முகப்பு / அறுபத்து மூவர் / அறுபத்துமூவர் -3

அறுபத்துமூவர் -3

அமர்நீதி நாயனார்

மணிக்கொடி பறக்கும்
மாட மாளிகையும்
கூட கோபுரங்களும்
மதுவுண்டு களித்த
வண்டுகள் வட்டமிடும்
வளமான சோலைகளும்
சூழ்ந்திருக்கும்
சோழ வள நாட்டில்
பண்பாடும்
பழந்தமிழும்
செழித்திருக்கும்
பழைய நகரம்
பழையாறை.

செழித்த வீடுகள்
சிறப்புற்ற அவ்வூரில்
செல்வம் செழிக்கச்
சிறந்து விளங்கியவர்
வணிகர் குலத்தில்
வந்துதித்த அமர்நீதியார்.

பொன்னும் முத்தும்
பொலிவுறு மணியும்
புத்தாடைகளும்
குவித்து வைத்துக்
குறைவிலாச் செல்வத்தில்
குடும்பம் திளைத்தது.
செல்வம் செழித்த போதும்
சிவநேயச் செல்வராய்ச்
சிறந்து விளங்கினார்
அடியவர் போற்றும்
அமர்நீதி நாயனார்.

அந்தி வண்ணத்து
அண்ணலாருக்கு
அன்புத் தொண்டாற்றும்
அடியார்கட்கு
அமுது செய்து
அகமகிழ்ந்தார்
அமர்நீதியார்.

உண்பது நாழி
உடுப்பது முழமென
உலக வாழ்வை
உதறிய அடியார்க்கு
ஆடை கொடுத்து
அவர்களைப்
போற்றினார்
அமர்நீதியார்.

திருநல்லூர்
திருவிழாவில்
திருத்தொண்டர்களுக்குத்
திருவமுது செய்விக்கத்
திருமடம் நிறுவினார்.
மனைவி மக்களுடன்
மடத்தில் தங்கி
மகேசனை வணங்கி
மகிழ்ந்திருந்தார்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

அடியார்கட்கு
அமுதளித்து
ஆடை கொடுத்து
அமர்நீதியார்
அன்பு கொண்டார்.

வணிக வள்ளலுக்கு
வந்தது சோதனை
வளர்பிறை சடையனால்.
அமர்நீதியாருக்கு
அருள் செய்ய
அகம் கொண்டான்
ஆனந்தக்கூத்தன்.

அந்தணர் குலத்துப்
பிரம்மச்சாரி போல்
தோற்றங்கொண்டார்.
விரிசடை மறைத்தார்.
விளங்கும் குடுமி
வைத்தார்.
நெற்றியில் நீறுபூசி
நெஞ்சிலே நூல்
அணிந்தார்.
முப்புரி நூலில்
அங்குலம் அளவு
மான்தோல் கட்டி
தருப்பைப்புல்லைத்
தம் இடுப்பில் கட்டித்
தண்டில் இரு
கோவணத்துணி கட்டி,
தண்டையும்
தருப்பையும்
தம் கையில் ஏந்தி,
கண்டவர்
கரைந்துருகக்
கங்கைச் சடையன்
நடந்தான்
நம் நாயனார்
நன்மடம் நோக்கி.

அந்தணர் கண்டு
அகமலர்ந்தார்
அமர்நீதியார்.
அவரை வணங்கி
அன்பாய் வரவேற்று
“அடிகளே! இதுவரை
அடியேன் காணாத
அம்பலக் கூத்தனின்
அடியவர் தாங்கள்
அருள் செய்ததிங்கு
அடியேன் தவப்பயன்”
அன்புமொழி கூறினார்
அமர்நீதி நாயனார்.

புன்சிரிப்பைச்
சிந்தினன்
புரிசடையான்.
” வணிக வள்ளல் நீர்
வரும் அடியார்க்கு
வரைவிலாது
வழங்கி மகிழும்
வழக்கம் அறிந்தோம்
வந்தோம் காண” – என
வாய்மொழி அருளினார்
வன்தொண்டர் தோழர்.

” நான்மறை ஓதி
நற்றவம் செய்யும்
அந்தணர்கள் இங்கு
அமுது தயாரிக்க
அடிகளும் தங்கி
அமுது செய்து
அருள வேண்டும்”- என
அடி தொழுதார் அமர்நீதியார்.

” களைத்துள்ளேன்
காவிரி நீராடிக்
கணத்தினில் வருவேன்,
உலர்ந்த கோவணத்தை
உன்னிடம் தருகிறேன்
பத்திரப்படுத்திப்
பாதுகாத்திடுவாய்”
எனத்
தண்டில் கட்டிய
தன் கோவணம்
தந்தார் அந்தணர்.

” இக்கோவணப் பெருமை
இயம்பத் தேவையில்லை.
வரும்வரை பாதுகாத்து
வந்ததும் கொடு”- என
வந்தவர் சொன்னார்.

கோவணம் பெற்றுக்
கும்பிட்ட வள்ளல்
”குளித்துத் திரும்பிக்
குளிர்விக்க வேண்டும்
குறையுடையேன்
விண்ணப்பம்”- என
வேண்டினார்.

தன்னிடம் கொடுத்த
கோவணத்தைத்
தனியே வைத்தார்
தனிப்பெருங்
கருணையார்.

அமர்நீதியார் வைத்த
அக்கோவணத்தை
மறையச் செய்தார்
மாய வேதியர்.
காவிரி நீராடிய
கங்கைச் சடையன்
ஈரத் துணியுடன்
எழுந்தருளினான்
அமர்நீதியார் முன்.

” அறுசுவை உணவு
ஆறிப் போகுமுன்
அமுதுண்ண வருக”- என
அழைத்தார்
அமர்நீதியார்.

” குளிர்ந்த நீரில்
குளித்து வந்தேன்
கோவணம் எங்கே?
கொண்டு வா”- என்றார்
கோமான் அந்தணர்.

அவனது விளையாட்டு
அறியா மனத்தார்
அமர்நீதியார்
திருமடத்துள் சென்று
தேடினார் கோவணம்.
அந்தணர் கோவணத்தை
அங்கே காணோம்.
திகைத்தார்;
திரும்பத் திரும்பத்
திசையெட்டும் பார்த்தார்.
படபடத்தார்
பக்கமெல்லாம்
பார்த்தார் துழாவி:
பயன் இல்லை.
அலைந்தார்;
அங்கும் இங்கும்
ஓடினார்;
ஓரிடமும் காணாது
வாடினார்.
மாட்டினோம்
சிக்கலில் என
மலைத்தார்.
மனம் பதைத்தார்.
வேறொரு
கோவணத்துடன்
விரைந்து வந்து
விழுந்து வணங்கினார்
வேதியர் காலில்.

” அடிகள் அளித்த
அக்கோவணம்
மறைந்த மாயம்
அடியேன் அறியேன்,
மற்றோர் கோவணம்
மாற்றாகக் கொணர்ந்தேன்
மாற்றிக் கொள்வீர்;
மன்னிப்பீர் எனை” என
மனம் உருகினார்
மாசற்ற வள்ளல்.

” ஆஹா! அழகு
அமர்நீதியார் நிலை!
அபகரித்தீர் கோவணத்தை
அடுக்குமா?”- என
வெகுண்டார்
வேதியர் சிவன்.
ஐம்பொறி கலங்க
அழகுமுகம் வெளிறினார்
அமர்நீதியார்.

” அடியேன் பிழை
அறிந்தே ஆற்றியதன்று:
ஆதலால் மன்னியும்
அறியாப் பிழைக்காக
அடிகள் சொல்லும்
அனைத்தும் செய்வேன்.
நயமான பட்டும்
நவமணிகளும் தருகிறேன்.
அவற்றை ஏற்று
அடியேனுக்கு
அருள்புரிவீர்”- எனப்
பயந்து நடுங்கிப்
பாதம் பணிந்தார்.

ஆத்திரம் தணிந்து
அமர்நீதியாரை
நோக்கினார்
அந்தண வேதியார்.
” பொன்னும் மணியும்
போற்றுவேனோ நான்?
கொடுத்த
கோவணத்திற்குச்
சமமாய் ஒரு
கோவணம் கொடு
போதும்”
கோபம் தணிந்து
கூறினார் அந்தணர்.

அது கேட்ட
அமர்நீதியார்
சிந்தை மலர்ந்தார்
சிங்கம்போல்
சிலிர்த்து நின்றார்
” அடிகள் உத்தரவு
அப்படியே
செய்வேன்” – என
அறைந்தார்
அமர்நீதியார்.

”தண்டில் கட்டியுள்ள
ஈரக் கோவணம் இது.
இதற்கு ஈடாய்
எடையுள்ள கோவணம்
என்னிடம் கொடு
ஏற்பேன்” என்றார்
ஏழுலகாளும்
ஈசன் அந்தணர்.

” நன்று மிக நன்று
நான் பெற்ற பேறு”
என்று உரைத்து
நாட்டினார் தராசை
நம் வள்ளல்.
தராசின் ஒரு தட்டில்
தன் கோவணம் வைத்தார்
தரணி ஆள் அந்தணர்.
மற்றோர் தட்டில்
மாற்றுக் கோவணம்
வைத்தார் வள்ளல்.
வள்ளல் வைத்தது
எடை குறைந்து
ஏறியது மேலே.
அடியார்க்கு வழங்க
ஆக்கிய கோவணம்
அனைத்தையும் வைத்தார்.
அப்படியும் தராசு
அப்படியே மேலேறியது.
அதிசயித்தார்
அமர்நீதியார்.

பட்டாடையும் பலவும்
பார்த்து வைத்தார்.
அடியாரின்
அன்பு எனும் தட்டுக்கு
ஆண்டவனின்
அருளெனும் தட்டு
அடங்கியே இருந்தது.
அதுகண்டு
அஞ்சினார்
அமர்நீதியார்.
அந்தணரை
அடிதொழுதார்.

” அனைத்தும் இட்டும்
ஆவதொன்றில்லை
பொன் பொருளைப்
போடுகின்றேன்
பொறுத்தருள்வீர்”- எனப்
போற்றி நின்றார்.
மங்கை பாகன்
மனம் இசைந்தார்.
பசும்பொன், வெள்ளி
பண்மணித்திரளும்
பாங்காய் இட்டார்.
பயன் இல்லை.
ஒவ்வொன்றாய் வைக்க
உயர்ந்தது தட்டு;
ஊரார் வியந்தனர்.
நான்மறை சிவனின்
நற்கோவணத்திற்கு
நல்ஈடு உண்டோ?
” இருந்தது எல்லாம்
இட்டேன் தட்டில்- இனி
இருப்பது நானும்
இல்லத்தரசியும்
இனிய மகனுமே.
இசைவு கொடுப்பின்
இடுவோம் தட்டில்
எங்களையே”- என
இறைஞ்சினார் நாயனார்.
இறைவனும் இசைந்தார்.

மலர்சூடிய
மனைவியொடு
மாசற்ற மைந்தனொடும்
மாய வேதியரின்
மலரடி வணங்கினார்.
இறைவனை நினைத்து
” இதுவரை இயற்றிய
இனிய தொண்டினில்
இல்லை பிழையெனில்
இத்தட்டு அடையட்டும்
இப்போதே சமம்”- என
இயம்பியவாறு
ஐந்தெழுத்தோதியபடி
அத்தட்டில் ஏறினார்.
இறைவன் கோவணமும்
இனியவர் தொண்டும்
இணையென்பதால்
இரண்டு தட்டுகளும்
இறங்கின சமமாய்.

அகம் மகிழ்ந்தார்
அமர்நீதியார்.
மண்ணக மாந்தர்
மனம் களித்தனர்;
விண்ணகத் தேவர்கள்
மலர்மாரி பொழிந்தனர்.

மலர்மழையில்
மறைந்த சிவனார்
நல்லூர் கோயிலில்
குடிகொண்ட கோலத்தில்
வான வெளியில்
வந்து தோன்றினார்.

அமர்நீதியாரும்
அவர் மனைவியும்
அன்பு மகனும்
அவரை வணங்கி
ஆனந்தம் கொண்டனர்.
வழிபட்ட மூவர்க்கும்
வான்பத நிலை தந்து
வாழ்த்தினார் சிவன்.

இன்னும் வருவார்கள்

About இரா. குமார்

இரா. குமார்
சொற்கோயில் இணைய இதழின் ஆசிரியர். தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர், தினகரன் நாளிதழின் இணையாசிரியர் என முன்னணி நாளிதழ்களில் செய்திப்பிரிவின் உயர் பொறுப்பில் இருந்தவர். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

அறுபத்துமூவர் -6

விறன்மிண்ட நாயனார் அரச வம்சத்தை அடியோடு அழிக்க ஆவேசம் கொண்ட பரசுராமனின் பாசமிகு தந்தை ஜமதக்கினி முனிவர் அம்முனிவரை அழித்து …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன