சிவன் விளையாடல் – 3

மதுரையை ஆண்ட சுந்தரபாண்டியன்

மதுரையை ஆட்சி செய்யத்தொடங்கினாள் மீனாட்சி. ஆட்சி மாறியவுடன் மதுரையில் காட்சிகளும் மாறின. ஆம் மதுரையின் பேரரசியாக மீனாட்சி முடிசூட்டிக் கொண்ட பின்னர், மதுரையின் செல்வச் செழிப்பு பெருகியது. பேரும் புகழும் கொண்ட கடம்பவன நகரான மதுரை, சீரும் சிறப்பும் பெறத் தொடங்கியது. மதுரை மக்களின் வாழ்வு வளம் பெற்றது, வாக்கு நலம் உற்றது, மண் பலம் பெற்றது.

ஆயிரம் இருந்தாலும் பெண்ணாட்சிதானே! அது என்னாச்சு என்று யாரும் கேட்டுவிடக்கூடாது. அதுபோல பாண்டிய நாட்டின் அரசாட்சி வலிமையை யாரும் குறை சொல்லிவிடக்கூடாது, என்று நினைத்தாள் மீனாட்சி.

உடனடியாக எல்லாத் திசைகளிலும் திக் விஜயத்தைத் தொடங்கினாள் மீனாட்சி ( இந்த திக் விஜயத்தின்போதுதான் யாருமே எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது) படைகளை வழி நடத்தி பல நாடுகளுக்கும் சென்று ஆட்சியாளர்களைத் தோற்கடித்தாள். மீனாட்சியின் படைபலம் கண்டு பகைவர்கள் நடுங்கினர்.

மதுரை திரும்பும் வழியில் பரம்பொருள் உறையும் பனிமலை அடைந்தார். கைலாய மலையைக் கண்டதும் மீனாட்சிக்கு பரவசம். இறைவனைக் கண்டு தரிசிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டது. படைகளை எல்லாம் பாதியிலேயே நிறுத்திவிட்டு தனியாக கைலயங்கிரியை அடைந்தாள்.

மானசரோவரில் நீராடி, நமசிவாய மந்திரம் ஓதியபடி கைலை மலையை வலம் வந்து முடித்தபோது, அங்கு ஓர் அழகிய இளைஞனாக மீனாட்சி முன் தோன்றினார் பரம்பொருள்.
இளைஞனாக நின்ற இறைவனின் திருக்காட்சியைக் கண்டவுடன் மீனாட்சி. தன் மேனியெங்கும் பக்திப்பரவசம் நதியாகப் பிரவாகம் எடுத்து ஓடுவதை உணர்ந்தாள். இவனே தன் மணவாளன் என்று உள்ளுணர்வு உணர்த்தியது. தன்னை ஆட்கொள்ள வேண்டி அந்த காமேசுவரனின் காலடிகளில் விழுந்து வணங்கினாள் மீனாட்சி.

விழுந்து எழுந்தபோது, அங்கே இறைவன் தலையில் கங்கையையும், சந்திரனையும் தாங்கி, மானையும், மழுவையும் ஏந்திக் காட்சி தந்தார். அடி முடி இல்லா பெருமானின் திருவடி கண்டபோது, சொல்லில் சொல்ல முடியாத மகிழ்ச்சி மீனாட்சிக்கு. மதுரை வந்தவுடன் திருமண வேலைகள் ஜரூராகத் தொடங்கிவிட்டன. சுந்தரேசப் பெருமான் தனக்கு காட்சியளித்து ஆட்கொண்ட ஆனந்தம் மீனாட்சியை ஆக்கிரமித்திருந்தது.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

கைலாய மலையில் காமேசுவரானாக காட்சியளித்த இறைவன், மதுராபுரியில் கல்யாண சுந்தரேஸ்வரராக காட்சி தந்தார். பிரம்மன் ஹோமம் வளர்க்க, விஷ்ணு கன்னிகாதானம் செய்து தந்தார். விநாயகர், முருகப் பெருமான், தேவாதி தேவர்கள், வானவர்கள், முனிவர்கள், பலநாட்டு அரசர்கள், வாழ்த்தி வணங்க மூவுலகவாசிகளும் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருமணத்தைக் கண்டுகளித்தனர்.

பெற்றவர்களின் திருமணத்தை பார்க்கிற பாக்கியம் பெற்ற பிள்ளைகளானார்கள் விநாயகரும், முருகப் பெருமானும்.

திருமணத்தைத் தொடர்ந்து, உடனே பட்டாபிஷேகமும் நடந்தது. வேதத்தை சிம்மாசனம் ஆக்கிக்கொண்டு, அதே வேதத்தை செங்கோலும் ஆக்கிக் கொண்டு மனித உருவில் மதுரைப் பதியின் ஆட்சியில் அமர்ந்தார் பரம்பொருள்.

அண்ட சராசரங்களையும் ஆளும் பரம் பொருள் ஜடாமுடி இல்லாமல், முருகனைப் படைத்த நெற்றிக்கண் இல்லாமல், மானையும் மழுவையும் தாங்கும் கரங்கள் இல்லாமல் மனித வடிவத்தில் சுந்தர பாண்டிய மன்னனாக அரசாட்சி செய்யத் தொடங்கினார் இறைவன்.

யார் கண்ணுக்கும் புலப்படாமல் அங்கிங்கெனாதப்படி அருவமாய் அண்டசாரசரங்களை ஆளும் பரம்பொருள், மனித வடிவில் மதுரையை ஆட்சி புரியத் தொடங்கினார்.

திருக்கோயிலில் லிங்கப் பரம் பொருளாகவும், அரண்மனையில் அரசனாகவும் அருள்புரியும் ஆடல்வல்லானின் அற்புதத்தைக் கண்டு மக்கள் பேரானந்தம் கொண்டனர். இறைவனின் திருவிளையாடல்கள் எல்லாம் மக்களுக்கு ஆனந்தத்தை அள்ளித் தருவதற்குத்தானே!

கடவுள் வடிவத்தை மறைத்து மனித வடிவத்துடன் இறைவன் மதுரையை ஆட்சி செய்தது பற்றி சங்கப் புலவர் கல்லாடர் தனது கல்லாடம் என்ற நூலில் குறிப்பிடுகிறார். மேலும் இறைவன் அரசாண்ட செய்தியைக் குறிக்கும் வகையில் இன்றும் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் ஆவணி ஏழாம்நாள் திருவிழாவில் இறைவன் அபிஷேகச் சொக்கராக காட்சி அளிக்கறார்.

தொடரும்

About முனைவர். ஆதலையூர் சூரியகுமார்

Avatar

மேலும் படிக்கவும்

சிவன் விளையாடல் – 6

வைகை பிறந்ததும். . . மதுரை சிறந்ததும். . . தமிழகத்தில், ஏன் தென் இந்தியாவிலேயே பழமையான நகரம் என்று …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன