முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / நா மணக்கும் நாச்சியார் தமிழ் – 6

நா மணக்கும் நாச்சியார் தமிழ் – 6

பெரியாழ்வார் பெண் பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாரடிப்பூரத்தின் சீர்மை- ஒரு நாளைக்
குண்டோ மனமே யுணர்ந்துபார் ஆண்டாளுக்
குண்டாகி லொப்பிதற்கு முண்டு.

 

ஆண்டாள் நாச்சியாரிடம் மிகுந்த ஈடுபாடுக்கொண்டிருந்த மணவாள மாமுனிகள் ஒரு சமயம் ஆண்டாளின் நீராட்ட உற்சவத்தில் கலந்துகொண்டு அவளை தரிசிக்க வேண்டி ஸ்ரீவில்லிப்பூத்தூர் வருவதற்குள் நீராட்ட உற்சவம் நிறைவடைந்துவிட்டது.

மிக வருந்தியவர், “ஆண்டாளின் சௌரி திருமஞ்சனத்தை சேவிக்கும் பேறு கிட்டவில்லையே” என்று வருந்தினார்.

ஆண்டாளும் அவரது வருத்தத்தைப் போக்க எண்ணி, தனியாக, தை மாதப் பிறப்பன்று எண்ணெய்க் காப்பு நீராட்ட உற்சவம் நடத்தும்படி கோயில் ஊழியர்களுக்கும் பட்டர்களுக்கும் ஆணையிட்டாள்.

அதை அவர் தனது உபதேச ரத்ன மாலையில்

“இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக
வன்றோ இங்காண்டா ளவதரித்தாள் – குன்றாத
வாழ்வான வைகுந்த வான் போகந்தன்னையிகழ்ந்து
ஆழ்வார் – திருமகளா ராய்”

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

என்கிறார்.

அப்படிச் சிறப்புப் பெற்ற நாச்சியார் தன் தந்தையின் சிறப்பை அறிந்தல்லவா..வில்லிப்பூத்தூரில் அவதரித்தாள்.
பாண்டியனின் பர தெய்வம் பற்றிய தேடல், எவரைச் சரண் புகுந்தால், மறு பிறப்பில்லா பேறு கிடைக்கும்? அதற்கு என்ன செய்யவேண்டும் என்ற கேள்வியை காசி பண்டிதர் மூலம் ஏற்படுத்தியதும், அதற்கான வழியாக, எத்தெய்வம் முக்தியை அருளக்கூடியது ? ஆதியும் அந்தமும் அற்ற எந்த தெய்வத்தைத் தொழுதால் மறுபிறவி இன்றி உய்யலாம் என்பதை அறிய
அதை பிரமாணம் செய்பவர்களுக்கு பொற்கிழி என்று
செல்வ நம்பி அவர்களது வழிகாட்டலில் சபைதனில் கட்டி வைத்துக் காக்க வைத்ததும் அந்த மாலவன் லீலையன்றோ!.

சகல எதிர்ப்புகளையும் மீறி, பாண்டியன் சபையில், வல்லப பாண்டியன் செல்வ நம்பிகளின் வழிகாட்டுதலில் அவர் எதிர்கொண்டு வரவேற்க, மற்ற விவாதப் போர்களில் பங்கேற்கும், நிர்ணயம் செய்யும் பண்டிதர்கள் முன் விஷ்ணு சித்தரும் எழுந்தருளினார்.

“எவனிடத்திலிருந்து அனைத்துப் பொருட்களும் உண்டாகின்றனவோ, எவனால் இவை யாவையும் நிலைபெற்றிருக்கின்றனவோ, முடிவில் (ஆழிக்காலத்தில்) எவனிடத்தில் இவையனைத்தும் லயமாகின்றனவோ அவனே பரப்பிரும்மம்…” என்றும்
” வாக்கினாலும் மனத்தினாலும் துதிக்கவும் அறியவும் எது அருமையாக இருக்குமோ அந்த பிரம்மத்தை அறிந்துக்கொண்டவர்கள் யமனுக்கும் அஞ்சமாட்டார்கள்” என்றும்…
சிலந்திப்பூச்சி எவ்வாறு நூலை தானே படைத்து உணவை இழுத்துக்கொள்கிறதோ அவ்வாறே சகல உயிர்களையும், சித்து, அசித்து முதலானவற்றை அந்த பரமன் படைத்தான்.
இந்த பரமன்… மஹா விஷ்ணுதான்..! ஆயிரம் பெயர்களைக் கொண்டவன், ஆர்ப்பாட்டமின்றி அமைதியானவன், அனைவராலும் தொழப்படுகிறவன் என்றும்… விஷ்ணுசித்தர்.. பாய்ந்து வரும் வெள்ளம் போல வார்த்தைகளை கோர்த்து, வடபத்ரசாயி அருளால்.. கடகடவென கொட்டிக்கொண்டிருந்தார்.

அங்கு, அனைவரும் மெய் மறந்து கேட்கத் துவங்கியிருந்தனர்.

“பரமனின் நாபிக் கமலத்திலிருந்து பிரமன் பிறந்தான் என்றும், அந்த பிரமனின் புருவ மத்தியிலிருந்து ருத்ரன் அவதரித்தான்” என்ற விஷ்ணுசித்தரின் வாதத்தால், ஆச்சர்யத்தில் அனைவரையும் கட்டுவித்தவர், பொருத்தமான வாக்கியங்களின் மூலம் கூறி வியப்பால் வாய் மொழியின்றி கட்டுண்டு கிடக்க செய்திருந்தார்.

ஓங்காரம் பொருள் விஷ்ணு ஒருவனே என்றும் அவனையே வணங்கி, அவன் தந்ததே வேதங்கள் என்றும் வாதித்தார்.

ஓங்காரத்தை உச்சரிப்பதால் அடைய முடியும் தெய்வம் நாராயணனே! அவனது எட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்த பொழுதில், தொழுபவர்கள் அவனை அடைகிறார்கள்.

அந்த ஓங்காரத்தில் முதல் அகரம் அப்பரமனையே குறிக்கிறது, அந்த அகரம்.. அனைத்து வாக்குகளுக்கும் மூலமான எழுத்து என்றும், அகரமே பகவான் நாராயணனுடைய முக்கிய திருநாமம் என்றும், அந்த நாரயணன் ஒருவனே பாவங்களைக் களைபவன்.. அவனிடத்திலிருந்தே பிரம்மா, சிவன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களும் தோன்றினர் என்றும் …. ஆணித்தரமாக தகுந்த வேத வாக்கியங்களை முன் வைத்து வாதாடினார் விஷ்ணுசித்தர்.
அவரா வாதாடினார்? அவரது பக்தியில் மகிழ்ந்த பரமன் அல்லவா பேச வைக்கிறார்.

ஆகவே நாராயணனே பரப்ரும்மம் என்றும்
தன்னுடைய நாபிக் கமலத்திலிருந்து பிரம்மாவும், அவருடைய புருவ மத்தியிலிருந்து சிவபெருமானும், அவரிடத்திலிருந்து ஆறுமுகனும் (முருகன்) பிறந்துள்ளதாக கீதையில் கண்ணனே சொல்லியுள்ளதையும் இங்கே விஷ்ணுசித்தர் குறிப்பிடுகிறார்.

மஹாபாரதம் தந்த வேத வியாசரும், “எந்தக் காலத்திலும் நாராயணனுக்கு மிஞ்சிய பரதெய்வம் இல்லை,” என்று வேதங்களும் புராணங்களும் சத்திய பூர்வமாக சொல்லி இருப்பதை, ரிஷிகளாகிய உங்களுக்கு மத்தியில் ப்ரமாண பூர்வமாக நானும் சொல்ல விழைகிறேன்” என்று மூன்று முறை அடித்து சத்தியம் செய்தார் விஷ்ணு சித்தர்.

சபை மிரண்டது… அமைதி அந்த இடத்தையே அள்ளிக்கொண்டு வேடிக்கைப் பார்த்தது.

சபையோர் மறுபேச்சு இழந்து, அவரது வாதத்தில் தங்களையே இழந்து பார்த்துக்கொண்டிருக்க, “வேதங்களுக்கு மிஞ்சிய சாஸ்திரமும் இல்லை; கேசவனுக்கு மிஞ்சின பரதெய்வமும் இல்லை” என்றும்…
அனைத்து தேவர்களிலும் நாராயணன் ஒருவனே பரதெய்வமாக இருப்பது போல (முக்தியை அருளக்கூடிய தெய்வம்) எல்லா மந்திரங்களிலும் ஓம் நமோ நாராயணா எனும் எட்டு அட்சரங்களைக் கொண்ட திருமந்திரம் ஒன்றே அந்தப் பரதெய்வத்தை அடையும் உயர்ந்த மந்திரம் என்றும் விஷ்ணுசித்தர் சாதித்தார்.

பெரும் சூறாவளி ஓய்ந்த அமைதியும், கனன்ற எரிமலை ஓய்ந்துப்போய் அமைதியை அள்ளித் தெளிப்பதைப் போலவும் அந்த சபை விளங்கியது.

இவ்வாறு பல்வேறு வேத வாக்கியங்கள், புராணங்கள், இதிகாச வாக்கியங்களின் மூலம் நிர்ணயம் செய்ததும், அங்கு குழுமியிருந்த, அனைத்து புலமையையும் ஒருங்கே பெற்றிருந்த விற்பன்னர்கள் இசைந்து ஏற்க, கம்பத்தில் கட்டப்படிருந்த பொற்கிழி தானாகவே தாழ்ந்து
விஷ்ணுசித்தரிடம் வளைந்து வந்தது.

வல்லப பாண்டிய அரசன் உடனே, ”ஆழ்வாரின் வெற்றி பரம்பொருளாலும் இசையப்பெற்றது” என்று வாழ்த்திப் போற்றினான்.

இறைவனின் கருணையை எண்ணி, கலங்கிய விழிகளுடன் ஆழ்வாரும்… அந்தப் பொற்கிழியை அறுத்துப் பெற்றுக்கொண்டார்…!
பெற்றவர் எங்கனம் திரும்பினார்..வில்லிப்பூத்தூருக்கு….?!
தொடர்வோம்…!

About சுமிதா ரமேஷ்

சுமிதா ரமேஷ்
திருச்சியைச்சேர்ந்தவர். அரபு நாட்டில் வசிக்கிறார். கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு சிறிது காலம் ஆசிரியப் பணியில் இருந்தார். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

நா மணக்கும் நாச்சியார் தமிழ் – 12

அன்னவயற் புதுவை யாண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவை பல்பதியம் – இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை சூடிக் கொடுத்தாளைச் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன