார்கள். குலசேகர ஆழ்வாருக்கு இராமர், கிருஷ்ணர் இரண்டு பேரிடமுமே ஈடுபாடு உண்டு. ஆனால் இராமர் அவருக்கு ஸ்பஷெல் !

இராமருக்கு தாலாட்டாகப் பதினொறு பாசுரங்கள்

‘கன்னி நன் மா மதில் புடை சூழ் திருக்கண்ணபுரத்துக்

காகுத்தன் தன்னடிமேல் தாலேலோ’

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

என்று ‘தமிழ்மாலையாக’ அருளி உள்ளார். இவை பாசுர ரத்தினங்கள் ! தமிழின் 96 வகைப் பிரபந்தங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ். இதில், தமிழ் மரபுப்படி, எட்டாம் மாதக் குழவியை தொட்டிலிட்டுப் பாடப்படுவது ‘தாலாட்டு’ .

முதல் பத்து பாசுரங்கள் தாலாட்டாகவும்,கடைசிப் பாசுரம் பலஸ்ருதியாகவும் அமைகிறது. இவற்றின் முதல் அடிகளில், கெளசலையின் மணிவயிறு வாய்த்தவன், தாமரைமேல் அயனவனைப் படைத்தவன்,….. என்று இராம அவதார விஷயங்கள் குறிப்பிடப்படுகின்றன. நடுவரிகளில் இராவணன் பத்து தலைகளையும் சிதற அடித்தது, வாலி வதம் போன்ற அவதார காரியங்கள் போற்றப்படுகின்றன .ஈற்றடிகள், இராகவனே! தாசரதீ சீராமா! அயோத்திமனே! எனப் பலவாறாக விளித்து, ‘தாலேலோ’ என்று தொட்டிலிலே வளர்த்திக் கண்வளரப் பண்ணுகைக்கானச் சீராட்டுதலாக முடிகிறது.

மன்னு புகழ் கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனே !

தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொஞ்சேர்

கன்னி நன்மா மதிள்புடை சூழ் கணபுரத்தென் கருமணியே !

என்னுடைய இன்னமுதே ! இராகவனே ! தாலேலோ !

( 719 ) எட்டாம் திருமொழி

“நிலைத்த புகழையுடைய கௌசல்யையின் அழகிய வயிற்றிலே பிள்ளையாகத் தோன்றியவனே! தென்னிலங்கைக்குத் தலைவனான ராவணனுடைய பத்துத் தலைகளையும் சிதறப் பண்ணினவனே! செவ்விய பொன்னாலே செய்யப்பட்ட, அழிவில்லாத, அழகிய, பெரிய மதில்களாலே நாற்புறமும் சூழப்பட்ட திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற நீலரத்னம் போன்ற எம்பெருமானே! எனக்கு அமிர்தம் போன்றவனே! ஸ்ரீராமனே! உனக்குத் தாலாட்டு.”

இதில், முதலடியால் அவதாரம் காட்டப்பட்டது. இரண்டாமடி அவதார காரியம் சொல்லப்பட்டது, திருக்கண்ணபுரம் திவ்யதேசம் சோழநாட்டுத் திருப்பதிகள் நாற்பதில் ஒன்று. இத்தலத்தில் சௌரிராஜப்பெருமாள் மிகவும் வரப்ரஸாதி. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வர் ஆகிய ஐவர்களால் மங்களாசாஸனம் செய்யப்பெற்ற சிறந்த திவ்யதேசம் .

இந்தப் பாசுரங்கள் தாய்மார்களால் தத்தம் சேய்களைத் தூளியிலோ, தொட்டிலிலோ, இட்டு உருக்கத்துடன் பாடப் பெற்றன. ‘மன்னு புகழ்’ , மிகவும் பிரபலமானது. இதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. இராமனைப் புகழ வந்த குலசேகரர் கோசலையை உயர்த்திப் பிடிக்கிறார் ! அந்தக் காலத்து தாய்மார்களுக்கு உரிய அங்கீகாரம் ஆணாதிக்க சமூகத்தில் கிடையாது ! பிள்ளையினால்தான் தாயாரின் நிலை மேம்படும் என்ற எதிர்பார்ப்பு ! ஏக்கம் ! எல்லாம் அடிநாதமாக இந்தப் பாசுரத்தில் ஒலிக்கிறது ! மறுபடியும், மறுபடியும் படியுங்கள் ! புரியும் !

ஆழ்வார் திருவடிகளே சரணம் !

About டாக்டர் லக்‌ஷ்மிநரசிம்மன்

டாக்டர் லக்‌ஷ்மிநரசிம்மன்
நரம்பியல் நிபுணரான இவர், சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள நரம்பியல் துறையின் இயக்குனராகப் பதவி வகிக்கிறார். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

சிற்றிலக்கியத்தில் புரட்சி செய்த மகான் ! பாசுரம் 21

தமது பக்திப் பாசுரங்கள் சாமான்ய மக்களைச் சென்றடைய, எளிய மொழியில் எழுதியதோடு விளையாடிக் கொண்டே பாடும் பாடல்களை இயற்றினார்கள் ஆழ்வார்கள் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன