முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / நா மணக்கும் நாச்சியார் தமிழ் -13

நா மணக்கும் நாச்சியார் தமிழ் -13

ஆண்டாள் வந்தாள்!
ஆழ்வார் திருமகளார் வந்தாள்!
சூடிக்கொடுத்தாள் வந்தாள்!
சுரும்பார் குழற்கோதை வந்தாள்!
திருப்பாவை பாடிய செல்வி வந்தாள்!
தென்னரங்கம் தொழும் தேசுடையாள் வந்தாள்!

சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் நம் கோதைப்பெண் சிறுமி, பாடவல்ல நாச்சியார் ஆகி இன்னிசையுடன் கூடிய முப்பது தமிழ் மாலையாகிய பாசுரங்களை நமக்காக பாடித் தந்தாள்.
இசைக்கு மயங்காத உயிர்கள் ஏது !

அவை ஆண்டுகள் கடந்தும் அழியாச் செல்வமாக இல்லந்தோறும்,ஆலயங்கள் தோறும் ஒலிப்பது அதன் சிறப்பு.

கோதையின் பக்தியை மிஞ்சியது அவளது சமூக அக்கறை. ,எளிமையான வேதத்தின் பொருளை அனைவரையும் சென்று சேரும் வகையில் தந்தவள் கோதை. இதற்குக் காரணம், பெரியாழ்வார் மற்ற உலகக் குழந்தைகளை வளர்ப்பது போல் பாலும் நெய்யும் மட்டும் ஊட்டி வளர்க்காமல் கண்ணனையே ஊட்டியதும், சுவாசமே கண்ணனாக இருந்த அவரது பக்தியுமே மூலம் எனலாம்.

இன்பத்தை மட்டுமே தரக்கூடியது; நாராயணன் சம்பந்தப்பட்டது; அவனுக்காகவே அவளது பாசுரங்கள் பாடப்பட்டது.

மாதங்களில் மார்கழி என்ற பகவத் கீதையில் கண்ணன் உரைத்ததையே முதல் பாடலின் துவக்கமாக கொண்டு ஆரம்பித்தவள், அனைவரையும் இணைத்துக்கொண்டு பறை என்ற பொருளில் ஆதியும் அந்தமுமில்லாதவனின் அருளை வேண்ட கற்றுத்தருகிறாள்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

காலங்களை ஆண்டவள் ஆண்டாள்.

விடியற்காலையில் நீராடு, தானங்களை கொடு!

நமக்காக மட்டுமே வாழாமல்..குறிப்பாக வாழ்க்கையின் சுக போகங்களில் மட்டுமே ஈடுபடாமல் அந்த மனதை திருமாலின் பக்கம் திருப்பத்தான் இரண்டாம் பாசுரத்தில் சொல்கிறாள்.

கர்ம பூமி இந்த பூலோகம்..இங்கு கர்மங்களை சிறப்பாக செய்யவேண்டுமென்பதையே…

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்கு(ச்)
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பைய(த்) துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை(ச்) சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம்பாவாய.

மூன்றாவது பாசுரத்தில், ஓங்கி உலகளந்த உத்தமர்தம் பேர் பாடி,என வாமன அவதாரத்தின் மூன்றடிகளால் உலகை அளந்த பெருமானின் சிறப்பை ஆள்கிறாள்.

எத்தனையோ நாராயணின் அவதாரங்கள் இருக்க, திரு விக்கிரமனை பாடவும் சிறப்பு உள்ளது.

பாற்கடல் நாதனின் பத்தினிகளுள் பூமிதேவியின் அம்சமாக உதித்தவள் கோதை!

வாமன அவதாரத்தில்,பெருமான் மூன்றடி மண் கேட்டவர் வளர்ந்து ஆகாசத்திற்கும், திருவடியை பிரமன் தொழ உயர்ந்தவர்.

அவரது திருவடி அழுத்தப்படும் போது பூமி தேவியும் மகிழ அந்த திருவடி சம்பந்தத்தை நினைத்துக்கொண்டவள் அவனது திருவடி சாட்சியாக தனது பாசுரத்தில் உலகளந்தவனின் புகழ் பாடுகிறாள்.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க* குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

இறைவனைச் சேர்வதே பெருஞ்செல்வம். அந்தச் செல்வத்தை அடைய உடல் தொழவும், ஆத்மார்த்தமாக வணங்கவும் அந்த பெருஞ்செல்வம் அடைவதற்கு விரோதமில்லாத சிறு சிறு செல்வங்கள் அவசியத் தேவை.

அவற்றையே கேட்டுப்பெறுவோம் என்கிறாள் கோதை.

சிறுமிகளாகிய தாங்கள் செய்யும் நோன்பினாலே இவ்வுலகிற்கு கிடைக்கவேண்டிய மாதத்திற்கு மூன்று முறை பொழிய வேண்டிய மழை பெய்திடும்.

அப்படி நன்கு பெய்வதால் உயர்ந்து, நன்கு பருத்த நெற்கதிர்களை கொண்ட வயலில்,பயிர்களின் நடுவே கயல்மீன்கள் துள்ளி விளையாடும்.

எங்கும் பச்சை பசேலென செழுமையான தாவரங்களை உண்டு, கொழுத்த பசுக்கள் அளவிலாத பால் தரும், அப்படியான பசுக்களின் மடி தரும் பால் குடங்களாக நிரம்பும். பஞ்சம் என்பதே இருக்காது, உயிர்கள் இன்ப நிலையில் வாழும், அனைத்து உயிர்களுக்கும் நிறைவான செல்வங்கள் நிறைந்திருக்கும் என்கிறாள்.
இதை விட சமுதாயம் நன்றாக இருக்கவேண்டுமென ஒரு சிறுமி கூறக் கேட்க முடியுமா?

ஆழிமழைக்கண்ணா.. பாசுரம் வருண தேவனை அழைத்து இராமரது சார்ங்கமென்னும் வில்லில் இருந்து புறப்படும் பாணங்களை போல் உலகத்தார் அனைவரும் வாழும்படியாகவும், நாங்களும் மகிழ மார்கழி நீராட வேண்டும் ஆகவே மழையை பொழிவாயாக என்கிறாள்.

ஒரு மனிதன் தனது செயல்களின் மூலம் தன்னை சுற்றியுள்ள ஜீவராசிகளுக்கும் உணவிடல் வேண்டும்.

முனிவர்களில் ஆரம்பித்து, தேவர்கள், இறைவன் வரை நமக்கான கடன்கள், நிறைவேற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. அவற்றை முறையாக செய்வதன் மூலமாகவே மாதம் முன்று முறை மழை நிறைவாக பொழியும் என்கிறாள் கோதை.

இந்த பாசுரம் மூலம் நமக்கான கடன்கள் அதனை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை சிறுமிகளை முன்னிட்டு நமக்கு சொல்கிறாள். அப்படி அழைக்கும் தோழிப்பெண்களில் ஒருத்தி கவலை எழுப்புகிறாள்.

“நாம் இப்படி நோன்பு நோற்க ஆரம்பித்திருக்கிறோம். பல பாவங்களை செய்திருக்கிறோம்.அதனால்..இந்த நோன்பு தடையின்றி நிகழ வேண்டுமே” என்ற அச்சத்தை ஆண்டாளிடம் தெரிவிக்கிறாள்.

அதற்காக வடமதுரை மைந்தனாகிய யமுனைத்துறைவன், கண்ணனை தூய்மையான மலர்களை கொண்டு பூஜித்து,வணங்கி, அவனை வாயாரப்பாடி,மனத்தினாலே தியானிக்க வேண்டும். அப்படிச் செய்தால் நாம் இத்தனை காலம் செய்த பாவங்கள், இனி செய்ய இருக்கும் பாவங்கள் அனைத்தும் தீயில் விழுந்த தூசியைப்போல அழிந்துப்போகும் என்ற உபாயத்தை தெரிவிக்கிறாள்.

இந்த பாசுரமே ’மாயனை மன்னு வட மதுரை மைந்தனை’ என்பதாகும்.

இப்படி முதல் ஐந்து பாடல்களில் கண்ணனை எப்படி வழிபடவேண்டும் வழிபட்டால் கிடைக்கக் கூடிய பலன்களையும் கூறிய ஆண்டாள் அடுத்து வரும் பாசுரங்களில் கண்ணனை வழிபடுவதால் வரும் இந்த அனுபவத்தைப் பெற தன்னைச் சுற்றியுள்ள சிறுமிகளும் பெற, எழுப்புகிறார்கள்.
அவை…இனி..தொடர்வோம்..!!

About சுமிதா ரமேஷ்

சுமிதா ரமேஷ்
திருச்சியைச்சேர்ந்தவர். அரபு நாட்டில் வசிக்கிறார். கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு சிறிது காலம் ஆசிரியப் பணியில் இருந்தார். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

சிவன் விளையாடல் – 9

வேல் பெற்ற உக்கிர குமார பாண்டியன் பாரதத்தை புகழ்ந்து பாடும்போது, சுந்தரம் பிள்ளை நீரால் சூழப்பட்ட இந்த உலகிற்கு அழகு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன