முகப்பு / ஆலய தரிசனம் / காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் -2

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் -2

வீர பல்லாளன் காளிங்கராயன் பாண்டியன் ஐந்தாம் சடையவர்மன், சோழ மன்னர்கள் (1018-1246), சேர மன்னர்கள் (1291-1342) போன்ற மன்னர்கள் இக்கோவிலில் பல திருப்பணிகள் செய்துள்ளனர். இராபர்ட் கிளைவ், கர்னல், லயோனல் பிளேஸ், தில்லி ஆலம்கீர் பாஷா போன்ற மாற்று மதத்தினரும் பெருமாளை வணங்கி பெருமளவில் காணிக்கைகள் செலுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இராபர்ட் கிளைவ் ஒரு முறை காஞ்சி வரதராசப்பெருமானாரின் கருட சேவை வைபவத்தைக் கண்டு களித்து அந்த தெய்வானுபவத்தில் மகிழ்ந்துருகி, தம் மனைவியின் கழுத்தில் அணிந்திருந்த ஆபரணமான மணிமாலையை எடுத்து பெருமாளுக்குக் காணிக்கையாகச் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. இன்றும் கருட சேவையன்று, ‘கிளைவ் மகரகண்டி’ என்ற பெயர்கொண்ட இந்த ஆபரணத்தை அணிவித்து வழிபடுகிறார்கள். உற்சவ காலங்களில் நூற்றுக்கணக்கான வேத விற்பன்னர்கள் திவ்வியப்பிரபந்தக் குழுவுடன் பெருமாள் நகர்வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
இவ்வாலயத்தின் காணவேண்டிய மற்றுமொரு சிறப்புக்காட்சி தங்கப் பல்லிகள் அறை. தேவேந்திரனை யானையாக ஆகுமாறு சரசுவதி தேவியின் சாபத்திற்கு விமோசனமாக அவர் அங்கு வந்து விஷ்ணுவை துதித்து வழிபட்டபோது அந்த நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் சாட்சியாக இருந்தவை அந்த இரு பல்லிகள் என்கின்றது புராணம்.
துர்வாசரின் சீடர்கள் இரு பாலகர்களிடம் பூசைக்கான தீர்த்தம் ஆற்றிலிருந்து எடுத்துவரப் பணித்திருந்தார். வரும் வழியில் அந்த தீர்த்தத்தை ஒரு மரத்தினடியில் வைத்துவிட்டு விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு பல்லி அந்த நீரில் விழுந்துவிட்டதாம்.சிறுவர்கள் இதையறியாமல் அந்த நீரை அப்படியே முனிவரிடம் கொடுக்க கோபப்பட்ட முனிவர் அவர்களை பல்லிகளாகச் சபித்துவிட்டார். அந்த இரண்டு பல்லிகளும் தேவேந்திரன் யானை வடிவிலிருந்து சாப விமோசனம் பெற்றபின் தாமும் சாப விமோசனம் பெற்றனவாம். தேவேந்திரன் அவர்களின் நினைவாக இரண்டு பல்லிகளை செய்து அந்த ஆலயத்தில் வைத்தாராம். இரண்டு பல்லிகளையும் வணங்குவதன் மூலம் ஒருவர் தாம் பெற்றுள்ள சாபங்கள் விலகுகின்றனவாம். யானையாக வந்து சாப விமோசனம் பெற்ற தேவேந்திரன் தவம் இருந்த மலையான யானை மலை இமயகிரி என்ற பெயர் பெற்றது. ஐராவதமே மலையுருவில் நம்பெருமாளைத் தாங்கியுள்ளமையால் இத்தலத்திற்கு அத்திகிரி என்ற திருநாமமும் வழங்கலாயிற்று. எம்பெருமானாருக்கு எதிரில் கிழக்கு முகமாக இருந்து பெருந்தேவி தரிசனம் அளிப்பது இந்த திவ்ய தேசத்தில் மட்டுமே கிடைக்கும் சிறப்பான காட்சியாகும்.
வருடத்தில் ஒருசில நாட்கள் மட்டுமே சூரியவொளிக்கதிர்கள் கருடாழ்வார் சன்னதிக்குப் பின்புறமுள்ள கருங்கல் சாளரம் வழியாக கருடனின் காதுகளில் உள்ள துவாரங்களின் மூலம் அவர்தம் எதிரில் உள்ள ஸ்ரீநரசிம்மர் திருமேனியில் வீழும் வண்ணம் அமைந்துள்ள மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் அதிசயிக்கத்தக்கது. இதற்கடுத்து மலைமேல் அமைந்துள்ள ஐந்தாவது பிரகாரமான, உட்பிரகாரத்திற்கு 24 படிகளைக்கடந்து செல்லவேண்டும். இதற்கு வைய மாளிகை என்று பெயர். இதனையடுத்து அம்மையின் காலட்சேபக்கூடம் அமைந்துள்ளது. வரதராசப்பெருமாள் ஆலயத்தின் நேர் எதிரில் கிழக்கு நோக்கிய நிலையில் ஆஞ்சநேயர் சந்நிதி அமைந்துள்ளது.
ஸ்ரீ மணவாள மாமுனிகள் சந்நிதிக்கு மேற்கில் திருமழிசை ஆழ்வார், ஸ்ரீமத் இராமானுசர் சந்நிதி, முதலாழ்வார்கள் சந்நிதிகளும் உள்ளன. தென்கிழக்கு மூலையில் திருமண மண்டபமும், தென்மேற்கு மூலையில் ஸ்ரீ வேதாந்த தேசிகர், ஸ்ரீ இலக்குமி குமாரதாத்தாச்சாரியார் சந்நிதிகள் உள்ளன. கொடி மரத்திற்கு மேற்கில் இரு சிறிய நான்கு தூண்களுடைய துலாபார மண்டபம் உள்ளது. விஜயநகர அரசர் அச்சுதராயரால் கட்டப்பட்ட இதில், 1532ஆம் ஆண்டில் நன்முத்துகளை துலாபாரமாக தானம் செய்த குறிப்பு அவரது கல்வெட்டில் காணமுடிகிறது.

தல புராணம்

ராமானுசரின் அறிவாற்றலின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட அவர்தம் ஆசான் யாதவப் பிரகாசர் என்பவர் அவரை கங்கை நதியில் தள்ளிவிட்டுக் கொன்றுவிடத் திட்டமிடுகிறார். தனது சகோதரன் மூலம் இந்தச் சதியை அறிந்துகொண்ட ராமானுசர் தப்பித்துச் செல்லும் வழியில் காடு குறுக்கிட பாதை அறியாது கலங்கி நிற்கிறார். அந்த நேரத்தில் பெருமானாரும், பெருந்தேவித் தாயாரும் வேடுவர் வடிவில் வந்து, அவரிடம் குடிக்கத் தண்ணீர் கேட்கிறார்கள். அவரும் அருகிலிருந்த சாலக்கிணற்றிலிருந்து நீர் எடுத்து வந்து தந்தவர், அவர்களுடனேயே பயணிக்கிறார். திடீரென அந்த வேடுவத் தம்பதியினரைக் காணாமல் சுற்றுமுற்றும் தேடுபவர் கண்களில் வரதராசப் பெருமாளின் கோபுர தரிசனம் கிடைக்கிறது! வந்து வழிகாட்டியவர்கள் வரதராசர் தம்பதியினர் என்று உணர்ந்து மெய்சிலிர்க்கிறார் ராமானுசர்.

கல்வெட்டுகள்:
மணவாள மாமுனிகளின் திருநட்சத்திரமான ஐப்பசித் திருமூல மகோத்சவம் பற்றிய 1555ஆம் ஆண்டின் கல்வெட்டும், 1710ஆம் ஆண்டில் ராஜாதோடாமால் உதவியுடன் ஆத்தான் ஜீயர் செய்துவைத்த திருப்பணிகள் குறித்த கல்வெட்டும் காஞ்சி வரதரின் ஆலயத்தில் காணப்படுகின்றன. முகமதியர்களின் படையெடுப்பிலிருந்து கி.பி. 1688இல் இப்பெருமானார் பத்திரமாக திருச்சி உடையார்பாளையத்திற்கு எழுந்தருளச்செய்யப்பட்டு பின்பு கி.பி. 1710இல் காஞ்சிபுரத்தில் எழுந்தருளியதையும் தாயார் சந்நிதி முகப்பில் உள்ள கல்வெட்டில் காணமுடிகிறது.
கோயிலின் சிறப்புகள்:
நாரத முனிவர்,
பிருகு முனிவர், பிரம்மா, ஆதிசேசன் கஜேந்திரன் ஆகியோருக்கு பெருமாள் காட்சி தந்த முக்கிய தலம். வைணவ மதம் வளர்க்கப்பட்ட தலம் என்ற பேறுபெற்ற தலமும் இதுதான்! இங்குள்ள பெருமாளை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானமும், சகல செல்வங்களும் பெறுவதோடு, சக்கரத்தாழ்வார் என்கிற சுதர்சன ஆழ்வார் சந்நிதி பெருமானை வணங்குவதால் திருமணத்தடை நீங்குவதோடு, வழக்குகளில் வெற்றியும் , வாழ்வில் வளமும் மனதில் நிம்மதியும் பெறுவதாக பரவலான நம்பிக்கை உள்ளது.

திருவிழா :

பிரம்மோற்சவம், வைகாசியில் 10 நாட்கள் திருவிழா பௌர்ணமி விசாக நட்சத்திரத்தன்றுநடைபெறும் இத்திருவிழாவில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர். நவராத்திரி விழா புரட்டாசி – 10 நாட்கள் நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி மற்றும் புது வருடப் பிறப்பின்போதும் திருவிழாக்கள் நடக்கின்றன.வைகாசி மாதத்தில் உற்சவத் திருவிழாவில் கருடசேவையும், தேரும் மிகவும் பிரபலம்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

ஆலயம் காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
திருமங்கையாழ்வார் பரமேசுவர விண்ணகர பதிகத்தின் மூன்றாம் பாசுரத்தில், “வரம் தரும் மாமணிவண்ணன்” என்று குறிப்பிட்டுள்ள விவரம் இவ்வாலயக் கல்வெட்டுகளில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

மங்களாசாஸனம்:
பூதத்தாழ்வாரின் அருளமுது:
என்னெஞ்சம் மேயான் என் சென்னியான், தானவனை-
வன்னெஞ்சம் கீண்ட மணிவண்ணன், முன்னம்சேய்-
ஊழியான் ஊழி பெயர்த்தான், உலகேத்தும்-
ஆழியான் அத்தியூரான்.

அத்தியூரான் புள்ளை ஊர்வான், அணிமணியின்-
துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான், – மூத்தீ-
மறையாவான் மாகடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான்.

கோயில் முகவரி :
அருள்மிகு தேவராஜ் சுவாமி திருக்கோவில் (ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில்),
விஷ்ணுகாஞ்சி,
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.
—————————————————————————————————————————————-

About இரா. குமார்

இரா. குமார்
சொற்கோயில் இணைய இதழின் ஆசிரியர். தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர், தினகரன் நாளிதழின் இணையாசிரியர் என முன்னணி நாளிதழ்களில் செய்திப்பிரிவின் உயர் பொறுப்பில் இருந்தவர். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் -1

நம் ஆன்மீக இந்தியாவின் மோட்சம் தரவல்ல நகரங்களாகக் குறிப்பிடப்படுகின்ற, அயோத்தி, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை ஆகிய …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன