இசை வழிபாடு – 6

பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற
நிறைகின்ற பரிபூரணானந்தமே – என்பது தாயுமானவர்
சுவாமிகள் வாக்கு. நாம் பார்க்கும் இடங்களில் எல்லாம் சிறிதளவு கூட நீங்காமல், நிறைந்து இருக்கிறாராம் இறைவன். இது தாயுமானவர் சுவாமிகளின் அனுபவ வாக்கு .
நம்மால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தூய்மையான அறிவை, ஏதோ கொஞ்சம் படித்து, கலக்கிக் குழப்பிக் கொண்டிருக்கிறோமல்லவா? அதனால் வந்த வினை இது .

மகான் ஒருவர் ஆசிரமத்தில் உபதேசம் செய்து கொண்டிருந்தார். ‘தெய்வம் இல்லாத இடமில்லை; அதன் பார்வை படாத இடமில்லை’ என்றெல்லாம் விரிவாக உபதேசம் செய்து முடித்தார் . உணவு வேளை நெருங்கியது .
அன்பர் ஒருவர், இளைஞன் ஒருவனிடம் குடிக்க நீர் கேட்டார். அவன் உடனே அருகிலிருந்த கழிவறைக் குழாயிலிருந்து நீர் பிடித்துக் கொடுத்தான் .
அன்பர் திடுக்கிட்டார்; “எனனப்பா இது ? குடிநீர்க் குழாயில்
இருந்து தண்ணீர் பிடித்துத் தரக்கூடாதா?” எனக் கேட்டார் .

இளைஞன் உடனே, “என்ன சார் இது? இவ்வளவு நேரம் உபதேசம் கேட்டும் உங்க அறிவுல ஒரு தெளிவு வரலியே! குடிநீர் குழாயில வர்ற தண்ணியும் இந்தக் கழிவறைக் குழாயில வர்ற தண்ணியும் , மேலே உள்ள ஒரே டேங்க்ல இருந்துதானே வருது” என்று தன் ஞானத்தை வெளிப்படுத்தினான் .
அதிர்ந்து போன அன்பர், அங்கிருந்து உணவறையை நோக்கி நகர்ந்தார் .
நடந்தவற்றைச் சற்று தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த மகானும் உணவறையை நோக்கிச்சென்றார்.
அங்கே இளைஞன் முதல் இலையில் அமர்ந்திருந்தான்.
பரிமாறிக் கொண்டிருந்தார்கள். தயிர் கப் வைப்பவர் வந்து தயிர் கப்பை வைக்க முயன்றார் . அப்போது இளைஞன் இலையின் எதிரில் நின்ற மகான், ” இவனுக்கு இது வேண்டாம். நீ போ” என்று பரிமாறுபவரை அடுத்த இலைக்கு அனுப்பினார்.

பரிமாறுபவர் நகர்ந்ததும், மகான் தன் கையிலிருந்த சாண உருண்டையை இளைஞனின் இலை நடுவில் வைத்தார். திடுக்கிட்ட இளைஞன், “என்ன இது? தயிருக்குப் பதில் சாணத்தை வைக்கிறீா்களே!” எனக் கத்தினான்.
மகான் அமைதியாகப் பதில் சொன்னார் ; “என்னப்பா… நீயெல்லாம் ரொம்பப் படிச்சவன் .உனக்குத் தெரியாதா? தயிரா மாறும் பாலும் சாணமும் ஒரே மாட்டுகிட்ட இருந்துதானே வருது? இதுக்குப் போயி கோவிச்சுக்கிறியே!” என்றார்.


இளைஞனுக்கு அப்போதுதான் உறைத்தது; “தெய்வம் எல்லா இடங்களிலும் இருப்பதை உணா்வதுடன், அதை அனுபவத்தில் கொண்டு வர மிகுந்த பக்குவம் வேண்டும்” என உணர்ந்து கொண்டான் .

மின்சாரம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், அதைக் கொண்டு விஞ்ஞானிகள் பலவிதமான மின்சாதனங்களைத்
தயாரித்துத் தருகிறார்கள் ;நாம் பெறுகிறோமல்லவா? அதுபோல, தெய்வம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், அந்தத்
தெய்வத்தின் அருளை நாம் அடைய வேண்டுமென்பதற்காக
ஞானிகளும் மகான்களும் தங்கள் அனுபவங்களைப் பாடல்களாகவே எழுதி வைத்துள்ளார்கள் .
அந்த முறைப்படி, இதோ! பாணபத்திரா் எனும் சிவனடியார் தன் ஞான அனுபவத்தைப் பாடலாகவே வெளியிடுமுகமாகக் கண்ணதாசன் எழுதிய பாடல்…
.
இல்லாததொன்றில்லை எல்லாமும் நீயென்று
சொல்லாமல் சொல்லி வைத்தாய்
புல்லாகி பூண்டாகி புழுவாகி மரமாகி
புவியாகி வாழ வைத்தாய்
சொல்லாலும் மனத்தாலும்
சுடா் கொண்டு தொழுவோரை
மென்மேலும் உயர வைத்தாய்
கல்லான உருவமும் கனிவான உள்ளமும்
வடிவான சதுா்வேதனே.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

சிவபெருமானை நோக்கிப் பாடக்கூடிய பாடல்தான் இது. சிவன் சன்னிதியில் நின்று பாணபத்திரர் பாடக்கூடிய பாடலாகவே படக்காட்சியும் இடம் பெற்றுள்ளது . ஆனால் பாடலில் சிவனைப் பற்றிய பேச்சே இல்லை. . அது என்ன சூட்சுமம் என்பதைப் பாடலின் முடிவில் காணலாம் .
பாடலின் தொடக்கமே பரம்பொருளின் பரத்துவத்தைச்
சொல்லித் தொடங்குகிறது .
தெய்வம் எல்லாவற்றிலும் இருக்கிறது; அதைச் சொல்லால் சொல்லாமல், உணர்வு பூர்வமாக உணர்த்தவும் செய்கிறது . புல் பூண்டு என சகலவடிவாகவும் இருக்கும் பரம்பொருளே, பூமியாக இருந்து நம்மை வாழவும் வைக்கிறது .
இதை உணர்ந்து, மனம் மொழி மெய் ஆகியவற்றால் தெய்வத்தை வழிபடுபவர்களை, தெய்வம் மேன்மேலும் உயர்த்துகிறது.
சுடர் கொண்டு தொழுவோரை- என்பது தூய்மையான சிந்தனையுடன் தெய்வத்தை வழிபட வேண்டும் என்பதை உணர்த்துகிறது .

பாடலின் நிறைவில் இடம்பெறும் ‘கல்லான உருவமும்’ எனும் சொற்பிரயோகம்,மறைமுகமாகச் சிவபெருமானைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
பிரம்ம தேவர் மலர்மீது இருப்பவர்; மகாவிஷ்ணு பாற்கடலில் பாம்பணை மேல் துயில் கொள்பவர் ; சிவ பெருமான் கைலை மலையில் இருப்பவர் .
கைலை மலையையே சிவனாகச் சொல்வதுண்டு. அதனால் ‘கல்லான உருவமும்’. மேலும் திருவண்ணாமலை திருத்தலத்தில், அருணாசலம் எனும் பெயரில் மலையே தெய்வமாக இருப்பது அருணாசல மகாத்மியத்தால் விரிவாகவே விளங்குகிறது. ஆகவே கல்லான உருவமும் எனக் கண்ணதாசன் சொன்னதில் எந்த முரண்பாடும் இல்லை .

இவ்வாறு சொன்னதோடு, சிவபெருமான் கனிவான உள்ளம் கொண்டவர் என்ற கண்ணதாசன், வேத வடிவமே என சிவபெருமானைத் துதித்துப் பாடலை முடிக்கிறார் .
பாடலில் தெய்வத்தை முழுமையாக உணர்ந்த பாணபத்திரர் பாடுவதாக இடம் பெற்ற பாடல் இது . இப்பாடலின் தொடர்ச்சியாகவே சிவபெருமான் பாணபத்திரருக்காகப் போய் ஹேமநாத பாகவதரைப் பாட்டுப்போட்டியில் மனம் நடுங்க வைத்தார் . பரம்பொருளின் உண்மையை உணர்ந்தவர்களைக் காக்க, பரம்பொருள் தயங்காது என்பதை உணர்த்தும் பாடலான இது, திருவிளையாடல் என்ற படத்தில் இடம் பெற்றுள்ளது.

About பி.என்.பரசுராமன்

பி.என்.பரசுராமன்
பி.என்.பி. என்று சொன்னால், ஆன்மீக உலகத்தில் அறியாதவர்கள் இருக்க முடியாது. பல ஆன்மீக இலக்கியங்களில் ஆழங்கால் பட்டவர். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

சிவன் விளையாடல் – 9

வேல் பெற்ற உக்கிர குமார பாண்டியன் பாரதத்தை புகழ்ந்து பாடும்போது, சுந்தரம் பிள்ளை நீரால் சூழப்பட்ட இந்த உலகிற்கு அழகு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன