முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / நா மணக்கும் நாச்சியார் தமிழ் – 10

நா மணக்கும் நாச்சியார் தமிழ் – 10

சூடிக்கொடுத்த சுடர்கொடியே ! தொல்பாவை
பாடியருள வல்லபல் வளையாய் – நாடி நீ
வேங்கடவற்கு என்னைவிதியென்ற இம்மாற்றம்
நாங்கடவாவண்ணமே நல்கு !

சூடிக்கொடுத்த சுடர்கொடியே !!
கோதையின் திருப்பெயர்களில் ஒன்று !

பரமனுக்கு அபச்சாரம் நேர்ந்துவிடுமோ என்று முகத்தை மறைத்துக்கொண்டு வண்டுகள் அமர்ந்து எச்சில்படுத்தும் முன் பூக்களைக் கொய்து மாலையாக்கி அதை தனது தொண்டாக செய்துவந்தவர் பெரியாழ்வார்! அதற்கு தான் வளர்த்த ஒப்பில்லா மகளாலே ஒரு குறை வருமென அவர் கனவிலும் கண்டிருக்கவில்லை.

வந்ததே !!

கண்ணனின் பிரேமை, காதலில் கசிந்துருகி, காணும் பொருளிலெல்லாம் கண்ணனையே கண்டவள் மாலவனை பூக்களிலும், மேகங்களிலும், பாக்களிலும், நாதங்களிலும் காண எண்ணி ஏங்க ஆரம்பித்திருந்தாள் கோதை!

மூச்சு பேச்சு என மாயவனின் மாயையில் மூழ்கியிருந்தவளுக்கு அவனுக்கு செய்யும் அலங்காரங்களில் மயங்கி… தான் அவனுக்கு பொருத்தமானவள் தானா என்ற கேள்வியும் மேலோங்கியது !

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

அலங்கரித்துக்கொள்வதே அலர்மேல்வல்லி நாயகனுக்காக என்ற போதிலும் ஒருவேளை தன் அலங்காரம் அவனை ஈர்க்கலையோ! அவனுக்கு, தான் ஈடில்லையோ என்ற எண்ணம் கண நேரம் தாக்கினாலும், புயல் காற்றினை சுவாசித்த மல்லிக்கொடி போல் துவண்டு விழுந்தாள்.

மாலையினால் வடபத்ரசாயி அழகா..! அவன் அழகால் மாலைகள் அழகுறுகின்றனவா என்ற வாக்குமன்றத்தை அவனிடமே தினம் வைப்பவள், அந்த மாலையை தான் அணிந்துக்கொண்டாலும் அதே அழகு கிட்டுமா என்ற ஆசையும் அழுத்திப் பார்க்கப்பெற்றாள் !

பின்னே அரங்கனும் அவனது லீலையை, அவள்பால் அவன் கொண்டிருந்த காதலை உலகிற்கு சொல்ல காலம் பார்த்திருந்தான்.

ஒரு நாள் வழக்கம் போல பூத்தொடுத்து மாலைகளாக்கி வைத்து விட்டு தனது நித்திய கடமைகளான கண்ணனுக்கான பூஜைகளை செய்வதில் பெரியாழ்வார் ஆழ்ந்திருந்தார்.

அந்த மாலைகள், கோதை தன்னை ஏந்தமாட்டாளா என்று காத்திருந்தன, பூமகளின் பிள்ளைகள் அல்லவா அவை வளர்ந்த பூச்செடிகள்?!

அவர்களது தலைமுறை பிரார்த்தனைகளின் பலனாக கோதையின் நாட்டம் மாலைகளின் மேல் சென்றது.

அன்றும் வழக்கம்போல அலங்கரித்துக்கொண்டவள் கார்முகில் வண்ணனுக்கு தான் பொருத்தமானவள் தானா என்று பார்க்க அவனுக்காக வைத்திருந்த மாலைகளை அணிந்துக்கொண்டு அழகு பார்க்க ஆசைப்பட்டு, தொடுத்து வைத்திருந்த மாலைகளுடன் புஷ்ப அலங்கார பூஷிதையாக தனது இல்லத்தில் இருந்தகிணற்று நீரில் எட்டிப் பார்த்தாள்.அந்தக் கண்ணாடிக்கிணறு பெரும்பேறு பெற்றதாக மகிழ்ந்தது.

நான் அவனுக்கு பொருத்தமானவளா..என்று நீரிடம் கேட்பது போலிருந்தது. பஞ்சபூதமும் கட்டுப்பட்டவை அந்த பாஞ்ச சன்னியனுக்கு, இல்லை என்றா கூறிவிடும், அசையாமல் கிணற்று நீர் மயங்கி அவளையே பார்த்திருந்தது.
மெய்மறந்தாள் பூங்கோதை!

”அச்சோ… தந்தை பூ எடுத்துக்கொண்டு வடபெருங்கோயிலுடையானின் திருக்கோயிலுக்கு செல்லும் நேரமாயிற்றே!” என்று உணர்ந்தவள் மீண்டும் அந்த மாலைகளை முன்பு போலவே அவிழ்ந்து வைத்துவிட்டாள் பூக்குடலைக்குள் !
(அவள் அழகு பார்த்த கிணறு, இன்றும் ஆண்டாள் திருக்கோயிலில் உள்ளது).

இந்த சூடிக்களையும் நிகழ்வு பெரியாழ்வார் அறியா வண்ணம் தினமும் நிகழ ஆரம்பித்திருந்தது.

அறியா ஆழ்வாரும், தினந்தோறும் மாலை சமர்ப்பிக்க, வடபத்ரசாயியின் திருமேனியின் மேல் சாற்றப்பட்ட மாலைகளில் தனி நறுமணம் கமழ, திருமேனி பேரழகுடன் திகழ அங்கு திரு சம்பந்தம் நிகழ்வதை அறியா பக்தர்களும் அர்ச்சகர்களும் இது பெரியாழ்வார் தொண்டின் சிறப்பு என பேசிக்கொள்ள ஆரம்பித்திருந்தனர்.

அன்றும், கோதை வழக்கம்போல தான் அணிந்து, கண்ணாடிக்கிணற்றில் அழகு பார்த்த மாலைகளை அவசர அவசரமாக பூக்குடலைக்குள் வைக்க, எதிர்பாராதவிதமாக பெரியாழ்வார் கண்ணுற்றுவிட, திகைத்து நின்றார்.

என்ன சொல்வது, ஏது செய்வதென்று அறியாதவண்ணம் பெரிதும் வருத்தம் பீடிக்க, “கோதாய்! என்ன காரியம் செய்யத் துணிந்தாய்? இப்படி எம்பெருமானுக்கு அபச்சாரம் செய்யலாகுமா ? இனியும் இப்படி செய்ய நினைக்காதேம்மா” என்று அழுகையுடன் தழுதழுக்கக்கூறினார். எம்பெருமானே! குழந்தை,அபச்சாரம் செய்துவிட்டாள் ! மன்னித்தருள வேண்டும் !என்று பிரார்த்திக்கலானார். பெண்ணிற்கு நற்புத்திகளை கூறலானார்.

அன்று எம்பெருமானுக்கு மாலை சாற்ற முடியாதபடி மகள் செய்துவிட்டாளே,மானுடர் அணிந்து களைந்த மாலையை மாலவனுக்கு சாற்றுவதா?! அது மிகப்பெரிய அபச்சாரம் ஆச்சே என்று பிதற்றி வருந்தினார்.

அன்று மாலைகளை வடபத்ரசாயி பெருமானுக்கு சமர்பிக்கவில்லை, அர்ச்சகர்களும் என்னாயிற்று இன்று என்று எண்ணியவர்கள், வந்து விசாரித்து அறிந்து, வருத்தமுற்றவர்கள், சின்னக் குழந்தைதானே கோதை என்று அவருக்கு சமாதானம் கூறிச் சென்றனர்.

மனம் மிகவருந்தியவர், மறு நாள் காலை நல்ல விதமாக பூத்தொண்டினை செய்து, சமர்ப்பித்து வடபத்ரசாயியின் மன்னிப்பைப் பெற்றருள வேண்டும் என எண்ணிக்கொண்டு உறங்கலானார்.

கோதையும் அப்பா கடிந்துவிட்டதால் துவண்டிருந்தாள், தான் செய்ததில் என்ன தவறு? அவனுக்கே தன்னை அர்ப்பணிக்க இருக்க, அந்த மாலைகளை அணிந்ததா தவறு என்று எண்ணி, இன்னமும் எத்தனை நாள் இந்தப் பிரிவு மாதவா ! என்று காதலில் சித்தத்தில் ஆழ்ந்திருந்தாள்.

அன்றிரவு, பெரியாழ்வார் கனவில் தோன்றினார் வடபெருங்கோயிலுடையான்!
“இன்று நீர் நமக்கு மாலை கொண்டு வராதது ஏன்? ” என்று கேட்க, ஆழ்வாரும் தனது மகளின் செய்கையை தெரிவித்து மன்னிக்க வேண்டினார்.

அதைக் கேட்ட எம்பெருமான், “அவள் சூடிக்கொடுத்த மாலைகள் மிகுந்த நறுமணமுள்ளதாகவும், எமக்கு மிகவும் உவப்பானதாகவும் உள்ளது! ஆகையால் இனி நாள்தோறும் கோதை சூடிக் களைந்த மாலைகளையே நமக்கு சாற்ற கொண்டு வருவீராக” என்று ஆணையிட்டார்!

துயில் கலைந்த ஆழ்வார்..கனவில் தோன்றிய இறைவனின் கருணையை எண்ணி கண்ணீர் சொரிந்தார்.
“ஆஹா..! எம்பெருமான் விரும்பும் கோதையை பெற்றவன் ஆனேனே !! என்னே என் மகள் கோதையின் பக்தி,காதல்!!” பெருமைகளை போற்றி மகிழ்ந்துப்போனார் ஆழ்வார்.

“அம்மா..கோதாய்! நீ சூடிக்களையும் மாலைகளையே எம்பெருமான் சாற்றிக்கொள்ள விரும்புகிறார்! நீ என்னை மட்டுமல்லாது, இந்த ஊர், உலகத்தாரை மட்டுமல்லாது, அந்த சர்வேஸ்வரனையே பரமனையே ஆட்கொண்டு விட்டாய்” என்று மெய்சிலிர்க்க, தாரைதாரையாக ஆனந்தத்தில் கண்ணீர் வழிய, இனி நீ, “ஆண்டாள்” “சூடிக்கொடுத்த சுடர்கொடி” ம்மா..என்று அழைத்தார்.

அதனை ஊர் மக்களும், கனவில், இறைவன் கூறியதை அறிந்த திருக்கோயில் அடியவர்களும்..ஆஹா.. என்னே நம் கோதை பெற்ற பேறு! நம் சூடா..சுடர்க்கொடியே!! ஆண்டாளே!! என்று கோஷித்து…கோதையை வணங்கினர் !

பெரியாழ்வார் பெற்ற பெண் பிள்ளையின் புகழைப்பாடினர் !

இன்னமும் அவள் புகழ் பரவுவதை சயனித்த அரங்கன் மிக ரசித்தான் !!

அவளது முப்பது தமிழ்மாலைகளுக்கான வேளை வந்துவிட்டதை எண்ணி புன்முறுவல் செய்தான் !
சுடர்க்கொடி, கூடியிருந்து குளிர்ந்தது எங்கனம் …?!

About சுமிதா ரமேஷ்

சுமிதா ரமேஷ்
திருச்சியைச்சேர்ந்தவர். அரபு நாட்டில் வசிக்கிறார். கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு சிறிது காலம் ஆசிரியப் பணியில் இருந்தார். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

நா மணக்கும் நாச்சியார் தமிழ் – 12

அன்னவயற் புதுவை யாண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவை பல்பதியம் – இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை சூடிக் கொடுத்தாளைச் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன