முகப்பு / ஆலய தரிசனம் / காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் -1

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் -1

ம் ஆன்மீக இந்தியாவின் மோட்சம் தரவல்ல நகரங்களாகக் குறிப்பிடப்படுகின்ற, அயோத்தி, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை ஆகிய ஏழில் “முக்தி தரும் நகரேழில் முக்கியமாம் கச்சி” என்று போற்றப்படுகிற காஞ்சி மாநகரமே தலை சிறந்ததாம். ”தொண்டை நாடு சான்றோர் உடைத்து” என்று புகழப்பட்ட காஞ்சி மாநகரம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதை, ஆழ்வார்கள், ஆச்சார்யர்களின் மங்களாசாசனம் மூலமாக அறிய முடிகிறது. தொண்டை நாட்டில் உள்ள இருபத்திரண்டு வைணவ, திருப்பதிகளில் 14 திருப்பதிகள் காஞ்சிபுரத்திலேயே அமைந்திருப்பதே இதன் சிறப்பாண்மைக்குச் சான்று. சென்னையிலிருந்து 80 கி.மீ தொலைவில் பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ளது காஞ்சி.
காஞ்சி மாநகரின் கீழ்க்கோடியில் அமைந்துள்ள அற்புதமான ஆலயம் அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயில் என்கிற “ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலயம். “அயர்வறு அமரர்கள் அதிபதி” என்று நம்மாழ்வார் தமது திருவாய் மொழியில் போற்றிப் பரவியிருப்பதற்கு ஆதாரமாக, இத்திருத்தலத்தில் மட்டுமே நம்மாழ்வார் ஞானமுத்திரையின்றி தம் மார்பில் கை வத்து எழுந்தருளியுள்ளதைக் காணலாம்.
இவ்வாலயத்தினுள் அத்திகிரி எனும் சிறு மலையின் மீது எழுந்தருளியுள்ள பெருமாள், அருளாளன், வரதராஜன், தேவாதிராசன் என பல திருநாமங்கள் கொண்டவராகிறார். அம்மை ஸ்ரீ பெருந்தேவித் தாயார் கிழக்கு நோக்கி, அமர்ந்த திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். இக்கோவிலை தரிசித்தால் திருப்பதி, திருவரங்கம், காஞ்சி பெருமாள் கோவில் ஆகிய மூன்று முக்கிய வைணவத் தலங்களையும் ஒருசேர தரிசித்த பலன் கிட்டும். திருமங்கையாழ்வார், (4) பூதத்தாழ்வார் (2), பேயாழ்வார் (1) ஆகியோரின் பாசுரங்களால் வரதராஜப் பெருமாள் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆலய அமைப்பு:
மிக உயர்ந்த கீழ்ப்புறத்துக் கோபுரமும், மற்ற கோபுரங்களும், நெடுமதில்களும் இவ்வாலயத்தின் புகழைக்கூட்டுவன. கிருட்டிணதேவராயர் காலமான 11ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இக்கோவிலின் இராஜகோபுரம் 9 நிலைகளுடன் 96 அடிகள் உயரம் கொண்டது. 16ஆம் நூற்றாண்டில் விஜய நகர மன்னர் உருவாக்கிய நூறுகால் மண்டபத்தில் நான்கு மூலைகளிலும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கற்சங்கிலிகள் அதிசயிக்கத்தக்க வகையில் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாகக் காட்சியளிக்கின்றன. 22 ஏக்கர் 28 சென்ட் நிலப்பரப்பில் அமைந்துள்ள இவ்வாலயம் அத்திகிரி, அத்தியூர், வாரணகிரி என்றும் அழைக்கப் பெறுகிறது. கிழக்கு மேற்காக 1050 அடி நீளமும், வடக்கு தெற்காக 675 அடி அகலமும், நெடிதுயர்ந்த சுற்று மதிற்சுவருடன், கிழக்கேயுள்ள 180 அடி உயர 9 நிலை இராச கோபுரமும், மேற்கேயுள்ள 160 அடி உயர 7 நிலை கோபுரமும், 5 பிரகாரங்களுடன் கருவறை 40 அடி உயரத்தில் இரண்டு அடுக்குகளாக 43 படிகள் அமைந்து புண்யகோடி விமானத்தின்கீழ் இரண்டாம் தளத்தில் மூலவர் வரதராஜப்பெருமாள் நின்ற திருக்கோலத்தில் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். அருள்நிறை அபயக்கரங்களுடன், தாமரையாய் மலர்ந்த மதிமுகமும், இலக்குமி தேவி உறையும் பரந்த திருமார்பும், இடக்கரத்தில் கதையும், மேலிரண்டு திருக்கரங்களில் சங்கு, சக்கரங்களும் தாங்கி, கருமாணிக்க மலையாய் ஒளி பொருந்தியவாறு காட்சியளிப்பவர் தேவாதிராசன் எனும் நம்பெருமாள். நகரம் முழுவதும் இவ்வாலயத்தின் மேற்குப் புறத்திலேயே அமைந்திருப்பதால் உற்சவங்கள் அனைத்திலும் மேற்கு கோபுர வாயில் வழியாகவே புறப்பாடுகள் நடைபெறுகின்றன. அனந்தசரஸ் திருக்குளம், பொற்றாமரை திருக்குளம் ஆகிய இரண்டு திருக்குளங்கள் அமைந்துள்ளன. ஆனந்தசரஸ் எனும் திருக்குளம் 78 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும் கொண்டது. இதன் நடுவில் 16 தூண்கள் கொண்ட மண்டபமும் உள்ளது.
அத்தி எனும் மரத்தாலான பெருமாள் திருவுருவம் இங்குள்ள திருக்குளத்தில் பள்ளி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மா நிறுவிய அத்திவரதரை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசிக்கலாம்! ஆம், முழுவதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய திருஉருவம். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி அத்திவரதப் பெருமானாரின் திருவுருவச் சிலையை வெளியில் எடுத்து, கோயிலில் பள்ளிகொள்ளச் செய்து 48 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் உற்சவங்கள் விமரிசையாக நடைபெறும். மக்கள் பார்வைக்கு வைத்தபின் அத்திருமேனியை மீண்டும் குளத்தில் முழுக வைக்கின்றனர். அத்திவரதரை தரிசிப்பதற்காக வெகு தொலைவிலிருந்தெல்லாம் மக்கள் வந்திருந்து பெருமாளைத் தரிசிப்பர். 1938 ஆம் ஆண்டிற்குப் பிறகு 1979 ஆம் ஆண்டுகளில் வெளியே எடுத்து 48 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. மீண்டும் 2019 ல் இவ்வரியக் காட்சிகள் காணக்கிட்டும்! குளக்கரையைச் சுற்றி ரங்கநாதர், இராமபிரான், சக்கரத்தாழ்வான் சந்நதிகள் அமைந்துள்ளன.
திருக்குளத்தின் கிழக்குத் திசையில் உலகிலேயே வேறெங்கும் காணவியலாத மிகப்பெரும் சக்கரத்தாழ்வார் திருமூர்த்தம் காணலாம். 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கியவாறு காட்சியளிக்கிறார். உற்சவ சக்கரத்தாழ்வாரைச் சுற்றி உள்ள அலங்கார வளைவில் 12 சக்கரத்தாழ்வார் திருவுருவங்கள் அமையப்பெற்றுள்ளதும் சிறப்பாகும்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஏறத்தாழ 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இவ்வாலயம். இந்த விஷ்ணு ஆலயம் 108 திவ்ய தேசங்களின் முப்பத்து ஒன்றாவது ஆலயம். மலை மீது அமைந்துள்ள இவ்வாலயம் மிகப்பிரம்மாண்டமானது. திருமங்கை மன்னனும், பூதத்தாழ்வாரும் பாடிய தலம்.
பல்லவ மன்னர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களாலும் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. இக்கோவில் கொடி மரத்தில் 24 அடுக்குகளும், கோவில் குளத்தில் 24 படிக்கட்டுகள் மற்றும் பெருமாளைத் தரிசிக்கச் செல்வதற்கும் 24 படிகளைக் கடந்து செல்ல வேண்டும். அதாவது 24 என்ற இந்த குறிப்பிட்ட எண் காயத்ரி மந்திரத்தின் 24 தத்துவங்களை உணர்த்துவதாகக் கூறப்படுகிறது.
பதினாறாவது நூற்றாண்டில் (1447-1642) விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட, ஆலயத்தின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள நூற்றுக்கால் மண்டபம் மிகச்சிறப்பான சிற்பங்களால் ஆனது. உயர்தர சிற்பத்திறனை வெளிப்படுத்தும் ஒன்றைக்கல் வேலைப்பாடுகளைக் காணலாம். இச்சிற்பக் கூடத்தில், வரிசைக்குப் பன்னிரண்டு தூண்கள் என எட்டு வரிசைகள்; யாளி, போர்க்குதிரை, குதிரைமேல் போர் வீரர்கள், சீதாக்கல்யாணக் காட்சிகள், வாலி வதம், சீதையிடம் இராமபிரானின் அடையாள மோதிரத்தை அனுமன் அளிக்கும் காட்சி, கிளி வாகனத்தில் அமர்ந்திருக்கும் ரதி, அன்ன வாகனத்தில் கரும்பு வில்லுடன் காட்சியளிக்கும் மன்மதன், தசாவதாரம் போன்று பல்வேறு சிற்பங்களின் கலைநயம் நம்மை ஆச்சரியத்தில் உறையச்செய்பவை. இவை தவிர சிறிய நான்கு தூண் மண்டபங்களும் உள்ளன .

About பவள சங்கரி

Avatar

மேலும் படிக்கவும்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் -2

வீர பல்லாளன் காளிங்கராயன் பாண்டியன் ஐந்தாம் சடையவர்மன், சோழ மன்னர்கள் (1018-1246), சேர மன்னர்கள் (1291-1342) போன்ற மன்னர்கள் இக்கோவிலில் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன