முகப்பு / அறுபத்து மூவர் / அறுபத்து மூவர் -7

அறுபத்து மூவர் -7

அரிவாட்டாய நாயனார்

செந்தமிழும்
சீர்மிகு சைவமும்
செழித்துத்
தழைக்கும்
சோழவளநாட்டில்
திருத்துறைப்பூண்டியைத்
தெற்காகக் கொண்டது
கணமங்கலம்
கழனி சிறந்து
கயல்மீன்கள்
விளையாடும்.
கரும்புகள்
தேன்சொரியும்.
செந்நெல் வயல்களில்
களைகொட்டும்
சங்குமிழும்
முத்துக்கள்
ஒளிவீசும்.
அவை
செந்தாமரை
மீதமர்ந்து
சிரிக்கும்.
உழவர்கள்
மலர் பறித்து
மகிழ்வர்.
நெடுங்கூந்தல்

மகளிர் தம்
நீலவிழிகாட்டி
நிலம் பார்ப்பர்.
நீரும் நிலமும்
செழித்துச்
சோலைகளும் – நெடுஞ்
சாலைகளுமாய்
சிறப்புற்ற – இச்
சிற்றூரில்
வேளாளர்தம்
குலம் விளங்க
சிவபக்தியுடன்
தழைத்து வளர்ந்தார்
தாயனார்.
சிவநெறியே
தவநெறியாய்
சிறந்து விளங்கினார்.
செந்நெல்லரிசி
சமைத்து,
செங்கீரை ஆக்கி
மாவடு சேர்த்துக்
கோயிலில்
கொடுத்து
மகிழ்ந்து வந்தார்.
நாள் தவறினும்
நற்றொண்டு தவறாமல்
தொடர்ந்து வந்தார்
வறுமை வந்து
வாட்டிய போதும்
தளரமாட்டார்
தாயனார் என
ஏழுலகிற்கும்
எடுத்துக்காட்ட

எண்ணினார்
மாயனார்.
அம்மையப்பனின்
அருள் விளையாட்டு
ஆரம்பமானது.
வண்தொண்டர்
தாயனாரிடம்
வழிவழிவந்த
வளம் குறைந்தது.
எனினும்
எள்முனையளவும்
தளரவில்லை
தாயனார்.
திருக்கோயிலுக்குத்
தினமும் தரும்
திருத்தொண்டு
தொடர்ந்தார்.
தீமையினின்றும்
அகன்றார்.
செல்வமும்
செழிப்பும்
சென்றது.
காணிநிலமும்
கைப்பொருளும்
இழந்தார் தாயனார்.
வறுமை தீர்க்க
வயலுக்குச் சென்றார்.
கூலி வேலை செய்து
கொஞ்சம்
நெல் பெறுவார்.
அதில்
செந்நெல்

யாவையும்
சிவனுக்கு அளித்தார்.
கையில் கிடைக்கும்
கார்நெல்லை மட்டும்
கஞ்சி சமைத்துக்
காலம் கழித்தார்.
தீக்கனல் மேனியான்
திருவிளையாடல்
தொடர்ந்தது மேலும்.

வயல்களில்
விளையும்
நெல் மணியாவும்
செந்நெல் ஆக்கினார்
செந்நிற மேனியான்.
கிடைத்த யாவையும்
செந்நெல்லானது கண்டு
சிந்தை மகிழ்ந்தார்
சிவநெறி தாயனார்.
எம்பெருமானுக்கு
எப்போதையும் விட
எம் படையல் நெல்
அதிகம் கிடைத்ததே
ஆஹா! இது
அளவற்ற புண்ணியம்
என்று மகிழ்ந்தார்.
அத்தனையும்
அவனுக்கே
அளித்து மகிழ்ந்தார்
மனம் நிறைந்தார்.
நாட்கள் கடந்தன
உழுத வயல் நீரின்றி


உலர்ந்தது போல்
ஒட்டியது வயிறு.
உடலும் தளர்ந்தது.
உள்ளம் மட்டும்
சிவனை நினைத்தது
கஞ்சியின்றி
காய்ந்த வயிற்றுக்கு
காயாத இலைபறித்துக்
கறி சமைத்து
மனைவியுடன்
மகிழ்ந்துண்டார்.
விடவில்லை சிவன்
வீட்டுக்கொல்லையில்
விளைந்திருந்த
செடிகளையும்
இல்லாமற் செய்தார்.
தாயனாரின்
தர்ம பத்தினியும்
தளரவில்லை.
தன்னவர்க்குத்
தண்ணீரைத்
திருவமுதாய் தந்து
தானும் அருந்தினார்.
வறுமை கூடி
வறிய உடல் ஆன போதும்
வழிவழி செய்யும்
சிவத் தொண்டைச்
சிறிதும் நிறுத்தவில்லை.
வாட்டும்
வறுமைக் கிடையில்
வழக்கம்போல்
ஒருநாள்

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

செந்நெல்லரிசியும்
செங்கீரையும்
மாவடுவும்
சேர்த்து வைத்து
சிறுகூடை சுமந்து
புறப்பட்டார்
கோயிலுக்கு.
கொடையுள்ளம்
கொண்ட தாயனார்.
வழியில்
விழியிருண்டது
வழி தவறியது.
கண்கள் இருண்டதால்
கால் இடறியது.
கவிழ்ந்தார் தாயனார்.
தரையில்
விழுந்தது கூடை.
சிவனார்குப் படைக்கச்
சென்ற பொருட்கள்
சிந்தின ஒரு
நிலவெடிப்பில்
அதிர்ந்தார் தாயனார்.
அத்தனையும் போயிற்று.
அம்பலத்தார்க்கு
அமுது செய்யும்
அருள் பெற்றேனில்லை.
இனி
இருந்து பயனென்ன?
ஆட்கொள்ளும்
ஐயனார்
அமுதின்றி வாட
அடியேன் நான்
அவனியில் வாழ்வதா

என வருந்தி
அரிவாள் கொண்டு
அறுக்க முனைந்தார்
தன் கழுத்தை.
அப்போது
அந்நிலத்தின்
வெடிப்பிலிருந்து
வெளிப்பட்டது
வெண்கை ஒன்று.
அரிவாள் பிடித்து
அன்பாய்த் தடுத்தது.
அத்துடன்
மாவடு கடிக்கும்
ஓசை ஒலித்தது.
அருட்கை தடுத்ததால்
அப்படியே இருந்தார்
அருள்மனத் தாயனார்.
அவர்தம் கழுத்தின்
அரிவாள் காயமும்
ஆறிப்போனது.
ஆண்டவனின்
அருட்பெரும்
கருணை கண்டு
அடியவர்
ஆனந்தித்தார்.
ஆட்கொண்ட
அண்ணலே போற்றி
உமையொருபாகனே
உன்பாதம் போற்றி
பாசத்தின் உறைவிடமே
பரஞ்சோதியே போற்றி
வெண்ணீறு அணிந்த

வேந்தனே போற்றி
செந்நிற மேனியானே
சிவனே போற்றி
புரிசடை கொண்ட
புராண நாதா போற்றி – எனப்
போற்றினார் சிவனை
புழுதி உடல் தாயனார்.
ஆகாயத்தில்
இறைவன்
அம்மையப்பனாய்
அருங்காட்சி தந்தார்.
அன்பனே
ஏழ்பிறவி
வறுமையும்
வளைத்து
வாட்டினும்
வளர்ந்தது உன்
தொண்டு
அது பெரிது;
அகிலத்தினும் பெரிது;
உன் அன்பு பெரிது;
எம் அருளினும் பெரிது.
எம்முலகு வந்து
எம்முடன் இருந்து
ஏற்றம் பெறுக – என
அருள்பாலித்தான்
அம்பலத்தான்.

தாயனார்
தன் மனையாளுடன்
சிவலோகமடைந்து
சிறப்புற்றார்.

அருட்தொண்டு
அகல நேர்ந்ததால்
அரிவாள் கொண்டு
அருங்கழுத்தை
அறுக்க முயன்றதால்
அன்று முதல்
' அரிவாள் நாயனார்'
அரிவாட்டாய நாயனார் – என
அழைக்கலாயினார்.
அடியார்கள்
அன்பினில்
தழைக்கலாயினர்.

About இரா. குமார்

இரா. குமார்
சொற்கோயில் இணைய இதழின் ஆசிரியர். தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர், தினகரன் நாளிதழின் இணையாசிரியர் என முன்னணி நாளிதழ்களில் செய்திப்பிரிவின் உயர் பொறுப்பில் இருந்தவர். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

அறுபத்துமூவர் -5

மூர்த்தி நாயனார் தாமிரபரணி தாவிக் குதித்தோடும் கடலில் கலக்கும் நீர்த்துறை தன்னில் நீர்முத்து விளையும் அன்ன நடைபோடும் அழகுப் பெண்களின் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன