முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / நாச்சியார் தமிழ் / நா மணக்கும் நாச்சியார் தமிழ் – 12

நா மணக்கும் நாச்சியார் தமிழ் – 12

அன்னவயற் புதுவை யாண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவை பல்பதியம் – இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.
சூடிக் கொடுத்த சுடர் கொடியே! தொல் பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய்! – நாடி நீ
வேங்கடவற்கு நம்மை விதி ஒன்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு.

ஸ்ரீமன் நாராயணனின் மூன்று பத்தினிகளில் ஏற்றம் பெற்ற தலங்கள் ஸ்ரீதேவிக்கான திருவெள்ளறை, நீலா தேவிக்கான திருநறையூர் எனும் நாச்சியார் கோவில், பூமா தேவிக்கு திருவில்லிபுத்தூர் ஆகும்.

பூமாதேவியின் அம்சமாக அவதரித்தவள் கோதை நாச்சியார். வேதத்தின் சாரத்தை எளிமையாக, தமிழ்ப்பாடல்களாக, சமூகக் கருத்துகளுடன் பாடிய, பாடவல்ல நாச்சியார் என்று ஆன்மீகப் பெரியோர்களால் கொண்டாடப்பெற்றவள் ஆண்டாள்.
கண்ணனைப்பற்றியே கதைகளாக கேட்டு வாழ்ந்த கோதைக்கு, மனிதர்களின் மீதான காதலில் நம்பிக்கை இழந்து, கண்ணனையே கல்யாணம் செய்யவேண்டும் என்ற பேராவல் போட்டி போட்டுக்கொண்டு பக்தியும் காதலுமாக செழித்துவளர்ந்தது!

பேரன்பும் காதலும் மனத்தின் அடிப்பகுதியில் வலுவான தளம் போட, எப்போதும் சிந்தனையில் தவழ்ந்த கண்ணக்காதல் நிரம்பி, வார்த்தைகளாக வழிந்தோட ஆரம்பித்தது..

இன்னிசையாக வார்த்தைகளை நிரப்பி பாடிவைத்தாள் சங்கதமிழ் மாலையாக முப்பது பாடல்களை!அதுவே பின்னாளில் பாவை பாடிய, aதிருசம்பந்தப்பட்ட திருப்பாவை ஆகிற்று!

மனிதருக்காக சபையோர் முன்னிலையில் பாடினாலும் காலம் தாண்டி வாழாமல் வீழ்ந்திருக்கும் ஆனால்,யாருமற்ற பொழுதுகளில்,இறைவனுக்கென்று கோதை, பாடிவைத்ததால் உலகம் முழுதும் பாடும்படி ஆயிற்று!

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

ஆயர்களால் நியமிக்கப்பட்ட திருவாய்பாடி பெண்கள் கோகுலத்தில் மழை பெய்ய நோன்பு நோற்றுதைக் கேள்விப்பட்ட ஆண்டாள் தானும் அப்படியே காத்யாயனி விரதம் இருந்து கண்ணனை அடையக் காத்திருந்தாள்.

அப்படியே பாதகங்கள் தீர்ப்பதாய், பரமனடி காட்டுவதாய், வேதமனைத்திற்கும் வித்தான திருப்பாவையை பாடினாள்.

பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் – கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.

வேதத்தின் பொருள் மட்டுமல்லாமல் சமூக கருத்துக்களையும் உள்ளடக்கியதாக திருப்பாவை இருக்கிறது !
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்ற கீதை வாக்கியத்தையே முதலாவதாக கொண்டு, பல மாதங்கள் இருக்க, மார்கழியையே தன் நோன்பிற்கான மாதமாக தேர்தெடுத்தாள் ஆண்டாள்.

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

யசோதை இளஞ்சிங்கம் என கண்ணனைக்கொண்டே ஆரம்பிப்பவள், நாராயணனே நமக்கே பறை தருவான் என்கிறாள்.
நாராயணன் என்பவர் ஒருவரே… பிரம்மம் ஒருவரே! நமக்கே என்பது பன்மையைக் குறிப்பது!
பரம்பொருள் ஒன்றே, அடைய காத்திருக்கும் ஆத்மாக்கள் பல என்றும், இரண்டும் தனித்தனியே, என்றும், ஒன்றென ஆக இயலாது என்பதாகவும் பொருள்பட, நமக்கே பறை தருவான்.
பறை – வேண்டிய வரத்தை தருவான் என்கிறாள்.

சாதுக்களுக்கு பொருள் தந்து, பாற்கடலில் படுத்து உறங்கும் பரமனைப் பாடி நோன்பு நோற்க, வையத்து வாழ்வீர்காள் என்று கூவி அழைப்பவள் நாம் செய்யக்கூடாதவை என்றும் தெரிவிப்பதில் நோன்பில் வைராக்யம் வளர்க்க சில தியாகங்களை செய்ய வேண்டுமென சொல்கிறாள்.

நெய்,பால் முதலியவற்றுடன் அமுது செய்யாமல் இருத்தல் வேண்டும் என்கிறார். மையிட்டுப் பெண்கள் பூ வைத்து அழகுப்படுத்திக்கொள்ளுதல் இயற்கை. அதனை கூடாதென, மையிட்டெழுதோம் என்றும், தீய சொற்களை பெரியோர்களைப் பார்த்து சொல்லாமலும் இருக்கவேண்டும் என்று இரண்டாம் பாசுரத்தில் பாடுகிறாள்.

ஓங்கி உலகளந்த பெருமாளாக வாமன அவதாரத்தில் பூமியை அளந்ததால் மிக நெருக்கமாக பெருமாளை உணர்ந்தவள் போலும், அவர் நினைவாகவே ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி என்ற பாசுரத்தில், உலகினை அளந்த எம்பெருமானைப் பாடவேண்டும் என்றும், மழை நீரின் பெருமையை, அருமையை, மாதம் மூன்று முறை பெய்யவேண்டும், அப்படி பெய்தால் மட்டுமே உயர்ந்து வளர்ந்த நெற்பயிர்களின் நடுவே மீன்கள் துள்ளி விளையாடும் என்கிறாள்.

மழை பெய்யவேண்டும் என தேசத்தின் மீதான அக்கறையுடன் குவளை மலர்களில் கண்ணுறங்கும் வண்டுகள், பருத்த காம்புகளுடன் பால் சொறியும் பசுக்கள் என நிறைவான செல்வம் நாடு முழுவதும் செழிக்கவேண்டும் என விரும்புகிறாள்.

எத்தனை அற்புதம் !

About சுமிதா ரமேஷ்

சுமிதா ரமேஷ்
திருச்சியைச்சேர்ந்தவர். அரபு நாட்டில் வசிக்கிறார். கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு சிறிது காலம் ஆசிரியப் பணியில் இருந்தார். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

நாமணக்கும் நாச்சியார் தமிழ் – 11

கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர் சோதி மணிமாடந் தோன்றுமூர் நீதியால் நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகளோதுமூர் வில்லிபுத்தூர் வேதக் கோனூர் வேதங்களுக்கெல்லாம் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன