முகப்பு / அறுபத்து மூவர் / அறுபத்துமூவர் -5

அறுபத்துமூவர் -5

மூர்த்தி நாயனார்

தாமிரபரணி
தாவிக் குதித்தோடும்
கடலில் கலக்கும்
நீர்த்துறை தன்னில்
நீர்முத்து விளையும்
அன்ன நடைபோடும்
அழகுப் பெண்களின்
அகன்ற விழிகளிலும்
அணையும் தோள்களிலும்
முத்துகள் ஒளிரும்.
சிரிப்பைச் சிந்தும்
செவ்வாய் தன்னில்
முத்தங்கள் பிறக்கும்.
அகிலும் சந்தனமும்
அடர்ந்து வளர்ந்து
அழகு காட்டும்
பொதிகை மலையில்
பிறந்த தென்றல்
தமிழ் மணம் கமழத்
தண்ணென்று வீசும்.
பழமைப் பெருமையும்
பணமும் – நல்ல
மனமும் கொண்ட
மாந்தர் வசிக்கும்
மாபெரும் நாடு
மங்காப் புகழுடைப்
பாண்டிய நாடு.
தமிழ் வளர்த்த நாட்டின்
தலைநகர் மதுரை.
கூடல் நகரில்
கூடும் பெண்கள்
கொஞ்சும் சொல்லில்
இன்னிசை தழைக்கும்,
இன்பம் பிறக்கும்.
முத்தமிழ் வளர்த்த
மூதூர் மதுரையில்
அமைந்த கோயில்
ஆலவாய்.
தளராத தமிழும்
தாழாத சைவமும்
தழைக்கும் மதுரையில்
வளம் நிறைந்த
வணிகர் குலத்தில்
வந்துதித்தார் மூர்த்தியார்.
சிந்தையெல்லாம்
சிவநெறியே எனச்
சிறக்க விளங்கினார்
சிவனை வணங்கினார்.
கண்ணுதல் பெருமானின்
காதலே பெரிதென
நாளும் பரவுவார்
நல்மனம் உருகுவார்.
ஆளும் பெருமானின்
அடிதொழுதலே
அடியேனின்
அவதாரப் பயன் என
அன்பின் வடிவமாய்
அவர் திகழ்ந்தார்.
ஆலவாய்ப் பெருமானுக்கு
அனுதினமும்
அகில் காப்பும்
அணிவித்து
அகம் மகிழ்ந்தார்.
எப்பணி வரினும்
திருப்பணி தடைபடாது
அப்பணி செய்வதில்
ஆர்வம் கொண்டார்
அன்பர் மூர்த்தியார்.
தெய்வப்பணி அது
தெளிவுற நடக்கையில்
மண்ணாசை கொண்ட
மன்னன் ஒருவன்
மாளாப் படைகொண்டு
மதுரை நோக்கி வந்தான்.
பாண்டிநாட்டு மீது
படை தொடுத்தான்;
பக்திநெறி கெடுத்தான்.
மண் புதையும்படி
மதுரை நகர் முழுதும்
பரப்பினான் படை.
பக்திநெறி பரப்ப
நீட்டினான் தடை.
சிவமதம் நீக்கிச்
சமணம் சார்ந்தவன்;
சிந்தை தாழ்ந்தவன்;
சிவனடியார்க்குச்
சிறியன செய்தனன்.
ஆலவாயனுக்கு
அருந்தொண்டு செய்த
அன்பர் மூர்த்தியையும்
அமண மன்னன்
அழிக்க நினைத்தான்
ஏளனம் செய்ய
எண்ணிய மன்னன்
எண்ணிலாக் கொடுமை
ஏவினான்
எம்பெருமான் பக்தர் மீது.
தொல்லைகள் வரினும்
தொடர்ந்தார்
தொண்டினை.
ஆலவாயனுக்கு
அகில் காப்பு
அணிவிக்கும் பணி
அனுதினம் தொடர்ந்தார்.
அது பொறுக்கவில்லை
அமண மன்னனுக்கு.
ஆலவாயனுக்கு
அணிவிக்கும் சந்தனம்
அடியார் அவர்க்கு
அணுவளவும்
கிடைக்காதிருக்க
அனைத்துத் தடையும்
அம்மன்னன் விதித்தான்.
அதுகண்டு வருந்தினார்
அன்பர் மூர்த்தியார்.
தேடித் திரிந்தும்
திருப்பணி செய்யத்
திருச்சந்தனம் கிடைக்காது
திரும்பினார் மூர்த்தியார்
திருக்கோயிலுக்கு.
தீகுகனல் மேனியான்
திருப்பாதம் தொழுதார்.
அகில் கட்டைக்கே
அவன் விதித்தான் தடை
அதைத் தேய்க்கும்
அடியேன் கை உள்ளதே
எனச்
சந்தனக் கல்லில் தன்
சதையுடை கையைச்
சரியத் தேய்த்தார்.
சதை பிய்ந்தது.
கொட்டியது குருதி
தசையும் எலும்பும்
தனித்தனி ஆயின
எலும்பு தேய்ந்தது.
அது கண்டான்
ஆலவாய்ப் பெருமான்
அடியாரைச் சோதிக்க
அதற்குமேல் மனமின்றி
அருள் தந்தான்
”அன்பனே!
அன்பின் துணிவால்
அருங்கை தேய்த்தாய்
அடாது செய்த
அமண மன்னன்
ஆட்சி முடியும்
அரசு முழுமையும்
ஆள்வாய் நீயே.
அவனால் விளைந்த
அத்தீமைகள் போக்கி
அன்பர்க்கு அருள்வாய்
அகிலம் காப்பாய்
சிவபணிகள் செய்து
சிவலோகம் அடைவாய் ”
திரிபுரம் எரித்தோன்
திருவாக்கு ஒலித்தது.
அது கேட்டார்
அஞ்சி எழுந்தார்
அன்பர் மூர்த்தியார்.
தேய்ந்த திருக்கரம்
தேய்ந்த புண் நீங்கித்
திகழ்ந்தது அழகாய்.
சிவ மணம் கமழத்
சிறப்பாய்த் திகழ்ந்தார்
சிவனடியார் மூர்த்தியார்.
அன்று இரவே
அமண மன்னன்
ஆவி துறந்தான்.
மடமை நீங்கி
மதிநிறைந்தது போல்
பாழிருள் நீங்கிப்
படர்ந்தது எங்கும்
பகலவன் ஒளி.
” மாண்ட மன்னனுக்கு
மக்கட்பேறு இல்லை
மற்ற யாரை
மன்னன் ஆக்குவது?”
அமைச்சர்கள் கூடி
ஆலோசனை நடத்தினர்.
பட்டத்து யானையைக்
கட்டவிழ்க்க வேண்டும்.
எவரை எடுத்து
ஆனை வருகிறதோ
அவரே அரசர் என
அமைச்சர்கள் கூடி
அறுதி முடிவெடுத்தனர்.
பட்டத்து யானைக்குப்
பாங்குடன் பூசை செய்து
” இந்நாட்டை ஆள
ஏந்தல் ஒருவரை
எடுத்து வருக ” என
ஏவினர் யானையை.
கூடல் நகரில்
கொடும் புழுதி பறக்க,
தெருக்கள் பலவும்
திரிந்த யானை
திருக்கோயில் அடைந்தது.
அதுகண்ட அடியார்
அம்மையப்பனின்
அருள் இதுவெனில்
ஆள்வேன் நாட்டை என
அகத்துள் எண்ணி
உள்ளத் தளர்வு
ஒருவாறு நீங்கி
ஓரத்தே நின்றார்.
அடியார் முன்பு
ஆனை நின்றது.
அவரைப் பணிந்து
துதிக்கையால் தூக்கிப்
பிடரியில் வைத்துப்
பீடு நடை போட்டது.
அது கண்ட
அமைச்சர்கள்
அனைவரும் வியந்தனர்.
” அகிலம் உய்ய
அடியார் கிடைத்தார்
அரசராய் எமக்கு” என
அவரடி தொழுதனர்.
அவவூர் மக்கள்.
பொங்கின
வாழ்த்தொலி;
முழங்கின
சங்கொலி;
இயம்பின
பல்லியம்;
ஒலித்தன
தாரைகள்;
மகிழ்ந்தனர்
மக்கள்.
அடியாரைச் சுமந்த
அந்த யானை
அலங்கரிக்கப்பட்ட
அரச மண்டபம்
அடைந்தது.
மணிமாலைகளும்
மலர்களும் சூழ்ந்த
மண்டபத்து
அரியாசனத்தில்
அடியாரை அமர்த்தினர்
அமைச்சர்கள் கூடி.
சிந்தை முழுதும்
சிவமயமான
சிவனடியார் மூர்த்தியார்
” சமணம் மறைய,
சைவம் தழைத்தால்தான்
அரசாட்சி ஏற்பேன்
ஆள்வேன் நாட்டை ” என
நிபந்தனை விதித்தார்.
நெறிதவறாச் செம்மல்.
” அரசக் கட்டளை
அப்படியே ஏற்போம்
அவ்வாறு நடப்போம் ”
அமைச்சர்கள் கூறினர்
அரசனை வணங்கி.
மங்கல ஓசையும்
மறை முழக்கமும்
வாழ்த்தொலிகளும்
வானைத்தொட
முடிசூட்டிக் கொண்டார்
மூர்த்தி நாயனார்.
அரச மண்டபம் விட்டு
ஆலவாயன் கோயில்
அடைந்தார் மன்னர்.
ஆலவாயனைத் தொழுது
ஆனை மீதேறி
அழகு வீதிகள் வழி
அரண்மனை அடைந்தார்.
அரசர் மூர்த்தியார்.
அத்தாணி மண்டபத்து
அரியாசனத்தமர்ந்து
வெண் சாமரம் வீச
வெண் கொற்றக்குடை
நிழலில் இருந்து
நீதி காத்தார்.
சமணர் தந்த
சங்கடங்கள் போக்கினார்.
நன்னீறு அணியும்
நல்லொழுக்கம் செழித்தது.
சைவம் தழைத்துச்
சத்தியம் நிலைத்தது.
ஐம்புலன் அடக்கி
அழகு மகளிர் விலக்கி
பிரம்மச்சாரியாய்ப்
பெருவாழ்வு வாழ்ந்தார்.
அரசராய் இருந்தும்
ஆலயப் பணியை
அயராது தொடர்ந்து
அவனடி சேர்ந்தார்.

இன்னும் வருவார்கள்

About இரா. குமார்

இரா. குமார்
சொற்கோயில் இணைய இதழின் ஆசிரியர். தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர், தினகரன் நாளிதழின் இணையாசிரியர் என முன்னணி நாளிதழ்களில் செய்திப்பிரிவின் உயர் பொறுப்பில் இருந்தவர். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

அறுபத்துமூவர் -6

விறன்மிண்ட நாயனார் அரச வம்சத்தை அடியோடு அழிக்க ஆவேசம் கொண்ட பரசுராமனின் பாசமிகு தந்தை ஜமதக்கினி முனிவர் அம்முனிவரை அழித்து …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன