முகப்பு / ஆலய தரிசனம் / திருவாரூர் தியாகேசன் திருக்கோயில் -13

திருவாரூர் தியாகேசன் திருக்கோயில் -13

அருள்மிகு வன்மீகநாதர் குடிகொண்ட பூங்கோயிலின் வட மேற்கில் , தேவதீர்த்ததிற்கு கிழக்கில் அருள்மிகு கமலாம்பாள் சந்நிதியின் தென் கிழக்கில் வாணி தீர்த்தம் அருகே தனிக் கோயில் கொண்டுள்ளார் அருள்மிகு ஆனந்தேசுவரர்.

பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கமலமுனி இக்கோயிலில் யோக நிஷ்டையில் அமர்ந்துள்ளார். இவ்வாலய தென்படிக்கட்டுகள் வழியாக நுழைந்து திரும்ப , இடது புறத்தில் காட்சி தருவார் குனிந்து கும்பிடும் விநாயகர். இங்குள்ள நுழைவாயிலின் வலது புறத்தில் ஸ்ரீ மகாலெட்சுமியின் மூத்த சகோதரியான ஸ்ரீ ஜேஷ்டா தேவி ( சப்த மாதாக்களில் ஒருவர் ) , வன துர்க்கை, வராகி, அஸ்வாரூடா ஆகியோர் புடை சூழ அமர்ந்துள்ள காட்சி காணத் தகுந்தது.

ஜேஷ்டா தேவியை வியாழக் கிழமைகளில் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்ய, பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு உட்பட பல நோய்கள் பூரண குணம் பெறுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். அவர்கள் அம்பாளை பூஜிக்கையில் களி, உளுந்து வடை , நிவேதனம் செய்து அர்ச்சனை செய்கிறார்கள்.

ஆலய இரண்டாம் பிரகாரத்தில் இடம் பெற்ற சிவ லிங்கத்தை ஒரு காலத்தில் மங்கண முனிவர் என்ற புண்ணிய புருஷர் , அருகே உள்ள வாணி தீர்த்தத்தில் நீராடி , நாள்தோறு தீவிரமாக பூஜித்துவந்தார். அதன் நற்பலனாக அவருக்கு பெருஞ் சித்துகள் ஒரு நாள் கைவரப் பெற்றது. அதனால் பெரும் களிப்புக்கு ஆளான அவர் தரையிலிருந்து ஜிவ் என எழுந்து பூமிக்கும் வானுக்குமாக ஆனந்தக் கூத்தாட ஆரம்பித்தார். இதனால் ஏற்பட்ட விபரீத விளைவாக மூன்று உலகங்கள், கடல், மலைகள் என அனைத்தும் அதிரத் தொடங்கின. போதாதற்கு சிவ மைந்தன் விநாயகனும் அக்கூத்தை தானும் ஆடத்தொடங்கிவிட்டார்.

இதனால் அச்சமுற்ற தேவர்கள் பிரம்மதேவன் தலைமையில் கூட்டமாக போய் சிவபெருமானிடம் சரண்புகுந்தனர். உடனே ஈசன் ஆனந்த கூத்து நிகழ்த்தும் மங்கண முனிவரிடம் சென்று காட்சி தந்து “ முனிவா , ஆட்டம் போதும். நிறுத்திக்கொள்! நீ இதுவரை பக்தியுடன் பூஜித்த லிங்கம் “ ஆனந்த ஈசன் “ என இனி அழைக்கப்படுவார். இந்த ஊர் ஆரூர் என்ற பெயரோடு ஆனந்தபுரம் என்ற பெயரையும் கொள்ளும்.என வரமளித்ததோடு மேலும் இப்படி அருளினார்.

“ இம்மூர்த்தியை ஒரு தரம் நிம்னைப்பவர் , நாவினால் புகழ்பவர், காண்பவர் கொலைப்பழி கொண்டவராக இருந்தாலும் கோடி பாவங்களை செய்திருந்தாலும் அவை அழிக்கப்பட்டு முக்தியை அடைவர்.”

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

மேலும் எவரொருவர் ஆனந்த ஈசனை வைகாசி மாத விசாக நாளில் , இரவில் உணவு உறக்கம் நீக்கி செழுமை மிக்க 1000 தாமரை மலர்கள் கொண்டு அர்ச்சித்துவிட்டு , மறுதினம் எளியோருக்கு தானம் புரிந்து பாராயணம் முறைப்படி மேற்கொள்ள , அவர்கள் இவ்வுலகில் இந்திரனுக்கு ஒப்பான செல்வம் பெற்று சிறந்து நீடூழி வாந்து பின்னர் முக்தியின்பத்தையும் அடைவர்!” என அருளி மறைய , மங்கண முனிவர் கூத்தை நிறுத்திவிட்டு , களிப்புடன் இறைவன் காட்சி தந்த இடத்தை நமஸ்கரித்தார். அன்றிலிருந்து அந்த சிவலிங்கத்தை ஆனந்தேசுவரன் என்ற பெயரில் பக்தர்கள் வணங்க ஆரம்பித்தனர்.

இதே ஆலயத்தில் சோழனுக்கு பிடித்த , முடி சூடா பட்ட மகிஷியாக விளங்கிய பரவை நங்கை படிமமும் இடம்பெற்றுள்ளது.

இக்கோயிலின் வடதிசை வழியே வெளிவரும் , வடக்குத் திருச்சுற்றில் மங்கண முனிவர் ஆனந்தக் கூத்தை நிகழ்த்தியபோது , தானும் நடனம் புரிந்த விநாயகர் எழுந்தருளியுள்ளார். இவர் கொண்ட திருநாமம் “ ஆனந்த நடன விநாயகர் “ என்பதாகும்.

அருள்மிகு அசலேசுவரர்
=====================

இந்த இறைவன் ஆரூர் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் தனிக்கோயில் கொண்டு திகழ்கிறார். அச்லேசுவரானைவர் கொண்ட மற்றோரு திருநாமம் அறநெறி ஆழ்வார் என்பதாகும். இறைவன் எழுந்தருளியுள்ள இவாலயத்தை பட்டாரகர் மண்டலம் என அழைப்பர்கள். முதலாம் ஆதித்த சோழன் ( கி. பி. 871- 907) கட்டிய திருக்கோயில் இது. அக்காலத்தில் திருநாவுக்கரசரால் இரண்டு பதிகங்களால் போற்றி பாடப்பட்டது. அதில் ஒரு பதிகம்

“ போதியறும் பொழில் ஆரூர் முலாட்டனம்
புற்றிடங் கொண்டிருந்தானை போற்றுவார்கள்
ஆதியை அறநெறியில் அப்பன் தன்னை அடைத்து
அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே”

அசலேசம் எப்படி உருவானது?

மன்னன் சமற்காரன் என்பவன் 400 ஆண்டுகாலம் தவ்ம் மேற்கொண்டு கைலாய நாதனை துதித்தான். அவன் பால் கருணை கொண்டு ஒரு நாள் ஈசன் காட்சி தந்து “ உன் விருப்பம் என்ன? “ எனக் கேட்க, அரசன் யான் இவ்வூரில் தினதோறும் வழிபட்டு வரும் சிவலிங்கத்தில் எழுந்தருளி அனுக்கிரகிக்க வேண்டும் “ என வரம் கேட்க, ஈசனும் மனமுவந்து அந்த லிங்கத் திருவுருவில் குடிகொண்டார். இறைவன் இப்படி சலியாது எழுந்தருளியதால் அசலேசம் என்ற பெயர் ஏற்பட்டது.

அசலேசுவரர் சிவலிங்கத் திருவுரு கொண்ட மகிமை என்ன வென்றால் , இவர் நிழல் கிழக்கு திசையில் மட்டுமே விழும் தன்மையானது. மற்றொரு சிறப்பு ஆறு மாதத்திற்குள் மரணமடைய வேண்டியவர் இந்த லிஙத்தை நோக்கினால் அந்த நிழலும் கூட அவனுக்குத் தென்படாது என்று திருவாரூர் புராணம் கூறுகிறது.

அசலேசத்தில் எழுந்தருளியுள்ள அம்பாளின் திருநாமம் வண்டார்குழலி என்பதாகும்.

அசலேசத்தின் ஒரு அங்கமாகியுள்ள திருப்பணி மண்டபத்தில்தான் ஒரு காலத்தில் நாட்டை ஆண்ட கழற்சிங்கர் என்ற பல்லவ மன்னன் தன் தேவியோடு தியாகேசனை வணங்கி முடித்து , இங்கு வந்தபோது பட்ட மகிஷி இறைவனுக்கு பூ மாலையை பக்தர்கள் தொடுத்திருக்கையில் தவறி பூமியில் கிடந்த உதிரிப் பூக்கள் சிலவற்றை எடுத்து ஆவலுடன் முகர்ந்து பார்த்தாள். அச்சமயம் தினமும் அங்கே மாலை கட்டும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி தொண்டு புரிந்து வந்த செருத்துணை நாயனார் அக்காட்சியைக் கண்டார். பெரும் சினம் கொண்டார். அதன் விளைவாக அவர் வேகமாக அரசியின் மூக்கை ஆயுதம் மூலம் வெட்டிவிட்டார். சிவபக்தி பூண்ட மன்னன் தன் துணைவியின் செயலில் வெகுண்டு , தன் பங்கிற்கு பூக்களை எடுத்த அவள் கையை வாள் கொண்டு துண்டித்து விட்டார். அப்போது திடீரென அசலேசர் அவர்களுக்குத் திருகாட்சி தந்து , மீண்டும் அரசியின் மூக்கையும் வெட்டுண்ட கையையும் பெற அருளிய அதிசயம் நிகழ்ந்தது.

இதே அசலேசத்தில்தான், இறைவனுக்கு திருவிளக்கு ஏற்றும் பணிகளை செய்துகொண்டிருந்த நமி நந்தியடிகள் ஒரு நாள் விளக்கேற்ற எண்ணெய் இன்றி பரிதவித்தபோது ஈசுவரன் காட்டிய கருணையால் வெறும் தண்ணீர் கொண்டு இவ்வாலயத் திருவிளக்கை ஏற்றும் அற்புதம் அரங்கேறியுள்ளது.

அரசி செம்பியன் மாதேவியால் கற்றளி கோயிலாக உருவான இதன் அழகிய விமானத்தில் பண்டைய சோழ கால சிற்பச் சிற்பங்கள் காணப்படுகின்றன். மாமண்டப விதானத்தில் பல்வேறு வண்ண எழில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளதை கண்டு ரசிக்கலாம்.

இத்திருக்கோயிலின் முன் மண்டப இடப்பக்கம் பிள்ளையாரும் இரண்டு லிங்கங்களும் இடம் பெற்றுள்ளன. இரண்டாம் மண்டபத்தில் இடப்புறம் உமாஸ்கருதர், செப்புத்திருமேனி நடராஜர், சிவகாமி சகிதம் திருகாட்சி தருகிறார். வலதுபுறத்தில் செருந்துணை நாயனார், விறமிண்ட நாயனார், கழற்சிங்கர், கங்கா தேவி , நமி நந்தியடிகள் ஆகியோரின் திரு உருக்கள் அமைந்துள்ளன.

கருவறையின் உட்பக்கம் ஆலய நாயகர், அகண்ட லிங்கத் திருமேனியராக நமக்கு தரிசனமாக முன் பகுதியில் செப்புத் திருமேனியராக அம்பாள் வண்டார் குழலி காட்சி தருகிறாள்.

கருவறை வெளியே கம்பீர வடிவில் இரு பக்கமும் துவார பாலகர்களும் , மண்டப நந்தியும் இடம் பெற்றுள்ளனர்.

அசலேசுவரனை சிவராத்திரி புண்ணிய தினத்தில் வணங்கி பூஜிப்போருக்கு இறைவன் அனைத்து நலன்கலையும் அருள்வார் என தலபுராணத்தில் காணப்படும் தகவலாக அறியப்படுகிறது.

About கீதா சுப்பிரமணியன்

கீதா சுப்பிரமணியன்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவர் கீதா சுப்பிரமணியன். இயற்பெயர் நாராயணி. எழுத்தாளரான இவருடைய கணவரின் விருப்பப்படி கீதா என பெயரை மாற்றிக்கொண்டார். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் -2

வீர பல்லாளன் காளிங்கராயன் பாண்டியன் ஐந்தாம் சடையவர்மன், சோழ மன்னர்கள் (1018-1246), சேர மன்னர்கள் (1291-1342) போன்ற மன்னர்கள் இக்கோவிலில் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன