முகப்பு / ஆலய தரிசனம் / திருமாகறலில் திருக்காட்சியருளும் ஈசுவரன்!!

திருமாகறலில் திருக்காட்சியருளும் ஈசுவரன்!!

”காலையொடு துந்துபிகள் சங்குழல்
யாழ் முழுவு காமருவுசீர்
மாலை வழி பாடு செய்து மாதவர்கள்
ஏந்தி மகிழ் மாகறலுனான்
தோலையுடை பேணியதன் மேலோர் சுடர்
நாக மசை யாவழகிதாப்
பாலையன நீரு புனை வானடியை
யேத்த வினை பறையுடை மூலனே”

என பெருமையாக திருஞானசம்பந்த சுவாமிகளால் தேவாரப் பாடல் பெற்ற சர்வேஸ்வரன், 12 திருநாமங்கள் பூண்டு எழுந்தருளிய சிறப்புத் தலமாக விளங்குகிறது திருமாகறல் தலம். அத்தனை நாமங்களும் காரணப் பெயராகவே கைலாயநாதனுக்கு அமைந்துள்ளது.

ஈசன் சுயம்புலிங்கமாக தோன்றி இங்கு காட்சியருள்வதால் அவர் “ நிலையிட்ட நாதர்” எனவும்,

பிரம்மன் , இந்திரன் மாகறன் போன்றோர் இந்த பரமேசுவரனை வழிபாடு செய்து தங்களுடைய மனோலயம்படி வரங்கள் பெற்ற காரணத்தால் “ ஆபத்சகாயர்” என்றும்,

ஒரு சந்தர்ப்பத்தில் மன்னன் இராஜேந்திர சோழனைத் தடுத்தாட்கொண்ட நிகழ்வால் “தடுத்தாட் கொண்ட நாதர் “ எனவும்,

பூமியில் அமைந்த புற்றைத் தோண்டிய தருணத்தில் கடப்பாரையால் அவர் உடலில் தழும்பு உண்டானதால் “ பாரத் தழும்பர்” எனவும்,

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

தன்னை சரண் புகுந்த காதல் தேவதை ரதியின் மாங்கல்யத்தை காத்தருளியதால் மங்கலம் காத்த நாதர் எனவும்,

அசுரன் மாகறன் என்பவன் கடுந் தவம் புரிந்து தன்னை வழிபட , அவனுக்கு அருளியதால் மாகறலீசுவரர் எனவும்,

ஒரு சமயம் சந்திரனும் அவன் துணைவி தாரையும் செய்த பிழையை சிவபெருமானிடம் ஒத்துக் கொண்டு மன்னிப்பு கோர , அதனை இறைவன் பொறுத்துக் கொண்டதால் “ பரிந்து காத்த நாதர் எனவும்,

தன்னை பிரார்த்தனை செய்து வேண்டிய மன்னன் இராஜேந்திரனுக்கு அவர் அருளும் வகையில் உடும்பு வடிவில் திருக்காட்சி தந்த காரணத்தால் “ உடும்பீஸ்வரர் “ எனவும்,

அதன் பின் அந்த கைலாயவாசி உடும்பு வடிவிலேயே பூலோக புற்று ஒன்றில் தன்னை மறைத்துக் கொண்டதால் “ புற்றிடங் கொண்ட நாதர் “ எனவும்
மகரிஷி காஷ்யபர் நடத்திய வேள்விக்கு ஏற்பட்ட இடையூறை நீக்கி காத்தமையால் ”மகம் வாழ்வித்த நாதர் “ எனவும்,

ஒரு காலத்தில் காதி என்ற பெயருடையவரின் புதல்வர்கள் இந்திராதி தேவர்களுக்கு இழைத்து வந்த கொடுமைகளை ஒழித்து அவர்களை மீட்டதினால் “ அடைக்கலம் காத்த நாயகர் “ எனவும் பக்தர்களால் அழைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறார்.

இத்தனை சிறப்புகளைக் கொண்ட பரந்தாமன் குடி கொண்டுள்ள தலம் எங்குள்ளது?

தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற தலங்கள் 32ல் ஏழாவதாக இடம்பெற்றுள்ள மாகறல் தலம் , புகழ் பெற்ற காஞ்சிமா நகருக்கு தெற்கே 15 வது கி.மீ. தூரத்தில் காஞ்சிபுரம்- உத்திரமேரூர் நெடுஞ்சாலையில் “ சேயாற்றின் “ வட கரையில் அமைந்துள்ளது.

இத்தலத்தில் சிவன் ”ஸ்ரீ திருமாகறலீஸ்வரர் ” என்ற திருநாமத்துடன் அன்னை ஸ்ரீ திருபுவனநாயகியுடன் கோயில் கொண்டுள்ளார். இவாலயக் கல்வெட்டுகளில் ஈஸ்வரன் கொண்ட திருநாமம் “ திரு மாகறனுடைய நாயனார் “ என்று காணப்படுகிறது.

மன்னர்கள் இரண்டாம் இராஜ ராஜ சோழன், மூன்றாம் குலோத்துங்கன் , மூன்றாம் இராஜ ராஜன், , முதலாம் கடையவர்மன், சுந்தர பாண்டியன், விஜய நகர அரசர்கள் போன்றோர்கள் இவ்வாலய விரிவாக்கம், திருப்பணிகள் , பூஜைக் கட்டளைகள் இவைகளுக்கு காரணமாக விருத்தத்தைக் குறிக்கும் கல்வெட்டு ஆதாரங்கள் இங்குள்ளன.

திசைக்கு ஒன்றாக இந்திர தீர்த்தம், இமய தீர்த்தம், நிருதி தீர்த்தம், வருண தீர்த்தம், வாய் தீர்த்தம், குபேர தீர்த்தம், ஈசான தீர்த்தம், , அக்னி தீர்த்தம், என எட்டு தீர்த்தங்களைக் கொண்டுள்ளது.

திருமாகறல் திருத்தல வரலாற்றில் சில-

உலகை படைக்கும் பிரம்மனுக்கு , எல்லாம் தன்னால்தான் நடைபெறுகிறது என்ற அகம்பாவ உணர்வு பற்றிவிட்டது. அதன் விளைவு…? அவர் கொண்ட ஆக்க சக்திகள் அவரை விட்டு விலகி விட்டன. தடுமாறும் உலகை நிலை நிறுத்த எல்லாம் வல்ல பரமேஸ்வரனால்தான் முடியும் என்றுணர்ந்த தேவர்கள் , மகரிஷிகள், அவரை நாடி தொழுதனர். உளம் கனிந்த சிவபெருமான் , பிரம்மனை அழைத்து வேணுபுரமாகிய மாகறல் ஊருக்குச் சென்று தன்னை துதித்து வழிபாடு செய்ய ஆக்ஞையிட்டார்.

வேணுபுரம் சென்ற பிரம்மன் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி , தினமும் அதில் ஸ்நானம் செய்து சிவ தவம் மேற்கொண்டார். தவத்தை மெச்சும் வகையில் சிவபிரான் பிரம்மனுக்கு காட்சியளித்து அவர் அகந்தையில் பறிகொடுத்த படைப்பு சக்திகளை மீண்டும் தந்து பிரம்மதேவனை மகிழ்வித்தார். பிரம்மதேவன் தன்னுலகுக்கு திரும்பும் முன்பாக திருமாகறலில் ஒரு அதிசய பலா மரத்தை சிருஷ்டித்தார். உரிய காலத்தில் அம்மரம் காய்க்க ஆரம்பிக்கவே , படைப்புத் தேவன் இட்ட கட்டளையின் படி பலாக் கனிகளில் ஒன்று பரமேஸ்வரனுக்கும் , மற்றொன்று உமாமகேசுவரிக்கும், மூன்றாவதாக தில்லையெம்பெருமாளுக்கும் நைவேத்தியம் செய்யப்பட்டு வந்தது.

அக்காலத்தில் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவன் இராஜேந்திர சோழன். அம்மன்னன் இட்ட உத்தரவின் படி தினமும் நைவேத்தியம் செய்யப்பட்ட ஒரு கனி, அந்தணர்கள் மூலம் உறையூர் அரண்மனைக்கு அனுப்பபட்டு வந்தது. ஆனால் ஒருநாள் அந்த கனி பிரசாதம் மன்னனுக்கு கிடைக்கப்பெறாததால் மிகுந்த வருத்ததுக்குள்ளானான். அதன் காரணம் அறிந்துகொள்வதற்காக சோழனே தன் பரிவாரங்களுடன் திருமாகறலுக்கு வந்துவிட்டான்.

மன்னன் நடத்திய விசாரனையில் இருந்து, கனி தரும் அந்த பலா மரத்தை தினமும் கனி பிரசாதம் கொண்டு வரும் அந்தணர்களே எதனாலோ வெட்டி அழித்துவிட்டது தெரியவந்தது. சினம் கொண்ட அரசன் அவர்களை தண்டித்துவிட்டு , உறையூருக்கு புறப்பட்டு ஊர் எல்லைப்பகுதிக்கு வந்தபோது திடீரென மன்னன் முன் ஒரு பொன்னிற உடும்பு பளிச் என்று ஒளி கொண்டு ஓடியது. அதனை சோழன் உள்ளிட்டோர் தேடி அலைகையில் அந்த தெய்வீக உடும்பு அங்குள்ள புதர் ஒன்றுக்குள் மறைந்துவிட்டது. அப்பகுதிக்கு அனைவரும் சென்று பார்த்தபோது , சோழன் கண்ணில் உடும்பின் வால் பாகம் லிங்க ரூபமாக காட்சி தந்தது. அதனைக் கண்டு அங்குள்ளோர் ஆச்சரியப்பட்டு நிற்கையில் , விண்ணில் ஒரு அசரிரீ ஒலித்தது.

“ மன்னா ! இங்கே ஒரு சிவாலயம் கட்டுக! பிறகு பூஜைகள் நடத்தி குடமுழுக்கு செய்க! அன்றைய தினம் கோமுகம் வழியே வெளிப்படும் எலுமிச்சை விதையை பூமியில் ஊன்றி வளர்த்து வருக ! அது கனி தரும் தினத்தில் அதனைக் கொண்டு பிரதிஷ்டையாகும் ஈசனுக்கு அபிஷேகம் புரிக! பின்பே நீ தலைநகர் திரும்பலாம் “ எனறது அந்த அசரிரீ.

அதன்படியே மன்னன் சிரத்தையுடன் செயல்பட்டு ஆலயம் எழுப்பி , எலுமிச்சை கனி தனக்கு கிடைத்ததும் அதனை கொண்டு சிவனுக்கு அபீஷேகம் செய்து தன் தலைநகர் திரும்பினான். இன்றைய திருமாகறலீசுவரர் திருக்கோயில் அமைய இந்த சோழ மன்னனே காரணமானான்.

இவாலயத்தில் குமரகுருபரன் குடிகொள்ள பின்வரும் நிகழ்ச்சியே காரணமாக அமைந்தது.

சூரபத்மனை கடும் போரில் வென்ற முருகப்பெருமான் தெய்வானையை திருப்பரங்குன்றத்தில் மணம் புரிந்து கொண்டார். தேவர்களின் தலைவன் இந்திரன் அப்போது முருகனிடம் வேண்டுகோள் விடுத்தபடி தன் துணைவி தேவயானையுடன், இந்திரனின் வெள்ளை யானையில் அமர்ந்து அனைவருக்கும் காட்சியளித்தார். அதனை கண்டுகளித்த மகாவிஷ்ணு , இதே தோற்றத்தில் முருகன் திருமாகறலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அநுகிரகம் செய்யக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க முருகனும் வெள்ளையானையில் அங்கு எழுந்தருளினார் என தல புராணம் சொல்கிறது.

அழகான உயர ராஜ கோபுரமும் , அருகில் ஆலய தீர்த்தமும் கொடி மரம், பலிபீடம் இவற்றைக் கொண்டு சிறப்பான திருக்கோயிலாக இந்த ஈசுவரன் கோயில் காட்சிதருகிறது. அகண்ட பிரகாரம், சண்டீசர் உள்ளிட்ட சிவாலய அனைத்து பரிவார தேவதைகளும் இவாலயத்தில் குடி கொண்டு அருள்பாலிக்கின்றனர்.

திருமாகறலீசுவரர், தேவி திருபுவன நாயகி ஆகியோர் தனித்தனி சந்நிதியில் எழுந்தருளி திருக்காட்சி தருகின்றனர். இவர்களை வழிபட்டு மகபேறற்ற தம்பதிகள் விரைவில் குழந்தை பேறை அடைவதாக இங்கு வரும் பக்தர்கள் கூறுகிறார்கள். தவிர பக்தர்களை பற்றியிருக்கும் தீவினைகள் அழிந்து விடும் என்பதும் அவர்கள் கொண்ட நம்பிக்கையாகிறது.

இத்திருக்கோயிலில் தனி சந்நிதியில் தேவி சமேத ஸ்ரீ சுப்பிரமணியன், வெள்ளையானையுடன் தரிசனம் தருகிறார்.

தனி நவகிரக சந்நிதியில் ஒன்பது கோள்களும் குடி கொண்டு அருள்புரிகிறார்கள்.

தினசரி காலை 6: 30 மணி முதல் பகல் 11:30 வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8: 30 வரையும் ஆலய தரிசனம் செய்யலாம்.

ஆண்டு பிரம்மோற்சவம் மாசி மாதத்தில் 10 நாட்கள் சிறப்பாக நடத்தப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்கது 5ம் நாளில் நடைபெரும் சிறப்பு நிகழ்ச்சி. ஸ்ரீ ஆதி குமரகுருபரரின் நினைவு நாள் இங்கே விமரிசையாக நடத்தப்படுகிறது. மற்ற சிவ புண்ணிய தினங்களிலும் இங்கே சிறப்பு வழிபாடுகள் உண்டு.

மன நிம்மதி பெற விரும்புவோருக்கு, நிம்மதி ரும் ஆலயமாக அருள்மிகு திருமாகறலீசுவரர் திருக்கோயில் விளங்குவதாக மக்கள் நம்புகிறார்கள்

About கீதா சுப்பிரமணியன்

கீதா சுப்பிரமணியன்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவர் கீதா சுப்பிரமணியன். இயற்பெயர் நாராயணி. எழுத்தாளரான இவருடைய கணவரின் விருப்பப்படி கீதா என பெயரை மாற்றிக்கொண்டார். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் -2

வீர பல்லாளன் காளிங்கராயன் பாண்டியன் ஐந்தாம் சடையவர்மன், சோழ மன்னர்கள் (1018-1246), சேர மன்னர்கள் (1291-1342) போன்ற மன்னர்கள் இக்கோவிலில் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன