முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / நா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.

நா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.

திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!
பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே !
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே !
உயரரங்கர்க்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே!
மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே!
வன்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!

அன்னம் நடைபயிலும் திருவில்லிபுத்தூரில் கண்ணனின் கதை கேட்டு வளர்ந்தவள், துளசிச்செடியின் மடியில் அவதரித்தகோதை.

ஆயர்பாடியில் கண்ணனை பாலையும் நெய்யயையும் ஊட்டி வளர்த்தாள் தாய் யசோதை !

தென் ஆயர்பாடியான வில்லிப்பூத்தூரில் பாலையும் நெய்யையும் அன்றி, கண்ணனையே, அவன் கதை, மகத்துவம், செயல்களைக் கூறி பெண்ணிற்கு ஊட்டி வளர்த்தார் தந்தைபெரியாழ்வார்.

பக்தர்கள் போற்றிட யானையின் மீது கொண்டுவரப்பட்ட வல்லப தேவ பாண்டியனால் கொண்டாடப்பட்ட விஷ்ணுசித்தரைக் காண மதுரையில் ஸ்ரீமன் நாராயணனே வானில் தனது தேவிகளுடன் திருக்காட்சியளித்தார்.

அப்போது நெகிழ்ந்து பக்தியில் கனிந்து, தாயுள்ளத்துடன் கண்ணனுக்கு கண்ணேறுப் பட்டுவிடுமோ என்று அஞ்சி யானையின் கழுத்தில் இருந்த மணிகளைக்கொண்டு பல்லாண்டு பாடினார்.

அன்று முதல் பெரியாழ்வார் என்ற திருப்பெயர் திருமாலால் தரப்பட்டது.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

பெரியாழ்வார் மகளுக்கு ஊட்டிய பக்தி அவளிடத்தில் கண்ணனின் மேல் காதலை வரவழைத்தது.

எண்ணங்கள், சிந்தனைகள் வளர்ந்ததால், பால் பொங்கி வருவதைப் போல காதலும் பக்தியும் பெருகியதால் கோதை தன்னை மறந்து பிதற்றிப் பாடலானாள்.

கண்ணனின் காலத்தில்,கோகுலத்தில் மழை பெய்ய விரதம் இருந்தார்கள் ஆயர்பாடி பெண்கள். அவர்கள் யமுனை நதிக்கரையில் காத்யாயனி விரதத்தை மேற்கொண்டனர். உண்மையில் அவ்விரதத்தினால் அவர்கள் கண்ணனை அடைய வேண்டினர்.

இதை வில்லிப்பூத்தூருக்கு காசியிலிருந்து வந்த கதை சொல்பவர் மூலம் சொல்லக் கேட்ட சிறுமி கோதைக்கு, தானும் அவர்களைப் போல நோன்பினைக்கொள்ள ஆசைப்பட்டாள்.

அதற்காக அவள் தேர்தெடுத்தது மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கண்ணன் சொன்ன வாக்கியத்தின் அடிப்படையில் மார்கழி மாதத்தை.

தான் மட்டுமல்லாது தன்னுடன் விளையாடும் சக தோழிப் பெண்களுடன் அந்த நோன்பினை மேற்கொள்வதாக இன்னிசையுடன் நோன்பின் நோக்கம்,எதற்காக என்ற கருத்துகளுடன் விடியற்காலையில் எழுந்து நோன்பின் மகத்துவத்தை புரியவைக்க முயற்சித்து பாசுரங்களாகப் பாடுகிறாள்.

இதில் பறை பெற வேண்டும் என கண்ணனை அரசனாகக் கொண்டு, தன்னோடு அனைவரும் பெற வேண்டும் என்ற பொது நல சிந்தனையுடன் பாடியதால் முப்பது தமிழ்மாலை என்று அழைக்கப்பட்டது பின்னாளில் திருப்பாவை ஆகி மற்ற ஆழ்வார்களது பாசுரங்களை விட மனனம் செய்யப்பட்டு கொண்டாடப்படுகிறது.

நீரின்றி அமையாது உலகு, உலகில் அனைத்து உயிர்களுக்கும் தேவையான மழையை தருபவன் கார்முகில் வண்ணன். கண்ணனின் பெருமைகளை சொல்லி தன்னுடன் விளையாடும் சிறுமிகளை எழுப்புவதாக பாடி வைத்தாள் முதல் பதினைந்து பாசுரங்களை.

இதில் எல்லே இளங்கிளியே என்ற பாடலில்,
மற்ற தோழிகள் எல்லாரும் வந்துவிட்டனர், நீ மட்டும் உறங்கலாமா, கூட்டமாக வந்த எங்களை நீ காணவேண்டாமா என்ற அந்த கூடியிருந்து, பகிர்ந்து அனுபவிக்க வேண்டியதை,அந்த இன்பத்தைச் சொல்கிறாள்.

பெண்கள் கூட்டத்தைக் காண ஆசைப்பட்ட பெண் ஒருத்தியை எழுப்புகிறாள். அனைவரையும் எழுப்பிக்கொண்டு, அந்த ஊரின், வாழ்க்கையை,சுற்றிலும் நிகழ்பவைகளை பாடல்களில் தந்தவள், நாயகனாய் நின்ற பாசுரத்தில் நந்தகோபர் வீட்டு மாளிகையின் முன் நின்று கதவை திறக்குமாறு வாசலில் காவல் புரிபவனிடம் கேட்கிறாள்.

வில்லிப்பூத்தூரில் வாழ்பவள், எங்கும் செல்லாதவளுக்கு கண்ணனின் திருமாளிகை பற்றி எவ்விதம் தெரியும் ?

கண்ணனின் மீதுள்ள காதலால், தன்னையே இடைச்சிப் பெண்ணாகக் கற்பனை செய்துகொண்டு அவர்களைப் போலவே, தன்னை மனதால் நினைத்து, தான் ஆயர்பாடியில் வாழ்வதாக எண்ணிக்கொள்கிறாள்.

அப்படி எண்ணிக்கொண்டாலும் வடபத்ரசாயி கொண்டிருக்கும் கோவிலையே கண்ணன் வசிக்கக்கூடிய மாளிகையாக எண்ணிக்கொள்கிறாள்.

அதனால் அந்த திருக்கோவிலையே கண்ணனின் தகப்பனார் நந்தகோபர் வாழும் மாளிகையாக எண்ணிக்கொண்டு நந்தகோபர் மாளிகையில் நிற்பதாக நினைத்து, கோவிலை பாதுகாப்பவனே, திருக்கதவை திறந்துவிட்டு எங்களை உள்ளே அனுமதிப்பாயா என்று கேட்கிறாள்.

இங்கு கோதையின் பக்தி ரசம், காதலுக்கு முன் வந்து நிற்கிறது கூடவே பெரியவர்களுக்கு தர வேண்டிய முறையான மரியாதையும், முறைப்படி மன்னனை எப்படி சந்திக்க வேண்டும் என்பதையும் அறிய முடிகிறது.

மன்னனை பார்க்க பெண்கள்…. இல்லையில்லை, சிறுமியர் கூட்டமாக வந்தததைக்கண்ட வாயிற்காப்பான் நேய நிலைக்கதவம் என்ற பெருங்கதவை திறந்து விட்டு உள்ளே அனுமதிக்கிறான்.

உள் செல்பவர்கள் கண்ணனை மன்னனாக எண்ணி சந்திக்க விழையும் முன் உறங்கும் அவரை எழுப்ப தாய் யசோதா வையும் கண்ணனின் அண்ணன் பல ராமனையும் முதலில் எழுப்புகிறாள். அதுவே அம்பரமே தண்ணீரே பாசுரம் ஆகிறது.

அடுத்த பாசுரம் “உந்து மதக்களிற்றன்”
ஆஹா..!

தோள்வலிமையை கூறி அப்படிப்பட்ட அரசனாகிய கண்ணனின் பத்தினியாகிய நப்பின்னையை கண்ணனை எழுப்ப முடியுமா என்று கேட்கும் பாசுரம்.

நந்தகோபர் மூலம் கண்ணனை எழுப்ப முயற்சித்து இயலாமல் போகவே, அவனுடன் என்றும் பிரியாமல் உள்ள திருமகளை முன்னிட்டு அழைக்க நினைக்கிறாள்.

ஒன்றாக கணவனை விட்டு பிரியாமல் உள்ள நப்பின்னை தேவியை எழுப்புகிறாள்.

அவளை எழுப்பினால் அவளாவது எழுந்து பின் தன் கணவனாகிய கண்ணனை எழுப்ப மாட்டாளா என்ற ஏக்கம் இந்த பாசுரத்தில் காண முடிகிறது.
அதுமட்டுமல்ல, இறைவனை, அனைத்திற்கும் காரணமான, அசையும் அசையா பொருட்களுக்கும்,இந்த பிரபஞ்சத்திற்கும் காரணமானவனை அடைய, பிரார்த்திக்க முதலில் அவனுள் உறையும் திருவை, திருமகளை ஏறிட்டு, அவளை பிரார்த்திக்கொண்டு பின் திருமாலை வேண்டிட வேண்டும் என்பதும் விளங்குகிறது.

“செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் ” பாசுரம் அடுத்தது.

இந்த பாசுரத்தால் நப்பின்னையை வந்து கதவின் தாழ்ப்பாளை திறந்து தங்களை உள்ளே விடுமாறு சிறுமியர்கள் வேண்டுகிறார்கள்.

அந்த வேண்டுகோளை கேட்டதும் அழகில் சிறந்த, கருணையில் மிகுந்த நப்பின்னை தேவி கதவை திறக்க வரும்போது, தன்னைத் தேடி வந்தவர்கள், தனக்குப் பிரியமான ஆண்டாளுடன் வருவதைக்கண்ட கண்ணன் நப்பின்னையை இடைமறித்து, தானே சென்று கதவை திறக்க விரும்புவதால் அவளை அணைத்துக்கொள்வதாக எண்ணுகிறாள் கோதை.

அதனால்.. குத்து விளக்கெரிய பாசுரத்தில் அதை குறித்து, பாடுகிறாள். அப்போது அரசனது உறங்கும் அறை எப்படி இருக்குமெனவும் ஆண்டாள் மூலம் நாம் தெரிந்துக்கொள்ளலாம்.

“ஒரு கண நேரமும் கண்ணனை விட்டு பிரியாமலும்,அவனை துயில் எழ சம்மதிக்காமலும் இருக்கும் திருமகளின் செயல் ஏற்கத்தக்கதல்ல என்று வேண்டிட, நப்பின்னை தேவியும், கண்ணனிடம் வந்தவர்களை பற்றிப் பேச, எழுப்ப, தகுந்த சமயத்திற்காக காத்திருக்கிறாளாம்.

அப்படியும் கண்ணன் என்னவென்று கேட்டு இவர்களை காணவும் குறையை கேட்கவும் வரவில்லை.

அதனால், தாங்கள் நப்பின்னையை கோபித்துக்கொண்டதால் தனது பிராட்டியை கோபித்ததால் கண்ணனுக்கு பொறுக்காமல் கலங்குகிறான் என்றெண்ணி “முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்த்த கலியே துயில் எழாய்” நேரிடையாக கண்ணனையே துயில் எழுமாறு வேண்ட ஆரம்பிக்கிறாள் ஆண்டாள்.

தான் மட்டுமின்றி உலகிற்கே பயனாகும் வகையில் சமுதாயத்தின் மீதுள்ள அக்கறையுடன் ஆண்டாள் பாடுவதன் மூலம் அன்றைய காலகட்டத்தின் வாழ்க்கை முறை, சூழல், அரசனை காணும் முறை எல்லாவற்றிற்கும் மேல் எப்படி பக்தன் தனது பிரியமான தெய்வத்தை அணுக வேண்டும் என பலவற்றையும் எளிமையான வடிவில் திருப்பாவை மூலம் நமக்கு அறியத் தருகிறாள்..!

என்ன இல்லை திருப்பாவையில் எனலாம்..!
நா மணக்கும் நாச்சியார் தமிழை தொடர்ந்து அனுபவிக்கலாம்…!

About சுமிதா ரமேஷ்

சுமிதா ரமேஷ்
திருச்சியைச்சேர்ந்தவர். அரபு நாட்டில் வசிக்கிறார். கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு சிறிது காலம் ஆசிரியப் பணியில் இருந்தார். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

சிவன் விளையாடல் – 9

வேல் பெற்ற உக்கிர குமார பாண்டியன் பாரதத்தை புகழ்ந்து பாடும்போது, சுந்தரம் பிள்ளை நீரால் சூழப்பட்ட இந்த உலகிற்கு அழகு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன