முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / சிற்றிலக்கியத்தில் புரட்சி செய்த மகான் ! பாசுரம் 21

சிற்றிலக்கியத்தில் புரட்சி செய்த மகான் ! பாசுரம் 21

தமது பக்திப் பாசுரங்கள் சாமான்ய மக்களைச் சென்றடைய, எளிய மொழியில் எழுதியதோடு விளையாடிக் கொண்டே பாடும் பாடல்களை இயற்றினார்கள் ஆழ்வார்கள் என்று பார்த்தோம். தமிழ் இலக்கியத்தில் அகத்துறைக் கருப் பொருட்களான– தலைவன், தலைவி, காதல்,கூடல் பிரிதல், நோதல், புலம்புதல் ஆகியவைகளில் தமிழரர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு மிகுந்த ஈடுபாடு இருப்பதை ஆழ்வார்கள் கண்டனர். இந்த ஈர்ப்பை அப்படியே பெருமாளிடம் திருப்பி விட எண்ணினர். அவ்வளவுதான் நம்மாழ்வார் பராங்குச நாயகியாக மாறி பெருமாள் மீது காதல் பாசுரங்களை இயற்றலானார். தலைவன், தலைவி, சம்பந்தமாக தமிழ் இலக்கியத்தில் சொல்லப்பட்ட சகல விஷயங்களும் அவற்றில் இருந்தன. மேம்போக்காகப் பார்த்தால் அகத்துறை காதல் காவியம் போல் தோன்றும். சற்றே கிட்ட நெருங்கினால் சரியாகத் தெரியும் ஒவ்வொன்றும் ‘அக்மார்க்’ பக்தி இலக்கியம்தான் என்று! இதே முறையை வட தேச குரு மார்களும் கடைபிடித்தனர். ராதை, கோபிகையருடன் கிருஷ்ணன் ஆடுவதாக அமைந்த மிகவும் புகழ் பெற்ற ‘ராஸலீலா’ இலக்கிய வகைகளும் இத்தகையதே.

நம்மாழ்வாரைப் பின்பற்றி அகத்துறை சார்ந்த பக்திப் பாசுரங்களை திருமங்கை ஆழ்வாரும் இயற்றினார்.

‘செங்கால் மட நாராய் ! … இன்றே சென்று
எங்காதல் என் துணைவர்க்கு உணர்த்தியாகில்
இது ஒப்ப எமக்கின்பம் இல்லை’

என்றவாறு நாரையை வேண்டுவதாகவும்,

“வெள்ளி வளைக் கைப்பற்ற

பெற்ற தாயரை விட்டு அகன்று

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

அள்ளல் அம் பூங்கழனி

அணி யாலி புகுவர் கொலோ? “

என்று திருமணதிற்கு முன் உடன்போக்கு சென்ற மகளின் நிலையைக் கண்டு தாய் இரங்குவதையும், (ஆலி என்பது திருவாலியைக் குறிக்கும்),

கூவுவாய் பூங்குயிலே !….. மணிவண்ணன் வரக் கூவுவாய் பூங்குயிலே ! என்று குயிலிடம் இறைஞ்சுவது போலவும் அமைந்த பற்பல முத்தான, கவின்மிகு பாசுரங்களைப் பாடி இருக்கிறார்.

ஆனால் ஆழ்வார் விரும்பிய தாக்கம் அந்தப் பாசுரங்களில் இல்லை. ஆழ்வாருக்கு வேகம் வேண்டும் ! .புதுமை வேண்டும் ! .திருமங்கை மன்னன் ‘நாலு கவிப் பெருமாள்’ –ஆசுகவி, மதுர கவி, சித்திர கவி, வித்தாரக கவி. தன் கவித்திறத்திற்கு ஏற்றவாறு புதுமையாக எதாவது செய்து மக்களைக் கவர எண்ணினார், சங்க கால அகத்துறை ‘மடல்’ இலக்கியம் அவர் முன் தோன்றியது.
மடல் அகப்பொருள் சார்ந்த சிற்றிலகிய வகை. தலைவன் தலைவியைக் காதலித்து ,எவ்வளவோ முயண்றும் அவளை அடைய முடியாத போது, பனைமட்டைகளால் ஆன, ஒரு குதிரை – இதனை மடல் என்பர் – மீது ஏறி ,அதனை நண்பர்கள் இழுத்துச் செல்ல , ஊரறிய தன் காதலை பிரகடனப் படுத்தும் முறை ஆகும்.. காமமாகிய கடலைக் கடக்க உதவும் தெப்பமாக இலக்கியங்கள் மடலைப் போற்றும். ‘காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடல்அல்லது இல்லை வலி ‘ என்று மடலின் சிறப்பை வள்ளுவரும் ஏத்துவார்..

திருமங்கையார் யோசித்தார்.மடல் ஒரு நல்ல தேர்வுதான். ஆனால் ஆழ்வார் தலைவனாக, பெருமாள் தலைவியாக மடல் ஏறுவதாக அமைத்தால் புதுமையாக இருக்காது. ஆதலின் ஆழ்வார், பரகால நாயகி பெருமாளை நினைத்து மடல் ஏறுவதாக அமைக்க வேண்டும்.. ஆனால் சங்க இலக்கிய மரபுப்படி பெண்கள் மடல் ஏறுவது இல்லை. வள்ளுவரும் இதை வலியுறுத்துகிறார்—

கடல்அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்

பரகால நாயகி மடல் ஏறுவதாக அமைப்பதில் பெரிய ஆபத்து இருக்கிறது. மரபு மாறப் படுவதை அனுமதிக்காமல், இந்தப் பாசுரங்கள் ஓரம் கட்டப்பட்டு, கடலில் தூக்கி எறியப்படலாம். ஆழ்வார்,ஆணாக, மடலேறுவதாக அமைத்தாலோ தேவையான புதுமை இல்லை; மேலும் ஜீவாத்மாவை பெண்ணாக உருவகித்து வந்த பண்டைய ஆழ்வார்கள் மரபிற்கு மாறுபடும். சிறிது நேர ஊசலாட்டத்திற்கு பிறகு, ‘நாராயாணா ! உன்னை நம்பிச் செய்கின்றேன்’ என்று, ‘சிறிய திரு மடல்’, ‘பெரிய திரு மடல்’ எனப்படும் இரண்டு மடல்களைப் புனைந்தார். வெற்றி ! தமிழ் கூர் நல்லுலகம் உவகையுடன் இந்த இரண்டு பிரபந்தங்களையும் ஏற்றுக் கொண்டது ‘.நாராயணா எல்லாம் உந்தன் திருவருள்’ என்று மனம் உருகினார் ஆழ்வார்; நாரணன் புன்னகைத்தான்.

தமிழ் மக்கள் இதை மரபு மாற்றம் என்று கருதாமல் அதீத பக்தியின் வெளிப்பாடு என்று சரியாகப் புரிந்து கொண்டனர். எதற்கும் பாதுகாப்பாக இருக்கட்டும் என்று ‘ மன்னும் வட நெறியே வேண்டினோம்’ என்று வடநெறியைப் பின்பற்றியதாகச் சில சொற்களைப் போட்டு வைத்து இருந்தார் ஆழ்வார்.. அதற்கு அவசியமே ஏற்படவில்லை.. பக்தி இலக்கியத்துள் சங்க இலக்கிய அகப்பொருள் மரபுகளைச் சில மாற்றங்களைப் புகுத்த முயன்ற திருமங்கையாழ்வாரின் முயற்சியை மெச்சி மக்கள் அப்படியே ஏற்றுக் கொண்டனர். தமிழ் சிற்றிலக்கியத்தில் ஒரு மரபு மாற்றம் ஏற்றுக் கொள்ளப் பட்டது !

திருமங்கை மன்னர் சிறிய திரு மடல், பெரிய திருமடல் என்று இரண்டு பிரபந்தங்களை இயற்றினார். நாம் சிறிய திருமடலைப் பார்ப்போம். இது கலி வெண்பா வகையைச் சார்ந்தது .பொருள் அமைப்புப்படி இதை நாற்பது பாசுரங்களாகத் தேசிகர் பிரித்துள்ளார். இ்ப்பாசுரங்களில் வரும் ஒவ்வொரு அடியிலும் வரும் தலைச் சொற்கள் ‘நாராயண’ என்ற சப்தத்திற்கு எதுகையாக இருக்கும். உதாரணமாக முதல் நான்கு அடிகளில் வரும் தலைச் சொற்கள் : காரார், சீரார், பேரார, நீரார . எதுகை என்பது இருசீர்களின் இரண்டாம் எழுத்து ஒன்றுவது ; முதல் எழுத்துகளும் அளவில் ஒத்துப் போக வேண்டும்..ஆக ஒவ்வொரு அடியிலும் நாராயணன் உறைகின்றான் என்று கொள்ளலாம் !

திருமடல் சுருக்கம்: சிலர் மோட்ஷம் என்ற புருஷார்த்ததைப் பற்றிக் கூறுவர்.இங்கே இருந்தபடியே பகவானை அனுபவிக்க முடியும் எங்கையில் எதற்கு மோக்ஷத்தைத் தேடவேண்டும் ? நான் பந்தாடிக் கொண்டிருந்தபோது, திருமால் இரண்டு குடங்களுடன் கூத்தாடி வருவதாகச் சொன்னார்கள். அழகன் அவன் ஆட்டம் கண்டு பரகால நாயகியான நான் பிச்சியானேன். பாட்டி ஒருத்தி என் நிலைகண்டு, குறி கேட்கச் சொன்னாள். குறிசொல்லுபவள் வாமனனாகவும், ராமனாகவும்,கண்ணனாகவும் தோன்றிய. ஆயிரம் நாமங்கள் உடைய பெருமாளே இந் நோய்க்கு காரணம் எண்று கூறினாள்.காம நோய் கொண்ட நான் ஒவ்வொரு திவ்ய தேசமாக அவனைத் தேடிச் செண்றேன். கிடைத்தான் இல்லை அவனுக்காக் மடலூர்வேன் என்று இறுதிப் பாசுரமான இரண்டே அடிகள் கொண்ட நாற்பதாவது பாசுரத்தில் சொல்லி முடிக்கிறாள்.

ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்

வாரார் பூம் பெண்ணை மடல்.

‘ஊரார் என்ன கேலி செய்தாலும் பரவாய் இல்லை;நான் நிச்சியமாக அழகிய பனை மட்டைகளால் ஆன மடல் மீது ஏறுவேன்’ என்று துணிகிறாள் பரகால நாயகி. !

ஆழ்வார் திருவடிகளே சரணம் !

About டாக்டர் லக்‌ஷ்மிநரசிம்மன்

டாக்டர் லக்‌ஷ்மிநரசிம்மன்
நரம்பியல் நிபுணரான இவர், சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள நரம்பியல் துறையின் இயக்குனராகப் பதவி வகிக்கிறார். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

சிவன் விளையாடல் – 9

வேல் பெற்ற உக்கிர குமார பாண்டியன் பாரதத்தை புகழ்ந்து பாடும்போது, சுந்தரம் பிள்ளை நீரால் சூழப்பட்ட இந்த உலகிற்கு அழகு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன