முகப்பு / ஆசிரியர் பக்கம் / இரா.குமார் தலையங்கம்

இரா.குமார் தலையங்கம்

அன்புக்குரிய வாசகர்களே! வணக்கம்.

’இந்து மதம்’ என்று உபநிடதங்களிலோ, வேதங்களிலோ எங்குமே குறிப்பிடப்படவில்லை. ஆனாலும், அப்போதும் இந்துமதம் இருந்திருக்கிறது. ஏன் குறிப்பிடப்படவில்லை என்பதற்கு காஞ்சி மஹாபெரியவர் ஒரு விளக்கம் சொல்வார்.
என்னருகில் ராமன் என்ற பெயரில் இரண்டு பேர் இருந்தார்கள். ராமன் என்று சொன்னால் எந்த ராமனைக் குறிப்ப்பிடுகிறேன் என்ற குழப்பம் வரும். அதனால், உயரமான ராமனை ‘நெட்டை ராமன்’ என்றும், குள்ளமான ராமனை ‘குட்டை ராமன்’ என்றும் சொல்வேன். ஒரே ஒரு ராமன் மட்டும் இருந்திருந்தால், ‘நெட்டை’ ‘குட்டை’ என்று அடைமொழி கொடுக்க அவசியம் இருந்திருக்காது.
அதுபோலதான், உபநிடத காலத்திலும் வேத காலத்திலும் ஒரே மதம்தான் இருந்தது. அது இந்து மதம். வேறு மதம் எதுவும் அப்போது இல்லாததால் இந்து மதம் என்று குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று. பிற்காலத்தில் வேறு மதங்கள் தோன்றிய பின்னர், இந்து மதம் என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அவசியம் வந்தது என்று மஹாபெரியவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், இந்து மதம் எந்த அளவுக்கு பழமையானது என்பதைச் சொல்வதற்காகத்தான். இந்து மதம் என்பது, ஒரு அமைப்போ, இயக்கமோ, கூட்டமோ அல்ல. அது ஒரு வாழ்க்கை நெறி. மனிதன் எப்படி வாழ வேண்டும். எப்படி வாழ்க் கூடாது என்று வழி காட்டும் வாழ்க்கை நெறிதான் இந்து மதம்.
நம் முன்னோர்கள் சில வழிபாட்டு முறைகளையும் சில சடங்குகளையும் நமக்கு சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். அவற்றைச் சரியாக ஆராய்ந்து பார்த்தால், அவை அத்தனையும் நம் நெஞ்சுக்கு நிம்மதி தருபவை. நம் உடல நலத்தைக் காப்பவை.

ஆன்மீகம் என்பதே அறிவியல்தான் என்று முக்தியடைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் சொல்வார். ஆம்; நம் சடங்குகள், வழிபாட்டு முறைகள் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது. மக்களை இந்த வழிக்கு எளிதில் கொண்டுவர வேண்டும் என்பதற்காக அவற்றை இறை வழிபாடாகவும் சடங்குகளாகவும் முன்னோர்கள் வைத்தார்கள். அறிவியல் பூர்வமாக சொல்லியிருந்தால், மக்கள் அவற்றை எளிதில் கடைபிடிக்கமாட்டார்கள் என்று கருதினர். அதனால்தான், நம் வழிபாட்டுமுறைகள், சடங்குகளுக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் காரணத்தை மக்களுக்கு விளக்காமல் விட்டுவிட்டனர். இதனாலேயே, இந்துமத சடங்குகளையும் வழிபாட்டு முறைகளையும் மூடநம்பிக்கை என்று சிலர் சொல்லத் தொடங்கினர்.

இறை நம்பிக்கை குறையத் தொடங்கியதும், வழிபாட்டையும் சடங்குகளையும் புறந்தள்ளத் தொடங்கினோம். இதனால், உலகின் எந்த நாட்டு மக்களுக்கும் இல்லாத, நாம் மட்டுமே பெற்றிருந்த நமது பாரம்பரிய மதிப்பீடுகளை விட்டு விலகினோம். வாழ்க்கை தறி கெட்டுப் போகிறது. நெஞ்சுக்கு நிம்மதி கிடைப்பதில்லை. உடல் நலம் கெடுகிறது.
இந்த நிலையிலிருந்து நாம் மீள வேண்டும். நமது பாரம்பரிய மதிப்பீடுகளின் மேன்மையை நாம் உணர வேண்டும். அவற்றை மீண்டும் கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம், நல்ல உடல் நலத்துடன் கூடிய நிம்மதியான வாழ்க்கையைப் பெற வேண்டும். இதற்கு, இந்துமத தத்துவங்கள், சடங்குகள், வழிபாட்டு முறைகளுக்குப் பின்னால் உள்ள அறிவியல் உண்மைகளை நம் மக்களுக்கு விளக்க வேண்டும். இந்தப் பணியை இயன்ற வரை செய்ய வேண்டும் என்பதே “சொற்கோயில்” ஆன்மீக இணைய இதழின் நோக்கம்.

இந்தப்பணியை செம்மையாக செய்ய எனது 33 ஆண்டு கால பத்திரிகைத் துறை அனுபவம், தினமலர், தினகரன் நாளிதழ்களின் செய்திப் பிரிவில் உயர் பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம், கை கொடுக்கும் என்று நம்புகிறேன். வாருங்கள் வாசகர்களே! கை கோர்ப்போம். நம் பாரம்பரிய மதிப்பீடுகளை மீட்டெடுப்போம்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

அன்புடன்

இரா.குமார்
ஆசிரியர்

About இரா. குமார்

இரா. குமார்
சொற்கோயில் இணைய இதழின் ஆசிரியர். தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர், தினகரன் நாளிதழின் இணையாசிரியர் என முன்னணி நாளிதழ்களில் செய்திப்பிரிவின் உயர் பொறுப்பில் இருந்தவர். மேலும் அறிய

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன