முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / அனுமன் சொன்ன அடையாளங்கள் !-பாசுரம் -25

அனுமன் சொன்ன அடையாளங்கள் !-பாசுரம் -25

நல்ல தூதுவரின் குணங்களாக அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல்வன்மை ஆகிய மூன்று பண்புகளைக் குறிப்பிடுகிறார் வள்ளுவப் பெருந்தகை. இந்த மூன்றையும் ஒருங்கே பெற்றவர் சிறிய திருவடியான அனுமன். மரத்திலிருந்து குதித்து, அனுமன் சீதையின் முன் நின்றபோது, அனுமனை வேடம் பூண்ட இராவணனாக சந்தேகித்தாள் சீதை .
இந்த நிலையில், குழம்பிய மனத்தினளான சீதைக்கு, அனுமன் நம்பிக்கை ஊட்டுவத்றகாக, சொன்ன எட்டு அடையாங்களை பெரியாழ்வார் மூன்றாம் திருமொழி, பத்தாம் பத்தில் பத்து பாசுரங்களில் பதிவு செய்கிறார். முதல் எட்டுப் பாசுரங்கள் எட்டு அடையாளங்களை விவரிக்கின்றன. ஒன்பதாவது பாசுரம் மோதிரத்தைக் கையில் வாங்கிய சீதையின் நிலையைக் கூறுகிறது. பத்தாவது பாசுரம் பலஸ்ருதி !

ஒவ்வொரு அடையாளமாகப் பார்ப்போம்.

இராமபிரான் பிராட்டியை மணம்புரிந்து திரும்புகையில்,, இடை வழியில் பரசுராமனை வென்று விஷ்ணு தனுஸினால் கொடுக்கப்பட்ட பரசுராமன் தவ வலிமையைச் சிதைத்ததை முதல் அடையாளமாகக் கூறுகிறார்.

இரண்டாவது அடையாளம் அந்தரங்கமானது. இராமனும் சீதையும் மட்டும் அறிந்தது. அயோத்தியில், இரவில், இராமனோடு தனித்திருக்கையில், சீதை இராமனை மல்லிகை மாலையால், கட்டிப் போட்ட காதல் விளையாட்டு நிகழ்வை , ‘மல்லிகை மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓரடையாளம் ‘ என்று பணிவோடு பதிவு செய்கிறார் அனுமன்.

மந்தரை எனும் கூனி சொற்கேட்டு, கைகேகி, ,தசரதன், முன்னிலையில் சுமந்திரனை அழைத்து, இராமனை கூப்பிட்டு வரப் பண்ணி, அவள் உத்தரவின் படி, இலக்குவனோடும், உம்மோடும், இராகவன் காட்டிற்கு ‘ஏகியது ஓர் அடையாளம்’ என்று தொடர்கிறார் அனுமன்.

அயோத்தி நீங்கி இராமபிரான் மனைவியுடனும் தம்பியுடனும் கங்கைத் துறை சேர்ந்தான்., கங்கையில் ஓடம் விடுபவனும், ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவனுமான, , வேடர் தலைவன் குகன், இராமனைக் காணும்பொருட்டுக் காணிக்கைகளுடன் வந்து, தொழுதேத்தி நின்றான். அவனது தொண்டு உள்ளத்தைக் கண்டு மகிழ்ந்து ‘நால்வரோடு ஐவரானோம் !, என்தம்பி உன் தம்பி !’ என்று பலவாறாகச் சொல்லி , ‘ஏழை,ஏதலன், கீழ்மகன்’ என்று எண்ணாது குகனோடு தோழமை பூண்ட இராமனின் செளலப்பிய குணத்தைப் பறை சாற்றும் நிகழ்வு ஓர் அடையாளம்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

அடுத்த அடையாளம், வனவாசத்தி்போது, சித்திரகூடத்தில், இராமனும் சீதையும் தனித்திருந்தபோது நடந்த நிகழ்வு.,இராமன் தருப்பைப் புல்லை பிரும்மாஸ்திரமாக எய்து, காகாசுரனின் ஒரு கண்ணைக் கொய்த வரலாறு.இது வால்மீகத்தில் சீதாப் பிராட்டி அனுமனுக்குச் சொல்வதாக அமைகிறது. இங்கு அனுமன் சீதைக்குச் சொன்ன அடையாளமாகப் பெரியாழ்வார் ‘அத்திரமே அதன்கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம்.’ என்று குறிக்கிறார். இந்த மாறுபாடு கல்ப, புராண வித்தியாசங்களால் உண்டானது என்று கொள்ளுமாறு ஆன்றோர் பணிப்பர் !

அடுத்த அடையாளம் இராமன் மாரிச மானைத் தேடிச் செல்ல, சீதையின் ஏவுதலால், இலக்குவனும், சீதையைத் தனியே விட்டு விட்டு இராமனைத் தேடிச் சென்ற நிகழ்ச்சி. ‘பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம்’ என்று கண்ணீர் மல்கிக் கை கூப்பிக் கூறுவார் அனுமன்.

இந்த அடையாளங்களை இராமன் சொல்லி அனுப்பியபடி அடியேன் கூறினேன்; மேலும் தனது பெயர் பொரித்த இந்த மோதிரத்தையும் கொடுத்து அருளினான் என்று, இராமபிரானுடைய திருவாழியை பிராட்டியின் கையில் இட்டு, தான் ராமதூதன் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி விளக்கினான் அனுமன் . செய்திகளைச் சீராகத் தொகுத்து, பயனில்லாதவற்றை நீக்கி, இனிய சொற்களால் மகிழும்படிச் சொல்லி நன்மையைச் செய்பவனே சிறந்த தூதன் என்று திருவள்ளுவர் .சுட்டிக் காட்டியதற்கு ஏற்ப நயம்படு வகையில் அனுமன் பேச்சு அமைகிறது.

மோதிரத்தைப் பெற்ற சிதையின் மெய்ப்பாடுகளைக் கம்பர் பரக்க விவரிப்பார்.

‘ வாங்கினள்.; முலைக் குவையில் வைத்தனள்; சிரத்தால்

தாங்கினள்; மலர்க் கண் மிசை ஒத்தினள்; தடம் தோள்

வீங்கினள்; மெலிந்தனள்; குளிர்ந்தனள்; வெதுப்போடு

ஏங்கினள்;உயிர்த்தனள்; இது இன்னது எனல் ஆமே

சீதை, தன் கையில் வாங்கிக் கொண்ட அந்த கணையாழியைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டு, ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்; தலைமேல் வைத்துக் கொண்டாள்; கண்ணிலே ஒற்றிக் கொண்டாள்; மகிழ்ந்தாள்,; உருகினாள்; உடல் பூரித்தாள் ;பெருமூச்சு விட்டாள். அடடா! இந்த காட்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லையே!

பெரியாழ்வார் எப்படிச் சொல்கிறார் ? ஒன்பதாவது பாசுரம் இதோ _

திக்குநிறை புகழாளன் தீவேள்விச் சென்றநாள்

மிக்கபெருஞ் சபைநடுவே வில்லிறுத்தான் மோதிரம்கண்டு

ஒக்குமால் அடையாளம் அனுமான்என்று உச்சிமேல்

வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர்க்குழலாள் சீதையுமே.

                                                                                                   -திருமொழி (326)

திக்கெட்டும் புகழ் பெற்ற ஜனகனது யாகத்தில் விசுவாமித்ரருடன் வந்து, ருத்ர தனுஸை முறித்த ஸ்ரீ இராமனின் கைவிரலில் திகழ்ந்த மோதிரம் கண்டு, சீதாப்பிராட்டி, அனுமனே ! நீ சொன்ன அடயாளளங்கள் மிகச் சரியானவை ! என்று பாராட்டி அந்த மோதிரத்தைத் தலைமீது வைத்துக் கொண்டு பூரித்தனள்.
சற்று கவனித்த்துப் பார்த்தால் ஆழ்வாரின் கடைசி வரியை , கம்பர் விரிவாக்கம் செய்தது புரியும்.

ஆழ்வார் திருவடிகளே சரணம் !

About டாக்டர் லக்‌ஷ்மிநரசிம்மன்

டாக்டர் லக்‌ஷ்மிநரசிம்மன்
நரம்பியல் நிபுணரான இவர், சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள நரம்பியல் துறையின் இயக்குனராகப் பதவி வகிக்கிறார். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

சிவன் விளையாடல் – 9

வேல் பெற்ற உக்கிர குமார பாண்டியன் பாரதத்தை புகழ்ந்து பாடும்போது, சுந்தரம் பிள்ளை நீரால் சூழப்பட்ட இந்த உலகிற்கு அழகு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன