முகப்பு / அறுபத்து மூவர் / அறுபத்துமூவர் -4

அறுபத்துமூவர் -4

மானக்கஞ்சாற நாயனார்

கொம்புத் தேனும்
கொழுங்கனிச்சாறும்
வடிந்து திரண்டு
வாய்க்கால்கள்
வழி பாய்ந்தோடிக்
கழனிகளில்
கரும்புச் சாறுடன்
கலந்து மணக்கும்.
அறுவகை ஆகமம்
அறிந்த அந்தணர்
அளவற்ற பெருமையுடை
அவ்வூர் கஞ்சாறூர்.
மணி ஒளிவீசும்
மாடங்களும்
மதிதொடும்
மதில்களும்
மண்டிக்கிடக்கும்
கழனி வளமும்
கலைவளமும்
நிறைந்து கிடக்கும்
கஞ்சாறூரில்
வேள்வி சிறக்கவும்
வேளாண்மை தழைக்கவும்
வெள்ளி முளைத்தாற்போல்
வேளாளர் குலத்தில்
மகனாய் பிறந்தவர்
மானக்கஞ்சாறனார்.
வன்தோள் மன்னர்க்கு
வழிவழியாய்
வாட்படைத் தலைமை
வகித்தனர்
வள்ளன்மை கொண்ட
வேளாளர்கள்.
சிறப்புமிக்க
சேனாதிபதிகள்
சீர்குடிப்பிறந்தவர்
மானகுகஞ்சாறனார்.
சிவநெறி போற்றி
சிவனடியார்களே
சிவனாய்க் கொண்டு
சிவனடியார்க்கு
சிறுத்தொண்டு செய்தார்.
சிவநெறியே
தவநெறியென
சிந்தை மகிழ்ந்தார்.
வாய்மையும் அன்பும்
வடிவத்தில் அடக்கமும்
வாய்மொழிப் பணிவும்
வற்றாத அமைதியும்
வரித்துக் கொண்டவர்.
கழனி செழித்தது
கஞ்சாறனார் செல்வம்
கடல்போல் விரிந்தது.
சேர்த்துள்ள செல்வமெல்லாம்
சிவனடியார்க்கெனச்
சிந்தை கொண்டார்.
அடியார் தம்
அகம் தெரிந்து
அவர்தம் தேவைகளை
அள்ளித் தந்தார்.
மகப்பேறு இன்றி
மனம் வருந்தினார்
மானக்கஞ்சாறர்
மதிசடையன்
மலரடி போற்றி
மகப்பேறு வேண்டினார்.
அருளினான்
ஆனந்தக்கூத்தன்
மானக்கஞ்சாறர்
மனைவியின்
மணிவயிற்றில்
மகள் உதித்தாள்
மகள் பிறக்க
மனம் மகிழ்ந்தார்
மானக்கஞ்சாறர்.
மங்கல இசை
எங்கும் ஒலிக்க
மாளாத செல்வம்
மக்கட்கு வழங்கி
மகிழ்ந்து போற்றினார்.
வளர்பிறையென
வளர்ந்தாள் செல்வி.
பருவமடைந்தாள்:
பட்டு மேனியில்
பளபளப்பு வந்தது.
பொன்னொளிர் மேனி
புதுக்கோலம் பூண்டது
புத்தழகு பூசிப்
புதுக்கவர்ச்சி
பொலிவூட்டியது.
மலை சுமந்த
இடை துவண்டது
மலராமல் மலர்ந்த
மட்டான முறுவலில்
முத்து ஒளிர்ந்தது.
கருங்கூந்தல்
கார்மேகம் வென்றது.
மாந்தளிர் மேனி
மங்கை அவளும்
மணப்பருவம் அடைந்தாள்.
மரபு ஒத்த
எம்பெருமான் அடியார்
ஏயர்கோன் கலிக்காமர்
ஏற்ற துணை என
எல்லாரும் கண்டனர்.
மானக்கஞ்சாறர்
மனம் ஒப்பினார்.
கலிக்காமரும்
களிப்பெய்தினார்.
உறவினர் யாவரும்
உரிய காலத்தில்
உவகையுடன் வந்தனர்.
நாள் குறித்தனர்.
நற்கலத்துடன்
பொற்கலத்தும்
பாலியை நிறைத்தனர்.
மணவினை இடத்தை
மலர்களால் அமைத்தனர்.
மணவிழா ஏற்பாடு
மளமளவென நடக்க
மானக்கஞ்சாறர்
மனநிலை அறிய சிவனார்
மாவிரத முனிவர்
வேடம் தாங்கினார்.
நீறு பூசிய நெற்றியும்
மழித்த தலையின்
உச்சியில் குடுமியும்
மணிகளாய் எலும்பை
மாலையாய்க் கோர்த்து
மார்பில் சூட்டியும்
மணிந்தாழ்வடமாய்
மார்பெலும்பு பூட்டியும்
மயிர்க் கயிறே
மார்பில் பூணூலாயும்
ஒரு கையில் பையும்
மறுகையில்
மணி எலும்புமாய்
மாவிரத முனிவராய்
மதிசடையன் வந்தான்.
மாவிரத முனிவர் கண்டு
மகிழ்ந்தார்
மானக்கஞ்சாறர்.
” தவமுனிவர் தங்கள்
தாராள வருகையால்
கடைத் தேறினேன்” எனக்
கரம் கூப்பினார்
காலடி போற்றினார்.
” மங்கல வினை இது
மணவிழாவோ ” என
மாவிரதன் கேட்டார்.
” அடியேன் பெற்ற
அருந்தவக் கொடிக்கு
மகிழ்வுடன் நடக்கும்
மணவிழா ” என
மானக்கஞ்சாறர் உரைத்தார்.
மங்கலம் உண்டாக
மாவிரதம் வாழ்த்தினார்.
மணங்கமழும்
மலர்கள் அணிந்த
மணக்கோல மங்கை
மகனை அழைத்தார்.
மாவிரதரை
வணங்கச் செய்தார்
மானக்கஞ்சாறர்.
பொற்ப்பாதம் போற்றிய
பூங்கொடியாளின்
பூச்சூடிய கூந்தலைப்
புரிய நோக்கினான்
புரிநூல் மார்பன்.
நாடி தளர்ந்தது போல்
நாணிக் குனிந்தது போல்
நல்வணக்கம் கூறி
நாயனார் நின்றிருந்தார்.
” மங்கை இவள்
மயிர்க் கற்றை என்
மார்பில் அணியும்
மயிர்கற்றை நூலாகும் ”
மாவிரதர் உரைத்தார்.
உலகாள்பவன்
உரைத்தது கேட்டு
உடைவாள் எடுத்தார்
உண்மைத் தொண்டர்.
பூங்கொடியாய் நின்ற
புதல்வியின் கூந்தல்
அடியோடு அரிந்தார்.
மயிர்கற்றையை
மாவிரதரின்
மலர்க்கரம் கொடுத்தார்.
வளர்ந்த கூந்தலை
வாங்குவது போல் நின்ற
மறையவர்
மறைந்தார்.
மாகாளை அமர்ந்து
மாதேவியுடன்
அருட்காட்சி தந்தான்
அருளுடை சிவன்.
விண்ணகத் தேவர்கள்
வீழ்மலர் பொழிந்தன்
சிரம்மேல்
கரம் தூக்கிக்
கஞ்சாறர் பணிந்தார்.
” பக்தன் உந்தன்
பக்தி தன்னை
பரவச் செய்தேன் ” என
பனிமதிகடையன்
பாலித்தான் அருள்.
மணக்கோலம் பூண்டு
கலிக்காமர் வந்தார்.
கண்டவரெல்லாம்
களிப்புற்றனர்.
திருவருள் நடத்திய
திருவிளையாடல் கேட்டுத்
திருவடி போற்றினார்
திருக்கலிகாமர்.
மங்கல நேரத்தில்
மங்கையின் கூந்தல்
மறைந்தது கண்டு
மனம் தளர்ந்தார்
மாளா அன்புடை
மனத்தார் கலிக்காமர்.
” மனம் தளராதே
மங்கையின் கூந்தல்
மீளத் தந்தேன்.
மணவினை முடித்து
மகிழ்ந்திருப்பாய்” என
அசரீரி கூறி
அருள் பாலித்தான்
அம்பலக் கூத்தன்.
திருவாக்கின்
திறம் கேட்டுத்
திளைத்தார் கலிக்காமர்.
மங்கை கூந்தல்
மளமளவென
மகிழ வளர்ந்தது.
பூங்கொடியாளின்
பொற்கரம் பிடித்துப்
புத்திளம் மனைவியுடன்
போற்றி இருந்தார்
புரிநூல் மார்பனைப்
புனிதக் கலிக்காமர்.
அடியார் கேட்டதால்
அருமை மகளின்
அழகிய கூந்தலை
அரிந்து கொடுத்த
அரும் பெரும் நாயனார்
அடிகள் அடைந்தார்.
அகிலம் முழுவதும்
அடியார் தம்மின்
அருள் நெஞ்சம் நிறைந்தார்.

இன்னும் வருவார்கள்

About இரா. குமார்

இரா. குமார்
சொற்கோயில் இணைய இதழின் ஆசிரியர். தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர், தினகரன் நாளிதழின் இணையாசிரியர் என முன்னணி நாளிதழ்களில் செய்திப்பிரிவின் உயர் பொறுப்பில் இருந்தவர். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

அறுபத்துமூவர் -6

விறன்மிண்ட நாயனார் அரச வம்சத்தை அடியோடு அழிக்க ஆவேசம் கொண்ட பரசுராமனின் பாசமிகு தந்தை ஜமதக்கினி முனிவர் அம்முனிவரை அழித்து …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன