முகப்பு / ஆலய தரிசனம் / திருப்பனங்காட்டு ஈசுவரன்

திருப்பனங்காட்டு ஈசுவரன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அடங்கும் செய்யாறு வட்டத்தில் உள்ளது திருப்பனங்காடு. தேவாரத் திருத்தலங்களில் 9ம் தலமாக இடம்பெற்றுள்ளது. இவ்வூர் அக்காலத்தில்திருவன்பார்த்தான் பனங்காட்டூர்என்று அழைக்கப்பட்டது.

இத்தலச் சிறப்பு என்னவென்றால் பரமேஸ்வரன் தாலபுரீசுவரர் என்றும் திரிபாபுரீசுவரர் என்றும் இரு தனித்தனி சந்நிதிகளில் லிங்க வடிவில் எழுந்தருள, அம்பாளும் முறையே கிருபாநாயகி, அமிர்தவல்லி என்று இரண்டு நாமங்களை பூண்டு குடியேறி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இங்கே கயிலாய நாதனையும் பார்வதி தேவியையும் பிரம்மன், விஷ்ணு , இந்திரன் மகரிஷி கண்வர் உள்ளிட்ட பலர் நேரில் வந்து வழிபாடு செய்து நற்பலன் அடைந்துள்ளதை தல வரலாறு விரித்துக் கூறியுள்ளது.

இத்தல இறைவனை , திருஞான சம்பந்தர், சுந்தரர், சேக்கிழார் பெருமான், அப்பர் சுவாமிகள், வள்ளல் இராமலிங்க அடிகளார் ஆகியோர் போற்றி பாடியுள்ளார்கள்.

சர்வேசுவரன் திருப்பனங்காட்டில் குடிகொள்ளக் காரணமாக அமைந்துள்ள சம்பவங்களை பார்க்கலாம்.

ஒரு சமயம் சிவ தீர்த்த தல யாத்திரை மேற்கொண்ட மகான் சுந்தரர் பல ஈசுவரர்களை வெவ்வேறு தலங்களில் கண்டு களித்து பாடல்கள் இயற்றி பின்பு வழியில் பனங்காட்டூர் எல்லையை அடைந்த போது கடும்பசி கொண்டார். அதனை அறிந்துகொண்ட ஈசன் , வயது முதிர்ந்த அந்தணர் வடிவில் சுந்தரர் முன்பு தோன்றி தான் கையில் கொண்டு வந்திருந்த கட்டமுதை அவருக்கு அளித்தார். அதனை ஏற்றுகொண்ட சுந்தரர் , முதியவரிடம், அவ்விடத்தில் குடிக்க நீர் இல்லாத நிலையை சுட்டிக்காட்டும் வண்ணம் , “ பருக நீர் இல்லா இடத்தில் நீர் அமுதளித்தல் நீதியோ?” என வினவினார். அதனை கேட்டு நகைத்த முதியவர் ,” நீர் வந்த இடம் தன்னில் நீரின்றி போகுமோ?” என பதிலளித்துவிட்டு , தான் கையில் வைத்திருந்த ஊன்றுகோலால் பூமியை கிளறி விட்டார். அப்போது மண்ணிலிருந்து நீர் ஊற்றாக பெருகி , சுந்தரரை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தியது. பிறகு அவர் ஏறிட்டு அந்தணரை பார்த்துநீர் யார்? எம்மை சந்திக்க வந்த காரணம் என்ன? “ எனக் கேள்வி எழுப்பும் போதே அம்முதியவர் மறைந்து விட்டார்.

வியப்படைந்த சுந்தரர் தன் முன் தோன்றியவர் ஈசனாக இருப்பானோ என்ற ஐயம் எழ , அவர் பூமியை ஊன்றிப்பார்க்கையில் அங்கே இறைவனின் வாகனமான ரிஷபத்தின் பாதச்சுவடுகளைக் கண்டார். அச்சுவடுகள் தரையில் தொடர்ந்து காணப்படவே அவர் அதனைப் பின்பற்றி தொடந்து நடந்தார். அந்த காலடிச் சுவடுகள் முடிவடைந்து போன பகுதி பனங்காட்டூரில் இருந்த ஒரு சிவாலயம். அதனால் தனக்கு கட்டமுது அளித்தது அந்த சர்வேசுவரன் என உறுதி படுத்திகொண்ட சுந்தரர் அப்போது இயற்றிய தேவாரப்பாடலின் முதலடிவிடையின் மேல் வருவானைஎன்ற வரியை கொண்டு அமைந்தது.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

ஒரு சமயம் தமிழ் முனிவர் அகத்தியர் வடக்கிலிருந்து தென் திசை மார்க்கமாக யாத்திரை புரிகையில் பனை மரங்கள் சூழப்பட்டிருந்த பனங்காட்டிற்கு வந்தார். அப்போது முனிவர் தான் கொண்ட ஞான சக்தியால் அப்பகுதி மண்ணுக்குள் சிவன் உறைந்துள்ளதை உணர்ந்து அங்கேயே அமர்ந்து தவம் மேற்கொண்டார். சில காலங்கள் செல்ல, இறைவன் புதைந்திருப்பது அவருக்கு புலப்படவே , அங்கே, அப்பகுதியில் அவருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த கோட்டை முனீஸ்வரன் என்ற யோக நந்தர் உள்ளிட்ட சிலரின் துணையுடன் புமியைத் தோண்ட செய்ய, அங்கே ஒரு சிவலிங்கம் காணப்பட்டது. அதனை சுத்தப்படுத்த தண்ணீர் வேண்டுமே என முனிவர் சிந்தித்த அதே வினாடி வானிலிருந்து ஈசனின் ஜடாமுடியிலிருந்து ஒரு சொட்டு நிர் பூமியில் சிந்தி விட அதுவே ஆலய தீர்த்தமானது.

அபிஷேகிக்கப்பட்ட லிங்கத்திருமேனிக்கு ஏதேனும் நைவேத்தியம் செய்ய வேண்டுமே என அகத்தியர் யோசிக்கும் போதே, முன்பே அவ்விடத்தை விட்டு அகன்றிருந்த கோட்டை முனீஸ்வரன் , அப்பகுதியில் நிறைந்து காணப்பட்ட பனைமரங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதை உலுக்கி விழுந்திருந்த பனம்பழங்களை அங்கு கொணர்ந்து வைக்க, அகத்தியர் அதையே அன்புடன் இறைவனுக்கு நைவேத்தியம்செய்து மகிழ்ந்தார். இப்படி பனம்பழத்தை நைவேத்தியமாக ஏற்றுகொண்ட இறைவனின் திருநாமம்தாலபுரீஸ்வரர்ஆக, உடனுறை தேவி அமிர்தவல்லி எனும் தூலகோமளபிதாம்பாள் என்ற திருநாமம் கொண்டு அழைக்கப்பட்டுவந்தாள்.

இதே திருத்தலத்தில் வேறொரு தனி சந்நிதியில் மற்றொரு சிவ பிரான் குடிகொள்ள காரணமானவர் மகரிஷி புலஸ்தியர். அம்முனிவர் தென்னகத்தில் உள்ள பல சிவாலயங்களை தரிசித்து வருகையில் , பனங்காட்டூர் வந்தடைந்தார். அவ்விடத்தில் தங்குவதற்கு விரும்பிய புலஸ்தியர், தனது தினசரி வழிபாட்டிற்காக ஒரு சிவலிஙத்தை பிரதிஷ்டை செய்தார். அங்கே இச்சிவன் கொண்ட திருநாமம் தான் கிருபாபுரீஸ்வரர் உடன் எழுந்தருளப்பெற்ற அம்பாள் கிருபாநாயகி

இப்படி இரண்டிரண்டு சிவன் , அம்பாள் எழுந்தருளப்பெற்ற சிவாலயத்திற்கு அப்போது நாட்டையாண்ட சோழ மன்னர்களும் , பின்பு ஆட்சிக்கு வந்த விஜயநகர மன்னர்கள், சம்புவராயர்கள், என பலப்பல ஆட்சியாளர்கள் நிறைய ஆலயத்திருப்பணிகள்செய்ய இந்த சிவாலயம் விரிவாக்கமும் புகழும் பெற்றது.

திருப்பனங்காடு ஆலய தீர்த்தத்தின் பெயர் ஜடா கங்கை தீர்த்தம். வன்னி மரம் இத்தல விருட்சம். ஜடா கங்கை தீர்த்தம் தவிரஊற்றுக்குழிஎன்ற தீர்த்தமும் பாலாறு நதியும் இவ்வூர் தீர்த்தங்களாகின்றன.

கிழக்கு திசை பார்த்த இந்த சிவன் கோயிலின் மாட கோபுரத்தின் உட்புகும் முன் வெளியே அமைந்துள்ள ஜடா கங்கை தீர்த்தத்தில் இறங்கி நம்மை சுத்தம் செய்துகொண்டு அங்கே எழுந்தருளியுள்ள கோட்டை முனீஸ்வரரையும், வன்னி மரத்தடியில் குடிகொண்டுள்ள சனி பகவானையும் வணங்கிக்கொள்ளலாம்.

நுழைவாயிலின் மேலே நம்மை ஆசிர்வதிக்க குடிகொண்டுள்ளார் ரிஷப வாகனருடரான ஈசன். ஆலயம் உள் செல்ல தனித்தனியே இரண்டு ஆலயக் கொடிமரங்கள், இரு நந்திகள், இரு பலிபீடங்களை காணலாம். அதையடுத்து தரிசிக்க கிட்டுவது மூன்று நிலைகள் , ஐந்து கலசங்கள் கொண்ட கம்பீர ராஜகோபுரம். இத்திருக்கோயிலின் அழகிய விமானம் கொண்ட பெயர்அற்புத கஜ பிருஷ்ட விமானம்என்பதாகும்

மகாமண்டபமும் அங்குள்ள தூண்களில் கலை நுணுக்கஙக்ளுடன் கூடிய சிற்பங்களும் நம்மை கவரும் வகையில் அந்த ஆலயத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்துள்ளது மூடு தலங்கொண்ட முதல்பிராகாரம்.

பிறகு நாம் இரண்டு தனித்தனி சந்நிதிகளில் குடிகொண்டுள்ள அருள்மிகு தாலபுரீஸ்வரர், அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் எனும் நாமம் கொண்டுள்ள லிங்க வடிவ இறைவனை தரிசிக்கலாம்.

அது போன்றே இவ்வாலய வெவ்வேறு சந்நிதிகளில் கருணைக் கோலம் கொண்ட அருள்மிகு அமிர்தவல்லி அம்பாள், அருள்மிகு கிருபாநாயகி அம்பாளையும் தரிசித்து நமது பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கலாம்.

இவ்வாலயத்தில் குடிகொண்டுள்ள பரமனுக்கும் , தேவிக்கும் புது வஸ்திரம், புது புடவை சாற்றி வழிபட்டு பனம்பழத்தை நைவேத்தியம் செய்யும் மணமாகாத பக்தர்களுக்கு விரைவில் திருமண யோகமும், புத்திர பேறு அல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்றும் நம்பப்படுகிறது.

இவ்வாலயப் பிராகாரங்களில் பக்தர்களுக்கு ஆசி வழங்க தல கணபதி, மகாலிங்கம், விசாலாட்சி உடனுறை விசுவநாதர், அறுபத்துமூவர், கஜலெட்சுமி, மீனாட்சி சுந்தரேசுவரர், வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான், சிவகாமி உடனுறை நடராஜர், சண்டேசுவரர், குடிகொண்டுள்ளனர். தவிர இத்திருக்கோயிலின் சிவ ஸ்தாபனங்கள் புரிந்த மகரிஷிகள் அகத்தியர், புலஸ்தியர் ஆகியோரின் திருவுருவங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன

தினசரி நான்கு கால பூஜைகளும், விசேட தினங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் கொண்ட இத்திருக்கோயிலின் வழிபாட்டு நேரம்

காலை 6 மணி முதல் பகல் 11.30 வரை

மாலை 5 முதல் இரவு 7.30 வரை

இங்கே ஆண்டு பிரம்மோற்சவம் மாசி மாதத்தில் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. விழாவின் நான்காம் நாள் மகான் சுந்தரருக்கு இறைவன் கட்டமுது வழங்கும் விழா நடத்தப்பட்டு, ஈசன் ரிஷபாரூடராக பக்தர்களுக்கு காட்சியளிக்க எழுந்தருளச் செய்யப்படுகிறார்.

திருப்பனங்காட்டூர் திருத்தல தரிசனம் புரிவோர் , காஞ்சிபுரத்திலிருந்து தென் மேற்கே 15 கி,மீ சாலைப்பயணம் மேற்கொள்ளலாம். ஆற்காட்டிலிருந்து அங்கு செல்ல விரும்புவோர், பேருந்து, வாடகை கார் , ஆட்டோக்கள் மூலமும் செல்லலாம். ,

About கீதா சுப்பிரமணியன்

கீதா சுப்பிரமணியன்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவர் கீதா சுப்பிரமணியன். இயற்பெயர் நாராயணி. எழுத்தாளரான இவருடைய கணவரின் விருப்பப்படி கீதா என பெயரை மாற்றிக்கொண்டார். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் -2

வீர பல்லாளன் காளிங்கராயன் பாண்டியன் ஐந்தாம் சடையவர்மன், சோழ மன்னர்கள் (1018-1246), சேர மன்னர்கள் (1291-1342) போன்ற மன்னர்கள் இக்கோவிலில் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன