முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / நாச்சியார் தமிழ் / நா மணக்கும் நாச்சியார் தமிழ் -7

நா மணக்கும் நாச்சியார் தமிழ் -7

மின்னார் தடமதிள் சூழ் வில்லிப்பூத்தூர் என்றொருகால்
சொன்னார் கழற் கமலம் சூடினோம் – முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம் கீழ்மையினற்சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே ! வந்து

பாண்டியனது அரசவையில், நாராயணனே பரப்ரும்மம் என்று நிர்ணயம் செய்து, பொற்கிழியை அறுத்தஎடுத்த பெரியாழ்வார், வாழ்ந்த அவரது பெருமையை சொல்லும், நீண்ட நெடிய மதில்களைக் கொண்ட திருவில்லிப்புத்தூர் என்று சொல்லும் வைணவர்களது பாத கமலங்களை தலையில் கொள்ளலாம். இதனால் நரகத்திற்கு செல்லாமல் பிழைக்கலாம்.

என்னே! ஆழ்வாரின் பெருமையை சொல்கிறது இந்த பாண்டியப்பட்டரின் தனியன்.

வேண்டிய வேதங்களை அவனருளால் ஓதி பொற்கிழி  வலிய  வளைந்து அறுத்தவர் விஷ்ணுசித்தர் எனும் பெரியாழ்வார்.

பெரியாழ்வார் என்று அழைக்கப்பட காரணமாக இருந்த நிகழ்வு திருப்பல்லாண்டு பாடியது !

பாண்டியனது சபையில் பொற்கிழியறுத்த விஷ்ணுசித்தர் இறைவனது லீலைக்கு தான் ஒரு கருவியாக செயல்பட்டதை எண்ணி நெகிழ்ந்திருந்த வேளையில் அங்கு குழுமியிருந்த வித்வான்களும், பாண்டிய மன்னனும், மற்றவர்களும் ஆழ்வாரது திருப்பாதங்களில் பணிந்து வணங்கினார்கள்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

வல்லப தேவன்..மிகத் தெளிவடைந்தவனாக மகிழ்ச்சியில் திளைத்திருந்தான்.

அகம் மகிழ்ந்தவனாக  தன்னுடைய பட்டத்து யானையை வரவழைத்து அதன் மீது ஆழ்வாரை ஏற்றினான்.

“வேதப்பயன் கொள்ளவல்ல விஷ்ணுசித்தர் ” “மெய் நாவன் வந்தார்” “மெய்யடியார் வந்தார்” “வில்லிப்புத்தூர் வேதக்கோன் வந்தார்” என்று விருதுகளை ஊதி திருச்சின்னம் பணிமாறி வல்லபத்தேவனே முன்னின்று விஷ்ணுசித்தரை நகர்வலம் வரச்செய்தார்.

குழுமியிருந்த  அனைத்து வித்வான்களும்,ராஜ பிரதானிகளும்,
பொதுமக்களும் பிரமித்திருந்தனர்.

பட்டத்துயானையில் அமர வைக்கப்பட்டிருந்த விஷ்ணுசித்தர் வடபத் ரசாயியை மனத்தால் வணங்கியப்படியே என்னே கண்ணனின் லீலை என்று நெகிழ்ந்திருந்தார்.

கூடியிருந்த வித்வான்கள் அனைவரும் தங்களுக்கு  விஷ்ணுசித்தரே தலைவர் என்று பொருள்பட அவருக்கு “பட்டர்பிரான்” என்று திருப்பெயரிட்டு அழைத்துக்கொண்டாடி, குடை, கொடி,சாமரம், விசிறி ஆகியவற்ற்றைத் தாங்களே பணி மாறிக்கொண்டு மங்கல வாத்தியங்கள் முழங்க நகர்வலமாக பவனி வந்தார்கள்.

அப்போது வீதியில் அனைவருடனும் அரச மரியாதையுடன் வலம் வரும் விஷ்ணுசித்தரை காணும் ஆவல் அந்த பரமனுக்கும் வந்ததாம்.

தனது பக்தனை, தான் அனுப்பிவைத்து, நிர்ணயம் செய்த ஆழ்வாரைக் காண தனயனின் சிறப்பைக் கண்டு பூரிக்கும் பெற்றோர்களை போல ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சங்கு சக்கரம் போன்ற திவ்ய ஆயுதங்களைக் கொண்டவராக, ப்ரும்மா, ருத்திரன் போன்ற தேவர்களால் வணங்கப்பட்டவர்களாய், கோடி சூரியனின் பிரகாசத்துடன், மிக அழகான ஜொலிக்கும் ஜோதியாக கருட வாகனத்தில் காட்சி தந்தார்

முதலும் முடிவும் இல்லாத  முதற்பொருள் ஆகியவரும், தேவர்கோன், அனைத்து மங்கள குணங்களும் உடையவருமான ஸ்ரீமன் நாராயணன் பேரழகைக் கண்ட விஷ்ணுசித்தர் அன்பின் மிகுதியால் அந்த அழகனது எழிலுக்கு கண்ணேறுப்பட்டுவிடுமோ என்றஞ்சி அவருடைய திவ்ய மங்கள ரூபம் நிலைப்பெற்றிருக்கும் வகையில்,

”பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
சேவடி. செவ்விதிருக் காப்பு !

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார்சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர்புக்கு முழங்கும் அப்பாஞ்சன்னியம் பல்லாண்டே !”

என்று பட்டத்து யானை மீது இட்டிருந்த மணிகளையே கொண்டு தாளம் இசைத்துக்கொண்டு திருப்பல்லாண்டு பாடி அருளினார்.

இவருடைய பொங்கும் பரிவைக் கண்ட எம்பெருமானும் விஷ்ணுச் சித்தருக்கு “பெரியாழ்வார்” என்று பட்டம் சூட்டி மறைந்தார்.பிறகு ஆழ்வார், “எம்பெருமானுக்கு மங்களாஸனம் செய்துகொண்டு அவனுக்காகவும்,அவருடைய அடியார்களுக்காகவும் தொண்டு செய்து வாழ்வதே, அவன் அருளாலே மறுமையில் பேறு பெறுவதற்குத் தலைசிறந்த வழியாகும்” என்னும் திருப்பல்லாண்டின் சாரத்தை வல்லபதேவனுக்கு  உபதேசித்து, அவனிடமும் செல்வ நம்பிகளுடமும் விடைப்பெற்றுக்கொண்டு வில்லிப்புத்தூர் திரும்பினார்.

பொற்கிழி தந்த பெருஞ்செல்வத்தை வடபெருங்கோயிலுடையானுக்குச் செய்யவேண்டிய திருப்பணிகளுக்கு செலவிட்டார்.

எவ்வித பெருமையோ, செருக்கோ இன்றி மீண்டும் தனது நந்தவனத் திருப்பணிக்கே திரும்பியவர், முன்பு போலவே, இன்னமும் கூடுதல் பக்தியில் நெகிழ்ந்தவராக தலைகுனிந்த நெற்கதிர்போல, தழையத் தழையத் தாங்கி நிற்கும் மலர்ச் செடியைப் போல பெரியாழ்வார் பணிவுடன் மேன்மேலும் தனது மலர்கைங்கர்யத்தைத் தொடர்ந்தார். பூக்களைப் பறித்து, மலர்மாலைகளைத் தயாரித்து வடப்பெருங்கோயிலுடையானுக்கு முன்புபோலவே சமர்ப்பித்து வந்தார். அவருக்கென ஒரு திருமாளிகையையும் வல்லபதேவன் கட்டித் தந்தான்.

வப்பெருங்கோயிலுடையானுக்கு மிகப்பெரிய கோபுரத்தையும் கட்டுவித்தான்.

இப்படி பெரியாழ்வார் ஆகிய விஷ்ணுச்சித்தரையே தனது தந்தையாக கோதையாகிய ஆண்டாள் தேர்தெடுத்ததில் வியப்பேதும் உளதோ!!

தொடர்ந்து பார்ப்போம்.

About சுமிதா ரமேஷ்

சுமிதா ரமேஷ்
திருச்சியைச்சேர்ந்தவர். அரபு நாட்டில் வசிக்கிறார். கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு சிறிது காலம் ஆசிரியப் பணியில் இருந்தார். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

நா மணக்கும் நாச்சியார் தமிழ் – 12

அன்னவயற் புதுவை யாண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவை பல்பதியம் – இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை சூடிக் கொடுத்தாளைச் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன