முகப்பு / ஆலய தரிசனம் / பொங்கு சனீஸ்வரர் மகிழ்ச்சி பொங்க அருளும் திருக்கொள்ளிக்காடு.

பொங்கு சனீஸ்வரர் மகிழ்ச்சி பொங்க அருளும் திருக்கொள்ளிக்காடு.

நிணம் படு சுடலை மினீறு பூசி நின்

றிணங் குவர் போய்களோடி டுவர் மாநடம்

உணங்கல வெண் டலை தன்னில் உண்பாராயினும்

குணம் பெரி துடையர் நங் கொள்ளிக்காடரே!

என்று தொடங்கும் முதல் பதிகத்தோடு திருஞான சம்பந்தர் இயற்றியருளிய மொத்தம் 11 திருப்பதிகங்களிலும் துதித்து வணங்கிய தலமாக விளங்குகிறது திருக்கொள்ளுக்காடு.  

கொள்ளிஎன்ற சொல் தமிழில் அக்னி , தீ என்ற பொருளைத் தரும். அது பஞ்ச பூதங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

இத்தலம், அக்னிபுரம், அக்னீசுவரம் என்றும் வழங்கப்படுவதன் காரணம் , ஒரு காலத்தில் அக்னி தேவன் தனக்கு விளைந்த சாபமொன்றைப் போக்கிக் கொள்ள , இங்கு குடி கொண்டுள்ள ஈசனை வழிபட்டு , சாப விமோசனம் பெற்றதுதான்..

வேறொரு சந்தர்ப்பத்தில் சூரியன் கொண்ட அதிக வெப்பத்தால் அவருடைய மனைவியர் உஷாதேவி, சாயாதேவி இருவரும் கணவருடன் மகிழ்ச்சியாக இருக்க இயலாத நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்கு தக்க நிவாரணம் பெற கதிரவனும் அவருடைய துணைவியர் இருவரும் திருக்கொள்ளிக்காடு தலம் வந்து அருள்மிகு பஞ்சினும் மெல்லடியாள் உடனுறை அக்னீசுவரரை வழிபட்டு , தங்களுடைய மனக்குறையை எடுத்துக் கூறினார்கள். அதனை செவிமடுத்த ஈசன், அவர்கள் பால் இரக்கம் கொண்டு , திருக்காட்சியளித்து , அவ்வூர் திருக்குள நீரில் மூவரையும் சற்று நேரம் நிற்கும்படி ஆணையிட்டார். அவ்வாறே அவர்கள் நின்றனர். சிறிது நாழிகையில் கதிரவன் கொண்ட அதீத வெப்பம் குறைந்தது. அதன் பின் கரையேறி வந்த தம்பதியருக்கு மீண்டும் காட்சி தந்த அக்னிஸ்வரர்சூரியா! உங்கள் குடும்பக் கவலை இன்றோடு தீர்ந்தது. விரைவில் உனது இரு மனைவியரும் புத்திர பேறு அடைவார்கள்என அருளி மறைநதார். அதனால் மிகுந்த மகிழ்வோடு தன் இருப்பிடம் வந்தார் கதிரவன்.

அதன் பின் சர்வேசன் அருளியவாறு சூரியனின் மனைவியர் இருவரும் கருவுற்று இரண்டு புதல்வர்களை ஈன்றனர். உஷாதேவியின் மகன் எமன் என்றும், சாயாதேவியின் புதல்வன் சனி என்ற நாமகரணத்தோடு வெகு அன்போடு சூரியத் தம்பதிகள் வளர்த்து வந்தனர்.

உரிய பிராயம் வந்ததும் பரமேசுவரன், தர்மத்தின் படி விதி முடிந்தவர்களின் உயிரை கவரும் பணியை எமனிடமும், கிரகப் பதவியை சனியிடமும் அளித்துவிட்டு , ஒவ்வொரு மானிடனும் புரியும் கர்மாவிற்கு ஏற்ப அவர்களுக்கு தண்டனை அளித்து , அவர்களை நெறிப்படுத்தும் பணியையும் ஒப்படைத்துவிட்டார்.

எமனும், சனியும் அவரவர்கள் தங்களுக்குரிய கடமையை சரியாக செய்து வந்தனர். சனி செய்த தண்டிக்கும் தொழில், தேவர்கள், மானிடர்கள், அரக்கர்கள் என அனைவரையும் கடுமையாக பாதித்துவிட்டதால் அவர்கள் அனைவருமே சனி கிரகத்தை வெறுக்கவும், காணவே அச்சமும் கொண்டு விட்டனர். இச்செயல்கள் சனிக்கு பெரும் வேதனையை தந்தது.

தான் பெற்ற மனத் துன்பத்தை தான் பெரிதும் மதித்து வரும் மாமுனி வசிஷ்டரிடம்  தெரிவித்தார் சனி பகவான். அப்போது, அவர் ஒரு ஆலோசனை வழங்கினார். அதன் படி சனி , அக்னி வடிவமான திருக்கொள்ளிடக்காடு வந்து கடும் தவம் மேற்கொண்டார். இதனால் மனமிரங்கி சனிக்கு , அக்னி வடிவில் ஈசன் காட்சியருளினார். ” உனது வேதனையறிந்த யாம், நீ பொங்கு சனியாக உருவெடுக்க அருள்வோம். இனி உன் கரங்களில் இதுகாறும் இடம் பெற்றிருந்த தண்டனை தரும் ஆயுதங்களுக்கு பதிலாக , ஏர்க்கலப்பையை நீ ஏந்தி `காகக் கொடியுடன் அனைவருக்கும் நீ காட்சியளிப்பாய்என உரைத்து ஈசன் மறைந்தார். இவ்வரத்தால் பொங்கு சனியாகிவிட்ட சனி கிரகத்தின் மனம் மகிழ்ச்சியில் பொங்க ஆரம்பித்தது.

புதிய அவதாரமாகிவிட்ட சனீஸ்வரர் , சிவன் இட்ட கட்டளைப்படி , தவறாது கடமை புரிந்ததால் அவரை வழிபாடு செய்த பக்தர்களின் அனைத்து பலன்களும் தூள் தூளாகிவிட்டன. அது மட்டுமல்லாது, வேண்டுவோர்க்கு வேண்டியவற்றை அருளும் வரப்பிரசாதியாகவும் சனி திகழ்ந்தார்.

தஞ்சை காவிரிக்கரையில் அமைந்த தென் திருக்கோயில்களில் 115வது ஆலயமாக விளங்குகிறது. இக்கோயிலின் தல விருட்சமாக இருப்பது வன்னி மரமென்ற அக்னி மரமாகும். இதன் இடப்புறம் உள்ளது அக்னி தீர்த்தம் என்ற தல தீர்த்தமாகும். இத்திருக்குளத்தில் பக்தியுடன் நீராடுவோர், மனநிலை பாதிக்கப்பட்டவராகவும், வறுமையில் வாடுவோராகவும் இருந்தால் , அவர்கள் குறைகள் தீர்ந்து வளமான உடலும் சீரான வாழ்வும் பெறுவார்கள் என்பது திண்ணம்.

கம்பீரக் கொடி மரம், பலிபீடம், நந்தி இவைகளுடன் எழிலான ராஜகோபுரமும் நம் முன் காட்சி தரும்

அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை , தன்னை பூஜித்து வழிபடும் தேவர்கள், , மகரிஷிகள், மானிடர்களுக்கு அருளிவரும் அருள்மிகு அக்னீசுவரர் என்ற கொள்ளிக்காடர், தனி சந்நிதி கொண்டு சிறிய லிங்கத் திருமேனியராய், அகண்ட ஆவுடையாரில் திருக்காட்சியளிக்கிறார்.

பஞ்சு தோய் மெல்லடி பாவையாளோடும்

மஞ்சு தோய் கயிலையுள் மகிழ்வார் நாடொறும்

வெஞ்சின மருப்போடு விறைய வந்தடை

குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக்காடரே!

என்ற பாடல் பெற்ற இந்த சர்வேசுவரனை மனமுருகப் பிரார்த்தித்து பூஜிப்போருக்கு , அவர் ஆரோக்கிய வாழ்வுடன், அனைத்து வகை செல்வங்களையும் அருள்கிறார் என்பதை பக்தர்கள் மூலம் அறியமுடிகிறது.

அடுத்து , தனி அழகிய சந்நிதி கொண்டு , சிறிய கருவறையில் எழிலாய் காட்சித் தரும் அம்பாளின் திருநாமம் பஞ்சினும் மெல்லடியாள்.. அபய, வர ஹஸ்தம் காட்டி கருணையுடன் நின்ற நிலை அருட்காட்சி கொண்ட இவ்வன்னை கொண்ட சிறப்பு, தன்னை வேண்டுவோர்க்கு  மன அமைதி அளித்து பூரண ஆயுள் உள்ளிட்ட வரங்களையும் அருள்வதே என்கிறார்கள் இங்கு வரும் பக்தர்கள்.

திருக்கோயிலின் பிரகாரத்தில் தனி சந்நிதியில் குடிகொண்டுள்ள முருகன், வள்ளி தேவசேனாவுடன் வேலுக்கு பதில் வில்லேந்தி வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கிறார். எடுத்த காரியத்தில் வெற்றியடைய விரும்புவோர் இவரை வழிபடுகின்றார்கள்.

அங்கேயே கனிவு பொங்க, தனி சந்நிதி கொண்டு , அருட்காட்சியளிக்கும் தேவி மகாலட்சுமியை தரிசிக்க , மனம் நிறைகிறது.

திருக்கொள்ளிக்காட்டில் குடிகொண்டு அருள்பாலிக்கும் பரமேசுவரனை விட ஒரு படி அதிக பக்தி கொண்டு வணங்கப்படுகிறார் பொங்கு சனீஸ்வரர். அவரால் பக்தர்கள் அடையும் அநேக நம்மைகளால்.

திருமகள் வீற்றிருக்கும் சந்நிதிக்கு அடுத்த பகுதியில் தனித்து கோயில் கொண்ட பொங்கு சனீஸ்வரர் , தனி விமானமும் , தனி மூர்த்தமும், தனி மண்டபமும் சிறப்புறக் கொண்டு , ஈசன் வழங்கிய ஏர்கலப்பையை ஏந்தி காட்சி தருகிறார். காகக் கொடி இந்த கிரகம் கொண்ட தனி சிறப்பு.

மந்தன், கர்மகாரன், என்ற பெயர்களையும் கொண்ட இந்த எட்டாவது கிரககாரருக்கு பிடித்த நைவேத்தியமாக உள்ளவை எள் சாதம், உளுந்து வடை, ஆகும். கறுப்பு பட்டு, கருநீலபபட்டு, கருங்குவளை மலர், நீலக்கல், கறுப்பு தொடர்பான பொருட்கள் ஆகியவையும் இவரின் வழிபாட்டுக்கு உரியவையே.

பொங்கு சனீஸ்வரரை தொடர்ந்து ஏழு வாரங்கள் மஞ்சள் நிறத்தில் உள்ள கொன்றைப் பூ கொண்டு வழிபட்டு கீழ் கண்ட சுலோகத்தை உச்சரித்து வந்தால் பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள் என்று நம்பப்படுகிறது.

காசியப கோத்ரதாரியும், கும்ப மிருகசீஷ தலைவரும் , மேற்கே மேற்கு முகமாக வில் போன்ற மண்டபத்தில் இருப்பவரும், நீண்ட ஆயுளை அளிப்பவருமான ஸ்ரீ சனி பகவான் சதா மங்களத்தை அருளட்டும். என்று பொருள் கொண்ட சுலோகம் இது.

“ ஸௌரி கிருஷ்ண ருசிஸ்ச பஸ்சிமுக;

ஸெராஷ்ட்ரப; காஸ்யப

நாத கும்ப ம்ருகர்ஷயோ; ப்ரியஸூஹ்ருத்

சுக்ர க்ஞ்யோர் மந்தக;

ஷட்த்ரிஸ்த; ஸூபதே போதனுகத;

சாபா க்ருதௌ மண்டலே

ஸந்திஷ்டன் சிரஜீவிதாதி பலத;

குர்யாத் ஸ்தாமங்களம் !!

பரமேசுவரனின் அம்சமான காலபைரவர் சந்நிதியும், நவகிரக சந்நிதியும் அமைந்துள்ளன. ஒன்பது கிரகங்களூம் ஒன்றையொன்று முகம் பார்க்காமல் , “ வடிவில் வித்தியாசமாக காட்சியளிக்கின்றன. இப்படியிருக்க காரணம் பொங்கு சனீஸ்வரர் இங்கு உள்ளதால் , அவர் கொண்ட சக்திகளை பிரயோகிக்க முடியாத நிலை என கூறப்படுகிறது.

திருக்கோயிலின் தென் திசையில் , தியான நிலையில் தட்சிணாமூர்த்தி சுவாமி, விநாயகர், காசி விசுவநாதரும் குடிகொண்டு அருள் பாலிக்கின்றனர்.

இவாலயத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக ராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டுக்கள் மூன்றும், முதலாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டுகள் இரண்டும் , முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டுகள் ஐந்தும் உள்ளன.

1500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட செங்கற் கோயிலாக இருந்த அக்னிபுரக் கோயிலை முதலாம் ராஜ ராஜ சோழன் புதுப்பித்துள்ளதையும், இன்னும் பல கோயில் திருப்பணிகள் இங்கே நடைபெற்றுள்ளதையும் இங்கே கண்ட கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது.

ஆண்டு பிரம்மோற்சவமும், மற்ற சிவாலயங்களில் நடக்கும் திருவிழாக்கள் இந்த ஆலயத்திலும்  பிரம்மாண்ட முறையில் இங்கு நடத்தப்படுகிறது. சனிப்பெயர்ச்சி விழாவன்று இத்தலத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் , பல நகர , ஊர்களில் இருந்து வந்து வழிபாடு செய்வது காணத்தக்கது. பிரதோஷ , வார சனிக்கிழமைகளிலும் பக்தர்கள் கூட்டம் இங்கு அதிகமாக இருக்கும்.

திருவாரூர்காரைக்குடி புகை வண்டி நிலையத்தில் இருந்து , நடுவில் இருக்கும் திருநெல்லிக்காவல் நிலையத்தில் இறங்கி மேற்கு நோக்கி 4 கி. மி தூரத்தில் பேருந்து அல்லது வாடகைக் கார் மூலம் திருக்கொள்ளிகாட்டுக்கு செல்லலாம்.

தினசரி காலை 7 மணி முதல் முற்பகல் 11.30 வரையும்

பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் மக்கள் தரிசிக்க ஆலய நடை திறந்திருக்கும்.

பொங்கும் மங்களம் எங்கும் தங்கட்டும் பொங்கு சனீஸ்வரன் அருளால்.

ஆலயத் தொடர்புக்கு 95853 82152 ,97913 66216

About கீதா சுப்பிரமணியன்

கீதா சுப்பிரமணியன்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவர் கீதா சுப்பிரமணியன். இயற்பெயர் நாராயணி. எழுத்தாளரான இவருடைய கணவரின் விருப்பப்படி கீதா என பெயரை மாற்றிக்கொண்டார். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் -2

வீர பல்லாளன் காளிங்கராயன் பாண்டியன் ஐந்தாம் சடையவர்மன், சோழ மன்னர்கள் (1018-1246), சேர மன்னர்கள் (1291-1342) போன்ற மன்னர்கள் இக்கோவிலில் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன