முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / வித்யாசம் ஒன்றும் இல்லை ! – பாசுரம் 17

வித்யாசம் ஒன்றும் இல்லை ! – பாசுரம் 17

எட்டு நண்பர்களைக் கொண்ட எங்கள் கோஷ்டி ஒரு நாள் காலைப் பொழுதில் ஒரு பிரபல ரெஸ்ட்ராண்டை அடைந்தது. சர்வர் வந்து நின்றவுடனே எனக்கு ‘ஆனியன் ரோஸ்ட்’ என்றான் ரவி ;அவன் சற்றே முந்திரிக் கொட்டை. எனக்கு ‘ரவா ‘ என்று சேகர் சொல்ல , ஆனியன் ஊத்தப்பம், ’ ‘பூரி மசால்’, ‘பொங்கல், வடை’, ‘இட்லி வடை’ என்று பாலு, ராகேஷ், சூரி, ராஜன் தொடர்ந்து ஆர்டர் செய்தனர். நான் என் பங்குக்கு ‘சோலே பூரி என்றேன். ஸ்ரீதர் நீ என்ன சாப்பிடுகிறாய் என்று கேட்டேன். அவன் சாமியார் மாதிரி. ‘காலை உணவிற்கு எதுக்காக இத்தனை ஆர்ப்பாட்டம்! மதியம் பன்னீரண்டு மணிக்கு கல்யாணச் சாப்பாடு வேறே சாப்பிடப் போகிறோம் ! உனக்கு பிடித்த ஏதாவது கொண்டு வாப்பா’ என்றான் சர்வரிடம். அப்புறம் எங்களை நோக்கி, ‘இட்லிக்கும், தோசைக்கும், பூரிக்கும் ஆறு அங்குல வித்யாசம்தான் தெரியுமா?‘ என்றான். ரவி தலையில் அடித்துக் கொண்டு, சற்றே உரக்க ‘ இந்த மாதிரியான ‘கிராக்’ பிலாஸபர்களையெல்லாம் ஏன்டா கூட்டிவறீங்க ! ‘ என்றான். ஸ்ரீதருக்கு இடியாப்பம் கொண்டு வந்து கொடுத்தார் சர்வர். எட்டுப் பேரும் அவரவர்கள் ஆர்டர் செய்தவற்றை ஆனந்தமாகச் சுவைத்துச் சாப்பிட்டோம். கலியாணத்திற்காக வேனில் சென்று கொண்டிருக்கையில் என் மனம் ஸ்ரீதர் சொன்னதை அசை போட்டது. ‘ஆயர்தேவு’ விஷயம் நினைவிற்கு வந்தது..

நஞ்சீயருடைய திருவாராதனப் பெருமாளுக்கு ஆயர்தேவு என்று திருநாமம். . அப்பெருமாள் , திருக்குருகைப்பிரான் பிள்ளானுடைய சிஷ்யரான எங்களாழ்வானுக்கு கனவிலே தோன்றினார். ‘ நீர் யார் ?’ என்று ஆழ்வான் வினவ, ‘ஜீயர் மகன் ஆயர்தேவு’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டார் பெருமாள். ‘நளை நாவல் பழம் கண்டருளப்பண்ணும்’ என்று கேட்டுக் கொண்டார். மறுநாள் எங்களாழ்வான் நஞ்சீயரைக் கண்டு ‘உங்கள் பெருமாள் நாவற் பழத்துக்காக என் பிராணனை வாங்குகிறாரே ? ’ என்று விநோதமாகச் சொன்னாராம்.. ‘கண்ணன் எனக்கு சேவை சாதிக்கவில்லை ! உமக்கு அந்தப் பேறு கிட்டியதே’ என்று பிள்ளானைப் புகழ்ந்தார் ஜீயர். கண்ணபிரான் வைபவத்தில் பிருந்தாவனத்தில் உகந்திருந்த நாவற்பழத்தை, அர்ச்சையில் நஞ்சீயர் கிருஷ்ணனாகப் பாவித்து ஆராதனை செய்ததால், ஆயர்தேவு கிருஷ்ணனாகவே ஆகிவிட்டார் என்று காட்டப்பட்டதை நினைந்தேன். பொய்கை ஆழ்வார் தோன்றினார்.

தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே,

தமருகந்த தெப்பேர் மற் றப்பேர், – தமருகந்தது

எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே,

அவ்வண்ணம் ஆழியானாம்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

பொய்கை ஆழ்வார் : முதல் திருவந்தாதி : (5-4)

எந்த உருவத்தை விரும்புகிறோமோ அதுதான் அவன் உருவம். எந்தப் பெயரைக் கொடுக்கிறோமோ அதுதான் அவன் பெயர். இடைவிடாது எந்த விதமாகச் சிந்தித்து தியானம் செய்கிறோமோ அந்தவிதமாகவே இருப்பான் ஆழியான். உருவமோ,பெயரோ, குணங்களோ இல்லாத இறைவன் அடியார்கள் ஒவ்வொருவரும் விரும்பும் உருவத்தில், பெயரில், அதனதன் தன்மைகளோடு பொருந்தி அமைகின்றான் என்ற பன்முக நோக்கு ஆழ்வாருடையது.

ஒவ்வொரு திவ்ய தேசமாய்ச் சென்று வழிபட்டாலும், அது முடியாவிட்டால் உள்ளூரில் அமைந்த அபிமானக் கோயிலுக்குச் சென்று வழிபட்டாலும், அல்லது வீட்டில் உள்ள படத்தை வழி பட்டாலும் பலன் ஒன்றே. நாம் விரும்பிய உருவை நினைத்து, நாம் என்ன பெயரிட்டு பூஜை செய்தாலும், என்ன உணவு படைத்தாலும் மகிழ்ந்து ஏற்றுக் கொள்வான் ஆழியான்.. ஆகாசத்திலிருந்து விழும் மழை நீர், எப்படி வெவ்வேறு வழியாகச் சென்று கடலை அடைகிறதோ, அதே மாதிரி, எந்த உருவத்தில், எந்தப் பெயர் கொடுத்து பூஜை செய்தாலும் வித்யாசம் ஏதும் கிடையாது .எல்லாம் கடல் வண்ணனைச் சென்று அடைகிறது. இராமாநுஜரும் சிறுவர்கள் மணலில் வரைந்த கோயிலை தண்டனிட்டு வணங்கி, கொட்டாங்கச்சி பிரசாதத்தையும் அவர்களிடமிருந்து பெற்று, இதையே உணர்த்தினார்.

ஆழ்வார் திருவடிகளே சரணம் !

About டாக்டர் லக்‌ஷ்மிநரசிம்மன்

டாக்டர் லக்‌ஷ்மிநரசிம்மன்
நரம்பியல் நிபுணரான இவர், சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள நரம்பியல் துறையின் இயக்குனராகப் பதவி வகிக்கிறார். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

சிவன் விளையாடல் – 9

வேல் பெற்ற உக்கிர குமார பாண்டியன் பாரதத்தை புகழ்ந்து பாடும்போது, சுந்தரம் பிள்ளை நீரால் சூழப்பட்ட இந்த உலகிற்கு அழகு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன