முகப்பு / ஆலய தரிசனம் / ஏழு கடல்கள் எழுந்த திருநல்லூர் திருத்தலம் -1

ஏழு கடல்கள் எழுந்த திருநல்லூர் திருத்தலம் -1

நீத்த நெறியானை நீங்கா தவத்தானை 

நாத்த நெறியானை நல்லூர் பெருமானை

காத்த நெறியானை, கை கூப்பி 

ஏத்தும் அடியார்க்கு இல்லை இடர்தானே

என்று திருஞானசம்பந்தரால் போற்றப்பெற்றதும், தேவார நூலில் திருநாவுக்கரசரால் பல பாடல்களால் புகழப்பெற்றதுமான ஒரு திருத்தலமாக திகழ்கிறது திருநல்லூர்.

தஞ்சை – கும்பகோணம் நெடுஞ்சாலையில் பாபநாசத்திற்கு கிழக்கே வாழைப்பழக் கடை என்ற பகுதியிலிருந்து தெற்கே சுமார் ஒரு கி. மீ. தூரத்தில் திருநல்லூர் அமைந்துள்ளது.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

பிரம்மாண்ட புராணம், கருட புராணம், பஷ்டி கோத்திரம், சிவரகசியம், உப மந்ஹ பக்த விலாசம் போன்ற தன்மையான நூல்களில் கூறப்பட்ட இத்தல வரலாற்றை தொகுத்து ஒரே நூலாக வடமொழியில் தந்துள்ளார் மதிப்பிற்குரிய பைங்காநாடு ஸ்ரீ கணபதி சாஸ்திரிகள் என்ற  ஆன்மீகப் பெரியவர்.

1424 சுலோகங்கள் மற்றும் 28 சருக்கங்களையும்  உள்ளடக்கிய இந்த நூலின் பெயர் “சுந்தர கிரி மகாத்மியம்“ ஆகும்.

17ம் நூற்றாண்டுக்காரரான திரு வைத்தியநாத தேசிகர் என்பவர் இயற்றியுள்ள 24 சருக்கங்கள் கொண்ட ஒரு நூலும் , சீகாள புராணம் என்ற நூலின் பகுதியாசிரியரான வேலய்யா சுவாமிகள் என்பவர் இயற்றியுள்ள வேறொரு நூலும், திருநல்லூர் பற்றிய அரிய செய்திகளை கொண்டுள்ளது.

எத்தனையோ திருவிளையாடல்களை சிவபெருமான் நிகழ்த்தியுள்ள இவ்வூரில் ஒரு சிலவற்றை படிக்கையிலேயே நம்மை வியப்பு பற்றும்.

தன்னை விட உயர்ந்தவர் எவரும் இல்லை என்ற ஆணவம் அக்காலம் முதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை.

பஞ்ச பூதங்களில் ஒருவரான வாயுவிற்கும், திருமாலின் படுக்கையான ஆதிசேஷனுக்கும் தம்மில் சிறந்தவர் யார் என்று அறியும் எண்ணம் உண்டாகிற்று. இதன் விளைவாக தேவலோகத்தில் அனைவரின் முன்னிலையில் ஒரு பலப்பரீட்சை தொடங்கியது. அப்போட்டியின் நிபந்தனையின்படி , ஆதிசேஷன் வானத்தை அடைத்து படம் விரிக்க, அதனை வாயு தன் பலம் கொண்டு வீழ்த்திவிட வேண்டும் என்பது விதி.

அதன்படி, ஆதிசேஷன் பிரம்மாண்ட வடிவெடுத்து, ஆகாயம் முழுமையும் அடைத்தவாறு படமெடுத்தார். அவரை வாயு தன் முழு பலம் கொண்டு தாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதன் கெடு விளைவாக தேவலோகத்தில் சுவாசிக்க காற்றே இன்றி வானோர் தவிக்கத் தொடங்கினர். அதனால் தேவர்கள் ஆதிசேஷனிடம் தன் படத்தை சற்று குறுக்கிக் கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். அதனை அவர் ஏற்றுக் கொண்டார். ஆனால் எதிர்பாராத விளைவாக, வாயு தனக்குக் கிடைத்த குறுகிய பகுதியை நோக்கி முழு மூச்சாக பாயவே, அதன் வழியே பலமாக காற்று உட்புகுந்துவிட்டது. அதன் காரணமாக வானுலகில் கம்பீர காட்சியளிக்கும் மேரு மலை தாக்குண்டு, அதிலிருந்து இருகொடி முடிகள் பெயர்ந்து பூமியை நோக்கி பாய்ந்தன. அதில் ஒரு கொடுமுடியான சுந்தரகிரி விழுந்த இடமே இன்றைய திருநல்லூர். மற்றொரு கொடுமுடி விழுந்தபகுதி, அவ்வூரின் அருகே உள்ள ஆவூர் தலமாகும்.

திருநல்லூரில் கொடுமுடியான சுந்தரகிரி விழுந்த அக்கணமே அதன் உச்சியில் காட்சியளித்த வில்வ மரம் ஒன்றில் சுயம்பு வடிவாக பரமேசுவரன் தோன்றி , அருட்காட்சி அளித்தார். அதன் பிறகு அங்கிருந்த தேவர்கள், மகரிஷிகள், வேண்டுகோளை ஏற்று அருள்மிகு கல்யாண சுந்தரேசுவரராக , திருநல்லூரில் குடிகொண்டார் இறைவன்.

அதன் பிறகு நடந்த இன்னொரு சம்பவம்-

அகத்திய மாமுனிவருக்கு நீண்ட கால மனக்குறை ஒன்று இருந்து வந்தது. தேவர்களின் நலன் பொருட்டு , சிவ பிரானுக்கும் உமா தேவிக்கும் நடைபெற்ற திருமணத்தை காணும் பேற்றை அவர் இழந்திருந்தார். அதனால் அகத்தியர் வேண்டுகோளின் படி, அதே மணக் கோலத்தை மாமுனிவருக்கு அருட்காட்சியாக தந்ததோடு மட்டுமல்லாமல், அவர் விரும்பியபடியே, இறைவன் , கோலம் காட்டிய திருநல்லூரிலேயே குடிகொண்டுவிட்டார்.

திருநல்லூரிலேயே பலகாலம் தங்கி சிவனை வழிபட்ட அகத்தியர் , இங்குள்ள சிவலிங்கத்தின் ( சுந்தர லிங்கம்) வலப்புறம் மற்றொரு பாணமாகிய அருட்குறியை வைத்தார். இன்னும் அதனை அவ்வூரில் காணலாம். அத்துடன் சுந்தர லிங்கம் பின்பக்கம் இறைவன் அளிக்கும் திருமணக் காட்சியானது இன்றும் தரிசனமாகும்.

ஒரு சமயம் தேவர்கள் பிரம்ம தேவனை நாடி பஞ்சாட்சர மகிமை குறித்து அறிய முற்பட்டனர். அவர் காட்டிய வழிப்படி அவர்கள் திருநல்லூர் சிவனை முறைப்படி வணங்கினர். அன்று தல இறைவன் அம்மகிமைகளை அவர்களுக்கு எடுத்துரைத்து தெளிவாக்கினார். அந்த தேவர்கள் இவ்வூரில் தங்களை சுத்தி செய்ய உருவாக்கிய தீர்த்தம் இன்றும் உள்ளது.

பகவான் மஹாவிஷ்ணு , அட்டகாசம் புரிந்து வந்த அசுரன் இரண்யகசிபை  சம்ஹாரம் புரிய, நரசிம்ம அவதாரம் எடுக்க சிந்தை கொண்டார். அதற்கான வரம் பெற திருமால் நாடியது திருநல்லூர் சிவனையே!. சிவனின் ஆலோசனையின்படியே இரணிய வதம் முடித்து பெருமாள், நரசிம்மர் திருஉருவிலேயே , நல்லூர் சிவாலய விமானத்தில் குடிகொண்டார். இந்த விவரமும் தல வரலாற்றில் உள்ளது.

ஆதிசேஷனின் மகள் சுமதி, தான் விரும்பிய அரசகுமாரன் அரித்துவசன் என்பவனை மணக்க, தினமும் மேலுலகத்திலிருந்து அவள் திருநல்லூர் வந்து ஈசனை பூஜித்து , இறையருளால் அவனை மணமுடிக்க முடிந்தது.

தொடரும்

About கீதா சுப்பிரமணியன்

கீதா சுப்பிரமணியன்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவர் கீதா சுப்பிரமணியன். இயற்பெயர் நாராயணி. எழுத்தாளரான இவருடைய கணவரின் விருப்பப்படி கீதா என பெயரை மாற்றிக்கொண்டார். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் -2

வீர பல்லாளன் காளிங்கராயன் பாண்டியன் ஐந்தாம் சடையவர்மன், சோழ மன்னர்கள் (1018-1246), சேர மன்னர்கள் (1291-1342) போன்ற மன்னர்கள் இக்கோவிலில் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன