இசை வழிபாடு – 7

ஆறுமுகனைப் பற்றிய அரியதகவல்கள் பலவும் இடம்பெற்ற பாடல் இது. ஒவ்வொன்றாக அனுபவிக்கலாம்.

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருச்செந்தூரிலே வேலாடும் உன்
திருப்புகழ் பாடியே கடலாடும்
பழனியிலே இருக்கும் கந்தப்பழம் நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப்பழம்
பழமுதிர்சோலையில் முதிர்ந்த பழம்
பக்தி பசியோடு வருவோர்க்கு ஞானப்பழம்
சிறப்புடனே கந்தக்கோட்டமுண்டு உன்
சிங்கார மயிலாட தோட்டமுண்டு
உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை அங்கு
உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை

பாடலின் தொடக்கமே ‘திருப்பரங்குன்றம்’ என, மங்கலகரமாகத் தொடங்குகிறது. திருப்பரங்குன்றம் என்றதும் அங்கு நடந்த தெய்வானைத் திருமணம்தான் நினைவு வரும். அதுசரி! தெய்வானைத் திருமணம் நினைவுக்கு வந்ததாகவே இருக்கட்டும். அங்கு முருகன் சிரித்தால், அது ஏன் திருத்தணியில் எதிரொலிக்க வேண்டும்? திருப்பரங்குன்றத்திற்கும் திருத்தணிக்கும் என்ன சம்பந்தம்?

திருப்பரங்குன்றத்தில் நடந்த திருமணம், தேடிவந்த திருமணம். ஆம்! தெய்வானை முருகனைத் தேடித்தான் வந்தாள்; முருகன் தெய்வானையைத் தேடிப் போகவில்லை.

“தெய்வானை நீ என்னைத்தேடிவந்து திருமணம் புரிந்தாய். ஆனால் நானோ, தேடிப்போய் வள்ளியை மணம் புரியப்போகிறேன். அவள் வலப்புறமும் நீ இடப்புறமுமாக, திருத்தணியில் எழுந்தருள்வேன்” என்று சிரிக்கிறாராம்; திருப்பரங்குன்றத்தில் சிரித்த சிரிப்பு, திருத்தணியில் எதிரொலித்த வரலாறு இது. வள்ளியின் தூய்மையான கள்ளங்கபடமற்ற பக்தியை வெளிப்படுத்தும் வரிகள் இவை. அடுத்து…

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

இவ்வாறு இரு படைவீடுகளை நம் நினைவில் நிழலாடும்படியாகச் செய்த பாடல், அடுத்தவரியில் திருச்செந்தூரை நம் நினைவிற்குக்கொண்டு வருகிறது.
திருச்செந்தூரிலே வேலாடும்- திருச்செந்தூா் என்றதும்,

அங்கு நிகழும் சூரசங்கார விழாதான் நினைவில் எழும். அது ஏதோ ஒரு நிகழ்வல்ல! மாமர வடிவாக வந்த சூரனை முருகன் வேலால் இரு கூறுகளாகப் பிளக்க, சூரன் சேவலும் மயிலுமாக வந்தான்; கொடியும் வாகனமுமாகவும் ஆனான். வேலாடும் வைபவம், ஆணவத்தை நீக்கி ஆறுமுகன் நமக்கு அருள்புரிவதைக் குறிப்பது. அடுத்து…

திருப்புகழ் பாடியே கடலாடும்- இங்கே கடல் என்பது, அலையைக் குறிக்கும். கடலில் அலை வீசுமே தவிர, ஆடாது. பிறகு ஏன் இவ்வாறு குறிப்பிட வேண்டும்?” என் பக்தர்களைப் பிறவிப் பெருங்கடலில் இருந்துகாப்பவன் நான்- என்பதை விளக்கவே கடற்கரையோரமாக இங்கே எழுந்தருளியிருக்கிறாய்” என ஸ்ரீஆதிசங்கரா், சுப்பரமண்ய புஜங்கத்தில் கூறுகிறார். இதை நிரூபிப்பதுபோல…

மற்ற இடங்களில் வீசுவதைப் போல, கடலலைகள், திருச்செந்தூரில் வீசாது. வரும் அலைகள் அப்படியே மென்மையாகி, ஆடியபடியே கரையை அடையுமே தவிர, ஆா்ப்பாட்டமாகச் சீறிவந்து விழாது.

ஆணவ நீக்கத்தைக் குறிப்பதுடன், பிறவிப் பெருங்கடலில் இருந்து காப்பவன் ‘பன்னிருகை பரமன்’ என்பதையும் பதிவு செய்யும் வரிகள் இவை. பாடலின் முதற்பகுதியில் இவ்வாறு, மூன்று படைவீடுகளைப் பதிவிட்ட பாடல், அடுத்த பகுதியில் இரண்டு படைவீடுகளைப் பதிவிடுகிறது.
பழனியையும் பழமுதிர்சோலையையும் பாடிய பிறகு, மூன்றாம் பகுதியில் முருகனின் அற்புதமான திருத்தலம் குறிப்பிடப்படுகிறது. அது, கந்தக்கோட்டம்.

திருப்போரூரில் இருந்து கணபதி பண்டாரம்-மாரி செட்டியார் என்பவா்களால் கொண்டுவரப்பெற்ற அருள்வடிவம்; ‘விடிவதற்குள் இதைக் கொண்டுபோய்ப் பிரதிஷ்டை செய்யுங்கள்!” என, திருமயிலை கபாலீசுவரரால் ஏவப்பட்டு பிரதிஷ்டையான வடிவம்; வள்ளலாரால் தரிசிக்கப்பட்டு ‘ஒருமையுடன்’ எனத்தொடங்கும் தெய்வ மணிமாலையைப் பெற்ற திருத்தலம்; முருகனை நேருக்கு நேராகத் தரிசித்த வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பிள்ளைத் தமிழ் பாடி அரங்கேற்றியபோது, முருகனே குழந்தை வடிவில் எழுந்தருளி விளையாடி,பிள்ளைத்தமிழ் நூலுக்கு அங்கீகாரம் கொடுத்த திருத்தலம்; மகான்கள் பலராலும் தரிசிக்கப்பட்ட, பாடப்பட்ட திருத்தலம் கந்தக்கோட்டம்.

பல சூட்சுமங்களைச் சொன்ன இப்பாடலில்; சுவாமி மலை இடம்பெறவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

குருமார்கள் பலராலும் துதிக்கப்பட்ட கந்தக்கோட்ட முருகனை; பிரணவ உபதேசம் பெற்ற சிவபெருமானே பிரதிஷ்டைசெய்யச் சொன்ன திருத்தலமானதால், சுவாமிமலைக்குப் பதிலாகக் கந்தக்கோட்டம் எனும் திருத்தலத்தைச் சொல்லி, பாடல் நிறைவுபெறுகிறது.
நிறைவு பெறும்போது, முருகனை மனக்கோயிலில் இடம்பெறச் செய்து, அன்புக்குப் பஞ்சமில்லை என முடிகிறது.

அன்புக்குப் பஞ்சமில்லா வாழ்வை ஆறுமுகன் அருள
வேண்டுவோம்! கவலைகளை கந்தப்பெருமான் நீக்கட்டும்!

About பி.என்.பரசுராமன்

பி.என்.பரசுராமன்
பி.என்.பி. என்று சொன்னால், ஆன்மீக உலகத்தில் அறியாதவர்கள் இருக்க முடியாது. பல ஆன்மீக இலக்கியங்களில் ஆழங்கால் பட்டவர். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

சிவன் விளையாடல் – 9

வேல் பெற்ற உக்கிர குமார பாண்டியன் பாரதத்தை புகழ்ந்து பாடும்போது, சுந்தரம் பிள்ளை நீரால் சூழப்பட்ட இந்த உலகிற்கு அழகு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன