முகப்பு / அறுபத்து மூவர் / அறுபத்துமூவர் -6

அறுபத்துமூவர் -6

விறன்மிண்ட நாயனார்

அரச வம்சத்தை
அடியோடு அழிக்க
ஆவேசம் கொண்ட
பரசுராமனின்
பாசமிகு தந்தை
ஜமதக்கினி முனிவர்

அம்முனிவரை
அழித்து ஒழித்தான்
அரசன் காத்தவீரியன்.

அன்புத் தந்தையின்
ஆருயிர் பறித்த
அரச வம்சத்தை
அழிப்பேன் என
சபதம் செய்தார்
பரசுராமன்.

தன்வினை முடிக்க
தண்நிலவு
தரித்த சடையனை
தாள் பணிந்தார்
தவம் செய்தார்.

மன்னர் குலம் அழிக்க
மழு ஆயுதம் பெற்றார்
மதி சடையனிடம்.
அரசர் பலரை
அழித்து ஒழித்து
அவர் குருதி கொண்டு
தந்தை ஜமதக்கினிக்கு
தர்ப்பணம் செய்தார்.

பரசுராமனை
பழி சூழ்ந்தது.
பழியைப் போக்க
பரமனை வேண்டினார்
பக்தி செலுத்தினார்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

சிவனை வணங்கி
சீர்மிகு மறையவர்க்கு
சிறுநாடு வேண்டி
தென்கடல் வீசினார்
திண் மழு ஆயுதத்தை.

ஆயுதம் விழுந்த
அந்த இடத்தை
அந்தணர்க்கு
அளித்து மகிழ்ந்தார்.
அதுவே மலையாள நாடு.

மாக்கடல் சூழ்ந்த
மலைநாடு அதனை
கடல் அலைகள்
கட்டியணைக்கும்.

கடல் அள்ளிக்
கரை குவிக்கும்
கதிர் முத்துகளும்
கரும்பில் விளையும்
கனி முத்துகளும்
மூங்கில் விளைக்கும்
குளிர் முத்துகளும்
முதிர் தந்தத்தில்
முகிழ்ந்த முத்துகளும்
முத்துப்பல் பாவையர்
முறுவல் முத்துகளும்
முறையாகக் கோர்க்கும்
முத்தொளிர் நாடு.
செழித்துச் சிறந்த
சேர நாட்டினில்
சிறந்து விளங்கியது
செங்குன்றூர்.

அவ்வூர் தன்னில்
ஆகமநெறியை
அனுதினம் போற்றும்
அந்தணர்களும்
வயல் வளத்தால்
வளம் கொழிக்கும்
வேளாளர்களும்
விளங்கினர் சிறந்து.

வேளாளர் குலம்
விளங்க அவதரித்தார்
விறன்மிண்டனார்.

சிவனின் திருவடிகள்
சிந்தித்திருப்பதே
செய்தவப் பயன் என
சிந்தை கொண்டார்
சிற்றின்பம் தவிர்த்தார்.

பரமனின்
பாதங்கள் போற்றி
பரவுவது ஒன்றே
பக்தி மார்க்கம்.

பரம்பொருள் ஒன்றே
பாசத்திற்குரியது என
பற்றுகளை அறுத்தார்.
பலதலம் சென்று பரமனைத்
தொழுதார்.
பக்தி செலுத்தினார்.

அவன்தாள் போற்றும்
அடியார்கள் மீது
ஆறாக் காதல் கொண்டு
அவரடி தொழுதார்.
அடியாரை வணங்கி
அவர் அருள் பெற்றே
அம்பலக் கூத்தனை
வணங்குவதை
வழக்கமாய் கொண்டார்.

திருத்தலங்கள்
பல கடந்து திருவாரூர்
அடைந்தார்.
திருவடியார் விறன்மிண்டர்.
அவ்வூர் தங்கினார்
அடியார் சிலகாலம்.

திருக்கோயில் சென்று
தியாகேசனின்
திருவடிகளைத்
தினமும் துதித்தார்.

ஆரூரர் ஒருநாள்
அக்கோயில் வந்தார்.
ஆசிரிய மண்டபத்து
அருகில் இருந்த
அடியார்களின்
அடிகள் தொழாமல்
அப்புறம் ஒதுங்கி
அவனை வணங்க
ஆரூரர் சென்றார்.

அடியார் விறன்மிண்டர்
அது கண்டார்
ஆவேசம் கொண்டார்.

” அடியார் கூட்டத்து
அடிதொழாமல்
அவனை வணங்கும்
ஆரூரர் பறம்பு!
அவனை
ஆட்கொண்டருளிய
அம்பலத்தானும் பறம்பு” என
அறுதியிட்டுக் கூறினார்.
அடியார் விறன்மிண்டர்.

திருக்கோயில்
திருமதில் அருகே
திருவாரூரார்க்குத்
திருக்காட்சி தந்தான்
தியாகேசன்.

அவன் காட்சி தந்த
அச்செய்தி அறிந்தார்
அடியார் விறன்மிண்டர்.

” ஆரூரில் இனி
அடி வைப்பதில்லை” என
ஆவேச சபதம் செய்தார்.

ஆரூர் விட்டு நீங்கி
அருகில் இருந்த
ஆற்றங்கரையில்
அமைத்தார் குடில்.
அக்குடில் இருந்து
அடியார் போற்றினார்.

ஆரூர் மண்ணை
அடியார் மிதித்தால்
அவர் காலை வெட்டச்
சபதம் செய்தார்.

திருவாரூரில்
திருக்கோயில் கொண்ட
தியாகேசர் ஒருநாள்
திருவடியார்
திருக்கோலம் கொண்டார்.

வெண்ணீற்று மேனியுடன்
விறன்மிண்டர் முன் சென்று
“அடியார் இருப்பது
ஆரூர் நகர் ” என்றார்.

வெகுன்டெழுந்தார்
விறன்மிண்டனார்.
வேடச் சிவனாரின்
விளங்கிய கால்களை
வெட்டத் துரத்தினார்.

திருவேடமிட்ட
தியாகேசன் ஓட
திருவாரூர் எல்லையைத்
திருவடியார் அடைந்தார்.

” வந்தோம் இப்பால் ” என
வாய்மொழி உரைத்தான்
வண்ணச் சிவனார்.

வீரசபதத்தில்
விறன்மிண்டர் தோற்றார்.
” வாக்குத் தவறினேன்
வாழேன் இனி ” எனத்
தன் கால் இரண்டைத்
தானே வெட்டினார்.
திருவடியாரின்
தீவிரம் கண்டு
திருக்காட்சி தந்தான்
தியாகேசன்.

இன்னும் வருவார்கள்

About இரா. குமார்

இரா. குமார்
சொற்கோயில் இணைய இதழின் ஆசிரியர். தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர், தினகரன் நாளிதழின் இணையாசிரியர் என முன்னணி நாளிதழ்களில் செய்திப்பிரிவின் உயர் பொறுப்பில் இருந்தவர். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

அறுபத்துமூவர் -5

மூர்த்தி நாயனார் தாமிரபரணி தாவிக் குதித்தோடும் கடலில் கலக்கும் நீர்த்துறை தன்னில் நீர்முத்து விளையும் அன்ன நடைபோடும் அழகுப் பெண்களின் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன