முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / நா மணக்கும் நாச்சியார் தமிழ் -14

நா மணக்கும் நாச்சியார் தமிழ் -14

‘ஒருமகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன், செங்கண்மால் தான் கொண்டு போனான், பெருமகனாய்க் குடிவாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை
மருமகளைக் கண்டு மணாட்டுப் புறம் செய்யும்’

மானிடனை மணக்க மாட்டேன் என அரங்கனை அடைய எண்ணிய தன் மகளைப் பற்றி, பெரியாழ்வார் பாடியது.

பக்தியின் பெருக்கம் பாடவைக்கும் சரி! மற்றவர்களுக்காகவும் உருகி,உருகவும் வைக்குமா? ஆம்! அப்படி உருகியதால்தான் நம்பாடவல்ல நாச்சியார் கோதை,ஆண்டாள் ஆனாள். தமிழை ஆண்டவள்,நம்உள்ளங்களையும் இல்லங்களையும் என்றும் ஆள்கிறாள்!

சிறுமியாக பாடிவைத்தாள் பக்தியில் நனைந்த பைந்தமிழ் பாசுரங்களை! அவை காலத்தால் கொண்டாடப்படுகின்றன.

திருப்பாவை பாடி, ஐந்து லட்சம் பெண்களை ஒன்றாக சேர்த்தவள் ஆண்டாள். அவளே நாராயணனே நமக்கே பறை தருவான் என்றுஅனைவரையும் கூட்டி வைத்து, கூடியிருந்து குளிரச் செய்கிறாள்.

எதைச் செய்யலாம், செய்யக்கூடாது என்பதை முதல் ஐந்து பாசுரங்களில்,போகங்களில் ஈடுபடாதே,கர்மத்தில் ஈடுபடு என்றவள்,இறை அனுபவம்பெண்களுக்கு மட்டுமா..அனைத்து உயிர்களுக்குமானது அல்லவா! அதனால் நமக்கே என்ற சொல்லை பயன்படுத்தி அதன்மூலம் உலகத்தாரை ஒரு நிழலில் சேர்க்கிறாள் தாயுள்ளத்துடன்.

மூட நெய் வழியபால்சோறு உண்ண மாட்டோம் என்ற நோன்பின் தன்மையை சொல்லித்தந்து, தமிழை அல்லவா அள்ளி தந்து பருக செய்கிறாள்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

கர்ம பூமியான பாரதத்தில் எதைச் செய்யலாம் செய்யக்கூடாதென சக சிறுமி தோழியருக்கு சொல்வதாக நமக்கல்லவா சொல்கிறாள்.

கண்ணனின் அனுபவம் கிட்ட முதல் ஐந்து பாசுரங்களில் பாடியருளியவள் அந்த அனுபவத்தை பெறாமலே உறங்கிடும் சக தோழிகளை எழுப்பச் செய்கிறாள்.

புள்ளும் சிலம்பின காண் – பாடலில் புதிதாக கண்ணனின் மேல் காதல் கொண்டுள்ள, இறையனுபவம் தேட விழையும் தோழி ஒருத்தியைக் குறித்துப்பாடுகிறாள். ஹரியின் நாமத்தை சொல்லித்தரும் பாசுரம்!

பக்திக்கு அடிப்படையே ரசனைதான்!

பரமாத்வாவைப்பற்றி பேசவும் அவனை ரசிக்கவும் கற்றுத்தருகிறாளே இவளை விடச் சிறந்த ஆசான் நமக்கு உண்டா?

நம்மை சுற்றியுள்ள அனைத்தும் எழுந்துவிட்டதே என அந்தக்கால வாழ்க்கையை, கீசுகீச்சென்று பாசுரமும் சொல்லக்காணலாம்.

கோதுகலமுடைய பாவாய் – திரும்பத் திரும்ப அன்போடு நினைப்பதே பக்தி என மிக எளிமையாக தன் தோழிக்குச் சொல்லி எழுப்பும் பாசுரமே கீழ்வானம் வெள்ளென்று..!
ஆஹா !

“தூமணி மாடத்து” படுக்கையறை வர்ணனை,மாடத்தில் மட்டுமே விளக்கு. ஆனால், வெளிச்சம் அறை முழுவதும் பரவியிருக்கிறது.

சாம்பிராணி புகையாகிய தூபம் கமிழ்கிறது!
ஆனந்தமாக தூங்கி பிரம்மானுபவத்தில் ஈடுபட்டுள்ளவளே எழுந்திரு என்கிறாள்.

அடுத்து நோற்று சுவர்க்கத்தில் அந்த பிரம்ம அனுபவம்..இறையனுபவம் நமக்கு கிட்ட உறக்கம் போதுமென எழுப்புகிறாள்.

இறையனுபவத்தை நாம் தேடுவதையும்,அதுவே நம்மை தேடிவரும்போது நாம் தயாராக இருக்கவேண்டுமெனவும் சொல்லிச்செல்கிறாள்.

என்னே அவளது வாத்சல்யம்.

இரண்டுமே உபநிஷத்து வாக்கியங்களின் அடிப்படையில் பாடியுள்ளாள்.

கற்றுக்கறவை பாசுரத்தில் கண்ணனைப் போன்ற சிறப்பான குலத்தில் பிறந்த பெண்ணே எழுந்திரு எனக் கோவலர் தம் பொற்கொடியே! உயர்குடி பிறப்புடையவளே! தூங்காமல் எழ வேண்டும் என பெண்ணுக்கு தன் குலப்பெருமையை காக்க வேண்டியதையும் தாயுள்ளத்துடன் கூறுகிறாளே!

கனைத்திளங்கற்றெருமை பாசுரம் – ஸ்ரீ ராமனை இணைபிரியாது தனது சேவைகளால் சிறப்பித்தவர் இளையவரான இலக்குமணன். அவரைப் போல, கண்ணனது சேவையில் ஈடுபட வேண்டும் என்று ராமனை சுட்டிக்காட்டி பாடும் பாசுரம்.

புள்ளின் வாய் கிண்டானை – செருக்கோடு தான் கண்ணழகி என்பதால் கண்ணன்தான் தன்னைத் தேடி வர வேண்டும் என்று உறங்குகிறாளாம்..ஒரு தோழி! அவளை அப்படி எண்ணம் கொள்வது கூடாது! அவனிடம்,கண்ணனிடம் செருக்கு வேண்டாமே என்கிறாள்.

கண்ணனுக்கான அவனை நினைத்து,தொழுது நாம் பறையாகிய செல்வத்தையும் அவனையும் பெற வேண்டிய நோன்புக்காலம் இது! இந்தப்பொழுதில் உறங்கி, நேரத்தைக் கழிக்கலாமா என்ற வாஞ்சையுடன், இவற்றை தானே முன் நின்று நடத்தி வைப்பவளாக, அந்த தலைப்பண்பையும் கற்றுத் தருபவள், நோன்புக்கடனை மறந்து உறங்குபவளை நானாதாய்,நாவுடையாய் என்று கூறி எழுப்புகிறாள் ஆண்டாள்.

என்னவேண்டும் வாழ்விற்கு அத்தனையும் கொட்டிக்கிடக்கிறது பாசுரங்களில். அள்ளியெடுக்கத்தான் ஆசை வேண்டும்.

எல்லே இளங்கிளியே – பெண்கள் கூட்டமாக வந்துவிட்டோம்!

அனைவரையும் காண ஆசைப்பட்ட தோழிப்பெண் ஒருத்தியை எழுப்புகிறாள்.

அனைத்துமே எழுப்பும் பாசுரங்கள்தான்.

நமது அறியாமை,அலட்சியம்,காணும் வாழ்வின் சுகங்களே நிதர்சனம் என்று எண்ணிக்கொள்ளும் மனப்பாங்கு போன்ற உறக்கங்களிலிருந்து எழுப்பும் பாசுரங்கள்.
அதனைச் சுவைப்பட அன்றைய காலக்கட்டத்தில் நிகழ்ந்தவைகள், வாழ்ந்த பறவை முதலிய உயிரனங்களை இணைத்து, நோன்பெனும் கடமையை செய்வோம் வாருங்கள் என அழைப்பது எத்தனை மகத்தான செயல்.

தான் மட்டும் கிடந்து உருகி,கண்ணனை அடையாமல் அனைவருக்கும் அவன் அருள் கிட்டவேண்டும் அனைவரும் அவனை அடைய வேண்டும் என நினைப்பது எத்தகைய பெருமையான செயல்!

எல்லோருக்கும் வாய்க்குமா இந்த மனம்!

முப்பது தமிழ் மாலை அவள் தந்த திருப்பாவை பெருமை பேசாமல் அவள் பக்தியை அறிய முடியுமா..தொடர்வோம்…

About இரா. குமார்

இரா. குமார்
சொற்கோயில் இணைய இதழின் ஆசிரியர். தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர், தினகரன் நாளிதழின் இணையாசிரியர் என முன்னணி நாளிதழ்களில் செய்திப்பிரிவின் உயர் பொறுப்பில் இருந்தவர். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

சிவன் விளையாடல் – 9

வேல் பெற்ற உக்கிர குமார பாண்டியன் பாரதத்தை புகழ்ந்து பாடும்போது, சுந்தரம் பிள்ளை நீரால் சூழப்பட்ட இந்த உலகிற்கு அழகு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன