முகப்பு / ஆலய தரிசனம் / திருவாரூர் தியாகேசன் திருக்கோயில் -11

திருவாரூர் தியாகேசன் திருக்கோயில் -11

மூவர் முதலி என்று அழைக்கப்படும் மூவரில் ஒருவரான சுந்தரர் ( மற்ற இருவர் சம்பந்தர், வாகீசர் ) தான் இழந்த ஒரு கண்ணை இத்தலத்தில் மீண்டும் பெற்ற சம்பவத்தை இப்படிச் சுட்டிகாட்டுகிறார்கள்.

தக்கோசி, புற நீரமை, செந்துருத்தி கொல்லிக் கௌவானம் , பழம் பஞ்சுரம், இந்தளம், காந்தாரமாகிய கொல்லி போன்ற பாசுரங்களால் ஆரூரானை போற்றி மகிழ்ந்தவர்.

ஒரு சந்தர்ப்பத்தில் சுந்தரர் தனது கண் பார்வையை முன் ஜென்ம வினைகளால் இழந்துவிட்ட அவலம் நிகழ்ந்தது. அப்போது அவர் காஞ்சிபுரம் வந்திருந்ததால், அவ்வூர் நாயகன் ஏகாம்பர நாதரை பல முறை நமஸ்கரித்து அக தரிசனம் பெற்று அந்த இறைவன் உள்ளம் உருகும் வகையில் 11 பாசுரங்களை இயற்றி பூஜித்தார். அதன் முதல் பாசுரம் “ஆலம் தான் உகந்து அமுது செய்தானை” என்று தொடங்கும் . அதனால் மனம் கனிந்த ஈசன் சுந்தரருக்கு இடக்கண் பார்வையை மட்டும் தந்தருளினார்.

அடுத்து பல சிவ தலங்கள் சென்று இறை வழிபாடு செய்துவிட்டு ஆரூர் வந்து ஈசனை மெய்யுருக பாடினார். அதில் இடம் பெறும் இரண்டாம் பாடல் இப்படியாக் அமையும்.

“ விற்றுக்கொள் பற்றி அல்லேன் விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றும் செய்த தில்லை சொத்தை ஆக்கினீர்
எற்றுக்கு அடிகேள் என் கண் கொண்டீர் நீரே பழி பட்டீர்
மற்றைக் கண் தான் தாராது ஒழிந்தால் வாழ்ந்து போதீரே “

தன் வன் தொண்டன் கலங்குவதை காணப்பொறுக்காத சிவன், ஏகம்பத்தில் இடக்கண் பார்வையை வழங்கியவர், இங்கே வலக்கண் பார்வையையும் அளித்து சுந்தரரின் மன வேதனையைப் போக்கி ஆனந்திக்கச் செய்தார்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

ஆரூரில் குடிகொண்டானை மூவர் முதலிகளில் மற்றொருவரான சம்பந்தர், குறிஞ்சி, வியாழக்குறிஞ்சி, காந்தாரம் நட்டபாடை, கௌசிதம் என்ற ராகங்களில் பாசுரங்கள் இயற்றி அருளியிருக்க, இன்னொருவரான அப்பர் , காந்தாரம், சீகாமரமென்னும் குறிஞ்சி, நேரிசை விருத்தம், குறுந்தொகை, தாண்டகம் என்ற ராகங்களில் பாடியுள்ளார்.

ஆரூர் ஆலயத்தில் இறை முன் தேவாரம் ஓதுபவர்கள் கொண்ட சிறப்பு பெயர் திருப்பதிகம் விண்ணப்பிப்பார் என்பதாகும். இங்கே ஓதப்படும் தேவாரப் பதிகங்களின் விஷேசப் பெயர் “ கல்வெட்டுகள் திருப்பதிகம் “ ஆகும்.

இன்னும் எத்தனையோ பெருமைகள் கொண்டவர் இந்த ஆரூர் குடி உயர்த்தும் தியாகேசன். அவைகளை சொல்லி மாளாது என்பர்.

இத்திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தின் வடபுறம் கொடி மரம் எதிரே அழகிய விமானத்துடன் தனிகோயில் கொண்டு அருளாட்சி புரிகிறாள் அருள்மிகு நீலோத்பலாம்பாள் என்னும் அல்லியங்கோதை.

முன் முக மண்டபம் தாண்டிச் செல்ல தென்படும் அர்த்த மண்டபத்தில் பல எழிலான வண்ண ஓவியங்களைக் கண்டு மகிழலாம்.

கருவறையில் தென் திசை நோக்கிய, நின்ற திருவுருவில் காட்சி தரும் அருள்மிகு அல்லியங்கோதை தாய்மை சொட்டும் வதனம் கொண்டுள்ளாள். அன்னையின் வலது கரம் கருங்குவளை மலரைத் தாங்கியிருக்கும். அன்னையின் இடது கரம் தன் அருகில் நிற்கும் சேடி, குழந்தை பிராய முருகனைத் தன் தோளில் சுமந்து நிற்கும் நிலை. அக்குழந்தையின் கரத்தை தீண்டும் வகையில் காணப்படும். அது பக்தர்களுக்கு பரவசத்தை தூண்டும் வகையில் அமையும். இத்தகைய அற்புதக் காட்சி தரும் அம்பாளை வேறு எந்த ஆலயத்திலும் தரிசிக்க முடியாது.

உற்சவ அம்பாளின் நெடிய செப்புத்திருமேனியும் அங்கேயே காட்சியாகும்.

இச்சன்னிதிக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் விதமாக அம்பாளின் எதிரே பள்ளியறையும் உள்ளது. அருள்மிகு அல்லியங்கோதை அம்பாளை

“ தொல்லை மா ஞாலமாதித் தொகையிலா அண்டம் நல்கிச்
செல்வ,மான் கருணையாழுஞ் சிறகால் அணைத்துப் பொற்றும்
மல்லச் செழுநீர் வாவி வண் காமலாலயத்துள்
அல்லியங்கோதை என்னும் அன்னத்தை அகத்துள் வைப்பாள் “
என பக்தர்கள் பாடி துதிக்கின்றனர்.

About கீதா சுப்பிரமணியன்

கீதா சுப்பிரமணியன்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவர் கீதா சுப்பிரமணியன். இயற்பெயர் நாராயணி. எழுத்தாளரான இவருடைய கணவரின் விருப்பப்படி கீதா என பெயரை மாற்றிக்கொண்டார். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் -2

வீர பல்லாளன் காளிங்கராயன் பாண்டியன் ஐந்தாம் சடையவர்மன், சோழ மன்னர்கள் (1018-1246), சேர மன்னர்கள் (1291-1342) போன்ற மன்னர்கள் இக்கோவிலில் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன