முகப்பு / ஆலய தரிசனம் / திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -1

திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -1

சக்கரவர்த்தி ராஜராஜ சோழன் ஆலய கல்வெட்டில் ” சிற்றம்பர்” எனவும், வேறு சில மன்னர்கள் “திரிசிரபுரம்“ எனவும் தங்கள் கால கல்வெட்டுகளில் பதிவு செய்ததும், மகான் அருணகிரி நாதர் அருளிய பாடல் ஒன்றில் ” சிரகிரி” என போற்றியதும் 10ம் நூற்றாண்டுக்காரரான நாராயண வேம்பர்கோன் என்பவர் ”சிராமலை” என்று குறிப்பிட்டதுவுமான ஒரு தலம், நம்மை அடிமையாக்கி ஆண்ட வெள்ளையர் காலத்தில் டிரிச்சினாப்பள்ளி“ என பெயர் திரிந்து அழைக்கப்பட்டது.

அந்த பிரசித்தி பெற்ற தலம் இன்று மக்களால் பக்தியுடன் உச்சரிக்கபடும் திருச்சி நகர்தான்.

திருச்சி என்றாலே அனைவர் மனthதிலும் தோன்றுவது அங்குள்ள மலைக்கோட்டை விநாயகரும், நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளமும்தான். அதன் பிறகே நினைவுக்கு வருவார் இவ்வூர் ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் அருள்மிகு தாயுமானவர் சுவாமி
திருச்சி உறை சிவபிரானை மாணிக்க வாசகர் 2 பாடல்களாலும் திருஞானசம்பந்தர் 11 பாடல்களாலும் அப்பர் 4 பாடல்களாலும் போற்றித் துதித்துள்ளனர். தாயுமானவ அடிகளார், அருணகிரிநாதர், ஐயடிகள் கானவர் கோன் நாயனார் ஆகியோரும் ஸ்ரீ தாயுமானவரை வணங்கி இயற்றியுள்ள பாடல்களும் மனதை உருக்க வல்லவை.

இவர்களுக்கு பிறகு வந்த திறமையான புலவர்கள் படைத்தருளிய செவ்வந்திப் புராணம், சிராமலை அந்தாதி, யமக அந்தாதி போன்ற நூல்களும் இந்த புனித தலத்தையும் அதில் குடிகொண்டுள்ள இறைவனையும் பெருமைபடுத்தும் விதமாக உள்ளது.

திருச்சி தலத்திற்கு புனிதமும் பெருமையும் கூடும் வகையில் அன்னை பார்வதி தேவி, பிரம்மன், இந்திரன், அகத்தியர், ஜடாயூ, சப்தரிஷிகள், திரிசுரன், இராமர், அர்ஜுனன், , அனுமன், விபீஷ்ணன், அத்திரி முனிவர், தாயுமானவ அடிகள், தூமகேது போன்றவர்கள் இந்த பூலோக கைலாயம் வந்து அருள்மிகு அம்பாள் சமேத ஸ்ரீ தாயுமானவ சுவாமியை துதித்து , பூஜித்து பல நற்பலன்களை அடைந்துள்ளதை , இந்த திருக்கோயிலின் தல புராணம் மூலம் விரிவாக அறிய முடிகிறது.

இத்தலம் திருச்சிராப்பள்ளி என பெயர் பெற்றதற்கான காரணம் பற்றி நூல்களில் பின்வருமாறு கூறப்படுகிறது.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

திருச்சி மலை மீதுள்ள, அதன் பின்புறம் அமைந்துள்ள ”கல்படுக்கைகள்” என்ற உறைவிடம், ஒரு காலத்தில் சமண முனிவர்களின் வசிப்பிடமாக இருந்தன. அதில் பிரசித்தி பெற்ற முனிவராக இருந்தவர் பெயர் ”சிரா” என்பதாகும். அவருடைய திருநாமத்தையும் சமண பள்ளியையும் இணைத்தும், தல பெருமையை முன்னிலைப்படுத்தியும், “ திரு” வை முன்னால் வைத்து “ திருச்சிராப்பள்ளி” என்று மக்களால் அழைக்கப்பட்டது.

அடுத்து இப்படியும் கூறப்படும் ஒரு செய்தி உண்டு

இலங்கை வேந்தன் ராவணனின் சகோதரர்களில் ஒருவரான மூன்று தலை படைத்த ” திரிசுரன்” என்பவன் இவ்வூர் சிவபெருமானை போற்றி நற்கதி பெற்றதால் “சிராப்பள்ளி” என அழைக்கப்படுவதாக சொல்லப்படுவதே அச்செய்தி.

அக்காலத்தில் ஆண்டு வந்த மகேந்திரவர்ம பல்லவனின் பட்ட பெயர் வலிதாங்குற பல்லவேஸ்வரன் என்பதாகும் நீண்ட காலமாக சமண சமயத்தை தழுவி வந்த அம்மன்னனை சைவ சமயத்திற்கு மாற்றியவர் அப்பர் பெருமான். அம்மன்னனை நினைவூட்டும் வகையில் திருச்சிக்கு “வலி தாங்குற பல்லவேச்சுவர கிருஹம்” என்ற சிறப்பு பெயர் சூட்டப்பட்டது.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 80 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள உச்சிப்பிள்ளையார் வீற்றிருக்கும் சந்நிதி கொண்ட மலையின் வயது சுமார் 230 கோடி ஆண்டுகள் என நம்பப்படுகிறது.

ஒரு சமயத்தில், தான் கொண்ட அகம்பாவத்தால், இலங்கை வேந்தன் இராவணன், சிவன் உறையும் கயிலாய மலையை சற்று அசைத்துப் பார்த்ததால் அது தோஷம் பெற்றது.

ஆனால் அந்த கயிலாயம் போன்றே மூன்று அடுக்குகள் கொண்ட திருச்சி உச்சி மலைக்கு எவ்வித தோஷமும் இல்லை. அதனால் “தட்சிண கயிலாயம்“ என்ற சிறப்பை இம்மலை பெற்றிருப்பது பெருமைக்குரியது.

சரித்திர வல்லுனர்கள் கூற்றிலிருந்து கடந்த 18ம் நூற்றாண்டில் ஆங்கில- பிரஞ்சு யுத்தத்தின் போது மலைக்கோட்டை, வெடிமருந்து கூடமாக வெள்ளையர்களால் பயன்படுத்தப்பட்டது என்பதை அறியமுடிகிறது.

இந்த மலைக்கோயிலை தரைமட்டத்தில் இருந்து கிழக்கு திசை நோக்கிப்பார்த்தால் அது பிள்ளையார் போன்று காட்சியளிக்கிறது. வடக்கு திசையில் இருந்து பார்த்தால். தோகை விரித்தாடும் மயில் போலவும் , மேற்கில் இருந்து பார்த்தால் சிவலிங்கம் போன்றும், தெற்கிலிருந்து பார்த்தால் ரிஷபம் போன்றும் காட்சியளிக்கிறது.

காவிரி ஆறு, சிவகங்கை, சோமரோகினி எனும் தெப்பக்குளம், நன்றுடையான் திருக்குளம், தீயதில்லா உட்குளம், ஆகியவை திருச்சியின் தல தீர்த்தங்களாக விளங்குகின்றன.

பிரம்ம தீர்த்தமான தெப்பக்குளம் கி.பி 16ம் நூற்றாண்டில் அப்போதைய திருச்சி மன்னன் விஸ்வநாத நாயக்கரால் உருவாக்கப்பட்டது. இக்குளத்தில் முதலைகள் வசித்துள்ளன். அந்த அளவுக்க்கு ஆழமாஅன குளம். பங்குனி தெப்போற்சவம் இங்குதான் நடைபெறும்.

சிவபெருமானுக்கு உகந்த வில்வ மரமே இங்கு தல விருட்சமாக, பாரவாசல் நந்தவனத்தில் இருக்கிறது.

இத்திருக்கோயில் தரிசனம் பெற விரும்பும் பக்தர்கள் மலையடிவாரத்தில் குடிகொண்டுள்ள மாணிக்க விநாயகரை தரிசித்துவிட்டுதான் மலைப்பயணத்தை மேற்கொள்ள வேண்டும் . இந்த விநாயகர், மேலே குடிகொண்டுள்ள ஸ்ரீ தாயுமானவ சுவாமி, உச்சிப்பிள்ளையார் குறித்தான சுவையான சம்பவங்கள் தலபுராணத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளன.

About கீதா சுப்பிரமணியன்

கீதா சுப்பிரமணியன்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவர் கீதா சுப்பிரமணியன். இயற்பெயர் நாராயணி. எழுத்தாளரான இவருடைய கணவரின் விருப்பப்படி கீதா என பெயரை மாற்றிக்கொண்டார். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் -1

நம் ஆன்மீக இந்தியாவின் மோட்சம் தரவல்ல நகரங்களாகக் குறிப்பிடப்படுகின்ற, அயோத்தி, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை ஆகிய …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன