முகப்பு / அறுபத்து மூவர் / அறுபத்து மூவர்- 8 முனையடுவார் நாயனார்

அறுபத்து மூவர்- 8 முனையடுவார் நாயனார்

முனையடுவார் நாயனார்

கொடும்பகை வென்று
குடிகள் காக்கும்
கோமகன் ஆண்ட நாடு.
மலரரும்புகள் விரிந்து
மணங்கமழ் சோலைகள்
மதிலுடை கோயில்கள்
எங்கும் நிறைந்த
எழில் மிகு நாடு.

சோலை மலர்கள்
சொரியும் தேன்
கலந்து பொங்கும்
காவிரி வெள்ளம்
கடலெனப் பாய்ந்து
கழனிகள் நிறைக்கும்.
உழவர்கள் நிலத்தை
உழுதிடும் வேளையில்
சேறும் மணக்கும்
செங்கழுநீர்ப் பூக்கள்
சிரித்துச் சிலிர்க்கும்.

சேறு மணக்கும்
கழனியெலாம்
சோறு மணக்கும்
மடங்களெலாம்
நறு மலர்நிறையும்
நற்சோலையெலாம் என
நற்கவி போற்றும்
நற்சோழ நாட்டில்
நிறைவளம் நிறைந்த
நீடூர்த் திருநகர்.

விளங்கு நீடூரில்
வேளாளர் மரபில்
சிவனடியார் ஒருவர்
சிறந்து விளங்கினார்.
தீக்கனல் மேனியனின்
திருவடியிடத்துத்
தீராப் பற்று கொண்டு
திருப்பணி செய்தார்.
செறுமுனை சென்று
சேர்த்த பொருளெலாம்
சிவனடியார்க்கே எனச்
செலவிட்டு மகிழ்ந்தார்.

தோற்றோர் வந்து
துணையை நாடினால்
அதரவளிப்பார்
அஞ்சா வீரனையும்
அடர் சேனையையும்
அடக்கி வீழ்த்துவார்.
பெற்ற வெற்றிக்கு
பெறுவார் கைமாறாய்
பெருநிதியம் தன்னை.
மோதும் பகை நடுங்க
முடிப்பார் போர் அதனால்
முனையடுவார் என்றே
அழைக்கலாயினர்
அவரைப் பலரும்.

சேர்த்த பொருளெலாம்
சிவனடியார்க்கு
செலவிட்டார்.
திருவடியார்க்கு
திருவமுது படைத்து
திருவுளம் மகிழ்ந்தார்.
அடியார்க்கு அளித்து
அகம் மகிழ்ந்த
அடியார் முனையடுவார்
அவனருள் பெற்றார்.
அழியாப் புகழ்
ஆழ நிறுத்தி
அவனையடைந்தார்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

About இரா. குமார்

இரா. குமார்
சொற்கோயில் இணைய இதழின் ஆசிரியர். தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர், தினகரன் நாளிதழின் இணையாசிரியர் என முன்னணி நாளிதழ்களில் செய்திப்பிரிவின் உயர் பொறுப்பில் இருந்தவர். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

அறுபத்துமூவர் -5

மூர்த்தி நாயனார் தாமிரபரணி தாவிக் குதித்தோடும் கடலில் கலக்கும் நீர்த்துறை தன்னில் நீர்முத்து விளையும் அன்ன நடைபோடும் அழகுப் பெண்களின் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன