முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / நா மணக்கும் நாச்சியார் தமிழ் -9

நா மணக்கும் நாச்சியார் தமிழ் -9

காறை பூணும் கண்ணாடி காணும்,தன்
கையில் வலை குலுக்கும்
கூறை உடுக்கும் அயர்க்கும்,தன்
கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறித்தேறி நின்று ஆயிரம் பேர்த்
தேவன் திறம் பிதற்றும்
மாறில் மாமணி வண்ணன் மேல் இவன்
மால் ஊறுகின்றாளே !

அழகிய கூறைப் பட்டாடை உடுத்தி, காறை போன்ற ஆபரணங்களை அணிந்து கண்ணாடி முன் நிற்பாள்.கைகள் நிறைய வளையல்கள் அணிந்து அவை ஓசையெழ, குலுக்கிப்பார்ப்பாள். பின் அயர்ச்சியுறுவாள்.
கோவைக்கனி போன்ற சிவந்த தன் இதழ்கள் மிகவும் சிவக்கும் படி திருத்துவாள். நாமம் ஆயிரம் உடைய கண்ணனின் பெருமைகளைப் பிதற்றுவாள். இப்படியெல்லாம் ஒப்பில்லா அந்த மணிவண்ணனிடம் ஈடுபடுகிறாளே என் மகள் என்று
ஆண்டாள், கோதை நாச்சியாரின் செய்கைகளை இவ்வாறாக பெரியாழ்வார் பாசுரத்தில் இயம்புகிறார்.

கண்ணனுக்கு எங்கும் எதிலும் குறும்பும் லீலைகளும்தான். தன் இருப்பை விசேஷமாக வெளிப்படுத்துவதில் சமர்த்தன்..அது உள்ளமாக இருந்தாலும் சரி,இல்லமாக இருந்தாலும் சரி !

கோதைக்குள் புகுந்தவன் வேதத்தின் சாரத்தை அவளை இயம்ப வைத்ததும் முப்பது தமிழ் மாலையை பாட வைத்ததும், அவளை ஏக்கத்தில் திருமொழிகளாக பெருமாள் வந்து இன்னமும் தன்னை ஏற்காததால் புலம்பிப்பாடிய நாச்சியார் திருமொழிகளையும் தந்ததும் நிகழ்ந்தது.

விஷ்ணு சித்தராகிய பெரியாழ்வாரும் மற்ற திருமால் அடியார்களும் கூடி உரையாடுவதையும் பிரபந்தங்களையும், பாசுரங்களையும் உற்சாகத்துடனும், உருக்கத்துடனும் பாடிப் பாடி களைப்பதையும் கண்டு வந்தாள் கோதை.
பக்தி பரவசத்துடன் ஆழ்வார் நாம சங்கீர்த்தனம் செய்யச் செய்ய கோதைக்கும் தானும் ஆனந்தமாக தன் தோழிகளுடன், பக்தர்களுடன் ஆடத்தொடங்கினாள்.

குழந்தைப்பருவம் முதல் கண்ணன் கதை கேட்டும், பார்த்தும் வளர்ந்தவள் ஆதலால் அவர் பேச்சில், விளையாட்டில், விருப்பங்களில், அலங்காரங்களில் கண்ணனே பக்தி பூர்வமாக அமர்ந்திருந்தான்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

பக்தர்களுடன் கோதை ஆடிப்பாடி அகம் கரைவதைக் கண்ட பெரியாழ்வாரும் பெருமகிழ்ச்சியடைந்தார்.

தன்னைக்காட்டிலும் விஞ்சிய ஆண்டாளின் பக்தியை எண்ணி வியந்து கசிந்துருகி, மனம் பூரித்துக் கொண்டாடினார்.

வில்லிபுத்தூரே கோதையின் புகழை பாடிக்கொண்டிருந்தது, இருவரது பக்தியை வியந்து பார்த்துக்கொண்டிருந்தது.

பெரியாழ்வார் தினமும் வடபெருங்கோயிலுடையானுக்கு (வடபத்ரசாயிக்கு)பூத்தொண்டு புரிந்து வந்தார். அதிகாலையில் வண்டுகள் எழும் முன் ஆச்சாரத்துடன் நந்தவனம் புகுந்து, நறுமணத்தை சுவாசிக்காத வண்ணம், முகத்தை, நாசிகளை ஒரு துணியினால் மறைத்துக்கொண்டு செடிகளுக்கு வலிக்காத வண்ணம் பூக்களைக் கொய்துவருவார்.

பறிக்கும் போதே நாராயணனின் நாமங்களுடனே பறிப்பவர், அவர் திருபெயர்களைச் சொல்லியப்படியே தொடுப்பதால் இன்னமும் பூமாலைகளில் நறுமணம் கூடியது!

அந்த மாலைகளை சமர்ப்பித்ததும் வடபத்ரசாயியின் திருக்கோலமே வைகுண்டத்திற்கே வந்து விட்டோமோ என்று தரிசிக்க வந்ததிருந்த அனைவரையும் நித்ய சூரிகளாக எண்ண வைத்தது.

கோவிலுக்கு வருவோர், அர்ச்சிப்போர், காண்போர், அடியார்கள் என அனைவரும் பெரியாழ்வாரின் கவித்திறன், பக்தி,அவரது மேன்மை, மிக சிரத்தையுடன் அவர் ஆற்றிவரும் பூத்தொண்டினை அமர்ந்து பேசி சிலாகித்துச் செல்வர்.

மற்ற ஊர்களில் இருந்தும் அவரைக் காணவும் அவர் தொண்டு புரியும், அவருக்கு அருள்புரிந்த அந்த வடபெருங்கோயிலுடையானின் சயனித்த அழகையும் கேள்விப்பட்டு தூர தேசங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வர தொடங்கியிருந்தனர்.

பாண்டிய மன்னன் வல்லபதேவன் வடபத்ரசாயியின் தீவிர பக்தனாக மாறியவன், பல கோவிலுக்கான திருப்பணிகளை செய்வித்து மகிழ்ந்தான். அவன் பெரியாழ்வார் பொற்கிழி பெற்ற வைபவத்தைக் கொண்டாட வடபெருங்கோயிலுடையானுக்கு நீண்ட நெடிய ராஜ கோபுரத்தை நிர்மாணித்தான்.

இன்னமும் என்ன வேண்டுமோ கேளுங்கள் செய்கிறேன் என்று அடிபணிந்து அடியாருக்கு அடியாராகி தொழுது நின்றான்.

பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசைப்படாத விஷ்ணுசித்தர் நித்தமும் நாராயணமூர்த்தி புகழ் எட்டுத்திக்கும் பரவ வேண்டிய நிர்மாணங்களை திருக்கோயிலுக்கு வேண்டினார்.
”அப்படியே!” என்று செய்யவும் ஆரம்பித்தான்.

அதன்படியே இன்றும் ஆண்டாள் திருக்கோயிலில் உற்சவங்கள் குறைவின்றி நிகழ்ந்து வருகின்றன.

அவற்றில் குறிப்பிடத்தக்கவை மார்கழி உற்சவங்கள்.
மார்கழியில் மற்ற திருக்கோவில்களில் திருப்பாவை பாசுரம் அனுசந்தித்து திருப்பள்ளியெழுச்சி நடக்க… அந்த திருப்பாவைகளை நமக்காக பாடியருளிய பாடவல்ல நாச்சியர் பிறந்த மண்ணில் என்ன நடக்கிறது ?!

அவள் முப்பது நாளும் வீதி உலா கண்டு திருக்காட்சி அருள்கிறாள். அதற்காக மார்கழி 22 ம் தேதி, தான் நீராட்டு உற்சவத்திற்கு கிளம்ப ஆயுத்தமாக, வடபெருங்கோயிலுடையானின் உத்தரவை பெற நியமனம் கேட்டு எழுந்தருள்கிறாள்.

அது எப்படி ..என்ன நியமனம் ? ஆச்சர்யம் தருகிறது அல்லவா?

தனது நித்திய சேவைகளை முடித்துக்கொண்டு பல்லக்கில் வடபத்ரசாயியின் திருக்கோயிலுக்கு எழுந்தருள்கிறாள்.
மாலை மயங்கும் வேளையில் புறப்படுபவள், பல்லக்கில் வந்து, மேலே வடபெருங்கோயிலுடையானின் சன்னிதி அடையும் முன் திருமஞ்சனம் கண்டு புத்தாடை உடுத்திக்கொண்டு தங்களது மேனியை ஆடைகளால் முழுவதுமாக மறைத்துக்கொண்ட பட்டர்கள், கைகளால் ஏந்திக்கொள்ள, அவர்கள் நடக்கவென தனியாக வஸ்திரங்கள் கீழே விரிக்கின்றனர், சாஸ்தா ஸ்ரீவைணவர்கள் எனும் கோதையின் அடியார்கள் (இவர்கள் வம்சம்தான் காலங்காலமாக கோதையின் அழகை கூட்டி புண்ணியம் பெறும்; திரு நகைகளை பாதுகாத்து,எடுத்து எல்லா உற்சவங்களுக்கும் தந்து வருகின்றனர்).

கோதை அலங்கார பூஷிதையாக வடபத்ரசாயியின் திருமேனியை அடைகிறாள். அங்கு அவருடன் ஏகாந்த சேவையாக ஒன்றரை நாழிகைகள் இருக்கிறாள். அப்போது திருக்கோயிலில், வடபத்ரசாயியின் விளக்கு தவிர அத்தனை விளக்குகள் வெளிச்சங்களும் அணைக்கப்பட்டு அரவமின்றி அனைவரும் வெளியேறி, மூன்று கதவுகளை தாழிட்டுக்கொண்டு வெளியே காத்திருக்கின்றனர்.

ஒன்றரை நாழிகைகள் கழித்தப்பின் கைதட்டிய படியே உள் நுழையும் அர்ச்சகர்கள், தான் நீராட்டு உற்சவம் மேற்கொள்வதான நியமனத்தை வடபத்ரசாயி பெருமானிடம் பெற ஆண்டாளே கேட்பதாக அவள் கூற அதை பெருமாளின் திருச்செவிகளில் சேர்ப்பதாக அந்த வைபவம் நிகழ்கிறது.

பின் நீராட்டு உற்சவத்தை நிறைவேற்றிக்கொள்ள, ஏற்றுக்கொள்ள நியமனம் கிடைத்தவளாக மீண்டும் கைகளால் ஏந்திக்கொள்ளப்பட்டு தனது பல்லக்கினை அடைகிறாள் நாச்சியார்.

பூமகளாக அவதரித்தவள் பூச்சூடிக்கொண்ட அழகும் சூடிக்கொடுத்த சுடர்கொடியாகவும் இனி ஆனதைக் காண்போமா..?

About சுமிதா ரமேஷ்

சுமிதா ரமேஷ்
திருச்சியைச்சேர்ந்தவர். அரபு நாட்டில் வசிக்கிறார். கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு சிறிது காலம் ஆசிரியப் பணியில் இருந்தார். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

நா மணக்கும் நாச்சியார் தமிழ் – 12

அன்னவயற் புதுவை யாண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவை பல்பதியம் – இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை சூடிக் கொடுத்தாளைச் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன