முகப்பு / ஆலய தரிசனம் / வடுவூர் ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோயில்

வடுவூர் ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோயில்

 

“ கற்பார் இராம பிரானையலால் மற்றும்
புற்பா முதலாப் புல்லேறும் பாதி றந்தின்றியே
நற்பால யோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுனே ”

என திருவாய்மொழி ( ஏழாம் பத்து 5ல்) ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி, பிரிய பிராட்டி சீதா தேவி , அருமை இளவல் இலக்குவனுடன் எழுந்தருளிய திருத்தலம் வடுவூர்.

வடுவூர் என்றால் ”அழகிய ஊர்” , ‘ இளமையான ஊர் “ என்று பொருள் படும். வகுளாரண்யம் , பாஸ்கர ஷேத்திரம், தட்சிண அயோத்தி கிராமம், ஏகாதசி கிராமம் என்ற பல சிறப்பு பெயர்களும் வடுவூருக்கு உண்டு.

ஸ்ரீ இராமச்சந்திரன் வடுவூரில் கோதண்டராமராக குடி கொள்ள காரணமாகக் கூறப்படும் சில சுவையான சம்பவங்களைப் பார்க்கலாம்.

தந்தை தசரத சக்ரவர்த்தி இட்ட ஆணைப்படி சத்புத்திரன் இராமன் தன் மனைவி சீதா தேவியுடன் இளைய சகோதரன் இலக்குவனுடன் அயோத்தி மாநகரை நீங்கி கானக வாசம் புரிய தண்டகாரண்ய பகுதிக்கு வந்து ஆசிரமம் அமைத்து குடியேறுகிறார். மர உரி ஆடையுடன் வந்த இந்த அரச பிரமுகர்களை தினமும் தரிசனம் செய்ய அவ்வனத்தில் வாழ்ந்து தவம் புரியும் பல முனிவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். தங்களை சந்திக்கும் அந்த அதிதிகளை இன்முகம் காட்டி அலுப்பு சலிப்பின்றி உபசரிப்பதில் இராமர் உள்ளிட்டோர் இன்பம் காண்கின்றனர்.

சில காலம் இப்படிச் செல்ல, ஒரு தேவ காரியமாக அந்த தண்டகாரண்யத்தை நீங்கிச் செல்ல வேண்டிய கட்டாயத்தை, தன் மீது அளப்பரிய அன்பு மரியாதை காட்டும் ரிஷிகளிடம் தனது சங்கல்பத்தை சீதாராமன் கூறினார். அப்போது , அவர்கள் மனம் கலங்கி , தாங்கள் இவ்விடத்திலேயே இருக்க வேண்டும் என மன்றாடி கேட்டுக்கொள்கிறார்கள். இதற்கு இராமர் கூறிய எந்தவித சமாதானத்தையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

எனவே, இராமர் ஒரு உத்தியை கையாண்டார். ஒரு நாள் அதிகாலையில் அவர் தன்னைப் பிரதி எடுத்தார்ப் போல ஒரு அர்ச்சா விக்கிரகத்தை படைத்து, அதை அங்கு வருவோர் காணும் வகையான இடத்தில் வைத்துவிட்டார். தனது பிராட்டி, தம்பியுடன் இராமர் உள்ளே உரையாடிக் கொண்டிருக்கையில் அன்றைய தரிசனம் பெற ரிஷிகளும் காலை நேரத்தில் ஆசிரமம் வந்தபோது , அங்கு அவர்கள் பார்க்கும் இராமரின் எழில் பூண்ட விக்கிரகம் அவர்களை மெய்மறக்கச் செய்ய , அனைவரும் சிலை போலவே நின்று பார்த்துக் கொண்டே இருக்கின்றனர்.

அப்போது ஒரு மகரிஷிக்கு அசல் இராம தரிசனம் நினைவு வர, தங்களை சுதாரித்துக் கொண்டு எல்லோரும் ஆசிரமத்தின் உள்ளே நுழைகிறார்கள். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள எண்ணிய தசரத புத்திரன் மகரிஷிகளிடம் தான் அன்றே தண்டகாரண்யம் விட்டு புறப்பட வேண்டிய அவசியம் குறித்து எடுத்துச் சொல்கிறார். ஆனால் அவர்கள் அதற்கு இசைய மறுக்கிறார்கள். அப்போது இராமர், “ நானே தான் உங்களுக்கு வேண்டுமா, இல்லை வெளியே உள்ள என் அச்சான சிலை வேண்டுமா” என அவர்களைக் கேட்டபோது சிலையின் அழகில் உள்ளத்தை முன்பு பறிகொடுத்திருந்த ரிஷிகள் தங்கள் உருவச் சிலையே போதும்” என கோஷமாக கூறவே , அவர்களிடமிருந்து பிரியாவிடை பெற்று தன் துணைவி, இளவலுடன் தண்டகாரண்யம் விட்டு நீங்குகிறார்.

பல ஆண்டுகள் ஸ்ரீ இராமரின் அழகிய திரு உரு மகரிஷிகளால் தண்டகாரண்யத்தில் ஆராதிக்கப்பட்டு வந்தது. ஆனால் பகவான் கொண்ட சங்கல்பத்தின் விளைவாக அச் சிலை எப்படியோ தமிழகத்தில் உள்ள திருக்கண்ணபுரத்திற்கு கொண்டுவரப்பட்டு அவ்வூரில் ஸ்ரீ சௌரி ராஜப் பெருமாள் திருக் கோயிலில் தனிச் சந்நிதியில் பிரதிஷ்டை ஆகி பக்தர்களால் பூஜிக்கப்பட்டு வந்தார். இந்த கானக இராமரை “ மன்னு புகழ்” எனும் எட்டாம் திருமொழியில் , மகான் குலசேகர ஆழ்வார் “ சிலை வளைத்தாய், சிலை வேலவா, ஏ மருஞ் சிலை வலவா, வலிய வொரு சிலை அதனால் ஏவரி வெஞ்சலை வலவா” என வகைபடுத்தி போற்றித் துதித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

சிறிது காலம் இப்படிக் கழிய , ஏதோ ஒரு அரசு நிகழ்வு காரணமாக திருக்க்ண்ணபுர ஆலயத்திலிருந்து ரகசியமாக அப்புறப்படுத்தப்பட்டு , சற்று தொலைவில் உள்ள சிற்றூரான தலை ஞாயிறுக்குக் கொண்டு வரப்பட்டு , எவரும் காண முடியாதபடி ஒரு மரத்தின் அடியில் இராமர் திரு உருவும் அவருடன் பெயர்த்துக் கொண்டுவரப்பட்ட சீதை, இலட்சுமணன் , பரதன், அனுமன் ஆகியோர் திருவுருவும் புதைக்கப்பட்டன. விதிவசத்தால் சக்ரவர்த்தி இராமர் கானக வாசம் புரிந்தது போலவே அவரது சிலையும் அஞ்ஞான வாசம் புரிய நேரிட்டுள்ளது.

அவ்வாறு மறைக்கப்பட்ட திருவுருக்கள் தக்க சமயத்தில் வெளிவர வேண்டுமென பகவான் சங்கல்பம் கொண்டு சில ஆண்டுகள் கழித்து , அப்போது தஞ்சை மாநகரை சிறப்பாக ஆட்சி செய்து பல ஆன்மீக , தான தர்ம காரியங்களை செய்து வந்த மன்னன் சரபோஜி கனவில் ஒரு நாள் காட்சியளித்து “ புதைக்கப்பட்ட திருவுருக்கள் பற்றி கூறி அவற்றை மீட்டு ஆராதனை புரிக “ என அருள் கட்டளை பிறப்பித்து மறைந்தார்.

திடுக்கிட்டு கண் விழித்த மன்னன் சரபோஜி மறுநாள் அதிகாலையிலேயே தனது கனவில் பரந்தாமன் சுட்டிக்காட்டிய ஊருக்கு பிரிவாரங்களுடன் விரைந்து , இறைத் திருவுருக்களை பூமியிலிருந்து மீட்டு , மெய் சிலிர்ப்புற்றார். தன்னுடன் கொண்டுவரப்பட்டுள்ள பல்லக்குகளில் சிலைகளை ஏற்ற படைவீரர்களுக்கு ஆணையிட்ட நேரத்தில், சிலைகளை தங்கள் ஆராதனைக்காக விட்டுசெல்லும்படி மன்னனிடம் அவ்வூரார் கெஞ்சிக் கேட்டுகொண்டனர்.

இவ்விஷயத்தை நன்முறையில் முடித்துவைக்க எண்ணிய மன்னன் , தன்னுடன் ஸ்ரீ இராமர், சீதை, அனுமன் திருவுருக்களை பல்லக்கில் கொண்டு செல்வதாயும் லெட்சுமணன் பரதன் சிலைகளை இவ்வூரிலேயே இருக்கத் தந்துவிடுவதாகவும் கூற , அதனை கிராமத்தார் உளமாற ஏற்றுக்கொண்டனர்.

தலை ஞாயிறு ஊரிலிருந்து மன்னர் படைவீரர்களுடன் தஞ்சை வரும் வழியில் வடுவூர் எனும் சிற்றூர் வந்து சேரும்போது நடுநிசி ஆகிவிட்டது. அனைவரும் பயணக் களைப்பால் அவதியுற்றதால் அதனை உணர்ந்து மன்னன் அந்த இரவுப் பொழுதை வடுவூரில் கழிக்க முடிவு செய்தார். பாதுகாப்பின் பொருட்டு உள்ளூர் கிராமத்தார் சிலரின் உதவியோடு பல்லக்கு சிலைகள் உள்ளூர் பெருமாள் ஆலயத்தில் பத்திரமாக வைக்கப்பட்டன.

மறுநாள் காலை தரிசனத்திற்காக அவ்வூர் பக்தர்கள் அவ்வாலயம் வந்தபோது , புதிதாக காணப்பட்ட சிலைகளைக் கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் கொண்டனர். அங்கு பாதுகாப்புக்கு நின்றுகொண்டிருந்த வீரர்கள் மூலம் சரபோஜி மன்னன் வந்துள்ளதையும் , சிலைகள் பற்றியும் அறிந்துகொண்ட அவர்கள் அந்த தெய்வத்திருவுக்களால் ஈர்க்கப்பட்டுவிட்டதால் , அவைகளை தங்களுக்காக கேட்டுப் பெற தீர்மானித்தனர்.
மன்னனை ஊரார் சந்தித்து, இது பற்றி கேட்ட து அவர் நிர்தாட்சண்யமாக அவைகளை வழங்க மறுத்துவிட்டார். எப்படியேனும் சிலைகளை அடைய வேண்டும் என்ற தீவிரத்தில் இருந்த பக்தர்கள் ” தங்கள் கோரிக்கையை அரசன் மறுத்துவிட்டால் ஆலய கோபுர உச்சியிலிருந்து தங்கள் உயிரை துறந்துவிடுவோம்’ என்று ஒருமித்து கூறவே , மன்னன் வேறு வழியின்றி அந்த தெய்வச் சிலைகளை வடுவூர்வாசிகளுக்கு விட்டுகொடுத்ததுமல்லாமல் அவைகளை அவ்வூர் பெருமாள் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யவும் பல உதவிகளை செய்து , அவ்வூராரின் நன்றிக்கு பாத்திரமானார்.

இப்படியாக எங்கோ தண்டகாரண்யத்தில் ஸ்ரீ இராமபிரானால் உருவாக்கப்பட்ட அந்த தெய்வத்திருவுரு , இறை சங்கல்பத்தால் சில ஊர்களுக்கு பயணமாகி இறுதியில் வடுவூர் தலத்தில் எழுந்தருளப்பட்டது.

அருள்மிகு கோதண்டராமர் ஆலய தல விருட்சமாக விளங்குவது மகிழமரம். இதே கோயிலின் தெற்கு பிரகாரத்தில் பெரிய வில்வ விருட்சமும் காட்சியளிக்கும். பைரவ தீர்த்தம் தல விருட்சமாக இருக்க, மாவட்டத்திலேயே 316.15 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோதண்டராமரின் பெயரை கொண்ட ஒரு பெரிய ஏரியும் இவ்வூருக்கு பெருமை சேர்க்கும்படி அமைந்துள்ளது. மகரிஷி கனவர், குலசேகர ஆழ்வார் போன்றோர் இறை தரிசனம் பெற்ற ஊராகவும் வடுவூர் சிறப்பு பெற்றுள்ளது.

கிழக்கு திசை நோக்கிய திருக்கோயிலின் முகப்பில் 61 அடி உயரமும் , 5 அடுக்குகளும் உடைய ராஜகோபுரம் பல வண்ணங்களில் எழில் காட்சியளிக்கிறது.

ஆலய கொடிமரம் , பலிபீடம் தாண்டியுள்ள சில பகுதிகளைக் கடந்து பிரதான இறை சந்நிதியின் கருவறைப்பக்கம் வர, தனது திருக்கரங்களில் திவ்ய கோதண்டம், அம்பு தரித்து, கொஞ்சும் புன்னகையுடன் கல்யாண கோதண்டராமனாக சீதா பிராட்டியுடன், வில் அம்பு தரித்த கோலத்தில் லெட்சுமணன், வினய பாவத்துடன் கூடிய அனுமன் ஆகியோர் புடை சூழ கிடைக்கும் திவ்ய சேவை மெய் சிலிர்க்க செய்யும்.

இந்த உற்சவ மூர்த்திகளுக்கு பின் உள்ள மூலஸ்தானத்தில் சாளக்ராம, சகஸ்ரநாம மாலைகளைத் தரித்த சீதாராமன் தன் தேவி , இளவல் , சிறிய திருவடியுடன் திருக்காட்சி தருகிறார். அவர் அருகிலேயே செல்வரும், சந்தான கோபாலனும் சேவை சாதிக்க வேறு நமக்கு என்ன பேறு வேண்டும் என்ற உணர்வு பற்றும்!.

குறிப்பாக இப்பெருமாள் தரிசனத்தை ஸ்ரீ இராமரின் ஜென்ம தினமான ஸ்ரீ ராமநவமியில் தரிசிக்கும் பக்தர்களுக்கு இறைவன் செல்வ, தொழில் வளம் , மணப்பேறு, புத்திரப் பேறு, வழங்குவதாய் பக்தர்களிடமிருந்து அறியமுடிகிறது.

ஆலய கோபுரத்தின் தென் திசையில் உள்நோக்கிய பகுதியில் திருப்பள்ளி நாச்சியாருடன் கூடிய பெரிய மடப்பள்ளியும், அதன் எதிர்புறம் எழிலோடு கூடிய ஊஞ்சல் மண்டபமும் , ஸ்ரீ தேசிகன் சந்நிதி மண்டபத்தையும் பெருமாள் சந்நிதி மண்டபத்தையும் இணைத்தவாறு காணக்கிடைக்கும்.

இந்த ஊஞ்சல் மண்டபத்தில்தான் தை மாதத்தில் வரும் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் தாயாரும் பெருமாளும் எழுந்தருளி சேவை சாதிப்பது வழக்கம். ஊஞ்சல் உற்சவம் கண்கவரும் வகையில், தை மாதம் காணும் பொங்கல் நாள், ஆடிப்பூர புண்ணிய நாள் ஆகிய நாட்களில் இடம்பெறுகிறது.

ஊஞ்சல் மண்டபத்தின் தென் பகுதியில் உள்ள தனி சந்நிதியில் பக்தர்களின் தோஷங்களை நீக்கி கல்வி நலன் அருளும் லெட்சுமி ஹயகிரீவரின் தரிசனம் கிடைக்கும். அத்துடன் அங்கே காளிங்க நர்த்தன நிலையில் கண்ணபிரான் உப நாச்சியார்களுடன் அருள்பாலிக்கிறார். தவிர கூடுதல் தரிசனம் தர , அங்கே ஆச்சாரிய திலகமான ஸ்ரீ நிகமாந்த தேசிகனும் எழுந்தருளியுள்ளார்.

இத்திருக்கோயிலின் உட்சுற்று மேற்கோடியில் கிழக்கு நோக்கிய அழகிய கண்ணாடி அறை பெருமாள் சந்நிதிக்கு நேர் எதிரில் உள்ளது.

ஆலயத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் பிரம்மோற்சவ நாட்களில் வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கும் கீழ் மண்டபம், வாத்திய மண்டபம், மாத பிரம்மோற்சவம் நடத்தப்படும் மகா மண்டபம் , அர்த்த மண்டபம் , அர்த்த மண்டப வட கோடியில் வைக்கப்பட்டுள்ள பெரிய நிலைக்கண்ணாடி இவைகள் உள்ளன.

இவ்வாலயத்தில் குடிகொண்டுள்ள மற்ற தெய்வங்கள்:
தனி சந்நிதி கொண்ட அருள்மிகு ஸ்ரீ தேவி ,பூதேவி , செங்கமலத்தாயார் உடனுறை ஸ்ரீ வாசுதேவன், ருக்மினி சத்யபாமா சமேத உற்சவ மூர்த்தியான கோபாலன், உடன் சேனை முதலியார், மகாமண்டப வடக்கு சுவர் பக்கம் எழுந்தருளிய மூலவரான விக்னேஸ்வரர், ஆதிசேஷன், ஆண்டாள், உடையவர் உள்ளிட்ட ஆழ்வார்கள் ஆகியோர் எழுந்தருளியிருக்க , இவர்களின் தரிசனம் காண ஒரு நாள் போதாது என்றே தோன்றும்.

தினமும் காலை 7 மணி முதல் மதியம் 12 வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக நடை திறந்திருக்கும்.

பஞ்சரத்தின பூஜை வழிபாடு நடக்கும் இத்திருகோயிலின் ஆண்டு பிரம்மோற்சவம் பங்குனி மாதம் 1ம் தேதியில் இருந்து 10ம் தேதி வரையிலான 10 நாட்கள் பிரம்மாண்டமாக நடக்கும். இது தவிர, மாதந்தோறும் பல புண்ணிய திதி நாட்களிலும் முக்கிய உற்சவங்கள் நிகழ்த்தப்படுகின்றன.

திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட வடுவூர் தலத்திற்கு ( மன்னார்குடியில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரம்) சென்னையில் இருந்து மன்னார்குடி மார்க்கத்தில் நிறைய பேருந்துகள் உண்டு.

தஞ்சை, மன்னார்குடி, திருவாரூரில் இருந்தும் வடுவூர் செல்ல கார் வசதியும் நிறைய உள்ளது.

ஆலய தொடர்புக்கான தொலைபேசி எண்: 04367- 267110

About கீதா சுப்பிரமணியன்

கீதா சுப்பிரமணியன்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவர் கீதா சுப்பிரமணியன். இயற்பெயர் நாராயணி. எழுத்தாளரான இவருடைய கணவரின் விருப்பப்படி கீதா என பெயரை மாற்றிக்கொண்டார். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் -2

வீர பல்லாளன் காளிங்கராயன் பாண்டியன் ஐந்தாம் சடையவர்மன், சோழ மன்னர்கள் (1018-1246), சேர மன்னர்கள் (1291-1342) போன்ற மன்னர்கள் இக்கோவிலில் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன