முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / நாச்சியார் தமிழ் / நாமணக்கும் நாச்சியார் தமிழ் – 11

நாமணக்கும் நாச்சியார் தமிழ் – 11

கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடந் தோன்றுமூர்
நீதியால் நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகளோதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்

வேதங்களுக்கெல்லாம் வித்தாக வேதமே படிக்காத சிறுமி பாசுரமாக்க இயலுமா! வியக்கவைக்கும் தமிழையும் ஆண்டாளே அந்த சூடிக்கொடுத்த சுடர்கொடி!
பெண்ணாக பிறந்தவளுக்கு வேத அத்யாயனங்கள் இன்றி அதன் பொருளை சாராசம்சத்தை இத்தனை துல்லியமாக அனைவருடனும் பகிர்ந்தளிப்பதென்றால் மாலவனின் மார்பில் அமர்பவள் செயலன்றோ! எப்போதும் அவனுடன் வாசம் செய்பவளுக்கு அவனே அவளுமாக அனைத்துமாகி அருளினாளோ !

கோதை நாச்சியார் எந்த ஊருக்கும் கோவில்களுக்கும் பயணப்படாதவள், நற்றமிழில் அனைவருக்கும் பயன்படவேண்டுமே என்று பாடி வைத்தவளுக்கு அன்று அங்கீகாரம் கிட்டாமல் இருந்திருக்கலாம் ஆனால் அதை அவள் ஒப்புவித்தது கண்ணனிடத்தில் அதனால் அவன் காலங்கள் தாண்டியும் திருப்பாவையை பாரெங்கும் ஒலிக்கச்செய்கிறான் போலும்.

சூடிக்கொடுத்த சுடர்கொடி, பாடவல்ல நாச்சியார் ஆனது முப்பது தமிழ்மாலையால் !

பாதங்கள் தீர்க்கும் பரம னடிகாட்டும்
வேத மனைத்தும் வித்தாகும் கோதைதமிழ்
ஐயை ந்துமைந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு

அண்டம் நிறை பரம்பொருள் நமக்குள் வந்தமர்ந்தபின் வார்த்தைகள் நதிகளாக பிரவகிக்காதா ?
உள்ளுக்குள் ததும்பும் கண்ண பக்தி நிரம்பி வழிய..அது வார்த்தைகளை துணைக்கு அழைத்தது அதுவே தோழிகளுடன் அந்த சிறுமியை கண்ணனது திருமாளிகைக்கு அழைத்துச்செல்ல வைத்தது.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

பெரியாழ்வார் பெற்ற பெண்பிள்ளை கோதை, வடபெருங்கோயிலுடையானுடன் கலந்துப்பேச முற்பட்டு அவனுக்கு சாமரம், விசிறி முதலியவற்றால் உபசாரங்கள் செய்தாள் .பெருமான் “வா கோதாய் என்னுடன்” என்று அழைக்கவில்லை !ஏறிட்டுப் பார்க்கவோ, பேசவோ இல்லை!

தவித்தாள் உருகினாள் ! மனம் நொந்துப்போனாள்!

“இவனை அனுபவித்தாருண்டோ” என்று ஆராயப்புகுந்தாள்.

“திருவாய்ப்பாடியிலே பெண் பிள்ளைகள் இவனை அனுபவித்தார்கள். ஆனால் அது அவதாரகாலமாகிய துவாபர யுகத்தில் அல்லவா! நம்மால் முடியாதே” என்று ஏங்கினாள்.

இனி அவன் உலவிய, ரசித்த பிருந்தாவனத்தையும் அவனும் ஆயர்பாடி பெண்களுமாய் கொண்டாடி திளைத்த யமுனையையும், அவன் குடையாய் எடுத்த கோவர்த்தன மலையையும் பார்த்துக்கொண்டாவது உயிர்வாழ்வோம் என்று எண்ணி அந்த இடங்களுக்கு போகலாம் என்றால்அதுவும் தன்னால் முடியாது. தான் சிறுமியாயிற்றே எப்படி அத்தனை தொலைவு செல்ல இயலும்,முடியாதே, பலமில்லயே! என்று தன் நிலை கண்டு வருந்தினாள்..!
அழுதாள் !

இனி என்ன செய்வது “ஜனகராஜனின் திருமகளான சீதா பிராட்டிக்கு கிடைத்த வில் போன்ற வாய்ப்பையும், நப்பின்னைக்கு கிடைத்த காளைகள் போன்ற வாய்ப்பும் அதன் மூலம் கண்ணனை, எம்பெருமானை அடையும் வாய்ப்பும் எனக்கு வாய்க்கவில்லையே என் செய்வேன் ” என்று தடுமாறினாள் !

அப்போது ஆன்மீக சொற்பொழிவாளர் ஒருவர்,”ராஸக்கிரீடை செய்தபோது கிருஷ்ணனைப் பிரிந்த இடைச்சிப்பெண்கள், தங்கள் ஆற்றாமையால் தங்களையே கிருஷ்ணனாக பாவித்துக்கொண்டு உயிர் தரித்தார்கள்! அது போல நீயும் செய்வாயாக” என்று அறிவுரை தந்தார்.

அதற்கு கோதையோ, “கண்ணனாக தம்மை பாவிப்பதைக் காட்டிலும் அவனை அனுகரித்து பெண்களாக, கோபியர்களாக தன்னை பாவித்துக்கொள்ளூதல் நல்லது” என்று மறுமொழிந்தாள்.

அதன்படியே, வில்லிப்புத்தூரை திருவாய்ப்பாடியாகவும், அங்குள்ள பெண்களை இடைச்சிப் பெண்களாகவும், தன்னை அவர்களில் ஒருத்தியாகவும், வடபெருங்கோயிலுடையானின் திருக்கோயிலை, நந்தகோபரது திருமாளிகையாகவும், வடபத்ரசாயி பெருமாளை கண்ணனாகவும் பாவித்து, ஆயர்பாடி பெண்கள் நோற்ற நோன்பினை தானும் நோற்க எண்ணினாள்.

நினைவின் முதிர்ச்சியால், அந்த இடைவிடாத சிந்தனையால், கோதையின் நடையே இடைச்சிப் பெண்ணின் நடையை ஒத்ததாக அமைந்தது.

அவளின் மேல் பால் தயிர், வெண்ணையுடன் புழங்கும் பெண்களின் மீது வீசும் நாற்றமாகிய முடை நாற்றம் வீசலாயிற்று!

அவளது பேச்சும் இடைச்சியர் பேச்சைப் போலவே மாற ஆரம்பித்தது ! என்னே அழகு !!
கோதையின் பிரபாவம்..!

முன்பு ஆயர்பாடியில் மழை பொழிய வேண்டுமென்பதற்காக ஆயர்களால் நியமிக்கப்பட்ட பெண்கள் அதையே காரணமாகக் கொண்டு கண்ணனை பெறுவதற்காக நோன்பு நோற்றார்கள்.
ஆண்டாளும் அந்த முறையை பின்பற்றி பாதகங்கள் தீர்க்கக்கூடியதும், பரமன் அடி காட்டுவதுமான, வேதம் அனைத்திற்கும் வித்தாகிய திருப்பாவையை பாடியருளினாள்.. நமக்காக !
என்னவெல்லாம் உரைத்தாள் திருப்பாவையில்…தொடர்வோம்!

About இரா. குமார்

இரா. குமார்
சொற்கோயில் இணைய இதழின் ஆசிரியர். தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர், தினகரன் நாளிதழின் இணையாசிரியர் என முன்னணி நாளிதழ்களில் செய்திப்பிரிவின் உயர் பொறுப்பில் இருந்தவர். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

நா மணக்கும் நாச்சியார் தமிழ் – 12

அன்னவயற் புதுவை யாண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவை பல்பதியம் – இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை சூடிக் கொடுத்தாளைச் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன