முகப்பு / அறுபத்து மூவர் / இயற்பகை நாயனர் – 2

இயற்பகை நாயனர் – 2

“அடியவரே
அடியேன் இன்னும்
ஆற்ற வேண்டியது
உளதோ?” என
அன்பொழுகக் கேட்டார்.
“ஆம்!
ஆரணங்கு இவளை
அடியேன்
அழைத்துச் செல்வேன்
ஆனால்
அன்புகொண்ட
உற்றார் உறவினர்
ஊரினர் மற்றோர்
அதைத் தடுத்தால்…
அவர்களைத் தடுக்கவும்
அடியேனைக் காக்கவும்
அரணாக வா”
அடியவர்
இட்டார் கட்டளை.

” ஐயனே
அறிவிழந்தேன்.
அடிகள் கூறுமுன்
அடியேனே
ஆற்ற வேண்டிய
பணி இது.
மன்னியுங்கள்
மறவனாய் வருகிறேன்”
என்றுரைத்து
அரைக்கச்சு அணிந்தார்.
வாளும் கேடயமுமாய்
வந்தார்; நின்றார்;
வணங்கினார்.
வேதியரும்
வேல்விழியாளும் தொடர
காவலாய்
முன் சென்றார்.
காட்டுத் தீ போல்
ஊர் முழுக்கக்
கலந்தது செய்தி.
சூழ்ந்தனர்
சுற்றத்தார்.
திரண்டனர்
ஊர்மக்கள்.
“குறையாத பழிசேரும்
குலப்பெருமை போகும்
விடாதே பிடி
வேதியரை”என
வெகுண்டனர்
வாளோடும் – கூரிய
வேலோடும்
விரைந்தனர்

சிவநேயா!
சித்தம் பேதலித்ததோ?
சிறியன செய்தாய்
சிறிதும் அடுக்குமோ
செயல் இது? என்று
சீறினர்.

“தாரத்தைத்
தானமளிப்பது
தகுமோ?- தம்
குலப் பெண்ணைக்
கொண்டு போவதோ
ஒருத்தன்? கூடாது.
கொலை விழுந்தாலும் சரி
குலப் பெருமை
காப்போம்” எனக்
குமுறி எழுந்தனர்.
கொந்தளித்தனர்.

சீரடியாளுடன்
செல்லும்
சிவவேதியரைச்
சூழ்ந்தனர்,
விடமாட்டோம்
உனை எனச்
சூளுரைத்தனர்.

உலகுக்கே
வழிகாட்டும்
உமையொரு பாகனோ
சிவநேயர் வழிகாட்ட
சிவனே என நடந்தார்.
சூழ்ந்து வந்த
சுற்றத்தார்
சூளுரைத்து நின்றனர்.
“அருங்குலக்கொடியாளை
அனுப்பிடுவோமோ?
அங்குலம் நகரினும்
அரிவாளுக்கு
இரையாவாய்” என
ஆத்திரத்தில் ஏசினர்.
தடித்த வார்த்தை வீசினர்.
அஞ்சுவது போல
அவளைப் பார்த்தார்
ஐந்தலை நாகத்தார்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

“ஐயனே!
சிறிதும் அஞ்சற்க
செரும் பகை வெல்வார்
சிவநேயர்” எனச்
செப்பினாள்
சித்திரத்தாள்.

சிற்றடியாள்
சொற்கேட்ட
சிவநேயர்
சினங்கொண்டார்.
வீரக்கழல் ஒலிக்க
விரைந்தார்.
வேதியருக்கு
முன்வந்தார்.
வெற்றிச் சிங்கமென
நிமிர்ந்தார்.
கோபம் கொப்பளிக்கக்
கூடி நின்றாரைக்
கூர்ந்து நோக்கினார்.

“உயிர் மீது
ஆசையுண்டெனில்
ஓடிப்போங்கள்.
இல்லையேல் – என்
வாளுக்கு
இரையாவீர்” என
எச்சரித்தார்.
வெஞ்சொற்களை
உச்சரித்தார்.

எதிர்நின்ற உறவினரோ
“ஏடா மூடா
என்ன செய்தாய்?
பிறர் பழிக்கும்
பேதமை செய்தனையே
பித்தம் கொண்டாயோ”
ஏளனம் பேசினர்
எள்ளி நகைத்தனர்.

சீறி எழுந்தார்
சிவநேயர் – உம்
சிரம் கொய்வேன் எனச்
சிங்கமெனப் பாய்ந்தார்.
சிறிதும் தயங்காது
சுற்றத்தார் மீது
சுழற்றினார் வாளை.
சூழ்ந்தனர் சிலர்
கையிழந்து
காலிழந்து
கடைசியில்
தலையிழந்து வீழ்ந்தனர்
தரையில் பலர்.
சிதறி ஒடினர் சிலர்.
சீறிப் பாய்ந்தனர் பலர்.
முட்டியவர்களை
வெட்டினார்.
கட்டிளம்
காளையரையும்
வெட்டினார்;
வீழ்த்தினார்.
குடல்கள் சரிந்தன
குன்றுபோல் குவிந்தன.
போர்களமானது
பூம்புகார்.

வெம்பகை முடித்து
வேதியரை அழைத்து
வீதியில் நடந்தார்
வெற்றி நேயர்.
பொய்த்தவ வேடரும்
பொய்யிடையாளும் போக,
பின்தொடர்ந்து
போர் வீரனாய்ப்
போனார் சிவநேயர்.
திருச்சாய்க்காடு
திருத்தலம் அடைந்தனர்.

” சிவநேயா – நின்
பணிபோதும் – நீ
இனி போகலாம்”
கட்டளையிட்டார்
காமுக வேதியர்.

” தேவரீர் – உம்
திருவருள் பெறும்
பேறு பெற்றேனே” எனத்
திருவடிவணங்கி
மனைவியைத்
திரும்பியும் பாராமல்
நடந்தார்
நல்மனத்தார்.
வியந்தார்
விரிசடைப் பெருமான்.

மாளாத
பக்தி கொண்டான் – அதில்
மாறாமல்தான் நின்றான்.
மனைவியைக் கொடுத்தும்
மகிழ்கின்றானே – என
மனம் உருகினார்
மழுவேந்திய சிவன்.

” எனை மறவா
மனத்தானே!
செயற்கரிய
செய்தோனே
இயற்பகையானே வா!
சென்ற வழியே
திரும்ப வா! என
ஓங்கியுரைத்தார்
ஒப்பிலாப் பெருமான்.

இது கேட்ட
இயற்பகையார்
இன்னும் எதிர்ப்பவர்
இருக்கின்றனரா என்றபடி
குதித்தோடி வந்தார்…
வந்தேன்..வந்தேன்.. என.
வந்தவர் திகைத்தார்.
வேதியர் மறைந்தார்
வேல் விழியாள்
தனித்து நின்றாள்.
புரியாது
புலம்பினார்.
பளிச்சிட்டது
பால்வீதி.

உமையொருபாகனாய்
ஒப்பிலாக் காட்சி தந்தார்
ஓடேந்திய சிவன்.

அழுதும் தொழுதும்
ஆர்ப்பரித்தார்.
” திருக்கூத்தனே
தில்லையம்பல
அரசே! உன்
திருவடி போற்றி!
கங்கையைக்
கொண்டவனே – எனக்குக்
காட்சி தந்தவனே” – என
வாழ்த்தினார்.
வணங்கினார்.
ஆனந்த
வடிவாயினார்.

“பழுதில்லாப்
பக்தி கொண்டவனே – உம்
பக்தியை மெச்சினேன்
பற்றற்றோனே – நின்
பத்திணியுடன்
வந்து சேர்வாயாக” – எனத்
திருவருள் காட்டித்
தில்லையம்பலம்
புகுந்தார் பெருமானார்.
வானவர் வாழ்த்த
பூமழை பொழிய
வேதங்கள் முழங்கச்
சிற்றிடையாளுடன்
சிவலோகம் எய்தினார்
சிவநேயர்.

வாளுக்கிரையான
வணிக குலத்தாரும்
விண்ணுலகெய்தி
வீடு பேறடைந்தனர்.

எதைக் கொடுப்பினும்
ஏந்திழையாளை
கொடுப்பது
இயல்பன்று.
மாறாத பக்தியால்
மனையாளைக்
கொடுத்த சிவநேயனை
இயற்பகை நாயனார் என
இவ்வையம்
போற்றுகிறது

தொடரும்

About இரா. குமார்

இரா. குமார்
சொற்கோயில் இணைய இதழின் ஆசிரியர். தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர், தினகரன் நாளிதழின் இணையாசிரியர் என முன்னணி நாளிதழ்களில் செய்திப்பிரிவின் உயர் பொறுப்பில் இருந்தவர். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

அறுபத்து மூவர்- 9

தூய சான்றோர்கள் தொண்டாற்றிப் புகழ் சேர்த்த தொண்டை நாடு. வாய்மையிற் சிறந்த வழிவழியாக வளமார் செல்வத்துடன் வாழ்வதுமான ஊர் வளம்சேர் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன