முகப்பு / அறுபத்து மூவர் / இயற்பகை நாயனார் – 1

இயற்பகை நாயனார் – 1

சோறளித்த
சோழ நாட்டில்
அலையும் தமிழ்க்
கலையும் கலந்தோடும்
காவிரி கடல் கலக்கும்
கவின்மிகு நகரம்
சிலப்பதிகாரம்
சிறப்பிக்கும்
காவிரிப்பூம்பட்டினம்.

கைத்தொழிலும்
கடல் வணிகமும்
செழித்திருந்த இந்தச்
சீர்மிகு நகரில்
வணிகர் குலத்தில்
வளமாய்த் தோன்றி
வசித்து வந்தார்
சிவநேயச் செல்வர்.

செல்வச் செழிப்பிலும்
சிந்தனைச் சிறப்பிலும்
சிவனையே கண்டார்.
அவனடியார்க்கு
அன்பேவல் செய்வதே
கடன் எனக்கொண்டார்.
நாடி வந்த அடியவர்க்கு
நற்பொருள் தந்தார்.
சிவனடியார் சிந்தைக்க்குச்
செயல்வடிவம் தந்தார்.

சிவனடியார் தொண்டோடு
சீர்மிகு இல்லறமும் சிறந்தார்.
அவர்தம் மனைவி
திருமகளனைய தோற்றத்தாள்
ஆடல் அரசி
கூடல் எழினி
அன்பின் சிகரம்.

இன்ப மனையாளுடன்
இனிது இயன்ற
இல்வாழ்க்கையில்
இருள் சூழ்ந்தது போல
இணைந்தது சோதனை.

சிவநேயர் சிறப்பை
உலகுக்கு உணர்த்த
உறுதிகொண்டார்
உலகாளும் சிவன்.
மண்ணுலகு செல்ல
முடிவெடுத்தார்.
சிவனடியார்
வடிவெடுத்தார்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

பவளம்போல் மேனியில்
பால்வெண்ணீறு
குனித்த புருவத்தில்
குடிகொண்ட குரோதம்
கருவிழிக் கண்களில்
காமாந்தகம் என
மாயவடிவம் கொண்டார்.

இனிய நகர் பூம்புகாரில்
இனியவர் சிவநேயர்
இல்லம் அடைந்தார்.
அன்பர்க்கு அன்பரின்
அடியவரன்றோ…
“தங்கள்
திருவடி பட்டுத்
திருத்தலமானது
என் இல்லம்.
வருக… எம்
வாழ்வு பெருக
வாழ்த்தி அருள்க” எனச்
சிவனடியாரை வணங்கினார்
வரவேற்றார் சிவநேயர்.
குடில் வந்து சேர்ந்து என்
குடிப்பெருமை மேலும்
கூட்டினீர் என்று
அர்ச்சனை செய்து
அடியாரை வணங்கினார்.

வன்மம்மிகு வஞ்சகராய்
வலிகொண்ட வேதியராய்
வந்து நின்ற அடியாரோ
வன்சொற்கள் வீசினார்
வாய் கூசாது பேசினார்.

“சிவநேயனே!
அடியார்கள்
ஆசைப்பட்டதை
அளிக்கிறாய் நீயென
அறிந்தேன் நான்.
ஆதலால் வந்தேன்”
கூறினார் உரக்க
கொடுந்தவ வேடத்தார்
குரலில் கர்வத்துடன்.

”எம்பெருமானே!

அடியேனிடம் இருப்பது
அனைத்துமே சொந்தம்
அடியவர்களுக்கே.
அவர்களுக்கே சமர்ப்பணம்.
அருள் கூறுங்கள்
அடியேன் காத்திருக்கிறேன்”
சீரடி பணிந்தார் சிவநேயர்.

“எது கேட்பினும்
இதயபூர்வமாக
எமக்களிப்பீரா”
ஆணவம் கொப்பளித்தது
அடியவர் குரலில்.

“ஐயமில்லலை
ஐயனே!
ஆசை எதுவென
அருள் கூறுங்கள்”
தொனியில் கனிவும்
சொல்லில் உறுதியுமாய்
சொன்னார் சிவநேயர்.

“அப்படிச் சொல்!
அடியேன்
ஆசைப்படுவது உன்
அன்பு மனைவியை – அந்த
அழகு பதுமையை”
சிறிதும் கூச்சமற்று
சிவனடியார் கேட்டார்.

இடிதாக்கும்
இச்சொற்கேட்டும்
இனிதாய் சிரித்தார்
இனிய மன சிவநேயர்.

“ஐயனே!
இல்லாத பொருள் கேட்டு
இடர்பட வைக்காமல்
இல்லாளைக் கேட்டீரே..
இதுவும் என் பேறு”
என்று உரைத்து
மாறாத அன்புடன்
மனைக்குள் சென்றார்..
மனையாளைக் கண்டார்.

கண்ணுக்கு மைதீட்டி
கார்குழலில் பூச்சூடி
புதுமலராய் இளமை
பூரிக்க நின்றாள்
புது நிலவாய்.

மனைவிளங்கச் செய்யும்
“மங்கையே உன்னை
அர்ப்பணிக்கிறேன்
அருந்தவ அடியவர்க்கு
மறுப்பேதும் சொல்லாதே”
மனம் உவந்து சொன்னார்
மாசில்லா சிவநேயர்.

ஆயிரம் தேள்கள்
கொட்டியது போல்
அலறினாள்; மனம்
குமுறினாள் – பின்
திருவருள் வழியில்
தெளிந்தனள் மனம்.

“கண்ணாளரே!
கட்டளை உமது
இதுவெனில் என்
கடமை அதுவே” எனத்
தனிப்பெரும் கணவனின்
தாள் பணிந்தாள்.

மறையவர் முன்
மனையாளை நிறுத்தினார்.
வெண்ணீறு பூசிய
வேதியர் பாதம்
பணிந்து நிமிர்ந்தாள்
திருமகளினும்
உயர்ந்து தெரிந்தாள்.

மறையவர்க்கு
மனைவியைக் கொடுத்த
மகிழ்ச்சியில் திளைத்தார்
மனம் குளிர்ந்த சிவநேயர்.

 

About இரா. குமார்

இரா. குமார்
சொற்கோயில் இணைய இதழின் ஆசிரியர். தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர், தினகரன் நாளிதழின் இணையாசிரியர் என முன்னணி நாளிதழ்களில் செய்திப்பிரிவின் உயர் பொறுப்பில் இருந்தவர். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

அறுபத்துமூவர் -6

விறன்மிண்ட நாயனார் அரச வம்சத்தை அடியோடு அழிக்க ஆவேசம் கொண்ட பரசுராமனின் பாசமிகு தந்தை ஜமதக்கினி முனிவர் அம்முனிவரை அழித்து …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன