முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / நாச்சியார் தமிழ் / நா மணக்கும் நாச்சியார் தமிழ் – 8

நா மணக்கும் நாச்சியார் தமிழ் – 8

மென்னடை யன்னம் பரந்து விளையாடும்
வில்லிப்பூத்தூருறைவான் தன்
பொன்னடி காண்பதோ ராசையினாலென்
பொருகயற் கண்ணினை துஞ்சா
இன்னடி சிலொடு பாலமுதாட்டி
எடுத்த என் கோலக்கிளி உன்னோடுதோழமை
கொள்ளுவன் குயிலே !

உலகளந்தான் வரக்கூவாய் !

பெரியாழ்வார்… பெற்ற பெண்பிள்ளை கோதை! கோதைகோதா என்பதற்கு மாலை என்று பொருள்.  திருமாலுக்கு தன் பக்தியை, பக்தியால் தன்னையே மாலையாக்கி மயங்கியவள்.

பாவையவள் முப்பது பாசுரங்களை மார்கழியில் மாதவனை எண்ணி  காத்யாயனி பதுமையை ஏறிட்டு வேதத்தின் சாரமாக மார்கழிக்கென தன் தலைவனை தோழிப் பெண்களுடன் பறை கேட்டு கூடியிருந்து குளிர்ந்தாள்.

மார்கழிக்கென திருப்பாவையை தந்தவள், நாச்சியார்.  அவள் தந்த மொழி உயரிய அரிய திருமொழியை தையொரு திங்களிலே என்று ஆரம்பித்து வைத்தாள்.

கண்ணனின் மீது கொண்ட காதலுக்கு பெரியாழ்வார் தந்த சொத்தாகிய பக்தியே காரணம்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

தனக்குள்ள பக்தியை, பக்தனையும் மீறி கண்ணன் பால் தனக்குள்ள பரிவால், தாயாகி பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று எம்பெருமானின் எழிலுக்கே எங்கே கண்ணேறுபட்டுவிடுமோ என்று அஞ்சி, பாடி விஷ்ணுசித்தர் பெரியாழ்வார் ஆகினார்.

அவரை தகப்பனாராக தேர்ந்தெடுத்த பூ தேவியின் அம்சமாக தோன்றிய அயோனிஜர் ஆக கோதை துளசி தளத்தின் அடியில் சிறு குழந்தையாக தோன்றியவள் கண்ணன் கதை கேட்டே நாளோரு மேனி தினம் ஒரு கண்ணன் லீலையும் கேட்டவளாக வளர்ந்தாள்.

பெரியாழ்வார் பூமாலை கட்டும் போதெல்லாம் தன் அருமை மகளை அருகில் அமரவைத்து அவளுக்கு கண்ணனின் லீலைகளையும்,அதில் அவனது குணங்களையும் குழந்தை மனதில் பதியும் வண்ணம் வார்த்தைகளால் பதியம் போட்டு கோதையின் மனதில் கண்ணன் என்னும் மலர்கள் மட்டுமே பூக்கும் வண்ணம் தோட்டத்தையே உருவாக்கியிருந்தார்.

எந்நிலையிலும் தான் கொண்ட நறுமணத்தை கைவிடாத குணம் திருத்துழாயினுடையது. அந்த செடியின் அடியில் தோன்றிய பூமகளின் மனமும் நித்தமும் கண்ணனின் வாசத்தையே நாடியது.

தந்தையும் தாயும் ஏற்படுத்தியிருக்கும் கண்ணனின் காதல் பக்தியை மீறி பெருங்காதலாக உருமாறியிருக்க கண்ணனைக் காணவேண்டும், அவனோடு பேச வேண்டும் அவனையே மணக்க வேண்டும் என்ற  ஆசையை ஆழ வேரூன்ற செய்திருந்தது.

அது தன் தகப்பனார் பூத்தொடுத்து சேவையாற்றி வந்த வடபெருங்கோயிலுடையானின்  மீது பேரன்பினை தந்திருந்தது.

என்று கொலோ என் கண்ணணைக் கண்குளிரக் காணும் நாள்” என்று பிதற்றலானாள்.

காயா மலர்களை காணும் போதெல்லாம்,” மாயனே வந்தருளாய்”  என்று அழைப்பாள்.

விண்ணில் கரு நீல மேகத்தைக் கண்டால் கண்ணனின் நிறம் வர தன் நிறம் மாறி தவிக்கலானாள்.

பொய்கைகளில் செந்தாமரை மலர்களை காணும் போதெல்லாம் “இம்மலர்கள் கண்ணனுடைய கண்களைக் காட்டி என்னை மயக்குகின்றனவே”  என்று கூறி தளர்ச்சியுற்றாள்.

ஆயர்பாடியாக வில்லிப்புத்தூரையே எண்ணியவள், தன்னையே இடைச்சிப்பெண்ணாக எண்ணிக்கொள்ள அவள் மேல்  முடை நாற்றம் எழுவதாக எண்ண ஆரம்பித்திருந்தாள்.

கண்களில் படும் பொருளிலெல்லாம் கண்ணனைக் கண்டவள் பெரும் பித்தம் பிடித்தவள் போல் மையலில் மயங்கி, கண்ணனின் திருப்பெயர்களை கேட்ட மாத்திரத்தில் கண்ணீர் தளும்பி அருவியென பெருக நெக்குருகி நிற்பாள்.

அந்த மாயவன் அவளை ஏன் இத்தனை சோதிக்க வேண்டும்? ஏன் உடனே அழைத்துக்கொள்ளவில்லை.

அப்படி அழைத்துக்கொண்டிருந்தால் வேதத்தின் சாரமாக மானிடருக்கென பாட வந்த திருப்பாவையும், அவளது காதலை வையம் அறியச்செய்த நாச்சியார் திருமொழியும் கிட்டியிருக்குமா ?

பக்தியால் கனிந்த, அந்தக் கிளியை தூதாக அனுப்பியவளை தன் பிரேமையால் இன்னமும் மயக்கிவைத்தான்.

அதுவே பாவை நோன்பை நோற்க வைத்தது. முப்பது தமிழ்மாலையை தர வைத்தது. இயல்பிலேயே பெண்ணானவள் செய்த தமிழ் பாசுரங்களால் பக்தியில் பல்லாண்டு காலம் வாழ்ந்த ஆழ்வார்களில் ஒருத்தியாக்கி வைத்தது.

அஞ்சுக்குடிக்கொரு சந்ததியாக தோன்றிய நாச்சியார் தமிழ் இன்பம் பருகுவோம்..!

About சுமிதா ரமேஷ்

சுமிதா ரமேஷ்
திருச்சியைச்சேர்ந்தவர். அரபு நாட்டில் வசிக்கிறார். கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு சிறிது காலம் ஆசிரியப் பணியில் இருந்தார். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

நா மணக்கும் நாச்சியார் தமிழ் – 12

அன்னவயற் புதுவை யாண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவை பல்பதியம் – இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை சூடிக் கொடுத்தாளைச் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன