முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / குழமணி தூரம் பாடினார் ஆழ்வார் ! – பாசுரம் 20

குழமணி தூரம் பாடினார் ஆழ்வார் ! – பாசுரம் 20

போரில் தோற்ற வீரர்கள், தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு கூத்தாடுவர் ; தங்களுக்கு உயிர்ப் பிச்சை கேட்டு மன்றாடுவர். இது ‘ பொங்கதத்தம் பொங்கோ ‘ எனப்படுகிறது. ‘எங்களுடைய தோல்வியையும், உங்களது வெற்றியையும் அறிவித்து கூத்தாடுகின்றோம் தயை கூர்ந்து காணுங்கள் ‘ என்று சொல்லி தோற்றவர் அபயம் கேட்டு ஆடும் கூத்து இது. திருமங்கை ஆழ்வாரின் பெரிய திரு மொழி, பத்தாம் பத்தின் இரண்டாம் திருமொழி இவ்வகையில் அமைந்தாகும். வேறு எந்த ஆழ்வாரும் பொங்கதத்தம் பொங்கோவை வைத்து பாசுரம் புனையவில்லை . இரண்டாம் திருமொழியின் எல்லாப் பாசுரங்களும் ‘ தடம் பொங்கதத்தம் பொங்கோ’ ‘ என்ற சொற்களை ஈற்றுச் சொற்களாகக் கொண்டுள்ளன.

‘குழமணி தூரம்’ என்பது தோற்றவர் ஆடும் மற்றோரு கூத்து. இது தலைகீழாக ஆடப்படுவது எனக் குறிப்பிடப்படுகிறது. யோசித்துப் பார்த்தால், குட்டிக் கரணம் போட்டுக் கொண்டே ஆடி இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. திருமங்கை ஆழ்வாரின் பத்தாம் பத்தின் மூன்றாம் திருமொழி இத்தகையது. இதன் எல்லா பாசுரங்களும் ‘குழமணி தூரம்’ என்று முடியும். ஆழ்வார் தவிர வேறு யாரும் இந்தப் பக்கம் போகவில்லை.

இலங்கையில் இராவணன் வீழ்ந்த பிறகு இராக்கதர்கள் ஆடிய கூத்தாக இந்த இரண்டாம், மூன்றாம் திருமொழிப் பாடல்கள் அமந்துள்ளன. வான்மீகத்திலோ, கம்பராமயணத்திலோ இது கிடையாது ! ஒரு அனுமானம் பண்ணிப் பார்க்கலாம் .திருமங்கை ஆழ்வார் சிற்றரசராக இருந்தவர்; சிலபல படையெடுப்புக்களில், உயிர்பிச்சை கேட்டு தோற்றவர் மன்றாடும் காட்சிகளையும் கண்டிருப்பார்; தமிழ் இலக்கியத்தில் புலமை வாய்ந்த ஆழ்வார் இலக்கிய மரபு மாறாது , புதுமையாகவும், இராமன் புகழைப் போற்றும் விதமாகவும் இந்த இருபது பாசுரங்களயும் புனைந்தார் எனலாம் !

‘குழமணி தூரம்’ என்ற ஈற்றுச் சொற்களுடன் அமைந்த மூன்றாம் பத்தின் முதல் பாசுரம் இதோ :

ஏத்து கின்றோம் ! நாத்தழும்ப இராமன் திருநாமம்

சோத்தம் நம்பீ. சுக்கி ரீவா ! உம்மைத் தொழுகின்றோம் !

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

வார்த்தை பேசீர் எம்மை உங்கள் வானரம் கொல்லாமே

கூத்தர் போல ஆடு கின்றோம் குழமணி தூரமே!

‘’இராமபிரானுடைய திருநாமங்களை நாக்குத் தடிக்கும்படி வாயாரச்சொல்லித் துதிக்கின்றோம் !. சுக்ரீவ மஹாராஜரே! இதோ அஞ்சலி ! உம்முடைய திருவடிகளில் விழுந்து வணங்குகின்றோம். வானர வீரர்கள் எங்களைக் கொல்ல நினையாதபடி, உங்கள் ஆணையாய் ஒருவார்த்தை அருளிட வேண்டும். கூத்தாடிகள் போல, உங்கள் வெற்றியும் எங்கள் தோல்வியும் ஏற்று, தோற்ற நாங்கள் ஆடுகின்றோம். ‘’ தோத்தம் என்பது ஸ்தோத்திரம் என்ற வட மொழிச் சொல்லின் திரிபு. இராமபிரானுடைய திருநாமங்களை ஆயிரமாயிரம் முறை கூறியதால் நாக்கு தடித்ததாலோ, அல்லது சுக்ரீவனிடம் ஏற்பட்ட பயத்தினாலோ நாக்குழறி ‘சோத்தம்’ என்று உளறி இருக்கலாம்

மற்றப் பாசுரங்களில் கூறப்படுபவை :

இந்திரஜித்தும்,கும்பகர்ணனும் அழிந்தார்கள். அனுமன்! சுக்ரீவா! அங்கதா! நளா! உங்களைச் சரண் அடைந்தோம். ஞாலம் ஆளும் உங்கள் கோமகன் இராமபிரானால் இராவணன் கொல்லப் பட்டான். நீலன் வாழ்க! சுடேடணன் வாழ்க! அங்கதன் வாழ்க! இளைய பெருமாள் பெருமைகளைக் கூறி குழமணி ஆடுகிறோம். நாங்கள் எங்கள் மானத்தைக் கருதவில்லை; பெரிய சரீரம் படைத்த நாங்கள் குன்று போல் ஆடுகின்றோம். இரக்கம் கொண்டு உயிர் பிச்சை தாருங்கள். கடலுக்கு அணைகட்டி வந்தான் உங்கள் கோமகன். எல்லாவிதமான் துன்பங்களயும் பட்டோம்.

இளமையிலேயே ஆற்றல் மிகுந்த, அனுமன் வாழ்க! அரக்கர் எல்லாம் கூடி குவளை வண்ணனான அயோத்தி மன்னன் மகிழும்படி குழமணி ஆடிடுவோம். இராவணன் எமலோகத்திற்கே ஓடிப் போனான். நாங்கள் கூட்டம் கூட்டமாய் நிற்பது குழமணி ஆடுவதற்கே! எங்களை உய்வியுங்கள்!
போற்றுவதில் அரக்கர்கள் எவரையும் விட்டு வைக்கவில்லை! ஆனால் வீடணன் குறித்து அரக்கர்கள் குழுமணி தூரம் ஆட்டம் ஆடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அவன் மீது உண்டான கசப்பு உணர்ச்சி காரணமாக இருக்கலாம்; அல்லது வீடணன் பட்டம் சூட்டப்பட்டாலும் அவன் ஆட்சி அயோத்திக்கோ, அல்லது கிஷ்கிந்தைகோ உட்பட்ட சிற்றரசாக இருக்குமோ என்ற சந்தேகம் அரக்கர்களுக்கு இருந்திருக்கலாம்!

குன்று போல் ஆடுகின்றோம் குழ மணி தூரமே என்று பல சொல்லிக் கூத்தாடி அரக்கர் உயிர் தப்பிப் பிழைத்தபடியைத் திருமங்கை ஆழ்வார் எடுத்து உரைத்த இத்திருமொழியைக் கொண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் பாடி ஆடுங்கள் என்று முடிகிறது கலியன் இலச்சினை தாங்கிய இறுதிப் பாசுரம். பாடி ஆடியதால் அரக்கர்கள் ஜீவனம் பெற்றார்கள்: நீங்கள் உஜ்ஜீவனம் (உய்வு) பெறுவீர் !

ஆழ்வார் திருவடிகளே சரணம் !

About டாக்டர் லக்‌ஷ்மிநரசிம்மன்

டாக்டர் லக்‌ஷ்மிநரசிம்மன்
நரம்பியல் நிபுணரான இவர், சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள நரம்பியல் துறையின் இயக்குனராகப் பதவி வகிக்கிறார். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

சிவன் விளையாடல் – 9

வேல் பெற்ற உக்கிர குமார பாண்டியன் பாரதத்தை புகழ்ந்து பாடும்போது, சுந்தரம் பிள்ளை நீரால் சூழப்பட்ட இந்த உலகிற்கு அழகு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன