முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / சாழல் பாசுரங்களைக் கூடிப் பாடிடுவோம்! – பாசுரம் 19

சாழல் பாசுரங்களைக் கூடிப் பாடிடுவோம்! – பாசுரம் 19

ஆழ்வார்களும், நாயன்மார்களும் தாங்கள் எழுதும் பாசுரங்களும், பதிகங்களும் பாமர மக்களைச் சென்று அடைய வேண்டும் என்று விரும்பினார்கள். இதனால் இனிய, எளிய தமிழ் நடையில் தங்கள் ஆக்கங்களைச் செய்தார்கள். இதே கருத்துடன், பிற்காலத்தில், துளஸிதாஸ், சூர்தாஸ் போன்றவர்கள், இலக்கிய மொழியான சம்ஸ்கிருதத்தைத் தவிர்த்து, அந்தக்கால மக்கள் பேசும் அவதி, விரஜ மொழிகளில் தங்கள் காவியங்களைப் படைத்தனர். ஆனால் இன்று நம் நடைமுறை ஹிந்திக்கும் இம்மொழிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. துளஸி ராமயணம் இன்றைய ஹிந்தி கொண்டு படித்தால் அனுமானிக்க முடியும். முழுவதுமாகப் புரியாது. திருமங்கை ஆழ்வார், பலபல நூற்றாண்டுகளுக்கு முன் இனிய தமிழில் பாடிய ‘ நாடினேன்! நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணன் என்னும் நாமம்!’ போன்ற வரிகள் இன்றைக்கும் புழக்கத்தில் உள்ள தமிழில்தான் உள்ளன! பத உரையோ, பொழிப்புரையோ தேவை இல்லை. இது தமிழின் சீர் இளமை ! திறன் அறிந்து வியந்து பாராட்டுவோம் !

ஆழ்வார்களும், நாயன்மார்களும் தங்களது பக்தி இலக்கியங்கள் சாமான்யர்களைச் சென்று அடைவதற்கு ஏதுவாக வேறு பல காரியங்களைச் செய்தார்கள். சரியான பண் அமைத்து, இசையுடன், கூட்டமாகச் சேர்ந்து பாடுவதற்கு ஏற்ற பாசுரங்களயும், பதிகங்களையும் பாடினார்கள். மேலும், விளையாட்டோடு, விளையாட்டாய் – குறிப்பாகப் பெண்கள் – பாடுவதற்குத் தோதான பாக்களைப் புனைந்தார்கள். பெண்டிர்கள் இறையைப் பற்றிப் பாடிக்கொண்டே விளையாடும் விளையாட்டுகளில் சில – அம்மானை, ஊஞ்சல், சாழல்… போன்றவை.

சாழலென்பது பண்டைய மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. சிலப்பதிகாரம் காலம்தொட்டே இருப்பது. மகளிர் இரு அணிகளாகப் பிரிந்து சாழலை விளையாடுவர். ஒரு அணித் தலைவி – ஏதாவது ஒரு கருப்பொருளின் – ஈசனின் – தோற்றத்தையும், தன்மைகளயும், தன் தோழிமார்களின் கையொலிகளுக்கு இடையே நகையாடுவாள். மாற்று அணித் தலைவி , பலத்த கைதட்டல்களுக்கு இடையே இதை மறுத்து, இறைவனின் பூரணத் தன்மையை நிலை நாட்டுவாள். சாழல் பாட்டு வரிக்கூத்து வகைகளில் ஒன்று.. இதை ‘ உரையாடல் பாட்டு ‘ என்றும் ‘வினா-விடைப் பாட்டு’ என்றும் கூறுவர். பாட்டின் இறுதியில் ‘சாழலோ’ அல்லது ‘சாழலே’ என்ற வார்த்தை இடம் பெறும். பட்டிமன்றங்கள் எப்படி இலக்கிய ரசனையை பாமர மக்களிடம் எடுத்துச் சென்றனவோ, அவ்வாறே சாழல்பாட்டுகள் இறை உணர்வை சாமான்ய மக்களிடம் கொண்டு சென்றன.

மாணிக்கவாசகரின் திருச்சாழலில் வரும் இப் பதிகத்தைப் பாருங்கள்.

பூசுவதுவும் வெண்ணீறு பூண்பதவும் பொங்கரவம்.

பேசுவதுவும் திருவாயால் மறைபோலும் காணேடீ !

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

பூசுவதும், பேசுவதும், பூண்வதுவுங் கொண்டென்னை

ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ !

முதல் இரண்டடிகளில், ஒரு பெண் ஈசனை ஏசுவது போலவும், அடுத்த இரண்டடிகளில், இரண்டாமவள் இதை மறுத்து ஈசனின் இறைத் தன்மையை நிலை நாட்டுவது போலும் அமைந்துள்ளது இந்தப் பாசுரம்.

சோழநாட்டின் திருநறையூரில் பிறந்தவர் திருமங்கை ஆழ்வார். இவர் இயற்றிய பிரபந்தங்கள் ஆறு – பெரிய திரு மொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல் (மொத்தம் 1253 பாடல்கள் ). நம்மாழ்வாரின் நான்கு பிரபந்தங்களும் நான்கு வேதத்திற்குச் சமானமாகக் கருதப்படுவது போல், இந்த ஆறு பிரபந்தங்களும் வேதத்தின் ஆறு அங்கங்களாகக் கருதப்படுகின்றன. திருமங்கையார் பலவகை யாப்புகளில் பிரபந்தங்களை அமைத்தவர்;.ஏராளமான திவ்ய க்ஷேத்திரங்களை மங்களாசாஸனம் செய்தவர். தான் செய்த தவறுகளைக் கூறி பதைபதைக்கும் ஆழ்வார் பாசுரங்கள் நெஞ்சை உருக்குவன.

சாழல் பாட்டு, நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலே, திருமங்கையாரின் பெரிய திருமொழியில் மட்டுமே காணப்படுகிறது

வண்ணக் கருங்குழல் ஆச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடி
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே

(பதினோராம் பத்து : ஐந்தாம் திருமொழி).

இந்தப் பத்து பாசுரங்களில் முதலாவது, ,நடு ஏழு, மீதி இரண்டு பாசுரங்கள் முறையே ,இராம, கிருஷ்ண, வாமன அவதரங்களைப் பற்றிப் பாடப் பெற்றன.

இதில் ஏசப்படுபவைகள் : இராமர், சீதையை கல்லும்,முள்ளும் நிறைந்த கானகத்தில் நடத்திச் சென்றது; வஸுதேவர் கால் விலங்குகள் வீழப் பிறந்தவன், நந்தகோபர் மகனாய் இடைச் சேரியில் வளர்ந்தது; ஆயர்பாடியினரின் தயிரைத் திருடி உண்டது; உறி வெண்ணெயை உண்டது; யசோதையால் மொத்துண்டது; கயிற்றால் கட்டப்பட்டது; பறை முழங்க மரக்கால் கூத்தாடியது; பாண்டவருக்கு தூதனாகச் சென்று துரியோதனனிடம் சொல்லடி பட்டது; அர்ஜுனனுக்கு தேர் ஓட்டியது; பார்ப்பவர் இரங்கும்படி வாமன அவதாரம் எடுத்து, வள்ளல் தன்மை உடைய மாவலியிடம் மூன்றடி மண் யாசித்தது ; அரியனாகி திருப்பாற்கடலில் சயனித்தது ஆகியவை.

பெருமாளின் ஏற்றமாகக் கூறப்பட்டவை : அந்தப் பாதங்கள் வானவர்கள் தலையில் அணியும் பூக்கள்; நந்தனிடம் வளர்ந்தவன் நான்முகனுக்குத் தந்தை ! ஏழுலகும் விழுங்கிய பின்னும் அவன் வயிறு நிரம்பவில்லை ! அவன் இமையோர்க்கு எண்ணற்கு அரியன்; என்றும் அரியன்; அவன் பிரளய காலத்தில் உலகம் முழுவதையும் உண்டு உமிழ்ந்து லோகத்தை ரட்சித்தான்; மாலை அணிந்த மன்னர் எல்லோரும் அவனைத் தலையில் வைத்துக் கொண்டாடுகின்றனர்; வாமனனாக வந்தாலும் மூவூலகு அளவும் எழும்பினான்; அரியன் ஆனால் கலியன் இதயத்தில் புகுந்தான்.

ஒரே ஒரு பாசுரம் எடுத்துக்காட்டாய்த் தரப்படுகிறது . இதற்கு பொழிப்புரை தேவை இல்லை !

வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு

கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ

கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்

எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே!

சாழல் பாசுரங்கள் பத்தும் சத்தான முத்துக்கள். சாழலைச் சேர்ந்து பாடி விளையாடிடுவோம் ! பாவங்களைத் தொலைத்திடுவோம் !

ஆழ்வார் திருவடிகளே சரணம் !

About டாக்டர் லக்‌ஷ்மிநரசிம்மன்

டாக்டர் லக்‌ஷ்மிநரசிம்மன்
நரம்பியல் நிபுணரான இவர், சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள நரம்பியல் துறையின் இயக்குனராகப் பதவி வகிக்கிறார். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

சிவன் விளையாடல் – 9

வேல் பெற்ற உக்கிர குமார பாண்டியன் பாரதத்தை புகழ்ந்து பாடும்போது, சுந்தரம் பிள்ளை நீரால் சூழப்பட்ட இந்த உலகிற்கு அழகு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன