முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / கொட்டாய் ! பல்லிக் குட்டி ! பாசுரம் 22!

கொட்டாய் ! பல்லிக் குட்டி ! பாசுரம் 22!

பல்லி, முதுகுநாணிகள் தொகுப்பில், முதுகு எலும்பிகள் துணத் தொகுதியில், நான்காலிகள் என்ற பெரு வகுப்பில், ஊர்வன துணை வகுப்பில் உள்ள ஜந்து. ஊர்வனவற்றில் ஒலி எழுப்பும் திறம் உள்ளது இது ஒன்றே.

பல்லி தொடர்பான ஏராளமான நம்பிக்கைகள் பண்டையத் தமிழ்ர்களுக்கு இருந்தன. இன்றளவும் தொடர்கிறது. ‘பல்லி, தலையிலே விழுந்துட்டது பாட்டி !ரொம்பக் கவலையா இருக்கு பாட்டி !’ என்றான் கோவிந்து. ‘எங்கேடா விழுந்தது ? ‘ எனப் பாட்டி வினவ முன் தலையைத் தொட்டுக் காட்டினான். ‘நெத்தியிலே தானே விழுந்திருக்கு ! எல்லாம் நல்லதுதான் நடக்கும் போடா ! முதல்ல இன்பெக்ஷன் ஆகாமே தலையை ஷாம்பு போட்டுக் கழுவு !’ என்று அவனை முடுக்கினாள். பல்லி விழும் பலன் ‘கொளி சாஸ்திரம் என்று தனிப் பிரிவாக இன்றும் இருக்கிறது.

பல்லியின் குரலை நல்ல சகுனமாக எடுத்துக் கொள்வது பண்டையத் தமிழர் மரபு. தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவி, பல்லியின் நிமித்ததைக் கேட்டு, மகிழ்ந்து பல்லியைத் தொழுவாள் !

‘ உள்ளு தொறு படூம் பல்லி

புள்ளுத் தொழுது உறைவி செவிமுதலானே ! ’ (351)

இதைக் கோடிட்டு சுவriலும் குறித்து வைப்பாள் ! தலவன் வரும் நாளைக் கணக்கிடுவாள் !

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

பாமரமக்கள் அல்லாமல் பெரிய அரசர்களும் பல்லி சொல்லுக்குத் தலை வணங்கினார்கள்.பெரிய முகப்படாம் அணிந்த ராட்சச யானைமீது பவனிவரும் அரசன் பல்லி தடை செய்தால் சட்டென்று யானையைவிட்டு இறங்கி பயணத்தை தவிர்த்திடுவான்.

நிரைநிலை நடுகல் பொருந்தி இமையாது

இரைநசை இக்கிடந்த முதுவாய்ப்பல்லி

சிறிய தெற்றுவது ஆயின் பெரிய

ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும்

நின்றாங்கு பெயரும் கானம் (387)

ஒரு கிழட்டுப்பல்லியின் சிறிய தெற்றுதலுக்கு எவ்வளவு எபெக்ட் பாருங்கள் !

காஞ்சிபுரம் வரதராஜர் திருக்கோயிலில், வெள்ளி,தங்கப் பல்லிகளாக இரண்டு கந்தர்வர்கள் இன்றும் அருள் பாலிக்கின்றனர். ஸ்ரீரங்கத்தில் பெருமாளைத் தரிசித்தபின், சுவரில் இருக்கும் பல்லிச் சித்திரத்தை சேவிப்பது ஒரு மரபாகக் கொள்ளப்படுகிறது.

இத்தகைய புகழ் பெற்ற பல்லியைப் பற்றி பிரபந்தம் என்ன சொல்கிறது. இரட்டைப் பாசுரங்கள் என்று சொல்லப்படும் அளவிற்கு இரண்டு பாசுரங்கள் உள்ளன. ஒன்றுக்கு வியாக்கியானம் பண்ணும் பொழுது அடுத்ததை கண்டிப்பாகக் குறிப்பிடுவர். முதலாவது நம்மாழ்வாரின் திருவிருத்தத்தில் வருகிறது. நம்மாழ்வார், பாசுரத்தின் ஈற்றடிகளில்

‘திருமா லவன்கவி யாது கற்றேன் பல்லியின் சொல்லும்

சொல் லாக் கொள்வதோ உண்டு பண்டு பண்டே,’ (2525)

என்று முடிக்கிறார். நான் ஒன்றும் கற்கவிலை; என்னைக்கொண்டுத் தன்னைப் பாடவைத்தான் அவன். பல்லி வரும் பொருள் உரைத்தார்ப் போலதான் என் நிலையும் என்று கழிவிரக்கம் கொள்கிறார் ஆழ்வார்.

இரண்டாவது பாசுரம் திருமங்கை ஆழ்வாரால் பாடப் பெற்றது. தலைவி கூற்றாக வரும் இப்பாசுத்தில்,தலைவி ‘திருத்தாய் செம்போத்தே ! என , அன்புடன், செம்போத்துப் பறவையை வலமாக வந்து பெருமாள் வர நல்ல சகுனம் தர வேண்டுகிறாள். முறையே காக்கை , குயில், பைங்கிளி, கோழி போன்றவற்றை அழைத்து தன் தலைவன் – பெருமாள் வரும்படிக் கரைய, கூவச், சொல்லக் கூறுகிறாள். இப்படியே ‘கொட்டாய் பல்லிக்குட்டி என்று அன்புடன் வேண்டுகிறாள்.

பல்லிக்குட்டி பற்றி ஒரு ஐதீகம் உண்டு. அது உணவு ஏதும் உட் கொள்ளாது. தாய்ப் பல்லியின் பார்வையே அதற்கு உணவாகும். !

கொட்டாய் பல்லிக்குட்டி,

குடமாடி யுலகளந்த,

மட்டார் பூங்குழல் மாதவ னைவரக்,

கொட்டாய் பல்லிக்குட்டி.

பத்தாம் திரு மொழி (1945)

ஓ பல்லிக்குட்டி! குடக் கூத்தாடினவனும் தேன் பொருந்திய, பூக்களுடன் கூடிய மாலை அணிந்த திருக்குழற்கற்றையை உடையவனும் திருமகள் கொழுநனுமான எம் பெருமானை இங்கே வருமாறு ஒலிசெய் ! பல்லிக்குட்டி கொட்டாய் !

பல்லி தானாகவே ஒலி எழுப்பி பெருமாள் வரவை ஊஹிக்க வைக்கப் பொருக்காது, நீ ஒலி எழுப்பி பெருமாளை வரப் பண்ணுவாய் என வேண்டுகிறாள் பரகால நாயகி !

ஆழ்வார் திருவடிகளே சரணம் !

About டாக்டர் லக்‌ஷ்மிநரசிம்மன்

டாக்டர் லக்‌ஷ்மிநரசிம்மன்
நரம்பியல் நிபுணரான இவர், சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள நரம்பியல் துறையின் இயக்குனராகப் பதவி வகிக்கிறார். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

சிவன் விளையாடல் – 9

வேல் பெற்ற உக்கிர குமார பாண்டியன் பாரதத்தை புகழ்ந்து பாடும்போது, சுந்தரம் பிள்ளை நீரால் சூழப்பட்ட இந்த உலகிற்கு அழகு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன